இலங்கையில் ராஜபக்சே என்ற சிங்களர் ஆட்சி - ஆட்சியின் அதிகாரம் முழுவதையும் ராணுவத்திடம் கையளித்துவிட்டதால் ராணுவ தளபதிகளே அங்கு அரசியல் பேசி வருகிறார்கள். இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா அண்மையில் கொழும்பிலிருந்து வெளிவரும் ‘சண்டே அப்சர்வர்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என்று திமிருடன் கூறியுள்ளது. தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கி யுள்ளது. சரத் பொன் சேகா இப்படிப் பேசுவது இது முதல் முறையல்ல.
சைப்ரஸ் நாட்டுக்கு சில வாரங்களுக்கு முன் அவர் சென்றிருந்தபோது “இலங்கை சிங்கள மக்களின் நாடு இதற்கு உடன்பட்டுத்தான் தமிழர்கள் இலங்கையில் வாழ வேண்டும்; இல்லையேல் வேறு நாட்டுக்குப் போய்விடலாம்” என்று பேட்டி அளித்தார். ஒரு ராணுவத் தளபதி இப்படி எல்லை மீறி இனவெறியைக் கக்கிய தற்காக ராஜபக்சேவோ, அல்லது ஆட்சியோ, அவரைக் கண்டித்ததாகத் தெரியவில்லை.
சரத் பொன் சேகா - இப்படி ஒட்டு மொத்த தமிழகத்தையே அவமதித்து, தமிழகத்தின் சுயமரியாதைக்கே சவால் விட முடிகிறது என்றால், இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சியின் சிறிலங்கா ஆதரவுப் போக்கு அவ்வளவு வலிமையாக இருப்பதே காரணம். தங்களுக்கு இந்திய அரசுதான் முக்கியமே தவிர, தமிழ்நாடு பற்றிக் கவலை இல்லை என்று தமிழகத்தை இந்தியாவிலிருந்து சிங்களம் பிரித்துப் பார்க்கிறது. இந்திய தேசியப் பார்ப்பனியமும் தமிழகத்து உணர்வு களை அவமதித்து பிரித்து தனியே ஒதுக்கித் தள்ளிவிட்டது என்பதே இதில் அடங்கியுள்ள அர்த்தம்.
இந்தப் பிரச்சினையில் தமிழகத் தலைவர்களை வரவேற்பு அறைக்கு அழைத்து நாற்காலி போட்டு அமர வைத்து தேனீர் அளித்துப் பேசுவதோடு, தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய மரியாதை முடிந்துவிட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் கருதிக் கொண்டு, சிங்களத்தின் திமிர்ப் பேச்சுகளை கண்டிக்காமல் நழுவப் போகிறாரா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம்.
ஏதோ, சில மாநிலங்களில் காங்கிரஸ், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டது என்பதற்காக தமிழ்நாட்டின் வாக்குகளை வாரிக் கொண்டு போய்விடலாம் என்று - இந்திய அரசு தப்புக் கணக்குப் போட வேண்டாம். தமிழர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டு வாக்குகளை அபகரிக்க தமிழர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.
எனவே சிங்களத்தின் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இலங்கை அதிபரை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும்; அல்லது சிங்களத் தூதரக உறவை முறிப்பது பற்றி இந்திய தேசிய அரசு சிந்திக்க வேண்டும். இல்லையேல் இந்தியா வினுடைய உறவை தமிழகம் புறக்கணிக்கும் ‘அரசியல்’ உருவாவதைத் தவிர்க்கவே முடியாது.
இலங்கையுடன் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று “அருள் உபதேசம்” கூறும் பார்ப்பன சக்திகள் மார்க்சிஸ்ட் கட்சியினர், தேசியவாதிகள் இப்படிப்பட்ட கடும் போக்குடைய ஒரு இனவெறி அரசுடன் தமிழர்கள் கைகுலுக்க முடியுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.
அப்படியே கைகுலுக்கினாலும் அந்த உறவு சுமூகமாக நீடிக்குமா? என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானுடன் இந்தியா மீண்டும் ஒன்றாக சேர்ந்து, ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள வேண்டும் என்று கூறினால், அதை எவராவது ஏற்க முடியுமா? இதேபோல் தான் ஏற்கனவே ஈழமும், சிங்களமும் பிரிந்து போய் முரண்பட்டு நிற்கின்றன. எனவே தமிழர்களின் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரிப்பதுதான் பிரச்சினைக்கு சரியான தீர்வு என்ற உறுதியான முடிவுக்கு வரவேண்டும். பொன்சேகாவின் பேச்சு இதைத்தான் உறுதி செய்கிறது.