சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ள சுப்ரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் வாதாடும்போது அங்கும் தனது வழக்கமான பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார்! ‘ராமன் சேது பாலம் இந்துக்கள், வழிபடுகிற பாலம்; அதை இடிக்கக் கூடாது’ என்று ‘சு.சாமி’ கூறியவுடன், நீதிபதிகளாலே, அதற்கு மேல் இந்த பொய்களை பொறுக்க முடியவில்லை.

“ராமன் சேது பாலம் எப்படி வழிபடக்கூடிய இடமாக இருக்க முடியும்? அது நடுக்கடலில் இருக்கிறது. கடலுக்குள் போய், மக்கள் பூசை செய்கிறார்களா? இப்படியெல்லாம் வாதாடக் கூடாது” என்று பதிலடி தந்திருக்கிறார், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன். மற்றொரு நீதிபதியான ஆர்.வி. ரவீந்திரனும், இதை ஆதரித்துள்ளார்.

சு. சுவாமி உடனே என்ன சொல்லியிருக்க வேண்டும், “இல்லை; இல்லை; ராமன் சேது பாலத்தில் பூசைகள் நடக்கின்றன. அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் - பூணூல் மேனியுடன் கடலில் குதித்து - நீந்தி ஒவ்வொரு நாளும் பாலத்தை அடைந்து, அங்கே மந்திரங்களை ஓதுகிறார்கள். நானும் நாளும் கையில் சூடம் சாம்பிராணியோடு - அப்படியே கடலில் குதித்து, காலால் நீச்சலடித்து மூச்சை தம் பிடித்து ராமன் பாலம் போய் பூசை செய்கிறேன்” என்றல்லவா கூறியிருக்க வேண்டும். அப்படியெல்லாம் கூற வில்லை.

பார்ப்பன பொய் அம்பலமானவுடன் - சு.சாமி, தனது வழக்கமான ‘புண்படுத்தும்’ ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு, “நீதிபதி பேசுவது நாத்திகப் பேச்சு. கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை நீதிமன்றம் புண்படுத்தக் கூடாது” என்று மிரட்டத் தொடங்கிவிட்டார்.

‘800 மில்லியன் இந்தியர்களின் நம்பிக்கைச் சின்னம் ராமன் சேது பாலம்’ என்று ராமனுக்காக வாதாட வந்த வழக்கறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். 800 மில்லியன் இந்தியர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்கு இவர்கள் நாடு தழுவிய கணக்கெடுப்பு நடத்தினார்களா? அது பற்றிய தகவல்கள், புள்ளி விவரங்கள் இவர்களிடம் உண்டா? 27 சதவீத இடஒதுக்கீடு வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிற்படுத்தப்பட்டோர் எத்தனை சதவீதம் பேர் என்று கணக்கெடுப்பு நடந்ததா? என்றும் 1930களில் நடந்த கணக்கெடுப்பை ஏற்க முடியுமா? என்றும் இதே கூட்டம் தான் கேள்விகளைக் கேட்டது.

அதே கூட்டம் 800 மில்லியன் இந்தியர்களையும் தனது ஆதரவாளர்களாக இப்போது மாற்றிக் கொண்டு உச்சநீதிமன்றத்தையே மிரட்டுகிறது! மக்களின் பிரதிநிதிகள் உருவாக்கிய சட்டமன்றம், மற்றும் நாடாளுமன்றங்களின் ஒப்புதல்களோடு வரும் திட்டத்தை, நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான திட்டம் என்று, இந்தச் கூட்டம் சாதிக்கப் பார்க்கிறது!

ஆற்றில் விழுந்த நரி, ‘உலகமே அழியப் போகிறது, என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கூக்குரல் போட்டதாம். ஒருவன் ஓடி வந்து தூக்கிக் கரையில் போட்டபோது, ‘ஆபத்து எனக்குத்தான் வந்தது’ என்று கூறி நரி ஓட்டம் பிடித்ததாம். அதே கதைதான் இந்த பார்ப்பன இந்துத்துவா கும்பலின் கதையாகவும் இருக்கிறது.

உலகத்தில் ஒவ்வொரு கண்டுபிடிப்பையும், அறிவியல் வளர்ச்சியையும் இந்த மதவாதம் எதிர்த்தே வந்திருக்கிறது என்பது வரலாறு. அப்போது அவர்கள் செய்ததுகூட அறியாமையினால்தான்! ஆனால் - இப்போது பார்ப்பனர்கள் அதே ‘மத நம்பிக்கை’ எனும் கொடுவாளைத் தூக்கிக் கிளம்பியிருப்பது அறியாமையினால் அல்ல; அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக! அதற்காக தேவைப்படும் மற்றொரு ‘ராமனை’ உருவாக்குவதற்காக!

Pin It