'விடுதலை’ காஷ்மீர் மக்களின் தற்போதைய தலையாய விருப்பம் இது ஒன்று மட்டுமே. 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது மனதில் கனன்று கொண்டிருந்த அந்த சுடர் இன்று கொளுந்துவிட்டு எரியத் தொடங்கி இருக்கிறது. இந்திய அரசு இனிமேலும் விடுதலையை மறுப்பது நயவஞ்சகம்.

உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 5,00,000 ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் தங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கணமும் ‘வாழ்வா, குண்டடிப்பட்டு சாவா’ என்று கழியும் பயங்கரமாகன வாழ்க்கையை உதறித் தள்ள காஷ்மீரிகள் ஆக்ரோஷமாக கைகளை உயர்த்தத் தொடங்கியுள்ளனர். இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காலத்தில் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிய கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என்று ஐ.நா.வில் நேரு அளித்து, நிறைவேற்றப்படாத வாக்குறுதி இரண்டு தலைமுறைகளாக அந்த மக்களின் நெஞ்சில் ஊசிகளைப் போல குத்திக் கொண்டிருந்தது.

கடந்த 18 ஆண்டுகளாக காஷ்மீரில் வலுக்கட்டாயமாக ராணுவ ஆக்ரமிப்பை மேற்கொண்ட இந்திய அரசின் துர்கனவு தற்போது நனவுக்கு வந்துவிட்டது. தீவிரவாத இயக்கங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன என்று வெற்றிப் பெருமிதத்துடன் அறிவித்துவிட்ட சூழ்நிலையில், இந்திய அரசுக்கு எதிராக சாத்வீகமான மக்கள் போராட்டம் தற்போது எழுச்சி பெற்றுள்ளது. இந்த போராட்டத்தை சமாளிக்க முடியாமல் இந்திய அரசு விழி பிதுங்கி வருகிறது.

ஆண்டாண்டு காலமாக பத்தாயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் படுகொலை, சித்திரவதை செய்யப்பட்டு, ‘காணாமல் போக’ செய்யப்பட்டு. நுற்றுக்கணக்கானோர் சித்திரவதை செய்யப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவமதிக்கப்பட்ட வலிகள் ஏற்படுத்திய நெருக்கடியால் இந்த எழுச்சி உருப்பெற்றுள்ளது. காஷ்மீரிகளின் மனதில் கனன்று கொண்டிருந்த அந்தக் கொந்தளிப்பு வெளிப்படுத்தப்பட்டுவிட்ட சூழ்நிலையில் இனிமேல் எளிதில் அடக்க முடியாததாகவும், மாற்ற முடியாததாகவும், பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாததாக இருக்கிறது. கடந்து சென்ற ஆண்டுகள் முழுவதும் காஷ்மீர் மக்களின் குரலை சூழ்ச்சியால் அழிக்கவும், நசுக்கவும், பிரதிநிதித்துவப்படுத்தவும், தவறாக பிரதிநிதித்துவப்படுத்தவும், அவநம்பிக்கைக்கு உள்ளாகவும், இடையீடு செய்யவும், அச்சுறுத்தவும், விலைக்கு வாங்கவும், எளிமையாக அடக்கவும் இந்திய அரசு முயற்சித்து வந்துள்ளது. இந்திய அரசு எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒரு அரசாகவும் இருக்கிறது. மிக அதிக அளவு பணம், மிக அதிக அளவு வன்முறை, தவறான தகவல் தருதல், பிரச்சாரம், சித்திரவதை, உடந்தையாளர்கள் மற்றும் உளவாளிகளின் விரிவான வலைப்பின்னல், பீதியை கிளப்புதல், சிறையிலடைத்தல், அச்சுறுத்திப் பணிய வைத்தல், தேர்தல் சூழ்ச்சி போன்றவற்றின் மூலம் ‘மக்களின் எண்ணத்தை’ தோற்கடிக்க முயற்சிக்கிறது என்று இந்திர அரசை ஜனநாயகவாதிகள் குறிப்பிடுவார்கள். வெற்றி உருவாக்கிய ஆதிக்க உணர்வால், துப்பாக்கி கூட்டத்துக்கு நடுவே இயல்புநிலையை உருவாக்கிவிட்டதாகவும், மக்கள் மௌனம் காப்பது சம்மதத்துக்கு அறிகுறி என்றும் இந்திய அரசு தவறாக நம்பிவிட்டது.

