பார்ப்பனர் அதிகாரம் - ஆதிக்கம் தொடர்ந்து சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு சான்றாக, அண்மையில் நிகழ்ந்து வரும் செய்திகளின் தொகுப்பு:

‘மனுதர்ம சாஸ்திரம்’ என்பது பார்ப்பனர்களுக்கான சட்டம். பிறப்பின் அடிப்படையில், ‘பிராமணர்’, ‘சத்திரியர்’, ‘வைஸ்யர்’, ‘சூத்திரர்’ என்று சமூகத்தைக் கூறு போடுகிறது. இந்த சமூகப் பிளவை உருவாக்கியதே ‘பிரம்மா’தான் என்கிறது. ‘சூத்திரர்கள்’ என்ற கீழ்சாதிக் கூட்டம் ஏனைய பிரிவினருக்கு அடிமை என்று கூறுகிறது. ‘சூத்திரன்’ சொத்து சேர்க்கவோ, கல்வி பெறவோ, திருமணம் செய்து கொள்ளவோ உரிமை இல்லை என்று கூறுவதோடு, பார்ப்பனர்களின் ‘வைப்பாட்டி’க்குப் பிறந்தவர்கள் என்று கூறுகிறது. அதனடிப்படையில் தான் தங்களை “பிராமணர்”களாக இப்போதும் பார்ப்பனர்கள் அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த அடையாளமாக ‘பூணூலை’ காயத்ரி மந்திரம் ஓதி அணிந்து கொள்கிறார்கள்.

இப்படி ஒரு கருத்தையோ, நூலையோ பரப்புவதற்கு எந்த ஒரு நாகரிக சமூகமும் அனுமதிக்காது. ஆனால், இந்த நாட்டில் இன்னும் ‘பூணூலுக்கும்’ தடையில்லை. ‘மனுதர்ம’ நூலுக்கும் தடையில்லை; ‘மனுதர்மத்தின்’ - புதிய புதிய பதிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். “இந்துக்களைப் புண்படுத்துவதா?” என்று அவ்வப்போது ஓலமிடும் இந்து முன்னணி “சூத்திரர்”களும் - இப்படி ‘இந்து சூத்திரர்களை’ பார்ப்பனர்களின் ‘தாசிப் புத்திரர்கள்’ என்று கூறும், மனுதர்மத்துக்கு எதிராக வாயைத் திறப்பதில்லை. ‘துக்ளக்’ சோ ‘மனுதர்மம்’ உயர்ந்த நெறிகளைக் கொண்டது என்று இப்போதும் தனது ‘துக்ளக்’ பத்திரிகையில் எழுதிக் கொண்டு இருக்கிறார். உலக தத்துவம், ஊழல், ஜனநாயகம், அரசியல் நேர்மை பற்றி எல்லாம் வாயை கிழித்துக் கொண்டு குலைக்கும் பார்ப்பனர்கள், மனுதர்மத்தை இன்றைக்கும் நியாயப்படுத்தியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த, ஜூலை 17-ம் தேதி ‘தினமலர்’ என்ற பார்ப்பன நாளேடு, புத்தக மதிப்புரைப் பகுதியில் ‘மனுதர்ம சாஸ்திரம்’ பற்றி எழுதியுள்ளதைப் பாருங்கள்.

“சிலர் எண்ணுவதுபோல மனுதர்ம சாஸ்திரம் ஜாதிகளை அடிப்படையாகக் கொண்ட நூல் அல்ல. இந்த மனுதர்ம சாஸ்திரம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளான ஈரான் (பாரசீகம்), எகிப்து, பாலஸ்தீனம், கிரேக்கம், பர்மா, மலேயா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பரவி இருந்திருக்கிறது. ஆன்ம ஞானம், மனோதத்துவம், ஒழுக்கவியல், உயிரினங்களின் வாழ்வு, பொருளியல், அரசியல் என்ற மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும், இதே மனுதர்ம சாஸ்திரத்தில் விளக்கப்படுகின்றன. பயனுள்ள நூல்” - என்று என்.சிவராமன் எழுதி, காளிஸ்வரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள மனுதர்ம சாஸ்திரத்துக்கு மதிப்புரை எழுதியுள்ளது.

