கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்திய தொழில்நுட்பக் கழகமான அய்.அய்.டி.களில் சமஸ்கிருதம் கற்றுத் தருவதற்கு மத்திய மனித வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி எழுத்து மூலம் அளித்த பதிலில், “வேதங்களில் கூறப்பட்ட அறிவியலை மாணவர்கள் படித்து அறிவதற்காக, சமஸ்கிருதத்தை கற்பிக்க தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும்” என்று அய்.அய்.டி.களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

புராணம் மற்றும் வேதங்களில் கூறியுள்ள ‘அறிவியல்’ கருத்துகளைப் பரப்பிடவும், சமஸ்கிருதத்தைப் பாதுகாத்திடவும் மோடி ஆட்சி ஒரு குழுவை நியமித்திருக்கிறது. முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியான தமிழ்நாட்டைச் சார்ந்த கோபால்சாமி அய்யங்கார், இந்தக் குழுவின் தலைவர். இந்தக் குழு நவீனகால படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், பொறியியல், தொழில் நுட்பம் தொடர்பாக வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாம். அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மோடி ஆட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாம். இதற்கு ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த டில்லி மாநில துணை முதல்வர் மனிஷ்கிசோடியா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி. ராஜா, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அய்.அய்.டி.யில் படிக்கும் மாணவர்கள், சமஸ்கிருதத்திலுள்ள தொழில்நுட்ப ‘கருத்து’களை அறிந்துக் கொள்ள வேண்டும் என்பது பார்ப்பனிய வெறியேயாகும்!

அறிவியலை சமஸ்கிருதத்தில் தேடுவது என்பது பெரியார் மொழியில் கூறுவது என்றால் ‘மலத்தில் அரிசி பொறுக்குவதாகும்’. பார்ப்பன பண்டிதர்களுக்கு கொழுத்த ஊதியத்தில் அய்.அய்.டி.யில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதைத் தவிர இதில் வேறு எந்தப் பயனும் கிடைக்கப் போவது இல்லை. இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கின்படி இந்த மொழியைப் பேசுவதாக பதிவு செய்தவர்களே சுமார் 4000 பேர் தான்.

இந்தியாவின் பண்பாடு, ‘சமஸ்கிருதப் பண்பாடு’, ‘பாரதிய பண்பாடு’ என்று பேசியும் எழுதியும் வரும் பார்ப்பன ‘சங்பரிவார்’ கூட்டம் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தப் பண்பாட்டைத் திணிக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கொள்கைகளை உருவாக்கியவர் கோல்வாக்கர் என்ற சித்பவன் பார்ப்பனர், அந்த கொள்கை நூலுக்குப் பெயர் ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ (ரெnஉh டிக வாடிரபாவள) என்பதாகும். அதில் சமஸ்கிருதம் மட்டுமே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும். சமஸ்கிருதம் தேசிய மொழியாகும் காலம் வரை இடைக்காலத்தில் இந்தி இருக்கட்டும் என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். (‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’, அத்.8)

‘மிக உயர்ந்த மேன் மக்களான ஆரியர்களை’ மற்ற மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடிய ஆரியரின் சாஸ்திர சடங்குகளை பாதுகாக்கக்கூடிய மொழி சமஸ்கிருதம்தான் என்ற பார்ப்பன கருத்தியலை, ஆங்கிலேய சிந்தனையாளர்களாக கருதப்பட்ட சர். வில்லியம் ஜோன்ஸ், ஹூம் போல்ட் ஆகியோர் வழி மொழிந்தனர். சமஸ்கிருதம் இலத்தீன் - கிரேக்கம் ஆகிய மூன்று மொழிக்கும் தொடர்பு உண்டு என்றும், ஏனைய இரண்டு மொழிகளுக்கும் சமஸ்கிருதமே ஆணி வேர் என்றும் கூறியபோது இந்தியப் பார்ப்பனர்கள் சிண்டுகளைத் தட்டி விட்டு பூரித்து மகிழ்ந்தனர். இந்தோ ஜெர்மானிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாக சமஸ்கிருதம் முன்மொழியப் பட்டது. பார்ப்பனிய மாயையில் மூழ்கிக் கிடந்த மாக்ஸ்முல்லர், “வேதங்கள் இந்திய ஆவணங்கள் என்று கூறுவதைவிட இந்தோ-அய்ரோப்பிய ஆவணங்கள் என்று கூறுவதுதான் சரியானது” என்ற எல்லைக்குப் போனார். ஜெர்மானியர்களுடன் இந்திய பார்ப்பனர்கள் உறவு கொள்ள துடித்தார்கள். அந்த வரிசையில் இப்போதும் சமஸ்கிருதப் பெருமை பேசும் கோபால்சாமி அய்யங்கார்களை அக்மார்க் தமிழர்கள் என்று முத்திரை குத்தி அரவணைத்துக் கொள்ள சில தமிழ் தேசிய ‘கோமான்கள்’ தயாராக இருக்கிறார்கள்.

