சென்ற இதழில் வெளிவந்த ஞான. அலாய்சியஸ் அவர்களின் பேட்டி இந்த இதழிலும்...
நீங்கள் முன்வைக்கும் தேசியம் என்பது சோஷியலிசத்துடன் நெருங்கி வருமா?
கட்டாயமாக! இந்திய சோஷியலிஸ்டுகள், சோஷியலிச கம்யூனிசக் கொள்கையை ஏதோ புதியதொரு வேதமாகக் கொண்டு, எங்கிருந்தோ சமத்துவத்தைக் கொண்டு வந்து திணிப்பது போல் செயல்படுகின்றனர்.
சமத்துவம், பண்பாட்டின் இருதயத்திலிருந்து துளிர்க்க வேண்டும். துளிர்க்கும் சமத்துவமுமே என்றும் நிலைநிற்கும்; அ-சமத்துவ மனப்பான்மை, வழி முறைகளை எதிர்கொண்டு அவற்றை வென்றால்தான் அடுத்த படிக்குச் செல்ல முடியும்.
க, இந்தியச் சூழலில் சாதி ஒழிப்பின்றி சமத்துவம் இல்லை. சாதி ஒழிப்பின்றி தேசியம் இல்லை, சாதி ஒழிப்பின்றி கட்டாயமாக, சோஷியலிசமோ, கம்யூனிசமோ இல்லை. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அரசியல் தேசியம் - Political Nationalism சோஷியலிசத்தை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு மைல்கல்.
அரசியல் தேசியத்தைத் தாண்டித்தான் (தவிர்த்து அல்ல) சோஷியலிசத்துக்குச் செல்ல முடியும். இந்தியாவிற்கு மட்டும் தனியாக விதியொன்றும் இல்லை. பிரான்ஸ் நாட்டிலும் மூன்று Orders அல்லது Estates இருந்தன: கும்பிடுவோர், போரிடுவோர், ஏர்பிடிப்போர் என்று அங்கும் குழுக்களிடையே பல தடைகள் இருந்தன. இம்மூன்று Ordersம் ஏறக்குறைய பிறப்பால் அமைந்தவையே.
ஏர்பிடிக்கும் பெருவாரியான கூட்டம், நம் நாட்டின் ‘கீழ் சாதி'கள் இருக்கும் நிலையில் இருந்தன. அவர்களுக்கு ‘ஆன்மா' இல்லை என்றுகூட வேதியியலார் எழுதினர். கிறிஸ்துமஸ் பண்டிகையின் நடனங்களில்கூட, ஒருவர் மீது ஒருவர் பட்டுவிடக்கூடாதென்பதற்காக, குழுக்களின் இடையே கயிறு கட்டி நடனமாடினர். ஆனால், இவையெல்லாம் புரட்சியின் போது மறைந்து ஒழிந்தன. மூன்று சமூகங்களும் ஒன்றாயின. அப்படி ஒன்றாகியே தேசம் என்னும் பெருஞ்சமுதாயம் உருவானது.
இதேபோல் ஜெர்மனியில் Folk என்னும் பொதுக் கருத்து உருவாகி, அதுவே குடிமகன் நிலைக்கு உயர்த்தப்பட்டது. இங்கிலாந்தில் அதற்குச் சமமாக உழைக்கும் வர்க்கம் என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. க, பிரான்சின் விவசாய அடிமைகள், ஜெர்மனியின் நாட்டுப்புறத்தார், இங்கிலாந்தின் உழைப்போர் இவர்களே தேசம் உருவாக அடித்தளமாக அமைந்து, குடிமகன் என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். அந்தக் கணக்கில் இந்நாட்டின் கீழ்ச் சாதிகள் என்படும் பெருவாரியானோரின் முன்வருகையும் சமூக உயர்த்தலுமே தேசம் என்று கொள்ளப்படும். ஆனால், நடந்தது என்ன? ‘கீழ்சாதி'கள் எனப்படும் உழைப்போர், தேச அரசு உருவாக்கப்படும் பட்சத்தில் இன்னும் கீழே தள்ளப்பட்டு, அதில் பலர் தீண்டாதோர் என்னும் நிலையில் உறுதி செய்யப்பட்டனர்.
