வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கலைஞர் அவசரமாக விலக்கிக் கொண்டு விட்டார். தி.மு.க. - பா.ம.க. உறவு ‘விரிசல்’ ஆனபோது பாய்ந்த சட்டம், உறவு சுமூகமான போது திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இந்த முடிவை நாம் எதிர்க்கவில்லை; ஆனாலும் ஒரு உண்மையைக் குறிப்பிட வேண்டும்.

திருவரங்கத்தில் பெரியார் சிலையை இந்து மக்கள் முன்னணியைச் சார்ந்த பார்ப்பன கைக்கூலிகள் உடைத்த போது - பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் சாதி ஆதிக்கம் நிறைந்த பார்ப்பன நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதற்காக வழக்கைச் சந்தித்து சிறை செல்லவும் தயாரானார்கள். ஆனால், கலைஞரோ பெரியார் திராவிடர் கழகத்தினர், பார்ப்பனர் பூணூலை அறுத்தது தேச விரோதச் செயல் என்று கூறி, 7 தோழர்களை தேசப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

பூணூல் அறுப்புக்கு உரிய பிரிவுகளில் வழக்குப் போடாமல் ‘பூணூலை’ தேசத்தோடு இணைத்தது கலைஞர் அரசு. தேசிய பாதுகாப்பு சட்ட போடப்பட்டதை எதிர்த்து திரும்பப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கலைஞர் ஏற்கவில்லை. உயர்நீதி மன்றம் தான், நான்கு மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது தவறு என்று கூறி விடுதலை செய்தது.

கலைஞருக்கு கொள்கை தர்மத்தைவிட கூட்டணி தர்மம் தான் எப்போதும் மேலோங்கி நிற்கிறது. பொடா சட்டம் எப்படி விருப்பு வெறுப்புடன் பயன்படுத்தப் பட்டதோ, அதே போல் ‘தேசிய பாதுகாப்பு சட்டமும்’ விருப்பு வெறுப்புக்கு ஏற்பத் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இவை சாட்சியங்கள்!

Pin It