‘வன்முறையால் காஷ்மீரிகள் அயர்ச்சி அடைந்துவிட்டார்கள். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள்’ என்று மக்களின் சார்பாக பேசிய ‘அமைதியை உருவாக்கும் தொழிற்சாலை’ கூறிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் எநவ்தவிதமான அமைதியை விரும்புகிறார்கள் என்பது பற்ற் எப்பொழுதும் விளக்கப்படவேயில்லை, பாலிவுட்டில் உருவாக்கப்பட்ட காஷ்மீர்/முஸ்லீம் தீவிரவாதிப் படங்கள் ‘காஷ்மீரின் அனைத்து துயரங்களும் பாவங்களின் வாசலில் கிடக்கின்றன. மக்கள் தீவிரவாதிகளை வெறுக்கிறார்கள் என்று இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் நம்பும் வகையில் மூளைச்சலவை செய்துவிட்டன. மிகவும் இருண்ட காலங்களில் கூட காஷ்மீர் மக்களின் மனதில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருந்தது. அந்த மக்கள் அமைதியை விரும்பவில்லை, விடுதலைதான் வேண்டும் என்று விரும்பினார்கள் என்பது சற்று நிதானமாக காது கொடுத்து கேட்டவர்களுக்குத் தெரியும். கடந்த இரண்டு மாதங்களாக வெறுக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுக்கு (இந்தியா, காஷ்மீர்) இடையில் சிக்கிக் கொண்ட அப்பாவி மக்கள், அவற்றை நரகத்தை நோசக்கி துரத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவிதியில் ஏற்பட்ட திடீர் மாற்றமாக, 100 ஏக்கர் காட்டுப் பகுதியை அமர்நாத் கோயில் வாரியத்துக்கு அளித்த விவகாரம், பெட்ரோல் கிடங்குக்குள் தீக்குச்சியை கொளுத்தி போட்டது போலாகிவிட்டது. 1989ம் ஆண்டு வரை, அமர்நாத் யாத்திரை வெறும் 20,.000 பேரை மட்டுமே ஈர்ப்பதாக இருந்தது. இரண்டு வார பயணம் செய்து யாத்ரிகர்கள் அமர்நாத் குகை கோயிலை அடைந்து கொண்டிருந்தனர். 19990ம் ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாககில் இஸ்லாமிய தீவிரவாதிகள் எழுச்சி உருவான காலத்தில், இந்திய சமவெளியில் நச்சு இந்துத்துவ சக்திகள் பரவ ஆரம்பித்திருந்தன. இந்தச் சூழ்நிலை காரணமாக அமர்நாத் செல்லும் யாத்ரிகர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது.

2008ம் ஆண்டு, அமர்நாத் குகைக்கு 5,00,000 யாத்ரிகர்கள் வந்து சென்றனர். இதற்கு ஆகும் செலவை பெரும்பாலும் இந்திய வணிக நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டிருந்தன. யாத்ரிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது இந்து மத அடிப்படைவாதத்தின் சார்பாக மாறி வந்த இந்திய அரசின் அரசியல் வெளிப்பாடு என்று காஷ்மீர் மக்கள் கருதத் தொடங்கினர். சாதகமாகவோ, பாதகமாகவோ நிலம் வழங்கும் நடவடிக்கை மாற்றத்துக்கான ஒரு புள்ளியாக மாறிவிட்டது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட குடியேற்றங்களைப் போல, இங்கும் இந்து குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான விரிவான திட்டத்தின் தொடக்கப்புள்ளி இது என்றும், பள்ளத்தாக்கின் வரைபடத்தையே இது முற்றிலும் மாற்றவிடும் என்ற அச்சத்தையும் அரசின் இந்த நடவடிக்கை தூண்டிவிட்டது.

இதையடுத்து தொடர்ச்சியாக பல நாட்களுக்கு நடைபெற்ற பெரும்மக்கள் போராட்டத்தின் விளைவாக பள்ளத்தாக்கில் அனைத்து வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டன. ஒரு சில மணி நேரங்களில், நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு போராட்டங்கள் பரவின. கல்லெறியும் இளைஞர்கள் தெருக்களில் இறங்கி, ஆயுதமேந்திய காவல்துறையினரை நேருக்கு நேர் எதிர்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இந்த நிகழ்வுகள் 90களின் தொடக்கத்தில் உருவான எழுச்சியின் நினைவலைகளை ஒரே நேரத்தில் மக்களிடையேயும், அரசிடமும் தோற்றுவித்தது. தொடர்ந்து பல வாரங்களுக்கு போராட்டம், கடையடைப்பு, காவல்துறை துப்பாக்கிச்சூடு எல்லாம் நீடித்த வேளையில், மற்றொரு பக்கம் காஷ்மீரிகள் மத அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று இந்துத்துவ பிரசார பீரங்கிகள் முழங்கி கொண்டிருந்தன. இதற்கிடையில் 5,00,000 அமர்நாத் யாத்ரிகர்கள் சின்ன காயம் கூடப்படாமல் யாத்திரையை முடித்தனர். மாறாக, உள்ளூர் மக்களின் விருந்தோம்பலை அவர்கள் பெற்றனர்.

ஆச்சரியமளிக்கும் வகையில் காஷ்மீர் மக்களின் மூர்க்கமான எதிர்ப்பை சந்தித்த அரசு, நிலம் வழங்குதலை ரத்து செய்தது. மூத்த பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா ஜீலானி ‘நிலம் வழங்குதல் ஒரு பிரச்னையே அல்ல’ என்று கூறியதற்குப் பிறகும், மேற்கண்ட எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

