அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிரட்டலுக்கு பணிய மறுத்த ஒரே காரணத்துக்காக அமெரிக்காவின் பிடியில் செயல்படும் ஈராக் நீதிமன்றம், சதாம் உசேனுக்கு, கடந்த நவம்பர் 5 ஆம் தேதி தூக்குத் தண்டனை விதித்துள்ளது. ஈராக்கில் சதாமை ஆதரிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்கள், தூக்குத் தண்டனையை எதிர்த்து கலவரத்தில் இறங்கியுள்ளனர். ஷியா பிரிவினர் தூக்குத் தண்டனையை ஆதரிக்கிறார்கள். ஆனால் உலகம் முழுதும் மதங்களைக் கடந்து மனித உரிமைக்குக் குரல் கொடுப்போர், தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வழக்கில் அவரது சகோதரர் பர்சன் இப்ராகிம், புரட்சி நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் அமீது அல்பந்தர் ஆகியோருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பைக் கேட்ட சதாம், நீதிபதிகளைப் பார்த்து ‘ஆக்கிரமிப்பாளர்களின் கைக்கூலிகளே’ என்று ஆவேசமாக கூறினார். “என் தாய்நாடு வாழ்க; ஆண்டவன் மகத்தானவன்; பெருமை மிக்க நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்கிறேன்; பாக்தாத்தின் எதிரிகள் சாக வேண்டும்” என்று முழங்கினார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணையும் ‘தடா’வின் கீழ் மிரட்டிப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே நடந்தது. உச்சநீதிமன்றம் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதுவும் முறைகேடான விசாரணைதான். அதேபோல் ஈராக் நீதிமன்றமும், சதாம் உசேனைத் தூக்கில் போட முடிவெடுத்துக் கொண்டு, விசாரணை என்ற நாடகத்தை நடத்தியது.

அமெரிக்காவின் முன்னால் அரசு வழக்கறிஞரும், மனித உரிமைக்குக் குரல் கொடுத்து வருபவருமான இராம்சே கிளார்க் - சதாம் உசேனுக்காக வாதாடினார். நீதிமன்றம் சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்படுகிறது என்று, நீதிமன்றத்திலே பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அதனால் நீதிமன்றத்தை விட்டு, காவலாளிகள் மூலம் அவர் தூக்கி வெளியே வீசப்பட்டார். வழக்கை விசாரித்து வந்த முதல் நீதிபதி, தனக்கு அரசியல் அழுத்தங்கள் தரப்படுவதாகக் கூறி வெளியேறினார். இரண்டாவதாக நியமிக்கப்பட்ட நீதிபதியோ பதவியை ஏற்கவே முன்வரவில்லை. மூன்றாவதாக சதாம் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்ட ஒரு நீதிபதியைத் தேடினார்கள். அவர்தான் தூக்கு தண்டனையை வழங்கியிருக்கிறார். சதாம் உசேனுக்காக வாதாடிய மூன்று வழக்கறிஞர்கள் வழக்கை நடத்திக் கொண்டிருக்கும் காலத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்கள்.

சதாம் உசேன் மீதான விசாரணையை நடத்தியது ‘ஈராக்கியர் மீதான கிரிமினல் குற்றங்கள் குறித்த விசாரணை மன்றம்’. இந்த விசாரணை மன்றத்துக்கான விதிமுறைகளை உருவாக்கியது அமெரிக்கா தான். இந்த விசாரணைக்காக அமெரிக்கா செலவிட்ட தொகை 140 மில்லியன் டாலர். இந்தியாவில் ‘தடா’, ‘பொடா’ சட்டத்தைப் போல குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்களது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறும் உரிமைகள் இங்கும் மறுக்கப்பட்டன.

விசாரணை நடத்திய - நீதிபதிகளுக்கு பிரிட்டனில் விசேட பயிற்சி தரப்பட்டது. பிரிட்டன் நாட்டின் படையும், ஈராக்கை ஆக்கிரமித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை சர்வதேச மனித உரிமை சட்டங்களை மதிக்காமல் நடத்தப்படுவதை அய்.நா.வின் மனித உரிமைக் குழு ஆய்வு செய்து, விரிவான அறிக்கையை வெளியிட்டது. சதாம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றதில் காட்டிய உறுதியை - வரலாறு பாராட்டும்; அதே நேரத்தில் தேசிய இன உரிமைக்குப் போராடிய ‘குர்து’ இன மக்களையும், ‘ஷியா’ பிரிவினரையும் அவர் கொன்று குவித்த, கருப்பு அத்தியாயங்களும் சதாம் உசேன் வரலாற்றில் உண்டு!

சதாம் உசேனை தூக்கில் போடக் கூடாது என்ற முழக்கத்தில் - ஏகாதிபத்திய எதிர்ப்பு மட்டுமல்ல, மனித உரிமையும் உள்ளடங்கியிருக்கிறது. தூக்குத் தண்டனைக்கு எதிரான முழக்கமாகவும், உலகம் முழுதும் ஒலிப்பதை, இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். அது அப்சல் ஆனாலும், ராஜிவ் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆனாலும், வீரப்பனுக்கு உதவியதாகப் பொய்யான குற்றச்சாட்டின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானப் பிரகாசம் மாதய்யன், சைமன், பிலேந்திரன் ஆனாலும் எவருக்குமே தூக்குத் தண்டனை வழங்கக் கூடாது எனபதே மனித உரிமையாளர்களின் ஒருமித்த கருத்து.

25 ஆண்டுகளுக்கு முன்பு, 1982 ஆம் ஆண்டு துஜய்ல் என்ற கிராமத்தில் 148 பேரை படுகொலை செய்த குற்றத்துக்காக - இப்போது சதாமுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால் - அமெரிக்கப் படையின் ஆக்கிரமிப்பால் ஈராக்கில், 654, 965 மக்கள் மடிந்து போய் விட்டார்கள். இதற்கு யாரை தூக்கில் போடுவது?

Pin It