கையில் சிறு உண்டியலுடன் மஞ்சள் துணி அணிந்து நடு ரோடில் உருண்டு வருபவன் (பிராமணனல்ல; அவன் தான் புத்திசாலி ஆச்சே! அவன் ஏன் உருளுவான்?) ஸ்ரீகோவிந்தனைப் பற்றி (அவர் தான், மிஸ்டர் ஏழுமலையான்!) வர்ணிக்கும் பல வர்ணனைகளில் இதுவும் ஒன்று. கோவிந்தன் எல்லா வினைகளையும் தீர்த்து வைப்பான் என்பது!

kuthoosi gurusamy 268திருப்பதி மகந்துவுக்கே முன்பு பைத்தியம் பிடித்ததும், டாக்டர் ஏழுமலையான் கைவிட்டதும், பிறகு, கர்னல் மால்காம்ஸன் குணப்படுத்தியதும் நடுத் தொருவில் புரளும் நாராயணனுக்கு என்ன தெரியும்? ஏதோ, வயிற்றுப் பிழைப்பு! அல்லது மௌடீகம்! திருப்பதியில் கால்ரா வராமல் தடுப்பதற்கு அங்குள்ள சுகாதார உத்யோகஸ்தர் என்ன பாடுபடுகிறார் என்பது, நடுத் தெரு ‘டென்னிஸ்கோர்ட் ரோலர்’ கிடக்கட்டும், மற்றவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தெரிந்தால் திருப்பதி உண்டியலில் காலணா விழுமா? அது தொலையட்டும்.

கடவுளிடத்தில் இன்னின்ன குறைகள் தான் தெரிவித்துக் கொள்வது என்ற நிச்சயமே மனிதனுக்குக் கிடையாதா? குதிரைப் பந்தயத்திற்குப் போகிறவர்கள் கூட கடவுளிடம் ஒரு விண்ணப்பத்தைப் போட்டு விட்டுத்தான் போகிறார்கள் - லாபமும் உண்டு; நஷ்டமும் உண்டு!

முன் காலத்திலெல்லாம் அப்படியில்லை. சேவகர்கள் மகாவிஷ்ணுவை வேண்டுவார்கள். சில சமயம் நாரதரிடம் சொல்லிக்கூட சிபார்சு செய்யச் சொல்வார்கள்! அவரும் அலுத்துக் கொள்ளாமல் உதவுவார்! மகாவிஷ்ணுவும் (இக்காலத்துப் பெரிய மனுஷன் காருக்கு பெட்ரோல் ஆகிறதே என்று கவலைப்படுவது போலில்லாமல்) தனது கருட வாகனத்தில் ஏறிக் கொண்டு ஜாம், ஜாம் என்று வருவார்! கருடன் சக்கரத்துக்கு காற்றடிக்க வேண்டிய வேலையோ, மெஷினுக்குக் கிரீஸ் போட வேண்டிய தொல்லையோ இல்லை. ஏதோ பூச்சியோ, புழுவோ, நண்டோ, நத்தையோ பார்த்துக் கொள்வார், கருடாழ்வார்! வேலையை முடித்துவிட்டு மகாவிஷ்ணு திரும்பி வந்து கருடனை “ஸ்டார்ட்!” பண்ணிப் புறப்படுவார்!

அந்தக் காலத்தில் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பெரும்பாலும் ஒரே குறை தான் இருக்கும். "அசுரர்கள் எங்கள் யாகங்களை அழிக்கிறார்கள்!” என்பார்கள்.

“பூ! இவ்வளவுதானா? அதற்காகவா இவ்வளவு தூரம் வரவேண்டும்? அரையணா கார்டு போட்டால் ஓடி வரமாட்டேனோ? உங்களுக்கு வந்த தீங்கு எனக்கு வந்ததுபோல் அல்லவா?” என்பார், மகாவிஷ்ணு!

இது கலியுகமல்லவா? குறைகள் பல்வேறு வகையாயிருக்கின்றன. சைக்கிள் ட்யூபில் காற்றுப் போய் விட்டாலுஞ் சரி, சர்க்கார் உத்யோகத்தில் “பிரமோஷன்” கிடைக்காவிட்டாலுஞ் சரி, எதற்கும் மனிதன் கடவுளை அழைக்கின்றான்!