தேசத்தை உருவாக்கும் நேரத்தில், ஆளும் வர்க்கம் நடந்து கொள்ளும் முறைபற்றி அம்பேத்கர் அருமையாக விளக்குகிறார். பிரான்சில் "நோபிள்ஸ்' என்றழைக்கப்படும் ஜமீன்தார்கள், காலம் மாறுவதைக் கண்டு, தங்களது எதிர்காலத்தைக் கணித்து, பிறப்பினால் பெற்ற சலுகைகள் மூலம் ஆதிக்கம் செலுத்தும் முறையை விட்டுவிட முன்வந்தனர். பிறகு தொழில் செய்து, தமது சாதனையால் மேலோங்க முனைந்தனர். இதேபோல் ஜப்பானின் ‘சாமுராய்'களும் குறிப்பிட்ட காலத்தில் வழிவழியாக வந்த தமது நில உரிமைகளை விட்டுக் கொடுக்க முன்வந்தனர்.
இந்த மாதிரியான விட்டுக் கொடுத்தலால், பிரான்ஸ், ஜப்பான் நாடுகளும் அதன் மக்களும், வலுவான தேசத்தைச் சமைத்தனர். ஆனால், இதற்கு மாறாக இந்தியாவின் ஆளும் வர்க்கங்களான ஆதிக்க சாதிகள், தேச அரசு உருவாக்கும் காலகட்டத்தில் தமது பரம்பரைச் சலுகைகளை இன்னும் விரிவுபடுத்தினர்; உறுதிப்படுத்தினர். அதனால்தான் இன்று இந்தியா இந்நிலையில் உள்ளது.
சோஷியலிசத்தின் உட்கரு சமத்துவம் என்றால், அதன் ரம்பம் அரசியல் தேசியமே. அதனைச் சமைப்போர் இதுகாறும் தள்ளப்பட்டு, இப்போது முன்வரத்துடிக்கும் பெருவாரியான "கீழ் சாதி'களே.
பார்ப்பனர்கள் காலனிய எதிர்ப்பை, தேசியம் என்கிறார்களே!
ஆதிக்கச் சாதியினர் தமது ‘தேசியத்தை' காலனிய எதிர்ப்பு தேசியம் என்று வர்ணிக்கின்றனர். இது, பண்பாட்டுத் தேசியத்தின் மறு பெயரேயன்றி வேறல்ல. பண்பாட்டுத் தேசியத்திற்கும், இனத்தேசியத்திற்கும் (Racial Nationalism) வேறுபாடு அதிகமில்லை. இவ்வகையான தேசியம் சில காணக்கூடிய, பிறப்பால் உண்டான அடையாளங்கள் நிறம், உடல்வாகு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. இங்கு அது இந்தியன் வெள்ளையன் என்ற முரண்பாட்டை உள்ளடக்கியது. இவ்வகையான பிறப்பால் உண்டான வேறுபாடு, நவீன சமூக உறவுகளுக்கும் அரசியல் அமைப்புகளுக்கும் ஒவ்வாதது. மேலும் "இந்தியத் தேசியம்' காலனியாதிக்கத்தின் கீழ் எழுந்த காலனிய கட்டமைப்பைக் கட்டவிழ்ப்பதற்காக எழவில்லை. மாறாக, காலனிய ஆதிக்கத்தாரான வெள்ளையரை விரட்டி அவ்விடத்தில் இந்தியரை அமரச் செய்து, காலனிய கட்டமைப்பை தொடரச் செய்வதே நோக்கம்.
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், சாதி ஒழிப்பு இயக்கத்தவர்தான் காலனிய கட்டமைப்புக்குச் சாவுமணி அடித்தனர். முன்சாதி, பின்சாதி என்ற பாகுபாட்டை ஏற்க மறுத்து எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கூக்குரல் எழுந்தபோதுதான் ஆங்கிலேயராட்சி அர்த்தமற்றுப் போகத் தொடங்கியது. எல்லாருக்கும் எல்லாம் கிடைத்தால், அந்நியனுக்கு என்ன மிஞ்சும்? காலனியத்தால் அவன் அடையும் பயன் என்ன? பெருவாரியான உழைக்கும் பெருமக்கள் சமூக அரசியல் விழிப்புணர்வு அடையும் வரையில்தான் காலனியம் சரிப்பட்டு வரும். எனவே, மெய்யான காலனிய எதிர்ப்பாளர் யார் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரே மொழியைக் கொண்டவர்கள்தான் ஒரு தேசமாக மாறியிருக்கிறார்கள் என்றொரு கருத்து இருக்கிறதே!
