இந்திய அரசியல் சட்டத்தில், அடிப்படைக் கடமையாக 51 AH பிரிவு இருக்கிறது. அந்தப் பிரிவு மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதை ஒரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறுகிறது. ஆனால் அந்தப் பிரிவு இதுவரை எவராலும், எந்த ஒரு அரசாலும் அமுல்படுத்தப்படவே இல்லை. முதன்முதலாக அந்த வரலாற்றுச் சிறப்பை தமிழ்நாடு அரசு பெற்றிருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு “வானவில் மன்றம்” என்ற அமைப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இதை துவங்கி வைத்திருக்கிறார். மாணவர்களிடம் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டுவது இந்த வானவில் மன்றத்தின் நோக்கமாகும். இளம் பருவத்திலேயே மாணவச் செல்வங்கள் அறிவியல் மனப்பான்மையுடன் வளர்க்க வேண்டும் என்ற மிகச் சிறந்த உன்னத நோக்கத்தோடு இந்தப் பிரிவு தொடங்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய ஒன்றியத்திற்கே வழி காட்டக்கூடிய ஒரு திட்டம் என்று தான் கூற வேண்டும்.

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 51 AH என்று கூறக் கூடிய அறிவியல் மனப்பான்மையை குழிதோண்டி புதைக்கிற பழைமைவாதக் கருத்துக்களை மாணவர்களிடையே திணித்து வருகிறது. பகவத் கீதைகள், சோதிடம், வேத, புராண சாஸ்திரங்கள் இவைகளெல்லாம் பாடங்களாக்கப் பட்டு மாணவர்களுடைய பிஞ்சு நெஞ்சில் நஞ்சு விதைக்கப்பட்டு வருகிறது. மாற்றாக அறிவியல் மனப்பான்மை வளர்க்க வேண்டும் என்று குரல் கொடுக்கிற ஒரே அரசு திராவிட மாடல் அரசு தான். இதில் ஒன்றை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறினால், அந்த அறிவியல் மனப்பான்மைக்குத் தடையாக இருக்கிற மூட நம்பிக்கைகளை களைந்து விட்டுத்தான் நாம் அறிவியல் நம்பிக்கைகளை உருவாக்க முடியும். ஆனால், மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்தாமல் அதில் அடங்கியிருக்கிற அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை வெளிக்கொணராமல், அறிவியல் கருத்துக்களை மட்டும் பேசுவது என்பது, அறிவியலும் ஒரு பக்கம் வளரந்து கொண்டிருக்கும், மூட நம்பிக்கையும் வளர்ந்து கொண்டிருக்கும் என்ற நிலையைத் தான் உருவாக்கும்.

இந்த வானவில் மன்றங்கள் இளைஞர்கள், குழந்தைகள், சிறுவர்கள் மத்தியில் படிந்து போய் கிடக்கின்ற மூட நம்பிக்கைளில் புரையோடிக் கிடக்கின்ற பழமைவாதக் கருத்துக்களை அம்பலப்படுத்துகின்ற செயலையும் செய்தாக வேண்டியது கட்டாயம். இது அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான அடித்தளம். இதையும் இந்த வானவில் மன்றம் கட்டாயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, தமிழ்நாடு அரசின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முயற்சியை உண்மையிலேயே பாராட்டி வரவேற்கிறோம்.

வெறுப்புணர்வை தூண்டும் காஷ்மீர் பைல்ஸ்- சர்வதேச விழாவில் கண்டனம்

விவேக் அக்னிகோத்ரி இயக்கிய காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி வெளியானது. இசுலாமிய மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை உமிழ்ந்த இத்திரைப்படத்தை இந்துத்துவா அமைப்புகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடின. குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் கேளிக்கை வரியில் இருந்தும் இத்திரைப்படத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி கூறியிருந்தார். ஆனால் இது வெறுப்புணர்வை பரப்பும் படம் என்று சர்வதேச திரைப்பட விழாவில் அதன் தேர்வுக்குழு தலைவர் நடாவ் லேபிட் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. 79 நாடுகளை சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டன. இதில் இந்திய பனோரமாவில் 25 திரைப்படங்கள், 20 பிற படங்கள் திரையிடப்பட்டன. அதில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் ஒன்று. விழாவில் இறுதி நாளில் பேசிய, தேர்வுக்குழு தலைவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நடாவ் லேபிட், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். கவுரவம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில், இத்தகைய படத்தை திரையிட்டது அதிர்ச்சியை தருகிறது என்றார். வெறுப்பை விதைக்கும் பிரசார தன்மை கொண்ட இப்படத்தை திரையிட்டது மன உளைச்சலைத் தருகிறது என்றும், இதற்காக வெளிப்படையாக அதிருப்தியைத் தெரிவிப்பதாகவும் மேடையிலேயே கூறினார். பாஜகவினரும் இந்துத்துவா அமைப்புகளும் கொண்டாடிய ஒரு படத்தை, பாஜக அமைச்சர்கள் முன்னிலையிலேயே சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் கடுமையாக விமர்சித்து பேசித் தீர்த்தார். அங்கு கூடியிருந்த எவராலும் நடாவ் லேபிட்டின் பேச்சிற்கு மறுப்பு கூட தெரிவிக்க இயலவில்லை.

- விடுதலை இராசேந்திரன்

Pin It