இப்படி மனுதர்மத்தை புதுப்புது பதிப்புகள் போட்டு வெளியிடுவதற்கும்,அதைப் பெருமைப்படுத்தி மதிப்புரை எழுதுவதற்கும், இந்த நாட்டில் சட்டங்கள் அனுமதித்துக் கொண்டிருப்பதைவிட, மானமுள்ள தமிழனுக்கு அவமானம், தலைகுனிவு வேறு ஏதாவது இருக்க முடியுமா?

‘தினமலர்’ ஏட்டைப்போல் “பிராமணர்களின்” அதிகாரபூர்வ அறிவிப்புகள் விளம்பரமாக வெளிவரும் மற்றொரு ஏடு ‘துக்ளக்’. கடந்த ஜூலை 20 ஆம் தேதி வெளிவந்துள்ள ‘துக்ளக்’ ஏட்டில் அனைத்து ‘ப்ராம்மண ஸமூகத்தினரின் நன்மைக்காக வேத பாரதி நடத்தும் பயிலரங்கம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள முழுப் பக்க விளம்பரத்தில் பார்ப்பன குடும்பங்கள் தங்கள் முன்னோர்கள் வழியில், தற்கால சவால்களையும் எதிர்கொண்டு குழந்தைகளையும் தர்மநெறி தவறாமல் வளர்ப்பது பற்றிய “பயிலரங்கம்” ஒன்றை இரண்டு நாள் நடத்தப் போவதாக அந்த விளம்பரம் கூறுகிறது. பார்ப்பன குடும்பங்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்று அறிவித்திருக்கிறது.

முன்னோர்கள் காட்டிய வழியில் உழைக்கும் மக்களை ‘சூத்திரர்’களாக தொடர்ந்து நடத்துவது பற்றிய பயிற்சிகளை தருகிறார்களாம். பார்ப்பனக் குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே இத்தகைய பயிற்சிகளால் நஞ்சை ஊட்டுகிறார்கள். ‘திராவிடத்தாலேயே’ அழிந்தோம் என்று தொடை தட்டிக் கிளம்பியிருக்கும், ‘வீரதீரசூர’ப் புலிகள் பார்ப்பான் இன்னமும் உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த பார்ப்பனத் தினவுக்கு - கொழுப்புக்கு - இறுமாப்புக்கு - என்ன பதில் கூறப் போகிறார்கள்!

உண்மை பெரியார் தொண்டர்களுக்கு பணிகள் அதிகமாகவே காத்திருக்கிறது. மனுதர்மம், பகவத் கீதை, பூணூல்களுக்கு தடை போடக் கோரும் இயக்கத்தைத் தொடங்கியாக வேண்டும். கடைசிப் பூணூல் இருக்கும் வரை ‘கருஞ்சட்டைப்படை ஓயாது’ என்ற ஊர்வலத்தில் முழக்கமிட்டுப் பயன் இல்லை. அதை நாம் செயல்படுத்திக் காட்டவேண்டும்.

கீதை கட்டாயப் பாடமாம்

பார்ப்பனர்களின் மற்றொரு சட்டப் புத்தகம் பகவத்கீதை. ‘பிராமண, வைசிய, சத்திரிய, சூத்திர’ வகுப்புகளை நான்தான் படைத்தேன் (சதுர்வர்ண மயாசிருஷ்டம்) என்று கிருஷ்ணனே கூறுவதாக ‘கீதை’யில் எழுதிக் கொண்டார்கள். இந்த வர்ணபேதங்களை மாற்றக்கூடிய உரிமை தனக்கே கிடையாது என்றும், கீதையில் ‘கிருஷ்ணன்’ கூறிவிட்டான். இந்த பகவத் கீதையை பெரியாரும் - அம்பேத்கரும் கடுமையாக எதிர்த்தார்கள். இந்து மதத்தைக் காப்பாற்ற வந்த விவேகானந்தர்கூட பகவத் கீதையை ஏற்கவில்லை.