உண்மைதான். மொழி என்பது ஒரு விரிந்து பரந்த சதாயத்தை, நிவீனத்திற்கு முற்பட்ட காலத்தில் கட்டிக் காத்து வருவது. மொழி ஒரு தொடர்பு சாதனம் மட்டுமல்ல; அது ஒரு சமூக உறவு சாதனமும்கூட.
சமநிலைப்படுத்தப்பட்ட தனிமனிதர்களைக் கொண்டதுதான் தேசியம் என்றால், அம்மாதிரியான நிலையை அடைவதற்கு மொழிச் சமுதாயமே மிகச் சரியான அடித்தளம். சமத்துவ மனப்பான்மை, செயல் முறைகள் மொழிவழியே வெளிப்படுகின்றன. நவீனத்தில் சமத்துவம் இலக்காகும்போது, இம்மாதிரியான சமத்துவக் கோட்பாடுகளும் வழிமுறைகளும் மொழிவழியே அழிக்கப்பட்டு, புது நியாய உறவுகள் மொழிவழியே வெளிப்படுகின்றன. உலகில் மாறுதலடைந்து முன்னுக்கு வந்துள்ள தேசங்களின் பெரும்பான்மையானவை மொழிச் சமுதாயங்களேயாகும்.
ஆனால், மொழி என்பதையும் மாற்ற முடியாத பிறப்படையாளங்களாக, இனத் தேசியமாக மாற்றிவிடக் கூடாது. மொழி தாரம். ஆனால், நவீனத்தில் அந்த மொழியும், மொழி மூலம் வெளிப்படும் பண்பாடும், சமத்துவத்தை நோக்கி மாற வேண்டும். புதிய மொழியும் பண்பாடும், பழமையை மாற்றி உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மொழியையும், தமிழ்த் தேசியத்தையுமே எடுத்துக்கொள்வோம். பன்மொழி, பல பண்பாடுகள் கொண்ட இந்தியா ஒரு தேசமாக மாறுவதைவிட, ஒரு மொழி ஒரு பண்பாடு கொண்ட தமிழகம் தேசமாக மாற வாய்ப்புகள் அதிகமுண்டு. ஆனால், இந்தத் தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பாடும், வழிவழிவந்த செயல்முறைகளையும் மொழி மரபுகளையும் குறிப்பிடுவன அல்ல. மாறாக, இவை நவீனத்துக்குள், சமத்துவப்படுத்தப்பட்ட மொழியும், பண்பாடுமே தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பாடும். இதுவே தமிழ்த் தேசியம்.
சமத்துவப்படுத்தப் படவில்லையெனில் அந்தத் தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பின்னால் பெருவாரியான மக்கள் அணிவகுக்க முன்வர மாட்டார்கள். சுருங்கச் சொன்னால், ஒரு மொழிச் சமுதாயத்துக்குள்தான், பிறப்பால் உண்டான ஏற்றத்தாழ்வுகளை அழிப்பது சாத்தியம். ஆனால், அந்த சாத்தியத்தை நடைமுறைப்படுத்தினால்தான் மொழிவழி தேசியம் அரசியல் தேசியமாக உருவெடுக்கும். தமிழ்த் தேசியத்தை வெற்றியாக்கும் ஒரே யுக்தி சாதியை ஒழித்து, சமநிலைப் படுத்தப்பட்ட அரசியல் சமுதாயத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்துவதே!
தேசத்திற்கு மொழியைத் தவிர, வேறு என்ன கூறுகள் தேவை?