நிலம் வழங்குதல் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக ஜம்முவில் போராட்டங்கள் வெடித்தன. அங்கும்கூட, இந்த பிரச்னை எதிர்பாராத வகையில் பெரிதாக மாறியது. இந்திய அரசு தங்களை புறக்கணிப்பதாகவும், ஒடுக்குவதாகவும் இந்துக்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலை போக்குவரத்தை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரே சாலைத் தொடர்பு இது. ராணுவம் அழைக்கப்பட்டது. ஜம்மு ஸ்ரீநகர் இடையே சாலைப் போக்குவரத்து பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டது. ஆனால் காஷ்மீரி லாரி ஓட்டுநர்கள் மீது வன்முறை தாக்குதல் நடந்ததாக பஞ்சாப் பகுதிகளில் இருந்து தகவல்கள் வந்தன. இதன் விளைவாக, லாரி ஓட்டுநர்கள் உயிருக்கு பயந்து, நெடுஞ்சாலையில் லாரி ஓட்ட மறுத்தனர். எளிதில் அழுகிவிடக் கூடிய பழங்கள் மற்றும் பள்ளத்தாக்கு உற்பத்திப் பொருட்கள் லாரிகளிலேயே அழுக ஆரம்பித்தன. சாலையை தடை செய்த இந்துத்துவவாதிகளின் நடவடிக்கை சூழ்நிலையை கட்டுமீறிப் போகச் செய்தது. நேர் எதிராக ‘சாலை தடை அகற்றப்பட்டுவிட்டது, லாரிகள் சென்று வருகின்றன’ என்று அரசு அறிவித்தது. இந்திய ஊடகங்களில் ஒரு பிரிவு, உறுதியான உளவுத் துறை தகவல்களை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி, இந்த சாலைத் தடை ரொம்பச் சிறியது என்றும், அப்படி ஒன்று இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறி வந்தன. ஆனால் இது போன்று விளையாடி கொண்டிருக்க இனியும் நேரமில்லை. ஏற்கனவே தேவையான ளவு சேதம் உருவாக்கப்பட்டுவிட்டது. காஷ்மீர் மக்கள் ஏற்கனவே வாழ்வதற்கு மிக மோசமாக அவதிப்பட்டுவிட்டனர். ராணுவ முற்றுகை, பசி, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்டுகள் தட்டுப்பாடு போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த அவர்கள், பேசாமல் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கடினம். உண்மையான தடைகற்கள் சாலையில் ஏற்பட்டதல்ல, இங்கே கூறியது போல உளவியல் ரீதியில் ஏற்படுத்தப்பட் ஒன்றுதான். ஏனென்றால் இந்தியா காஷ்மீர் இடையிலான கடைசி மெல்லிய தொடர்பு இழையும் துண்டிக்கப்பட்டிருந்தது.

லட்சக்கணக்கான ஆயுதமற்ற மக்கள தங்கள் நகரங்கள், தெருக்கள், மொக்கல்லாக்களை மீட்டெடுக்க தெருவில் இறங்கிவிட்டனர். பயங்கர ஆயுதங்களை இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் பெரும் எண்ணிக்கையிலுஞம், நெஞ்சுரத்துடனும் கூடினர். காஷ்மீரில் எழுந்த காதை அடைக்கும் பெரும் கர்ஜனையை அமைதிப்படுத்த இந்திய அரசு மிகக் கடினமாக முயன்றது.

ராணுவ முகாம்கள், சோதனை சாவடிகள், பதுங்கு குழிகளின் தேசமாகவும், சித்திரவதைக் கூடங்களில் இருந்து ஓலங்கள் ஒலிக்கும் நேரத்திலும் மக்கள் போராட்டத்தின் உண்மையான சக்தியை இளம் தலைமுறை திடீரென்று கண்டெடுத்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக கௌரவமாக தங்கள் தோள்களை நிமிர்த்தி, தங்களுக்காகவும், தங்கள் மக்களுக்காகவும் போராட அவர்கள் முன்வந்துள்ளனர். அவர்களைப் பொருத்தவரை இந்த தருணம் கடவுள் தங்கள் முன் தோன்றி வரம் தரத் தயாராக இருக்கும் தருணம் போன்றது. அவர்கள் முழுவீச்சுக்சுடன் இருக்கின்றனர். மரணம்கூட அவர்களது முன்னேற்றத்குக்கு முற்றுப்புள்ளி வைக்காது. மரண பயம் போய்விட்ட பிறகு, உலகிலேயே மிகப் பெரிய அல்லது இரண்டாவது மிகப் பெரிய ராணுவத்தை முன்னிறுத்தி என்ன பிரயோஜனம்? இதில் என்ன பயணம் வேண்டிக் கிடக்கிறது? காஷ்மீர் மக்கள் இன்று கையாளும் சாத்வீக போராட்ட முறையைக் கையாண்டுதான் தாங்களும் சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை இந்தய மக்களைத் தவிர வேறு யார் சிறப்பாக உணர்ந்து கொள்ள முடியும்?

காஷ்மீரில் தற்போது உருவாகியுள்ள மக்கள் எழுச்சி, பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யின் சதி என்றோ அல்லது தீவிரவாதிகளின் வற்புறுத்தலால் மக்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்றோ புளித்துப்போன பழைய வாதத்தை முன்வைக்க முடியாமல் முடக்கியது. 30கள் தொடங்கி ‘காஷ்மீரி உணர்வை’யர் சரியாக வெளிப்படுத்தினார்கள் என்ற கேள்வி சர்ச்சைக்குரியதாக இருந்து வந்துள்ளது. அப்படி வெளிப்படுத்தியது ஷேக் அப்துல்லாவா? இஸ்லாமிய மாநாட்டு கட்சியா? இன்று யார் அதை வெளிப்படுத்துகிறார்கள்? முன்னணி அரசியல் கட்சிகளா? ஹ§ரியத்தா? தீவிரவாதிகளா? கேள்விகள் நீள்கின்றன.

