கரோனா பரவலுக்குப் பிறகு உலகின் ஏற்றத்தாழ்வு இன்னும் உச்சம் அடைந்திருக்கிறது. கரோனா பரவல், உலக நாடுகளில், ஒரே நேரத்தில் ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி இருக்கிறது. வரலாற்றில் இதற்கு முன் இவ்வாறு ஒரே நேரத்தில் அனைத்து நாடுகளிலும் ஏற்றத்தாழ்வு அதிகரித்ததில்லை.
கரோனா ஊரடங்கு கால கட்டத்தில் மட்டும் உலக அளவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. கோடீஸ்வரர்கள் மேலும் மேலும் செல்வத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனையோர் ஏழ்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு தான் இத்தகைய ஏற்றத்தாழ்வுக்குக்கு காரணம் என்கிறது சமீபத்தில் வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில், உலகப் பொருளாதார மாநாடு சென்ற வாரம் நடைபெற்றது.
அதையொட்டி ஆக்ஸ்ஃபாம், உலகின் ஏற்றத்தாழ்வு குறித்து ‘the Inequality virus’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கரோனா வைரஸ் எவ்வாறு உலகில் ஏற்றத்தாழ்வை அதிகரித்திருக் கிறது என்பதையும், உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு எவ்வாறு நியாயமற்றதாக இருக்கிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
தற்போதைய ஏற்றத்தாழ்வுக்கு மூன்று காரணிகள் முதன்மைக் காரணங்களாக இருப்பதாக அந்த அறிக்கைக் குறிப்பிடு கிறது. தாராள பொருளாதாரக் கொள்கை, ஆணாதிக்கப் போக்கு, வெள்ளை மேலாதிக்கம். 1980களில் தாராளமய அடிப்படையில் உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு உருவாகத் தொடங்கியது. கட்டுப்பாடற்ற சுதந்திரமான சந்தை, தனி மனிதவாதம் ஆகியவை தாராளமய பொருளாதாரத்தின் அடிப்படை.
அது, பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டைக் குறைத்து, தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகப் படுத்துகிறது. இந்தப் பொருளாதாரக் கொள்கையானது சந்தை என்பது சுயாதீனமானது என்றும், அது நிறம், பாலினம், இனம் பாகுபாடற்று இயங்கக் கூடியது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறது. அதன் பார்வையில், தனி மனிதனின் வாழ்க்கைப் போக்கு என்பது அவனது திறமை, முயற்சி, தேர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது என்பதாகும்.
ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளில் தாராள பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்திய விளைவுகள் நடைமுறையில் வேறொன்றாக இருக்கிறது. சமூகத்தில் சில பிரிவுகளிடம் மட்டுமே, அதாவது உயர் வர்கத்தினரிடமே, செல்வம் குவிந்து கொண்டு இருக்கிறது.
மற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தாலும் அதே நிலைமையிலே இருக்கின்றனர். கடந்த 40 வருடங்களில், உலகின் 1 சதவீதத்தினரின் வருமானம், உலகின் மக்கள் தொகையில் பாதி மக்களின் மொத்த வருமானத்தைவிட இருமடங்காக உயர்ந்து இருக்கிறது.
உலகின் 2000 கோடீஸ்வரர்களிடம் இருக்கும் சொத்தானது, அவர்களின் 2 ஆயிரம் தலைமுறையினர் வாழ்க்கைக்கு செலவிடத் தேவையான அளவை விடவும் அதிகம். இன்னொரு பக்கம். உலகின் பெரும்பாலான மக்கள் மிகச் சொற்பமான வருமானத்தைக் கொண்டிருக்கின்றனர்.
வெள்ளை இன மேலாதிக்கமும், ஆணாதிக்கப் போக்கும் தற்போதைய ஏற்றத்தாழ்வுக்கு முக்கியமான காரணங்கள் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கை குறிப்பிடுகிறது. வெள்ளை மேலாதிக்கத்தால், கறுப்பின மக்கள் எவ்வளவு பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதை அந்த அறிக்கை விவரிக்கிறது. வெள்ளை மேலாதிக்கத்தை, இந்தியச் சூழலில் சாதிய ஒடுக்குமுறை என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை மீண்டும் மீண்டும் பாலினப் பாகுபாடு பற்றி பேசுகிறது.
பொருளாதாரம் சார்ந்து, உலக அளவில் ஆண் – பெண் பாகுபாடு நிலவுவதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்தியா வில் நிலைமை இன்னும் மோசம். கரோனாவுக்கு பிறகு, பலர் ஊதியமின்றி வேலை பார்த்து வருகின்றனர்.
ஆறு மாதங்களாக ஊதியம் பெறாமல் வேலை பார்ப்பவர்களும் இருக்கின்றனர். இதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகம். இந்தியாவில் பெண்கள் இடையிலான வேலையின்மை கரோனாவுக்கு முன்பு 15 சதவீதமாக இருந்தது.
தற்போது 18 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை கடந்த ஒரு ஆண்டில் 60 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் பாலினப் பாகுபாடு பொருளாதார ரீதியாக, வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்டதாக மட்டு மில்லை; சமூக ரீதியாகவே தீவிரமான பாகுபாடு நிலவுகிறது.
சமீபத்தில் வெளியான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ (The Great Indian Kitchen) என்ற மலையாளத் திரைப்படம், இந்திய சமூகத்தில் பெண்களின் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை பட்டவர்த்தமாகக் காட்டுகிறது.
ஏற்றத்தாழ்வைச் சமாளிப்பதற்கான முதன்மையான வழிமுறைகளில் ஒன்று, வரிவிதிப்பு. கோடீஸ்வரர்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் அதிக வரி விதிக்க வேண்டும் என்றும், அந்தப் பணத்தைக் கொண்டு மக்களுக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை இலவச சேவை வழங்க வேண்டும்.
மிகக் குறிப்பாக, மருத்துவம், கல்வி போன்ற சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று ஆக்ஸ்பாம் வலியுறுத்துகிறது. ஒருவர் வேலையிழப்பது என்பது இந்த உலக இயக்கத்திலிருந்து அவர் துண்டிக்கப்படுவதாக மாறி இருக்கிறது. அந்தவகையில் வேலை உத்திரவாதத்தை உருவாக்குவது ஒரு அரசின் கடமையாகிறது.
வேலை பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள், பிணிக்கால ஊதியம், பேறு கால விடுப்பு, வேலையிழந்தவர்களுக்கான சலுகைகள், ஓய்வூதியம் ஆகியவற்றை அனைவருக்கும் உறுதி செய்ய வேண்டும் என்று ஆக்ஸ்ஃபாம் வலியுறுத்துகிறது.
இவற்றையெல்லாம் எப்படிச் செய்வது? தொழிற் செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் நலனை முதன்மைப்படுத்தியாதாக மாற்ற வேண்டும் என்று ஆக்ஸ்ஃபாம் கூறுகிறது. காலநிலை மாற்றம் மனித குல இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அதைத் தடுக்கும் வகையிலான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்துகிறது.
- விடுதலை இராசேந்திரன்