Ernest Geller என்னும் அறிஞர், தேசியம் ஒரு சமுதாயத்தில் எப்பொழுது எழுகிறது என்று குறிப்பிடுகிறார்: ஒரு சமுதாயத்தின் அடித்தளம் வேளாண்மையிலிருந்து தொழில்மயமாக மாறும் பொழுதே அதற்கு தேசியம் தேவைப்படுகிறது என்கிறார். இது பற்றி விவாதங்கள் செய்யலாம். ஆனால், அவர் சொல்வதில் ஒரு மறுக்க முடியாத உண்மை இருக்கிறது.
பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் சாதிமுறை, வேளாண்மையை அடித்தளமாகக் கொண்டது. இதனை உடைப்பது மிகவும் அவசியம். தொழில் மயம் என்பதன் அர்த்தம் என்னவென்றால், இதுவரை உற்பத்தி அரசியல் இரண்டிலும் ஒரு சில சாதிகளே இடத்தை அடைத்துக் கொண்டிருந்தனர். தொழில்மயமாகும் பட்சத்தில் பொது இடம் விரிவடைந்து, அதில் தள்ளப்பட்ட மக்கள் வந்து நிலைக்க வாய்ப்பு உண்டாகிறது.
அதாவது ஒரு தேசம் உருவாகிறது என்றால் அதன் உற்பத்தி அரசியல் பொது இடம், மக்கள் மயப்படுத்தப்பட்டு, பல்வேறு புதுத் துறைகள் மக்களின் தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ப விரிந்து, சமூக உறவுகளின் நெருக்கம் அதிகரிக்க இடம் உண்டாகிறது.
கார்ல்டாய்ச் என்னும் அறிஞர், "தேசம் என்பது, சமூகத் தொடர்புகளும் உறவுகளும் அதிகரிக்கப்பட்ட பொது இடமே' என்கிறார். பல்தொழில் வளர்ச்சி, சமத்துவத்தை வளர்ப்பதோடு, பொது இடத்தை மக்கள் மயப்படுத்தும். இறுதியாக, புதிய கண்ணோட்டங்கள், புதிய கருத்துகள், குறிப்பாக தள்ளப்பட்ட மக்களின் பார்வையால் எழும் புதுக் கோணங்கள் இவற்றை ஒரே நேர்காணலில் விளக்குவது கடினம். இவற்றின் மொத்த தொகுதியே என்னுடைய Nationalism without a Nation என்னும் ஆங்கில நூல். தமிழ் மக்கள் சிறப்பாக கடைநிலைப்படுத்தப்பட்டோர், இந்நூலைக் கூர்ந்து வாசிக்க வேண்டுகிறேன். அதற்குப் பிறகு பல்வேறு அரங்குகளில் அதனை விவாதிக்கலாம்.
இன்றைக்கு நீங்களும் நானும் ஒரே தேசத்தைச் சார்ந்தவர்கள் என்றால், நீங்கள் என்னை இன்னொரு குடிமகனாக மதிப்பதால்தான்! Brother Citizen -Fraternity. உங்களுடைய சுதந்திரத்தை நான் மதிக்கிறேன்; என்னுடைய சுதந்திரத்தை நீங்கள் மதிக்கிறீர்கள். உங்களுக்கும் எனக்கும் சமத்துவம் இருக்கிறது. நீங்கள் என்னை ஒரு சகோதரனாக மதிக்கிறீர்கள். அது நம் உள்ளே இருக்கும் அசமத்துவத்தை கொஞ்ச கொஞ்சமாக உடைத்து, அவிழ்த்து மீதியை நவீனத்திற்கு முன்பிருக்கிற பண்பாடு மூலம் அதைப் பாதுகாத்து வைத்திருப்பதுதான் தேசம்.
அப்போது வெறும் மொழி மட்டுமே போதாது என்கிறீர்களா?
