பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர், இந்தியாவைச் சார்ந்த சுரப்ஜித் சிங், அவரது கருணை மனுவை தள்ளுபடி செய்த முன்னாள் அதிபர் முஷாரப் - தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தர விட்டார். சுரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து, அவருக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும் என்று இந்தியா கோரியது. பஞ்சாப் மாநில சட்டமன்றம், சுரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது. அவரது தூக்குத் தண்டனையை பாகிஸ்தான் ஒரு மாத காலம் நிறுத்தி வைத்துள்ளது.

சுரப்ஜித் சிங் - இந்தியாவின் சார்பில் பாகிஸ் தானில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு. லாகூர், கசூர், பைசாபாத் நகரங்களில் 1990 இல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பாகிஸ்தானியர் கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரப்ஜித் சிங்குக்கு 1991 இல் பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. கடந்த 18 ஆண்டுகளாக தூக்குத் தண்டனை கைதியாக அவர் சிறையிலிருந்து வருகிறார்.

அண்டை நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அந்நாட்டு சட்டப்படி, தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு, கருணை காட்ட வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தூக்குத் தண்டனையை ஏன் ரத்து செய்யக் கூடாது என்ற நியாயமான கேள்வி எழவே செய்கிறது.

சுரப்ஜித் சிங்கின் கருணை மனுவை முஷாரப் நிராகரித்து, தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்றக் கோரியதற்கு காரணம் உண்டு. பார்ப்பன - தேசிய ஊடகங்கள் - இந்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்லாமல் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டன. சுரப்ஜித் சிங் தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்கு முன் நடந்த சம்பவங்களைத் திருப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கடந்த மார்ச் 3 ஆம் தேதி பாகிஸ்தான் சிறையில், காஷ்மீர் சிங் என்ற இந்தியர் 35 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசால், மனிதாபிமான உணர்வோடு விடுதலை செய்யப்பட்டார். இவரது விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாகிஸ்தானின் மனித உரிமை துறைக்கான அமைச்சர் அன்சார் புருனே என்பவர். பாகிஸ்தான் சிறைக்கு பார்வையிட சென்ற அந்த அமைச்சர், 35 ஆண்டுகளாக கவனிப்பாரற்று, சிறையில் வாடியவரை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இந்தியாவின் பார்ப்பன ஆட்சி, காஷ்மீர் சிங் விடுதலைக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

காஷ்மீர் சிங் ‘ரா’ உளவு நிறுவனத்தால் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க அனுப்பப்பட்டவர். இதற்காக, தனது சீக்கிய மதத்தைத் துறந்து, முஸ்லீமாக மதம் மாறி, ‘சுன்னத்’ செய்து கொண்டு, பாகிஸ்தானில் உளவு பார்த்தார். பிறகு, பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா என்ற இடத்தில், பாகிஸ்தான் அமைச்சரே, விடுதலைப் பெற்ற காஷ்மீர் சிங்கை அழைத்து வந்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். உணர்ச்சிப்பூர்வமான பிரியா விடை தரும் நிகழ்ச்சியும் அங்கே நடந்தது.

சொந்த மாநிலமான பஞ்சாபுக்கு திரும்பிய காஷ்மீர் சிங், தன்னை உளவு பார்க்க அனுப்பிய ‘ரா’ நிறுவனம் தன்னையும், தனது குடும்பத்தையும் கைவிட்டதையும், தனது குடும்பம் வறுமைப் பிடியில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் கண்ணீருடன் பத்திரிகையாளர்களிடம் கூறியதோடு, பாகிஸ்தான் அமைச்சரின் முயற்சியினால் தான் தனக்கு விடுதலை கிடைத்ததையும் நன்றியுடன் குறிப்பிட்டார்.

எந்த வாகா எல்லைப் பகுதியில் காஷ்மீர் சிங், பாகிஸ்தான் அமைச்சரால் மாலை அணிவிக்கப்பட்டு, மனித நேயத்துடன் வழியனுப்பி வைக்கப்பட்டாரோ, அதே எல்லைப் பகுதியில் அடுத்த ஒரு வாரத்தில் இந்தியா ஒரு பாகிஸ்தான் குடிமகனின் சவத்தை சவப் பெட்டியில் வைத்து பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அவரது பெயர் காலிப் முகம்மது. தீவிர கிரிக்கெட் ரசிகர். இந்தியாவுக்குள் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க, உரிய ஆவணங்களின்றி வந்ததால், அவரை கைது செய்து இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விசாரணைக் கைதிதான்.

இந்தியாவின் கொரேகான் சிறையில், கடந்த பிப்.12 ஆம் தேதி அவர் மரணமடைந்து விட்டார். காஷ்மீர் சிங் விடுதலையான அடுத்த வாரம், இந்தியா, பாகிஸ்தான் குடிமகனின் சடலத்தை சவப்பெட்டியில் வைத்து, அதே எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

காலிப் முகம்மது சிறையில் சித்திவதை செய்யப்பட்டதால் தான் மரணமடைந்தார் என்பதை இந்தியா மறுக்கிறது. மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை தரப்பட்டதாக, மருத்தவமனை ஆவணங்களை இந்தியா காட்டினாலும் அவருக்கு எந்த நோய்க்கு சிகிச்சை தரப்பட்டது என்ற விவரம் ஆவணங்களில் இல்லை. இந்த நிலையில் தான் சுரப்ஜித் சிங் தூக்குத் தண்டனையை முஷாரப் உறுதி செய்தார்.

பாகிஸ்தான் சிறையில் இந்தியாவைச் சேர்ந்த 430 பேர் அடைபட்டுள்ளார்கள் என்று ஒரு பத்திரிகை செய்தி கூறுகிறது. இவர்களுக்கு இந்திய தூதரகம், எந்த சட்ட உதவியும் செய்ய முன்வரவில்லை. இந்திய தூதகரத்தோடு தொடர்புகளே இல்லாத நிலையில் உள்ளனர். குஜராத் மீனவர் ஒருவர், பாகிஸ்தான் கடல் பரப்பில் மீன் பிடித்ததாக 2006 இல் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார்.

கராச்சிக்கு அருகே உள்ள மாலிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மார்ச் 20 ஆம் தேதி மரணமடைந்தார். வயிற்றுவலி காரணமாக சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. இந்தியாவின் வெளி நாட்டுத் தூதரகங்கள் - மனித நேயமற்றவை. அங்கே பார்ப்பனர்கள் கோலோச்சும் போது எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்.