இதற்கு முன்பாகவும் பெரும் பேரணிகள் நடந்துள்ளன என்றாலும், இந்த முறை மக்கள் முழு சக்தியை வெளிப்படுத்தி போராடியதை உணர முடிந்தது. சமீபகாலத்தில் இவ்வளவு நீண்ட காலத்துக்கும், பரவலாகவும் மக்கள் போராட்டம் நடக்கவில்லை. இந்திய அரசு மற்றும் இந்திய ஊடகங்களால் மிகவும் பாராட்டப்பட்ட காஷ்மீரின் இரண்டு முன்னணி அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சிம் வீதிகளில் இறங்கி போராடுவதற்கான துணிச்சலை பெற்றிருக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்களிப்பவர்கள் விகிதம் தொடர்ந்து குறைந்து வந்த நேரத்தில், புதுதில்லியில் உள்ள தொலைக்காட்சி அரங்குகளில் நடந்த விவாதங்களில் கடமைக்கு பங்கேற்பதே அந்த இரண்டு கட்சிகளுக்கும் முக்கியமானதாக இருந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலவிவந்த கடுமையான அடக்குமுறைக்கு இடையே விடுதலை வேள்வியை தீவிரவாதிகள் முன்னெடுத்து சென்று கொண்டிருந்த நிலையில், இன்று அவர்கள் பின்தங்கி விட்டனர். ஒரு மாற்றத்துக்காக இப்போது மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.

பேரணிகளில் பேசிய பிரிவினைவாதத் தலைவர்கள், தலைவர்களாக இருந்தது மட்டுமின்றி, காஷ்மீரின் தெருக்களில் கொதித்தெழுந்த சீற்றம் மிகுந்த மக்களின் மாபெரும் சக்தியால் வழிநடத்தப்பட்டு, அதைப் பின்பற்றி நடக்கும் தொண்டர்களாகவும் இருந்தனர். முழுமையான புரட்சியை ஏற்று நடத்தும் தலைவர்களாக அவர்கள் இருந்தனர். இதில் உள்ள ஒரே கட்டுப்பாடு, மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை கேட்டு நடக்க வேண்டும் என்பதுதான். மக்கள் விரும்பாதவற்றை பொது இடத்தில் கூற நேரிட்டால், பின்னர் கௌரவமாக வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு, தங்கள் பாதையை மாற்றிக் கொண்டனர். ‘தற்போது உருவாகியுள்ள மக்கள் இயக்கத்தின் ஒரே தலைவர் நான்தான்’ என்று சமீபத்தில் ஒரு பேரணியில் அறிவித்துக் கொண்ட சையது அலி ஷா ஜீலானி உட்பட அனைவருக்கும் இது பொருந்தும். எளிமையாக உடைந்துவிடக்கூடிய பல்வேறு சக்திகள் போராட்டத்தில் ஒருங்கிணைந்த நிலையில், அவரது கருத்து மிகப்பெரிய அரசியல் பிழை. ஒரு சில மணி நேரத்தில் கருத்தை அவர் மறுதலித்தார். விரும்புகிறோமா இல்லையோ, இதுதான் ஜனநாயகம். எந்த ஜனநாயகவாதியும் போலியாக நடித்து தப்பிக்க முடியாது.

ஒவ்வொரு நாளுக்குப் பிறகும், பயங்கரமான நினைவுகள் நிழலாட ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களை மொய்க்கத் தொடங்கினர். பதுங்கு குழிகளை தகர்த்தனர். தடைகளை உடைத்தனர். ராணுவ வீரர்களின் இயந்திரத் துப்பாக்கிகளை நேருக்குநேர் சந்தித்து, இந்தியாவில் சிலர் மட்டும் விரும்பும் விஷயத்தை கூறினர். ‘எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ என்றும், அதே அளவு எண்ணிக்கையிலும், அதே அளவு உக்கிரத்துடனும், ‘பாகிஸ்தான் நீடூழி வாழ்க’ என்றும் அவர்கள் கோஷமிட்டனர். தகரக் கூரையில் படபடவென்று வீழ்ந்து தெறிக்கும் மழையின் ஒலியைப் போலவும், மின்னல் தாக்குவதற்கு முன் ஒலிக்கும் இடியின் ஓசை போலவும் பள்ளத்தாக்கில் இந்த கோஷங்கள் அதிர்ந்து ஒலித்தன. காஷ்மீர் மக்களிடம் நடத்தப்படாத ஒரு வாக்கெடுப்பின், நிரந்தரமாக ஒத்திவைக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவு இந்த கோஷங்கள்.

ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினத்தன்று, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பக்ஷி மைதானத்தின் காலி இருக்கைகளில் ஆங்காங்கு ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சில அதிகாரிகள் முன்னிலையில் ஆளுநர் என்.என்.வோரா கொடியேற்றினார். ஒரு சில மணி நேரத்துக்குப் பின்னால், நகரத்தின் முக்கிய பகுதியான லால் சௌக்கில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றினர். ‘தாமதமான சுதந்திர தின வாழ்த்துகளை’ (ஏனென்றால் பாகிஸ்தானின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14), ‘அடிமைகள் தின வாழ்த்துக்களை’யும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் பல்வேறு சித்திரவதைக் கூடங்களிலும், காஷ்மீரின் அபு கிரெய்ப் வதைகூடங்களிலும், இப்படி நகைச்சுவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 16ம் தேதி பாம்போர் என்ற கிராமத்துக்கு 3,00,000 மக்கள் பேரணியாகச் சென்றனர். ஜந்து நாட்களுக்கு முன் மோசமான வகையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹ§ரியத் தலைவர் ஷேக் அப்துல் அஜீசின் சொந்த கிராமம் அது. ஜம்முவுக்கு சரக்குகளை எடுத்துச் செல்லும் ஒரே பாதை இந்துத்துவவாதிகளால் தடுக்கப்பட்ட நிலையில், ஸ்ரீநகர்முசாபராபாத் நெடுஞ்சாலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை நோக்கி நடந்த பெரும் பேரணியில் அவர் கொல்லப்பட்டார். காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு முன் அந்தச் சாலை சரக்கு, மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். ஆகஸ்ட் 18ம் தேதி, அதே எண்ணிக்கையில் திரண்ட மக்கள் ஸ்ரீநகரில் உள்ள டி.ஆர்.சி. மைதானத்தில் கூடி (அந்த அமைப்பு உண்மை மற்றும் அமைதி குழுவாகச் செயல்படவில்லை, சுற்றுலா வரவேற்பு மையல் போலவே செயல்பட்டது) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஜ.நா.ராணுவ கண்காணிப்பு குழுவிடம் மூன்று கோரிக்கைகள் அடங்கிய தீர்மானத்தை கொடுத்தனர். அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஐ.நா.அ¬திப் படையை முன்னிறுத்த வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய ராணுவமும் காவல்துறையும் மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

இந்தப் பேரணிக்கு முந்தைய நாள் இந்திய அரசு வேறொரு கடுமையான வேலையில் ஆழ்ந்திருந்தது. புதுதில்லியில் உள்துறை செயலாளர் அன்று நடத்திய உயர்நிலை கூட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர், உளவுத்துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கலகம் ஏற்படுவதற்கு ஐ.எஸ்.ஐ.யின் சிறு குழுதான் காரணம் என்று அரசு நம்புவதாகவும், இந்த அதிரகசிய உளவுத்துறை தகவலை தங்கள் செய்தி அலைவரிசைகளில் ஒளிபரப்புமாறு ஊடகங்களிடம் அரசு கேட்டுக் கொண்டது. இந்த விஷயம் மிகவும் அபத்தமாக இருந்தாலும்கூட, தொலைக்காட்சி அலைவரிசைகள் அரசு வழிகாட்டுதலை கேட்டாக வேண்டிய நிலையில் இருந்தன. அப்படி அபத்தங்களை ஒளிபரப்புவதற்கு மத்தியில் குறைந்தபட்சம், இந்த மக்கள் புரட்சி தொலைக்காட்சியில் காட்டப்படுகிறதே, அதற்காகவாவது மகிழ்ச்சியடையலாம்.

ஆகஸ்ட் 17ம் தேதி இரவு, ஸ்ரீநகரில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது. சாலைகளில் தடைகள் உருவாக்கப்பட்டன. இந்த தடைகளில் ஆயுதமேந்திய ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். ஸ்ரீநகருக்கு செல்லும் சாலைகள் தடை செய்யப்பட்டன. குப்கர் சாலையில் உள்ள ஐ.நா.ராணுவ கண்காணிப்பு குழு அலுவலகத்துக்கு பேரணியாகச் செல்லாமல் டி.ஆர்.சி.மைதானத்தில் உரையாற்றுமாறு 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஹ§ரியத் தலைவர்களிடம் காவல்துறை கோரிக்கை விடுத்தது. ஏனென்றால், ஸ்ரீநகரின் குப்கர் சாலையில்தான் தடைகளை ஏற்படுத்தி இந்திய நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு சௌகரியமாகவும், பகட்டாகவும் வாழ்ந்து கொண்டிருந்தது.

பள்ளத்தாக்கின் கிராமங்கள், நகரங்களில் இருந்து வந்த மக்கள் 18ம் தேதி காலை ஸ்ரீநகரில் குவியத் தொடங்கினர். டிரக், டெம்போ வேன், ஜீப், பஸ், கால்நடையாக என கிடைத்த வழிகளில் எல்லாம் வந்திருந்தனர். மீண்டும் தடைகள் உடைக்கப்பட்டன. மக்கள் தங்கள் நகரத்தை மீட்டெடுத்துக் கொண்டனர். இதை எதிர்கொள்ள காவல்துறைக்கு இரண்டே வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று விலகியிருப்பது அல்லது மக்களை படுகொலை செய்வது, காவல்துறை விலகி நின்றது. ஒரு தோட்டாகூட சுடப்படவில்லை.