போதவே போதாது. இதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். பிரான்சில் "அல்சேட்ஸ்' என்றொரு இடம் இருக்கிறது. இந்தப் பகுதியில் பேசக்கூடிய மொழி ஜெர்மன். பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே பிரச்சினை எழுந்தது இந்த ‘அல்சேட்ஸ்' எங்கே போக வேண்டும் என்று. ‘அல்சேட்ஸ்' காரர்களிடமே கேட்கிறார்கள். நீங்கள் மொழியில் ஜெர்மனியுடன் சேர வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், நாங்கள் மொழி அடிப்படையில் ஜெர்மனியுடன் ஒன்றாக இருக்கலாம். ஆனால், நாங்கள் இருக்க விரும்புவது பிரான்சுடன்தான். இது ஏன் எனில், தேசம் என்பது இறந்த காலம் மட்டுமல்ல; நிகழ்காலமும் இன்னும் சிறப்பாக எதிர்காலமும்.
அவர்கள் பிரான்சுடன் செல்ல விரும்புவதற்குக் காரணம், அங்கு ஓரளவுக்கு ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டது. ஜெர்மனியில் இருந்தால் எங்களுக்கு அதிகாரம் கிடைக்காது என்று சொன்னார்கள். பிரான்சில் எங்களுக்கு சமத்துவம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களே என்று சொன்னார்கள். பிரெஞ்சு மொழியை பிரான்ஸ் நாடு முழுவதும் பரப்ப, அங்கு மாபெரும் போராட்டம் நடந்தது. சமூக உரையாடல்கள் நிகழ்ந்தன. வெறும் வார்த்தை உரையாடல்கள் அங்கு நிகழவில்லை. இந்த சமூக உரையாடல் மூலம் நெருக்கமும், அடர்த்தியும் பெருகுகின்ற போதுதான் தேசம் என்பது உருவாகிறது.
தேசிய உருவாக்கத்தில் மொழியைச் சமூக மாறுதல்களை வெளிப்படுத்தும் களமாகக் காண வேண்டும். மொழியும் ஜனநாயகத்தை நோக்கி மாறுதல் அடைய வேண்டும். நவீனத்திற்கு முன், மொழி பல்வேறு பிரிவினைகளில் அடைபட்டுக் கிடக்கிறது. பார்ப்பனர் மொழி, ‘மேல்சாதி' மொழி, ‘கீழ்சாதி மொழி' என்றும், வட்டார மொழிகளென்றும் வேறுபட்டுக் கிடக்கின்றன. நவீனத்தின் எழுச்சியில் அதாவது தேசம் உருவாகும் காலகட்டத்தில், வேறுபாடுகளும் மாறுபாடுகளும் மொழியிலிருந்து மறைய வேண்டும்.
‘புது மொழி', ‘நவீன மொழி', ‘தேசிய மொழி' என்ற ஒன்று உருவாக வேண்டும். இந்தப் புதுமொழி, பொது மொழியின் உருவாக்கம், சமூக உறவுகளில் ஏற்படும் சமத்துவத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். எந்த அளவுக்கு சமூக உறவுகள் ஜனநாயகப்படுத்தப்படுகிறதோ, அந்த அளவுக்கே மொழியும் பொது மொழியாக, புதிதாக உருவெடுக்கும். மொழி மட்டும் போதுமா என்ற கேள்விக்கு போதும் என்றும், போதாது என்றும் சொல்லலாம். ‘பழமை' மொழி கட்டாயமாக போதாது. ‘புதுமை' மொழி போதும். புதுமை மொழி என்பது, மேலே விளக்கியது போல் பண்பாட்டுக்குள் சமத்துவப்படுத்தப்பட்ட மொழி. சமூக உறவுகளில் ஏற்படும் சமத்துவம், மொழியில் பிரதிபலிக்க வேண்டும்.
இப்படி உருவாகிய புதுமொழியில் சமூகத்தின் பல்வேறு குழுக்களின் உரையாடல்களும் அடங்கியிருக்கும். ஒரு குறிப்பிட்ட குழுவின் மொழியே, அதிகாரத்தின் மூலம் பொது மொழியாக்கப்படுமானால், அது தேசிய மொழியாகாது. புது மொழி என்பது சிதறுண்டு கிடக்கும் பல்வேறு பேச்சு வழக்குகளை ஜனநாயக முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட composite மொழியாகும். இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட புது மொழிக்குள், இதுகாறும் ஒதுக்கப்பட்ட சமூக குழுக்கள், தங்களுடைய பேச்சு வழக்குகள், செயல் முறைகள் பிறவற்றைக் காண முடியும். அப்படி இனங்கண்டு கொள்வதால் மட்டுமே தள்ளப்பட்ட குழுக்களுக்கு, புது மொழியின் மீது பற்றுதல் ஏற்படும். தன் மொழி என்ற உணர்ச்சி ஏற்படும்.