இந்த பகவத் கீதையை கருநாடக மாநில பா.ஜ.க. ஆட்சி, பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கியுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கீதையை கட்டாயமாக ஒரு மணி நேரம் கற்றுத் தரவேண்டும் என்று, ஊழலில் நாறிக் கொண்டும் சுரங்க அதிபர்களின் காலை நக்கிக் கொண்டுமிருக்கும் எடியூரப்பா ஆட்சி, கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஆணை பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு கருநாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அம்மாநில கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே என்ற ‘பார்ப்பனர்’ “கீதையை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்; இந்தியாவில் அவர்களுக்கு இடமில்லை” என்று திமிரோடு பேசியிருக்கிறார். இந்த அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கருநாடக சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தலைவர் முகம்மது இமதியாஸ் தலைமையில் அந்த அமைப்பினர், மாநில ஆளுநர் பரத்வாஜை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

அர்ச்சகப் பார்ப்பனத் திமிர்

தமிழ்நாட்டுக் கோயிலகளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் இரண்டு முறை தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறிய பிறகும், இன்னும் சட்டத்தை அமுல்படுத்தவிடாமல், தடுத்து நிறுத்தும் சக்தியுள்ளவர்களாகவே பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் இரண்டாவது முறையாக தி.மு.க. ஆட்சி நிறைவேற்றிய சட்டத்துக்கும் தடைபோட்டுவிட்டது. அனைத்து சாதிப் பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கும் அர்ச்சகருக்கான பயிற்சி தருவதற்கு, திருவல்லிக்கேணி, திருவரங்கம், திருவண்ணாமலை, பழனி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழ்நாடு அரசே பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது. 207 மாணவர்கள் பயிற்சிப் பெற்றனர். பயிற்சி முடித்து 3 ஆண்டுகளாகியும் எந்த ஒரு ‘ஆகம’ கோயிலிலும் ஒரு ‘சூத்திர’ மாணவன்கூட அர்ச்சகர் ஆக முடியவில்லை.

இந்த நிலையில் பயிற்சிப் பெற்ற ‘சூத்திர’ மாணவர்கள், ‘சூத்திர’ இழிவு ஒழிப்புக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள், ஒரு சங்கம் அமைத்துக் கொண்டு, பயிற்சி பெற்ற தங்களுக்கான உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகப் பார்ப்பனர்களும் கோயில் நிர்வாகிகளும் அவர்களை இழிவுபடுத்தி, கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கி வருகிறார்கள்.

இதுபற்றி தமிழக அரசுக்கு இந்த மாணவர்கள் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் திருவண்ணாமலை கோயிலில் தங்களுக்கு அர்ச்சகர் பயிற்சி தந்த மய்யம் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி பார்ப்பன அர்ச்சகர்கள் பூட்டுப் போட்டு வைத்திருப்பதையும் பெயர்ப் பலகையை உடைத்துள்ளதோடு தாங்கள் பயிற்சிக்குப் பயன்படுத்திய ‘விக்ரகம்’ (கடவுள் சிலை) ‘தீட்டாகி’ விட்டது என்பதால் அதையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்தத் ‘தீண்டாமை’க் குற்றங்களை நேரில் பார்வையிடச் சென்ற அர்ச்சகர் பயிற்சிப் பெற்ற மாணவர் சங்கத் தலைவர் அரங்கநாதன் உள்ளிட்டவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் பார்ப்பன அர்ச்சகர்கள் தடுத்து, அடித்து உதைத்து விரட்டியதாக, மனுவில் குறிப்பிட்டுள்ளனர். சேதப்படுத்தப்பட்டுள்ள ‘சாமி’ சிலைகள், பயிற்சிப் பள்ளி பெயர்ப்பலகை புகைப்படங்களை ஆதாரத்துடன் ‘டெக்கான் கிரானிக்கல்’, ‘தீக்கதிர்’ நாளேடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

