சமூகத்தைக் கவனித்தால், பார்ப்பனர் சிறு தொகையினர். பார்ப்பனரல்லாதாரின் மூச்சு. பார்ப்பனரைத் திணற வைக்கும். அவ்வளவு அதிக எண்ணிக்கை யுள்ளவர்கள்தான், பார்ப்பனரல்லாதார். ஆனால், பார்ப்பனியம் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல! இதுவரை அதற்கு பல வழிகளிலும் தரப்பட்ட படை பலத்தைப் பொறுத்திருக்கிறது.

ஊரே அஞ்சும்படியான வீரர் தான். ஆனால் அவன் மயங்கும் வேளையிலே, மந்திரக்காரன் கையிலுள்ள சிறு வேப்பிலைக் கொத்துக்கு அஞ்சுகிறான். அந்த இலைக்கும் மந்திரக் காரனுக்கும் இருப்பதாகக் கற்பிக்கப்பட்டிருக்கும் மகத்து வந்தான் வீரனும் அஞ்சும் படியான நிலைமை உண்டாக்குவதற்குள்ள காரணமாகும்.

அதைப் போல பார்ப்பனர் சிறு தொகையினராக இருப்பினும், மோட்ச நரகத் திறவுகோலும், ஆண்டவன் அருளை அளக்கும் அளவுகோலும் அவர்களிடம் இருப்பதாகவும், பிற சமூகத்தினரின் சேவையைப் பெறுவது அவர்களின் பிறப்புரிமை என்றும், அவர்களின் திருப்தி ஆண்டவனுக்கே திருப்தி அளிக்குமென்றும், எண்ணற்ற ஏடுகள் எழுதப்பட்டுப் பன்னெடு நாட்களாக மக்கள் இரத்தத்திலே அந்த எண்ணம் கலக்கப்பட்டு விட்டதால், அந்தச் சமூகத்திற்கு, எண்ணிக்கைக்குத் துளியும் பொருத்தமில்லாத அளவு அமோகமான செல்வாக்கு வளர மார்க்கம் ஏற்பட்டிருக்கிறது.

கடிவாளம் சிறியது; ஆனால் குதிரை அதனிடம் படும்பாடு யாவரும் அறிந்ததுதான். மூக்கணாங் கயிறு தனது வால் பருமன்கூடத்தான் இல்லை; ஆனால், மாடு அதனிடம் அகப்பட்டால் அடங்கித்தான் விடும். அதைப் போலச் சிறிய சமூகமாயினும், அதற்கு

ஏதேதோ மகத்துவத்தைக் கற்பித்துவிட்டால், பிறகு அந்தச் சமூகத்தவரின் செல்வாக்கு நிச்சயம் வளரும். ஊரின் மீது ஒரு ஆகாய விமானம் வட்ட மிட்டால், 9000 பேர் இருப்பினும் ஊரார் அஞ்சுகின்றனர். ஏன் ஆகாய விமானத்திலிருந்து வெடி குண்டு வீசப்படும் என்று தெரிந்ததால். இதனால் தான், பார்ப்பனீயம் எனும் பிரச்சினை, கண்டிக்கப்பட வேண்டியதாகிறது.

அறிஞர் அண்ணா ‘இலட்சிய வரலாறு’ நூலிலிருந்து

 வரப் பெற்றோம்

‘பெரியார் - தலித்துகள் - முஸ்லீம்கள்’ அ. மார்க்ஸ் கட்டுரைகளின் தொகுப்பு

பெரியாரை தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இருந்தவரென்றும், அயோத்திதாசரின் பங்களிப்புகளை மறைத்தவரென்றும் நடத்தப் பெறும் திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரத்துக்கு பதிலளிக்கும் நூல். ‘எங்கள் மதம் விஞ்ஞான பூர்வமானது’ என்று மதத்தை கூறுவதை ஏற்க முடியாது என்று கூறுகிற நூலாசிரியர் - ‘மதத்தைப் பகுத்தறிவு கொண்டு அளத்தல் சாத்தியமில்லை என்பதே எனது கருத்து’ என்று கூறுகிறார். இன்றைய இந்துத்துவ பாசிசச் சூழலில் - இஸ்லாம் - இடது சாரிகள் - இறை நம்பிக்கையில்லாதவர்களிடையே கூட்டும் - புரிதலும் அவசியமானது என்று வலியுறுத்துகிறார்.

பெரியாரியலில் நுணுக்கமாக எழுப்பப்படும் கேள்விகள், பிரச்சினைகளுக்கு ஆழமான ஆய்வு முயற்சிகள் தேவைப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டும் நூலாசிரியர், அதற்கு இது வரை வெளிவந்தவை போதாது, பெரியாரின் முழுமையான கருத்துத் தொகுப்புகள் வெளிவர வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பெரியார் தனது இறுதி கால கட்டங்களில் தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு அழுத்தம் தந்தது உண்மை. தேசியத்தை பெரியார் எதிர்த்தார் என்பதற்காக அவர் எழுப்பிய தனித் தமிழ்நாடு கோரிக்கையின் அழுத்தத்தைக் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை என்பதே நமது கருத்து. ஏராளமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ள நூல். ‘பெரியாரும் அயோத்திதாசரும்’ மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பான கட்டுரையாகும்.

வெளியீடு: கருப்புப் பிரதிகள்,
45 ஏ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை,
சென்னை - 5.
விலை: ரூ.55

Pin It