இந்த புது, பொது, நவீன, தேசிய மொழியே பள்ளிப் பாடப் புத்தகங்கள் மூலம், தினசரி செய்தித்தாள்கள் மூலம், சினிமா முதலான ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு, புது முறையான ஒற்றுமைக்கு அடிகோலும். மாறாக, மொழித் தேசியம் என்ற பெயரில் அதிகாரக் குழுக்களின் பேச்சு, எழுத்து வழக்குகளைத் தூக்கிப் பிடிப்பதும், வழக்கத்தில் உள்ளதை இன்னும் உறுதிப்படுத்துவதும், மாறுதலடையாத மொழியை (அதாவது மாறுதலடையாத பண்பாட்டை) காப்பதற்கான இயக்கங்கள் நடத்துவதும் உண்மையிலேயே தேசியம் உருவாவதைத் தடுத்து நிறுத்தவே செய்யும். மக்களிடையே பிரிவினைகளை அதிகப்படுத்தும்.
தேசத்தின் ஒருமைப்பாட்டை, உருவாக்கத்தை எப்படி விளக்கலாம்?
தேசம் என்ற சமூக ஒருங்கிணைப்பு முயற்சி, இரண்டு விதமாக விளக்கப்படுகிறது. 1. பண்பாடு 2. அதிகாரம். ஆதிக்கவர்க்கத்தினர் தங்கள் ஆதிக்க நிலையை தொடர வைப்பதற்காக பண்பாட்டு ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி, "பண்பாட்டு தேசம்' என்ற கருத்தை முன்வைக்கின்றனர். சமத்துவத்தை நோக்கி நடைபெறும் சமூக மாறுதல்களைத் தடைசெய்வதுதான் இந்தப் பண்பாட்டுத் தேசத்தின் உள்நோக்கம்.
சமூக உறவுகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை ‘நமது பண்பாடு' என்று விளக்குவது; இதனால், அந்தப் பண்பாட்டில் கை வைப்பவன் தேச எதிரியாகிறான். அடிமைப்படுத்தப்பட்ட வர்க்கத்தினர், தங்கள் நிலையிலிருந்து மீள வேண்டி முன்வைப்பது அதிகாரத் தேசியம். சமூகத்துக்குள் சமப்படுத்தப்பட்ட சமூக அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய ஒருமைப்பாடு. இங்கு பண்பாடு அல்ல. மாறாக, சமநிலையே ஒற்றுமைக்கு அடித்தளமாகிறது. எல்லாருக்கும் சம அதிகாரம் என்ற கருத்தும், உணர்வும் மக்களிடையே சகோதரத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. புதுமுறையான சமூக அதிகாரப் பங்கீட்டால் வரும் ஒற்றுமையே தேசம். இதுவே ஒதுக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பும் முயற்சியுமாகும்.
ஆனால், உண்மைநிலை என்பது இரண்டிற்கும் இடைப்பட்ட process- தொடர்ந்த முயற்சியும் இயக்கமும். ‘பண்பாட்டிலிருந்து அதிகாரத்தை நோக்கி' என்பதே உண்மையான தேசத்தின் உருவாக்கம். ஆதிக்க வர்க்கத்தினருக்கு பண்பாடு' எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அடிமை வர்க்கத்தினருக்கும் அது முக்கியம். பண்பாடு தவிர்த்த தேசியத்திற்கு அடித்தளம் இல்லை. அது நிலைக்காது.