எல்.ஐ.சி.யில் கீதையாம்

இந்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் எல்.அய்.சி. எனும் ஆயுள் காப்பீட்டுக் கழகம், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாயைக் குவித்துத் தந்த நிறுவனம். ‘பொன் முட்டை இடும் வாத்து’ போன்ற இந்த நிறுவனத்தை இந்தியப் பார்ப்பன ஆட்சியே படிப்படியாக சிதைத்து, தனியார் தொழில் நிறுவனங்கள் கொள்ளை அடிக்க வழி திறந்து விட்டது. பார்ப்பன அக்கிரகாரமாகத் திகழும் இந்த எல்.அய்.சி. யில் அவர்கள் இன்னும் ‘வேதகால’ ஆட்சியையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் எல்.அய்.சி. நிறுவனத்தில் அதன் களப் பணியாளர்களுக்காக பயிற்சிகள் தரப்படுகின்றன. இதில் பயிற்சி தருவதற்கு ‘அரே கிருஷ்ணா அரே ராமா’ கும்பலை, எல்.அய்.சி. பார்ப்பன அதிகார வர்க்கம் அழைத்து, கீதையின் பெருமைகளைப் பேச வைத்துள்ளது.

எல்.அய்.சி.க்கும் - அரே கிருஷ்ணா அரே ராமா கும்பலுக்கும் - பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு? இன்னும் சொல்லப் போனால், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைக்கே எதிரானது - ‘பகவத் கீதை’. இந்த பூமிப் பந்தில் மனிதர்களின் நீடித்த - நலமான உயிர் வாழ்க்கைக்கு உறுதி தருவது தான் ஆயுள் காப்பீட்டுக் கழகம். மாறாக இப் பூலக வாழ்க்கை நிலையற்றது. மானுட ஜென்மத்துக்கு மரணமில்லை. அது மறுபடியும் ஆத்மாவாக வடிவெடுக்கும் மறு ஜென்மத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்காகவே இந்த உலகில் தர்ம நெறியில் (அதாவது பார்ப்பானுக்கு அடிமையாக) வாழ வேண்டும் என்று ‘உபதேசிப்பதே’ பகவத் கீதை. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஆணி வேரான கொள்கைக்கே வேட்டு வைக்கிறார்கள், எல்.அய்.சி. பார்ப்பனர்கள்; இதை கேட்க நாதி இல்லையா?

ராஜபக்சேயின் புரோக்கர் - ‘இந்து’ ராம்

‘இந்து’ நாளேட்டின் ஆசிரியரான பார்ப்பன ராம், சீனாவுக்கும் இலங்கைக்கும் தரகராக’ செயல்பட்டுவரும் நபர். ஈழத் தமிழர் மீது ஜெயவர்த்தனா நடத்திய இனப் படுகொலைகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வெளியிட்டு வரும் கருத்துகளை தனது ஏட்டில் முழுமையாக இருட்டடித்து விடுவார் ‘இந்து’ ராம்! அண்மையில் லண்டனிலிருந்து ஒளிபரப்பாகி வரும் ‘சேனல்-4’ தொலைக்காட்சி ஈழத்தின் ‘கொலைக் களங்கள்’ பற்றி வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் உலகத்தின் மனசாட்சியையே உலுக்கி விட்டுள்ளது. ஆனாலும் அப்படி ‘சேனல்-4’ ஒளிபரப்பிய கொலைக்கள காட்சி பற்றிய செய்தியை ராம் பார்ப்பான், இருட்டடித்து விட்டார்.