நகரமெங்கும் அலைகடலென புன்னகை வீசியது. எங்கும் மகிழ்ச்சிப் பரவசம் பரவியிருந்தது. படகு இல்ல உரிமையாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொருவர் கையிலும் பதாகைகள் வீற்றிருந்தன. ‘நாங்கள் அனைவரும் கைதிகள், எங்களை விடுதலை செய்யுங்கள்’ என்றது ஒன்று. ‘மற்றொன்றோ, ‘சுதந்திரம் இல்லாத ஜனநாயகம் வெறும் பேய் பிடித்த ஒன்று’ என்றது. இந்திய அரசு தனது மதச்சார்பின்மை கூறுகளை வலுப்படுத்திக் கொள்ள, மதரீதியிலான படுகொலையை கையிலெடுத்துக் கொண்ட அவலத்தை மேற்கண்ட வாசகம் உணர்த்துகிறது. அத்துடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. உலகின் மிகப்பெரிய ராணுவ ஆக்கிரமிப்பை காஷ்மீரில் நிகழ்த்திக் கொண்டு, தன்னைத் தானே ஜனநாயக நாடு என்று அழைத்துக் கொள்ளும் பைத்தியக்காரத்தனத்தையும் குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும், ஒவ்வொரு சினார் மரத்தின் உச்சியிலும் பச்சைக் கொடி பறந்தது. அதில் இந்திய வானொலி நிலைய கட்டடத்தில் ஒரு கொடி பட்டொளி வீசிப் பறந்தது. ஹஸ்ரத்பால், பத்மாலூ, சோபூர் ஆகிய வழிகாட்டி பலகைகள் அழிக்கப்பட்டன. ராவல்பிண்டி அல்லது பாகிஸ்தான் பாகிஸ்தான் வழிகாட்டிப் பலகைகளே அழிக்கப்படாமல் இருந்தன. பாகிஸ்தான் மீது காஷ்மீர் மக்கள் கொண்டுள்ள பாசம் என்ற பொது உணர்வு வெளிப்பாடு, பாகிஸ்தான் மீதான விருப்பத்துக்கு இணங்கிச் செல்லும் தன்மை கொண்டது என்று தவறான தோற்றத்தை உருவாக்கக் கூடும். இதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரிகள் தங்கள் செயல்பாட்டை விடுதலைப் போராட்டம் என்று கருதுகின்றனர். இந்திய அரசோ தீவிரவாத பிரசாரமாகக் கருதுகிறது.

பாகிஸ்தானை பெரும்பாலான காலம் சர்வாதிகாரிகள்தான் ஆண்டு வந்துள்ளனர்.தற்போது வங்கதேசமாக உள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளது. இனக்குழுக்கள் இடையிலான போரால் தற்போது பிளவுண்டு கிடக்கும் பாகிஸ்தானிடம் இருந்து, காஷ்மீர் ‘விடுதலைப் போராட்டம்’ விலகிருயிருப்பதுதானே சரியாக இருக்கும் என்று கேள்வி எழுலாம். நேரெதிராக ஆச்சரியமளிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்றழைக்கப்படும் இந்தியாவை காஷ்மீர் மக்கள் கடுமையாக வெறுக்கின்றனர்.

எங்கு பார்த்தாலும் பாகிஸ்தான் கொடிகள். எங்கு பார்த்தாலும் ‘பாகிஸ்தானுடன் எங்கள் பந்தம் என்ன? அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை’, ‘சுதந்திரம் என்றால் என்ன? அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை’ என்ற கோஷங்கள் ஒலித்தன.

என்னைப் போன்ற முஸ்லிமல்லாதவர்களுக்கு சுதந்திரம் தொடர்பாக அவர்கள் தரும் விளக்கம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. காஷ்மீருக்குச் சுதந்திரம் கிடைத்தாலும், ஒரு பெண்ணான உங்களுக்கு என்ன சுதந்திரம் கிடைத்து விடப் போகிறது என்று ஓர் இளம்பெண்ணிடம் கேட்டேன். அவர் தோள்களை குலுக்கி விட்டு, “இப்போது எங்களுக்கு என்ன சுதந்திரம் கிடைத்திருக்கிறது? இந்திய ராணுவ வீரர்களால் பலாத்காரம் செய்யப்படுவதற்கான சுதந்திரத்தைத்தான் நாங்கள் பெற்றிருக்கிறோம், இல்லையா?” என்று பதிலிறுத்தாள். அவரது பதில் என்னை மௌனமாக்கியது.

டி.ஆர்.சி.மைதானத்தில் பச்சைக் கொடிகளின் அணிவகுப்புக்கு மத்தியில் நான் நின்றபோது, என்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமிய இயல்பு கொண்ட எழுச்சியைப் பற்றி சந்தேகம் கொள்ளாமல் இருக்கவே அல்லது அதை புறந்தள்ளாமல் இருக்கவோ முடியவில்லை. அதேநேரம் ஒரு கொடிய தீவிரவாதிகளின் ஜிகாத் என்றும் இதை முத்திரை குத்த முடியாது. காஷ்மீரிகளைப் பொருத்தவரை இது ஒரு தூய்மைப்படுத்துதல் நிகழ்வு. நீண்ட மற்றும் சிக்கல்கள் நிறைந்த சதந்திரத்துக்கான போராட்டத்தில், அதற்கே உரிய அனைத்து நேர்த்தியின்மைகள், கொடுமைகள், குழப்பங்களுக்கு மத்தியில் இந்தக் கூடுகை ஒரு வரலாற்று திருப்புமுனை வாய்ந்த தருணம்.