தேசிய ஒருங்கிணைப்பு என்பது அரசு மூலமோ, அரசின் பல்வேறு சட்டங்கள், ஒழுங்கு முறைகள் மூலமோ கொண்டுவர இயலாது. மேலும், பல நூற்றாண்டுகளாக உருவாகிவந்த சமூக உறவுக்களங்களை ஒரேயடியாக அப்புறப்படுத்தவும் முடியாது. தேசம் என்பது எவ்வளவு புதுமையோ அவ்வளவு பழமையும் ஆகும். ஆனால், பிரச்சனை என்னவென்றால் எந்தப் பண்பாடு எந்தப் பழமை என்பதே. சாதிமுறை பழமை என்றால், சாதி எதிர்ப்பும் பழமையே. பாகுபாடுகள் பண்பாடென்றால், பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிகளும் பண்பாடே. எந்தப் பண்பாட்டை எடுத்துக் கொண்டு நவீனத்தை நோக்கி நடைபோடுவது என்பதில்தான் பிரச்சனை. ஆதிக்கவர்க்கங்கள் சாதியைப் பண்பாடென்று கூறும் பொழுது, அடிமை வர்க்கங்கள் சாதி எதிர்ப்பு பரம்பரையை பண்பாடு என்று முன்வைக்கும்.
பண்பாடு என்றால் என்ன?
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சமூக அதிகாரத்தின் உருவே பண்பாடு. Culture is power. எல்லா சமூக உறவுகளும் அடித்தளத்தில் அதிகாரப் பங்கீட்டு முறைகளே. ஒரு சமூகத்தின் அதிகாரப்பங்கீடு எப்பொழுதுமே மாறிக் கொண்டேயிருக்கும் என்றாலும், அவற்றில் இரண்டு பெரும் இயக்கங்களைக் காண முடியும். மாறுதலை நோக்கி நடைபோடுவது ஒன்று; மாறுதலைத் தவிர்க்க முயலுவது மற்றொன்று. இவை இரண்டும் பின்னிப் பிணைந்து அன்றாட சுமுகமான செயல்பாட்டில் கருத்திணக்கம் கொண்ட முழுமையையே பண்பாடு என்கிறோம்.
பண்பாடும், அதிகாரமும் ஒரே நாணயத்தின் இருபக்கங்களே: சாதியை எடுத்துக் கொண்டால், சாதியால் பயனடையும் குழுக்கள், அதனைப் பண்பாடென்று வர்ணிப்பதும், சாதியால் இழப்படையும் குழுக்கள் அதனை, அநியாயமான அதிகாரப் பங்கீடு என்று கண்டிப்பதும் கண்கூடு. ஒரு சிறிய எடுத்துக்காட்டு : இரண்டு நாற்காலி ஒரு அறையில் இருக்கிறது. மூன்று பேர் உள்ளே வருகிறோம். மூன்று பேருக்கு இடையில் போராட்டம் நடந்து இரண்டு பேர் நாற்காலியில் அமர்ந்து விடுகிறார்கள். ஒருவர் தரையில் அமர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அன்றைய நிகழ்ச்சி முடிந்து போய்விட்டார்கள். அடுத்த நாளும் அதே மூன்று பேர் வருகிறார்கள். அதே மாதிரி சண்டை நடக்கிறது. நேற்று கீழே அமர்ந்தவருக்கு, இன்றைக்கு சண்டை போட்டதில் பாதி பலம் குறைந்து விட்டது. நேற்று விட்டுக் கொடுத்து விட்டாரே. இன்றைக்கு புதிய பலத்தை அவர் எங்கிருந்து பெறுவார்? இன்னும் அரைகுறை மனத்துடன்தான் கிடைத்தாலும் கிடைக்கும் என்றுதான் போராடுகிறார். ஆனால், மூன்றாவது நாளும் அவரே முதலில் வந்தாலும், பேசாமல் எதுக்கு வீண்வம்பு என்று கீழே போய் அமர்ந்து விடுகிறார். நான்காவது நாள், வேறொருவர் வந்து ஏம்பா நீ மேலே உட்கார்ந்திருக்க; அவர் கீழே இருக்கிறாரே என்று சொன்னால், மேலே உட்கார்ந்திருப்பவரே சொல்கிறார் இதுதாங்க எங்க வழக்கம். எங்க கலாச்சாரமே இப்படித்தாங்க என்கிறார்.