இவ்வளவுக்கும் பிறகு ராஜபக்சே மீது உலக அளவில் உருவாகி வரும் எதிர்ப்புகளிலிருந்து பாதுகாத்து, அவரை கதாநாயகனாக்கிக் காட்டும் முயற்சியில் ‘இந்து’ ராம் இறங்கியுள்ளார். அவசர அவசரமாக கொழும்புக்குப் பறந்து போய் ராஜபக்சேவை நேரில் சந்தித்து அவரது விசேட பேட்டியை வாங்கி, கடந்த ஜூலை 23 ஆம் தேதி தனது ஏட்டின் முதல் பக்கத்திலேயே தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளார். ராஜபக்சே சிரித்துக் கொண்டு காட்சியளிக்கும் பெரிய படத்துடன் தன்னுடைய பெயரிலேயே - ராம், அந்தப் பேட்டியை வெளியிட்டுள்ளார். ராஜபக்சே தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை உருவாக்கி வருவதாக அந்த பேட்டி கூறுகிறது. ஈழத் தமிழர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி, தலையில் சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும் காட்சிகளை ‘சேனல் 4’ தொலைக்காட்சி ஒளிபரப்பியது குறித்தும் ராஜபக்சேவிடம் ‘ராம்’ விளக்கம் கேட்டு வெளியிட்டுள்ளார்.

அய்.நா.வின் ஆவணங்களை சரிபார்க்கும் சிறப்புப் பிரிவின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அது உண்மையான படம் தான் என்று சான்றளிக்கப்பட்ட அந்தக் காட்சிகளை டப்ளின் தீர்ப்பாயம் அங்கீகரித்த அந்த காட்சிகளை, பொய்யான படம் என்று ராஜபக்சே கூறுகிறார். அந்தப் படத்தில் துப்பாக்கியால் சுடுவது விடுதலைப்புலிகள் என்றும், நிர்வாணமாக்கி சுட்டுக் கொல்லப்படுவது சிங்கள ராணுவத்தினர் என்றும் ராஜபக்சே கேவலமாக ‘புளுகுவதை’ மான வெட்கமின்றி ‘பத்திரிகை தர்மம்’ பேசும், ‘இந்து’ ராம் வெளியிட்டுள்ளார். ராஜபக்சேயும் அவரது ‘தாசர்’ இந்து ராமும் கூறும் பொய்யை சிங்களர்கள்கூட நம்பத் தயாராக இல்லை.

இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவே ‘இந்து’ ராமின் பார்ப்பன பொய்க்கு ‘செருப்படி’ தந்திருக்கிறார். மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பால கிருஷ்ணரின் நினைவுப் பேருரையை சந்திரிகா கொழும்பில் ஆற்றியபோது, ‘இலங்கையின் கொலைக்களம்’ வீடியோ காட்சி பற்றிக் கூறுகையில் கண் கலங்கியிருக்கிறார். “இந்த வீடியோ காட்சியை பிரிட்டன் தொலைக்காட்சியில் பார்த்த எனது 28 வயதான மகன், ‘நான் சிங்களவன் என்று கூறுவதற்கே வெட்கப்படுகிறேன், அம்மா’ என்று என்னிடம் அழுதுக் கொண்டே கூறினான். என்னுடய மகளும் அவ்வாறே கூறினாள்” என்று கூறிய சந்திரிகா, அந்தக் கூட்டத்தில் கண்கலங்கி, நாதழுதழுத்து, சற்று நேரம் பேச முடியாமல் அமைதியாகிவிட்டார் - என்று ஏடுகளில் செய்திகள் (ஜூலை 25) வெளிவந்துள்ளன.

‘பத்திரிகை தர்மம்’ பேசுகிற பார்ப்பனர் ராம், வழக்கம்போல் இந்த செய்தியையும், தனது ஏட்டில் இருட்டடிப்பு செய்து விட்டார். உலகம் முழுதும் இனப்படு கொலைக்கும், இனவெறிக்கும் இராணுவ அடக்குமுறைக்கும் எதிராக எழுதி - ஏதோ, மனித உரிமைக் காவலன் போல் - இடதுசாரி முகமூடி போட்டுக் கொள்ளும், இந்தப் பார்ப்பனருக்கு ஈழத் தமிழன் என்றால், விடுதலைப்புலிகள இயக்கம் என்றால் ‘பூணூல்’, ‘பஞ்ச கச்ச’ உணர்வுகள் வெளியே கிழித்துக் கொண்டு வந்து நிற்கின்றன; அவ்வளவு பார்ப்பனத் திமிர்!

Pin It