வருமான வரி அலுவலகங்களை இழுத்து மூடு!
தமிழர்களைக் கொன்று குவிக்க ஆயுத உதவி வழங்கும் டில்லி ஆட்சிக்கு வரி தர மறுக்கும் போராட்டத்தை ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ வருமானவரித் துறை அலுவலகங்கள் முன் கடந்த பிப்.20 ஆம் தேதி நடத்தியது. பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. புலிகள் மீதான தடை நீக்கப்படவேண்டும்; தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு தொடங்கப்பட்டுள்ள தமிழர் ஒருங்கிணைப்பின் முதல் போராட்டம் இது.
வருமான வரித் துறை அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் பிப்.20 ஆம் தேதி காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகம் முன் நடந்தது. பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொறுப்பாளர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு முன்னிலையில் நடந்த இந்தப் போராட்டத்தில், 70 தோழர்கள் பங்கேற்றனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோரியும், இலங்கைக்கு ஆயுதம் வழங்கும் இந்திய அரசுக்கு வரி தர மாட்டோம் என்ற முழக்கங்களோடு வருமானவரித் துறையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அலுவலகம் அருகே காவல்துறை தடுத்து அனைவரையும் கைது செய்தது. நுங்கம்பாக்கத்திலுள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மாலை 4 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
கோவையில்
கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள வருமான வரித்துறை அலு வலகம் முன்பு இழுத்து மூடும் போராட்டம் கழக செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில் நடந்தது. நூற்றுக்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் துரைசாமி, ரமேஷ், கோவை மாநகர செயலாளர் கோபால், கதிரவன், ஆனைமலை ஒன்றியத்திலிருந்து கா.சு. நாகராசன் மற்றும் தோழர்கள் உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
தமிழர் ஒருங்கிணைப்பு சார்பில் இந்திய அரசின் வரி அலுவலகங்களை இழுத்து மூடும் போராட்டம் 20.2.2009 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஈரோடு வருமான வரி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழக மாவட்டச் செயலாளர் இராம.இளங்கோவன் தலைமை வகித்தார். தமிழ் தேசிய விடுதலை இயக்கம் வேலிறையன், தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி ச.அர. மணிபாரதி, ஈரோடு ப. இரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பன்னீர்செல்வம் பூங்கா விலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பிருந்து தோழர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலம் வருமான வரி அலுவலகம் அருகில் சென்றதும் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து, ஆரிய வைஸ்ய திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலை 6 மணிக்கு விடுதலை செய்தனர். 113 தோழர்கள் கைதாகினர். இந்த ஊர்வலம் தொடங்கும் முன்பு போராட்டத்தை வாழ்த்தி கீழ்க்கண்ட தோழர்கள் உரையாற்றினர்.
ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி, பா.ம.க. மாவட்ட செயலாளர் எம்.பி.வெங்கடாச்சலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடாச்சலம், பி.ஜே.பி. மாநில பிரச்சார அணித் தலைவர் ஆ.சரவணன், ஈரோடு ப. இரத்தினசாமி, தமிழ்தேசிய பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ச.அர. மணிபாரதி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் வேலிறையன், கழக மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். இப்போராட்டம் எழுச்சியாக நடந்தேறியது.