இந்தப் போராட்டம் மாசுபடாத ஒன்று எனக் கூறமுடியாது. இந்த மக்கள் எழுச்சியின் ஆரம்ப கட்டத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் கொடூரமாக கொல்லப்பட்டது மற்றும் பள்ளத்தாக்கில் இருந்த ஒட்டுமொத்த பண்டிட் சமூகமும் வெளியேற்றப்பட்டதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. கோஷங்களை நான் கவனமாக காது கொடுத்து கேட்க ஆரம்பித்தேன். ஏனென்றால் பேச்சு அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தி, புரிதலுக்கான அனைத்து அம்சங்களையும் தருகிறது. காஷ்மீர் சாலை தடை செய்யப்பட்ட பிறகு ‘காஷ்மீரின் சந்தை ராவல்பிண்டிதான்’, ‘ரத்தம் தோய்ந்த எல்லை கட்டுப்பாட்டு கோட்டை உடைப்போம், காஷ்மீரை ஒன்றிணைப்போம்’ என்றும், (இவை தவிர, இந்தியாவை அவமானப்படுத்தும்,, அவமதிக்கும் கோஷங்களும் இருந்தன), ‘ஒடுக்குபவர்களே, கொடியவர்களே, எங்கள் காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்’, ‘காஷ்மீர் எங்கள் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது, காஷ்மீர் எங்களுடையது’ என்று அந்த கோஷங்கள் ஒலித்தன.

ஒரு கோஷம் என்னை கத்தி போல் வெட்டி, எனது இதயத்தை உடைத்தது, ‘பிச்சையெடுக்கிறது நிர்வாண இந்தியா, பாகிஸ்தானிலோ வாழ்க்கை சௌகரியமான ஒன்றுதான்’ என்றது அந்த கோஷம்.

இந்த கோஷம் சகப்பதானதாகவும், கேட்க வலி மிகுந்ததாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன? இதைப் புரிந்து கொள்ள நான் முயற்சித்தேன். மூன்று காரணங்கள் தென்பட்டன. முதலாவது, இந்த கோஷத்தின் முதல் பகுதி மிகவும் கவலையளிக்கக் கூடியது, ‘வல்லரசாக உயர்ந்து வரும்’ இந்தியாவின் உண்மையான முகத்தை சுட்டுகிறது.

இரண்டாவது, இந்தியர்கள் அனைவரும் நிர்வாணமாக, பிச்சையெடுத்துக் கொண்டிருக்கவில்லை என்றாலும் கூட, பல்வேறு சிக்கலான, வரலாற்று ரீதியில் கொடூரமான பண்பாட்டு மற்றும் பொருளாதார அமைப்புகள் இந்திய சமூகத்தை கொடூரமானதாகவும், இழிவான ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாகவும் உருவாக்கியுள்ளன. மூன்றாவதாக, மிகவும் அவதிப்பட்ட காஷ்மீர் மக்கள், அதற்கு சற்றும் குறையாத வகையில் அதே ஒடுக்குபவரால் (இந்தியாவால்) பல்வேறு வகைகளில் அவதிப்படுபவர்களைப் பார்த்து கிண்டல் செய்வதைக் கேட்பது வலி மிகுந்த ஒன்றுதான். இந்த கோஷத்தில் இருந்து பாதிக்கப்படுவர்களே எப்படி குற்றம்புரிபவர்களாக மாறுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

மரிவாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா ஜீலானி பேரணிக்கு வந்தபோது அவர்களுக்கு கூறப்பட்ட வாழ்த்தொலிகள் காதுகளை நிறைத்தன. ‘ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படவும், சிறையில் அடைக்கப்படவும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவும் காரணமாக இருந்த ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், தொந்தரவுக்கு உள்ளான பகுதிகள் சட்டம், மக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். மக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ராணுவத்தை அகற்ற வேண்டும்’ என்று மிர்வாய்ஸ் உமர் பாரூக் பேசினார். சையது அலி ஷா ஜீலானி, ‘குரான்தான் நமக்கு வழிகாட்டும். பாகிஸ்தான் காஷ்மீருடையது, அதைப் போலவே காஷ்மீர் பாகிஸ்தானுடையது.’ என்ற வகையில் பேசினார். அவர் பேசிய ஒவ்வொரு வாக்கியத்தையும் கூட்டம் ஆமோதித்தது.

இந்த விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பல்வேறு அமைப்புகள் தங்களது மாறுபட்ட பார்வைகளுக்கு எப்படி தீர்வு காணப் போகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்பது ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் கருத்து, காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்பது ஜீலானியின் விருப்பம், மிர்வாய்ஸ் உமர் பாரூக்கோ இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை எடுத்துள்ளார்.

சிவப்பு கண்கள் மினுமினுக்க என் அருகில் நின்றிருந்த ஒரு முதியவர் கூறினார், “காஷ்மீர் எங்கள் நாடு. பாதியை இந்தியாவும், பாதியை பாகிஸ்தானும் பிடுங்களிக் கொண்டன. எங்களுக்கு சுதந்திரம்தான் தேவை” என்றார். புதிய பங்கீட்டு விதியின்படி, இவர் கூறுவதை யாராவது கேட்பார்களா? இந்திய சமவெளிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் கர்ஜித்துக் கொண்டு ஓடிய லாரிகளின் உரிமையாளர்களும், அதை ஓட்டிய மனிதர்களுக்கும் வரலாறு பற்றியோ அல்லது காஷ்மீரைப் பறறியோ தெரியுமா என்று கூறமுடியவில்லை. இருந்தபோதும் லாரிகளின் பின்புறத்தில் அவர்கள் பதித்திருந்த தகடுகளில் “பாலைக் கேட்டால், வெண்ணெய் தருவோம், காஷ்மீரைக் கேட்டால், உன்னை இரண்டாகப் பிளந்துவிடுவோம்” என்று எழுதியிருப்பது குறித்து அந்த முதியவருக்குத் தெரியுமா?