“அட கடவுளே!,” என்கிறான். “ஏனப்பா கூப்பிட்டாய்?” என்கிறார். உடனே விஷயத்தைச் சொல்கிறான் !

இப்படி பக்தர்கள் அடிக்கடி தொல்லைப்படுத்துவதைச் சகிக்க மாட்டாமல் இற்றைக்குச் சரியாக 73 ஆண்டுகட்கு முன்னர் (செந்தமிழ் நடை கவனிக்க!) மகாவிஷ்ணு ஒரு முடிவு செய்தார். “அடிக்கடி நான் வைகுந்தத்திலிருந்து வருவதானால் என் கருடன் ‘ஸ்ட்ரைக்’ செய்கிறேன் என்கிறது! கம்யூனிஸ்டுகள் வைகுந்தத்திலும் வந்து கலகம் செய்கிறார்கள். ஆகையால் நான் சங்கு சக்கரத்துடன் மவுண்ட்ரோடில் ‘ஹிந்து’ பத்திரிகையாக அவதாரம் செய்து விட்டேன். (சங்குச் சின்னம் இப்பத்திரிகைக்கு இருந்தது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்க.) இனிமேல் என்னிடம் கூற வேண்டியவைகளை அங்கேயே கூறிவிட்டால் போதும்!” என்று கூறினார்!

அதன்படியே அன்று முதல் திஷ்டநிக்ரஹ சிஷ்டபரிபாலன வேலைகள் முறையாக நடந்து கொண்டேயிருக்கின்றன!

இப்படியிருக்கையில் ஒரு நாள், (அதாவது இன்றைக்குத்தான்) மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலைப் பற்றி ஒரு பூதேவர் கீழ்க்காணும் குறையைத் தெரிவித்தார்:-

“14 -ந் தேதி முதல் திருவிழா நடந்து வருகிறது. ஆனால் வேதபாராயணம் நிறுத்தப்பட்டிருக்கிறது. கோயில் நிர்வாகிகள் செயல் கண்டிக்கத்தக்கது. இன்று முதலாவது வேதபாராயணம் தொடங்கப்படுமா?” (பக்கம் -6 பத்தி -1)

மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு (“ஹிந்து”) எவ்வளவு மகத்தான தொல்லைகள் பாருங்கள்? ஹைகோர்ட் நீதிபதி நியமனம் முதல் வேதபாராயணம் வரையில் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இந்நேரம் டெலிபோன் மூலம் சர்க்கார் உத்தரவிட்டிருப்பார்கள்! இன்றிரவு முதல் வேதபாராயணம் தொடங்கப்படலாம்! ‘ஹிந்து’ வின் விரல் அசைந்தால் சர்க்காரின் சப்த நாடிகளும் ஆடுமல்லவா?

வேதபாராயணம் நின்றுபோனது பற்றி கபாலீஸ்வரர் கவலைப்படக் காணோம்! பூதேவர் கரைந்துபோகிறார்! பாவம்! என்ன பக்தி!

ஒருக்கால் கோட்ஸே இனத்தார் வேதபாராயணம் செய்வதையே வெறுக்கிறார்களோ என்று கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் லால்குடி திருவிழாவில்கூட வேதபாராயணம் நின்றுவிட்டதாம்! மன்னார்குடியிலும், மதுரையிலும் கூட நின்றுவிட்டதாக செய்தி கிடைத்திருக்கிறது.

எவ்வளவு மனவேதனை இருந்திருக்க வேண்டும். நம் பிராமணத் தோழர்களுக்கு! “நம் இனத்தான் செய்த கொடுஞ்செயலுக்குப் பிராயச்சித்தம்; நாம் இனி பிராமணத் தன்மையை விட்டொழிக்க வேண்டியதுதான். அதன் ஆரம்பச் செயலாக இனி வேத பாராயணத்தை நிறுத்தி விடுவோம்,” என்று சில பிராமணோத்தமர்கள் முடிவு செய்திருக்கிறார்களோ என்னவோ?

வைதீக பூதேவர்களின் இந்த முடிவைப் பாராட்டுகிறேன். நீங்கள் அவர்களைப் பாராட்டுங்கள். நாணயமான நல்ல தொழில்களைத் தேடி இவர்களுக்குக் கொடுங்கள்! எந்த வேலையையும் சுறுசுறுப்பாகச் செய்வார்கள்! நல்ல மனுஷர்கள்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It