'தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்று கிருஷ்ண பக்தர்கள் உரிமையோடு தங்கள் பகவானை கொஞ்சி மகிழ்வார்கள். இந்த ‘விளையாட்டுப் பிள்ளைக்கு’ வெளிநாடுகளிலும் பக்தர்கள் உண்டு. பல வெள்ளைக்காரர்கள் மொட்டை அடித்துக் கொண்டு ‘பூணூல்’ போட்டுக் கொண்டு (ஆனாலும் ‘இவாள்’ அசல் ‘பிராமணாள்’ அல்ல) ஆங்காங்கே பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டு திரிவதைப் பார்க்கலாம்.

அவர்கள் ‘அரே கிருஷ்ணா அரே ராமா’ இயக்கமாம்! அண்மையில் கிருஷ்ணன் ‘பிறந்த’ நாளில் அதாவது ஜெயந்தியில் மணிப்பூரிலுள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு இவர்கள் ‘பிறந்த நாள்’ வாழ்த்துக்கூற வந்தபோது, கோயிலுக்குள் குண்டு வெடித்து விட்டது 15 பேரை ‘கிருஷ்ண பகவான்’ நேரடியாகவே அழைத்துக் கொண்டு விட்டான்.

அதற்காக கிருஷ்ண பக்தர்கள் “மானுட ஆன்மா மரணம் எய்தாது; மறுபடி வந்து திக்கும்” என்று கீதை உபதேசத்தைப் போற்றிப் பாடவில்லை. “குண்டு வைத்த தீவிரவாதிகளைக் கைது செய்; மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும்” என்று கோரிக்கை வைத்துத்தான் போராடினர்.

“ஆன்மா அழியாது என்ற கிருஷ்ணன் உபதேசத்தில் உண்மையான நம்பிக்கை இருந்தால், மரணத்துக்கு ஏன் பயப்பட வேண்டும்?” என்று, எந்த கிருஷ்ண பக்தரையாவது கேட்டுப் பாருங்கள். “பார்! பார்! என்னைப் புண்படுத்திப் பேசி விட்டான்” என்று நீதிமன்றத்துக்கு ஓடி, பணம் கொடுத்து, வழக்கறிஞரை வைத்து வாதாடி, கிருஷ்ண உபதேசத்தில் மீதுள்ள தங்களது “உண்மை”யான பற்றை நிரூபித்துக் காட்டுவார்கள். அவ்வளவு தீவிரமான கொள்கைக்காரர்கள்.

இரு நாட்களுக்கு முன்பு உ.பி. மாநிலம் மதுராவுக்கு அருகிலுள்ள பிருந்தாவன் என்ற ஊரிலிருந்து ஒரு செய்தி வந்துள்ளது. இந்த ஊரில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் கருவறையில் இருந்த கிருஷ்ணன் திடீரென்று, நவீன இளைஞனாகத் தோற்றமளித்தானாம்.

ஜீன்ஸ் பேண்ட், டீ சட்டை, கையில் புல்லாங்குழலுக்கு பதிலாக செல்பேசி! வழி பட வந்த ‘அரே கிருஷ்ணா அரே ராமா’ இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம். உடனே, கோயில் அர்ச்சகர் கொடும்பாவி கொளுத்தி, போராட்டம் நடத்தினார்களாம். ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் நமக்குப் புரியவில்லை.

காலத்துக்குத் தகுந்தவாறு கடவுள் தோற்றத்தை ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது? எத்தனை காலத்துக்குத்தான் பஞ்சக் கச்சம், பூணூல்! ஒரு மாற்றத்துக்காக ஜீன்ஸ், டீ சட்டை போட்டால்தான் என்ன? எத்தனை காலத்துக்குத்தான் பொங்கல், புளியோதரை! ஒரு மாற்றத்துக்காக நூடில்ஸ், ஃபிரைடு ரைஸ், முட்டை (அதாவது சைவ முட்டை தான்) என்று மாற்றிப் படையல் செய்தால் தான் என்ன? என்ன குடியா மூழ்கிவிடப் போகிறது? அர்ச்சகர் கூட, மோட்டார் சைக்கிள், கார்களில் வரும்போது, ஆண்டவனுக்கு மட்டும், அதே பழைய உடை, அதே பழைய படையல் தானா?

கிருஷ்ணனுக்கு மட்டும் வாய் பேசும் சக்தி இருந்தால், இப்படி எல்லாம் கேட்கவே செய்வான். இது மட்டுமா கேட்பான், “அட, மாங்காய் சீடர்களே! சிலை பால் குடிக்கும்போது மட்டும், சக்தி வந்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறீர்கள்; உடை மாறும்போது மட்டும் நாங்கள் சக்தி பெற்று உடையை மாற்றிக் கொண்டு விட்டோம் என்று கூற மாட்டீர்களா? எங்களது ‘சக்தி’யைக் கூட உங்கள் நலனுக்குத்தான், நீங்கள் பயன்படுத்துவீர்களா” என்றுகூட கேட்கவே செய்வான்!

‘கிருஷ்ணனாவது பேசுவதாவது. யாரிடம் கதை விடுகிறீர்கள்? அதெல்லாம் சுத்த டூப். பகவானுக்காக நாங்கள் தான் பேசுவோம்; பகவானுக்காக நாங்கள் தான் சாப்பிடுவோம்; பகவான் சக்தியைக் காட்டுவதற்காக நாங்கள் தான் போராட்டம் நடத்துவோம்’ - என்று, நம்மை மடக்கிவிடுவார்கள் கிருஷ்ண பக்தர்கள். சபாஷ்; சரியான பக்தி! சரியான சக்தி! மோசமான புத்தி!

Pin It