முன்னாள் ‘ரா’ அதிகாரி கூறுகிறார்
இந்திய உளவு நிறுவனமான ‘ரா’வில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் பி. இராமன். இலங்கைப் பிரச்சினைப் பற்றியும், ராணுவ நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக கட்டுரைகளை எழுதிவரும் அவர், கடந்த ஏப்.24 ஆம் தேதி முகமாலைப் பகுதியில் சிறீலங்கா ராணுவம் சந்தித்த கடுமையான பின்னடைவை ஒப்புக் கொண்டுள்ளார்.
சிறிலங்கா ராணுவம் - இனி எந்தக் காலத்திலும் தரை வழியாக புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நுழையும் வாய்ப்பே இல்லை என்று, உறுதியாகக் கூறும் அவர், விரக்தியின் விளிம்புக்குப் போய் பிரபாகரன் மரணமடைந்தால்தான் சாத்தியம் என்கிறார். தென்னாசிய ஆய்வுகளுக்கான இணையத் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (25.4.08) பி.இராமன் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்:
தமிழீழ விடுதலைப்புலிகளின் மரணப் பொறியில் இரண்டாவது முறையாக சிறிலங்காப் படையினர் சிக்கிக் கொண்டுள்ளனர். கடந்த 23 ஆம் நாள் முகமாலையில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் காரணமாக 150 படையினர் கொல்லப்பட்டதுடன், பாரியளவு ஆயுதங்களை விடுதலைப் புலிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் இதே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முன் நகர்வுகளின் காரணமாக சிறிலங்காப் படைத் தரப்பு பாரிய இழப்புகளைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
2006 ஆம் ஆண்டு முகமாலைத் தாக்கதல்களின் போது 139 படையினர் கொல்லப்பட்டனர். முதலில் இந்தத் தகவல்களை சிறிலங்கா அரசாங்கத் தரப்பு நிராகரித்த போதிலும் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது. 2006 ஆம் ஆண்டு முகமாலைத் தாக்குதல்களின் போது 400-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்தவின் சகோதரரும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்பின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவின் அவசர முடிவினாலேயே இந்த இழப்புக்கள் ஏற்பட்டதாக அமெரிக்காவில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்ததாக நம்பகத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் நாள் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து 43 படையினர் கொல்லப்பட்டதாகவும், 33 படையினரைக் காணவில்லை எனவும் சிறிலங்கா இராணுவம் தகவல் வெளியிட்டிருந்தது. எனினும், சி.என்.என். செய்திச் சேவை மற்றும் ஏ.எஃப்.பி. ஆகிய செய்தி நிறுவனங்கள் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியிட்டிருந்தன. சிறிலங்கா காவல் துறையினரின் மதிப்பீட்டின்படி 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3000 விடுதலைப்புலி உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவித்திருப்பதாகவும், இது வரையில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் எண்ணிக்கையே 3,105 எனவும் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது. அவை உண்மையல்ல என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தரப்பு உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றது. நாள்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் படை நடவடிக்கை அல்லது விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்பு என்ற தகவல்களே பாதுகாப்புத் தரப்பின் செய்தியின் உட்கிடக்கையாக வெளிப்பட்டு வருகின்றது. இந்தத் தகவல்களின் மூலம் சிறிலங்காப் படையினர் மற்றம் சிங்கள மக்களின் மனோவலிமையை அதிகரிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்தது. படைத்தரப்பின் இத்தகைய செயற்பாடுகளின் மூலம் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பலவீனப்படுத்தப்படுவார்கள் எனவும் சிறீலங்கா அரசாங்கம் கருதியது.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் படைத்தளங்கள் மற்றும் முக்கிய கட்டடங்கள் மீது வெற்றிகரமாக வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் கடற்படை அழிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை கைப்பற்றி இந்த ஆண்டு இறுதிக்குள் வடக்கை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் கூறப்படுகின்றது.
தமது சொந்த மண்ணின் மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்குவது போர்த் தந்திரோபாயமாகவோ அல்லது பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாகவோ அமையாது.
மாறாக இந்த நிலைமை சொந்தப் படையினர் மற்றும் மக்கள் மத்தியில் தேவையற்ற எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தும். தமக்குப் பொய்யான தகவல்களை வழங்கியே போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டதாக படையினர் உணர்ந்ததால் அது அரசியல்வாதிகளுக்கும், உயர் படைத் தளபதிகளுக்கும் கடும் எதிர்விளைவுகளை உண்டு பண்ணும். தமிழீழ விடுதலைப் புலிகளும், இலங்கைத் தமிழ் ஆதரவாளர்களும் வட போர்முனையின் போர்க்கள நிலவரங்களை நன்கு உணர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்கள் அவர்களை எந்த வகையிலும் பாதிக்காது என்பதனை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். உண்மையில் இந்தப் பிழையான தகவல்களின் மூலம் சிறிலங்காப் படையினரும் சிங்கள மக்களுமே ஏமாற்றப்படுகின்றனர். 2006 ஆம் ஆண்டிலும் இன்றும் அதே நிலைமையே நீடிக்கின்றது.
2006 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் என்ன செய்தார்களோ அதனையே மீண்டும் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் புலிகள் மேற்கொண்டனர்.
ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு தப்பியோடுவதனைப் போன்று பாசாங்கு செய்து, படையினரை குறித்த பிரதேசத்திற்குள் நுழையச் செய்து பின்னர் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். இந்தத் திடீர்த் தாக்குதல் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் படையினர் மீது சராமாரியான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
இந்த வெற்றி விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் போராளிகளுக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது. இந்தப் போர் வெற்றி வட களமுனையில் விடுதலைப்புலிகள் பலம் பொருந்தியவர்கள் என்பதனை மீண்டும் பறைசாற்றி நிற்கின்றது. 23 ஆம் நாள் அடைந்த போர் வெற்றி ஓரளவு திருப்தி அளிக்கக்கூடிய போதிலும், அதனை ஒரு திருப்திகரமான நிலையாக கருத முடியாது.
போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்களவு உயர்நிலையில் காணப்படுகின்றமை மறுக்கப்பட முடியாது உண்மை. வட போர்முனையை இலகுவாக தரை வழியாகக் கடப்பது என்பது ஒரு பகல் கனவாகவே தென்படுகின்றது. வான் தாக்குதல்களின் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்தால் மாத்திரமே முன் நகர்வுகளை மேற்கொள்ள முடியும்.
ஒருபுறத்தில் சிறிலங்கா வான்படை பிரபாகரனை இலக்கு வைத்து பல தாக்குதல்களை மேற்கொள்கின்றது. மறுபுறத்தில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகளைச் சுட்டு வீழ்த்த புலிகள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் எதுவுமே இதுவரையில் சாத்தியப்படவில்லை.