இந்துஸ்தான் சுயராஜ்யம் என்று நாளை கொண்டாடப் போகும் வடநாட்டு ஏகாதிபத்திய ஆட்சி, பிரிட்டிஷாருக்கு ஏஜெண்டாக - கையாளாகயிருந்து வெள்ளையருடன் வடநாட்டு பிர்லா, பஜாஜ் கோஷ்டியினர் செய்துள்ள ஒப்பந்த ஆட்சியேயன்றி, சுய ஆட்சி என்று எந்தக் காங்கிரஸ் அரசியல் நிபுணராகிலும் கூற முடியுமா?

வேண்டுமானால், வடநாட்டுக்காரர்களுக்கு இன்னும் அதிகமாக நம் மாகாணத்தின் பொருளாதாரத்தைச் சுரண்ட அதிகாரம் இந்த சுயராஜ்யத்தின் மூலம் ஏற்பட்டிருக்கிறதற்கு அவர்களுக்குக் கொண்டாட்டம் ஏற்படலாமே தவிர, மானமுள்ள திராவிடன் இனி திண்டாட வேண்டித்தானே இருக்கப் போகிறது? ஆகஸ்ட் சுயராஜ்யம் அநீதிக்கு அடிப்படையானதே தவிர, நம் நாட்டு மக்களின் நேர்மையான உண்மைச் சுதந்திர வாழ்வுக்கு ஏற்றதல்ல.

இந்த இந்திய உபகண்டத்தின் மற்ற மாகாணங்களைவிட நம் மாகாணமே எல்லா வளப்பத்திலும், அறிவிலும் முதன்மையானதென்பது உலகறிந்த சரித்திரச் சான்றாகயிருந்தும், நமக்குள் இன ஒற்றுமையில்லாததாலேயே மற்ற மாகாணத்தவர்களுக்கு, குறிப்பாக வடநாட்டுக்காரர்களுக்கு நாம் தாசானுதாசனாய் இருந்து வருகிறோம்.

தந்தை பெரியார் (‘விடுதலை’ 27.7.1947)

Pin It