கீழே உட்கார்ந்திருப்பவர் ஏதும் சொல்ல மாட்டார். பலசாலி இடத்தைப் பிடித்துக் கொண்டார், என்ன செய்ய முடியும் என்பார். இது தொடர்ந்து ஒரு பண்பாடாகவே மாறி விடுகிறது. அதிகாரப் போராட்டம். சமூக அதிகாரத்துக்கான ஒரு போராட்டம். பழக்க வழக்கம் மூலம் இதுவே பண்பாடாக மாறிவிடுகிறது. பிறகு கொஞ்ச நாளில் மறந்து விடுகிறோம்.
போராட்டத்தின் மூலம் இவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு இது நம்ம வழக்கம்தானே என்றும் அதற்கு ஒரு காரணம் நான் கறுப்பாக இருக்கிறேன் குட்டையாக இருக்கிறேன், என்றும் சொல்லிக் கொண்டு, அதற்குப் பிறகு எனது பிள்ளையும் கீழேதான் உட்கார வேண்டும் என்று சொல்லிக் கொள்வது.
சில காலத்திற்குப் பிறகு எப்படி இந்தக் கலாச்சாரம் வந்தது என்று நினைக்கும்போது இது போராட்டத்தில் தொடங்கிய விஷயம் போலிருக்கிறதே என்று சொல்லி, மாற்றப்பட்டுள்ள இன்றைய சூழலில் இன்னொரு போராட்டத்தை நடத்திப் பார்க்கலாமே என்று சொல்லி இது இடைப்பட்ட காலத்தில்தானே வந்தது என்று சொல்லி, சண்டையிட்டு சில சமயம் வெற்றி பெற்று விடுகிறார்கள். அவர் மேலே வந்துவிடுகிறார்; மேலே இருந்தவர் கீழே போய்விடுகிறார்.
இதற்குப் பிறகு இந்தப் புதிய அதிகாரப்பங்கீடும் பண்பாட்டுமயமாக்கப்படுகிறது. இதேபோல்தான் தேச உருவாக்கமும். பாகுபாட்டுப் பண்பாடு கீழே தள்ளப்பட்டு, சமத்துவப் பண்பாடு நிலை நிறுத்தப்படுவதே தேசம் தேசியம். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தப் புதிய சமத்துவநிலை உறுதி பெறுவதற்கு, எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அதே பண்பாட்டு அடித்தளமே தேவைப்படுகிறது. பண்பாட்டில் வேறூன்றாத சமத்துவம் நிலைக்காது. எல்லாவித சமூக அரசியல் சூழல்களிலும் சமத்துவ நிலை நிலைபெறாது. அதற்கென சில வரைமுறைகள் உண்டு. இதுவே நவீனத்திற்கு முன் பல்லாண்டுகளாக உருவாகி வந்த மொழி - பண்பாடு ஒரே தன்மை அல்லது இந்த Objective Similarity தான் நவீனத்தில் Subjective Unity ஆக மாறவேண்டும். இந்த மாற்றம், ஜனநாயகப் படுத்துதல் மூலமே ஏற்படும்.
தேசிய உருவாக்கமென்பது இதுதான்: பிரிவினைகளாலும் ஏற்றத் தாழ்வுகளாலும் முடங்கிக் கிடந்த பண்பாட்டுக்குழுவொன்று, நவீனத்தின் எழுச்சியில், கொள்கை அளவிலும் செயல்பாடுகளிலும் ஏற்றத்தாழ்வை ஒழித்து, பிரிவினைகளை நீக்க தனி உரிமை, சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளினால் கட்டப்பெற்று முழுமை பெறுவதே. இந்தப் புதுமுழுமை ஆதிகாலத்திலிருந்தே வருவதாக, புதியதொரு வரலாற்றை உருவாக்கும். புதியதொரு பண்பாட்டைக் கண்டெடுக்கும். அதாவது பழமையையே புதுப்பிக்கும். இதையே ஆங்கிலத்தில் Invention of Tradition என்பர். ஆகவே, பண்பாடு -> அதிகார மாற்றம் -> பண்பாடு இதுவே தேச உருவாக்கம்.
நேர்காணல் : பாண்டியன்