1823இல் பார்ப்பனர்களின் வற்புறுத்தலையேற்று கல்கத்தாவில் ஒரு சமஸ்கிருதப் பள்ளியைத் தொடங்க ஆங்கிலேய அரசு முன் வந்தபோது அன்றைக்கு இந்துமதத்துக்குள் சீர்திருத்தங்களுக்கு போராடிய இராஜாராம் மோகன்ராய் ஆளுநரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

“நுட்பமான சமஸ்கிருத மொழி இலக்கணங்கள் ஊக அடிப்படையிலான வேதாந்த தத்துவங்கள், மீமாம்சத்தில் உள்ள திரிபு செய்யப்பட்ட வேதப் பகுதிகள் சூழ்ச்சியும் கேடும் நிறைந்த நியாய சாத்திரம் ஆகியவற்றைப் படிப்பதனால் இந்திய மாணவனுக்கு எந்தப் பயனும் இல்லை. சமஸ்கிருத கல்வியானது இந்தியாவை என்றென்றும் இருளில் ஆழ்த்தி விடும்” என்றார்.              (ஆதாரம்: ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ நூல்)

இந்தியர்களுக்கு கல்விக் கொள்கையை உருவாக்கிய பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே (கவர்னர் ஜெனரல் அமைச்சரவையில் சட்டக் குழு உறுப்பினர்) இராஜாராம் மோகன்ராய் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு தனது கல்விக் கொள்கையில் பின்வருமாறு பதிவு செய்தார்.

“பிரிட்டிஷ் அரசு மத சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதோடு அனைத்து மதத்தினரிடமும் பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான பிரச்சினை களில் தவறான வழிகளைப் போதிப்பதும் அற்பப் பயனை விளைவிப்பதுமான சமஸ்கிருத இலக்கியங்களைக் கற்றுக் கொடுப்பது என்பது, பகுத்தறிவுக்கும் ஒழுக்க நெறிக்கும் ஏற்புடையது அன்று. அதோடு அது நடுவுநிலையும் ஆகாது. சமஸ்கிருதம் வெறும் தரிசு நிலம். அதைக் கற்பதனால் அறிவு விளையாது. அதில் வானளாவிய மூட நம்பிக்கைகள் நிறைந்துள்ளன என்பதனால் அந்த இலக்கியங்களைக் கற்பிக்க வேண்டும் என்று நம்மிடம் கூறுகிறார்கள். அதற்கு நாம் இசைந்தோமெனில் திரிபுபடுத்தப்பட்ட வரலாறு, தவறான வானவியல், ஏமாற்று மருத்துவம் ஆகியவற்றையே கற்பிக்க நேரிடும். நேர்மையற்ற ஒரு மதத்தின் புனித நூல்களில் இருப்பதனால் அவை கற்பிக்கப்பட வேண்டும் என்பது மூடத்தனம். இந்தியரைக் கிறித்துவத்திற்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து நாம் விலகியே இருந்துள்ளோம். இனியும் அவ்வாறே தொடர்வோம். அதற்காக, ஒரு கழுதையைத் தொட்டுவிட்டால் சுத்தி செய்வதற்கு என்ன மந்திரங்கள் கூற வேண்டும், ஓர் ஆடு கொல்லப்பட்டால் அதற்குப் பரிகாரமாக எந்த வேதப் பாடலைப் பாட வேண்டும் என்பதை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டின் நிதியைச் செலவிட வேண்டும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது” என்று துணிந்து எழுதினார் மெக்காலே.  (ஆதாரம்: மெக்காலே கல்விக் கொள்கைக் குறிப்பு)

இவ்வளவுக்கும் பிறகும், மருத்துவக் கல்லூரி படிப்புக்கு மனு போட வேண்டும் என்றால், அந்த மாணவர் கட்டாயம் சமஸ்கிருதம் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்ற நிர்வாக நடைமுறையை பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பனகல் அரசர்தான் இதை ஒழித்தார்.

மீண்டும் இப்போது சமஸ்கிருதம் , அய்.அய்.டி.க்குள் நுழைகிறது. இனி, அய்.அய்.டி.யில் மனு போடுவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற வரலாறு மீண்டும் திரும்புமா என்ற கேட்க வேண்டியிருக்கிறது.

பார்ப்பன அதிகாரமே இப்போதும் ஆட்டிப் படைக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன இந்த நிகழ்வுகள்!