இந்த இஸ்லாமிய சக்தியின் இடத்தில் இந்துத்துவ சக்திகளைப் பொருந்திப் பார்த்தேன். அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் பயங்கரக்கனவாகத் திகழும், ‘கனவு இந்தியா’வின் தோற்றம் என் முன்னால் வந்தது.

‘இதுதான் நமது எதிர்காலம்’ என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? ‘முழுமையான வாழ்க்கையின் வழி’ என்ற பெயரில் ஒற்றை மதத்தை பின்பற்றும் அரசுகளின் கையில் சமூக, ஒழுக்க விதிமுறைகளை ஒப்படைக்க வேண்டுமா? இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் இந்துத்துவ திட்டத்தை நிராகரிக்கிறோம். நாம் வாழும் சமூகத்தில் நிலவும் அன்பு, ஆர்வம், குறைகாணாத போக்கு, பெருமளவு உணர்ச்சிவசப்படும் குணங்களில் இருந்து இந்த நிராகரிப்பு உருவாகிறது. நமது அண்டை அயலார் என்ன செய்கிறார்கள், பிரச்சினைகளை எப்படி கையாளுகிறார்கள் என்ற அம்சங்கள் நமது வாதத்தை மாற்றுவதில்லை. மாறாக அது நமது வாதத்தை பலப்படுத்தவே செய்கிறது. அதேநேரம் இப்படி அன்பால் உருவாகும் வாதங்கள், ஆபத்தையும் விளைவிக்கக்கூடும். இஸ்லாமிய அமைப்பை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது பற்றி காஷ்மீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். (ஏனென்றால் குழப்பளிக்கும் வகையில் இந்துத்துவ கொள்கைக்கு எப்படி இந்துகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ, அதேபோல் உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைக்கு முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்). வன்முறை ஆபத்துகள் அடங்கிய நிலையில், பல்வேறு பார்வைகளை முன்வைக்கவும், தங்கள் கருத்தை கூறி விவாதிக்கவும் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த வகையான சமூகத்தை உருவாக்குவதற்காக போராடி வருகிறோம் என்பது பற்றிய சித்திரத்தை இந்த போராட்டத்தில் பங்கேற்பவர்கள் இப்போது தெளிவாக்க வேண்டும்.

தியாகிகள், கோஷங்கள், மேம்போக்கான பொதுமைப்படுத்துதல்களைத் தாண்டி இவர்கள் மக்களுக்கு எதையாவது கொடுத்தாக வேண்டும். குரானை வழிகாட்டியாகக் கொள்ளும் விருப்பமுடையவர்களுக்கு அங்கு வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அப்படிச் செய்யக்கூடாது என்று விரும்புபவர்கள் அல்லது குரானை வழிகாட்டியாக கொள்ளாதவர்கள் என்ன செய்வது? ஜம்முவில் உள்ள இந்துகள் மற்றம் இதர சிறுபான்மையினருக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்குமா? தற்போது வெளியேறி மோசமான வறுமையில் வாடும் லட்சக்கணக்கான பண்டிட்டுகள், தங்கள் பகுதிகளுக்குத் திரும்புவதற்கு அனுமதி கிடைக்குமா? அவர்கள் சந்தித்த மோசமான இழப்புகளுக்கு நஷ்டஈடு அளிக்கப்படுமா? அல்லது கடந்த 61 ஆண்டுகளாக காஷ்மீரிகளுக்கு இந்தியா செய்து வந் விஷயத்தையேதான், சுதந்திர காஷ்மீரும் சிறுபான்மையினருக்குச் செய்யுமா? அப்படியானால் ஓரினச்சேர்க்கையாளர்கள், கலப்படம் செய்பவர்கள், கடவுளை பழிப்பவர்களின் கதி என்னாகும்? இந்த ஒட்டுமொத்த சமூக மற்றும் ஒழுக்க விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் திருடர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்கள் என்ன ஆவார்கள்? சௌதி அரேபியாவைப் போல கொல்லப்படுவார்களா? மரணம், ஒடுக்குதல், அடக்குமுறை, படுகொலை என்ற துர்சுழற்சி இதற்குப் பிறகும் தொடருமா? காஷ்மீரின் சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆராய்ந்து அறிய வரலாறு பல்வேறு மாதிரிகளை முன்வைத்திருக்கிறது. அவர்களது கனவு காஷ்மீர் எப்படியிருக்கும்? அல்ஜீரியா, இரான், தென்னாப்பிரிக்கா, ஸ்விட்சர்லாந்து, பாகிஸ்தான்... இவற்றில் எதைப் போன்றிருக்கும்?

இந்த நெருக்கடியான தருணத்தில், கனவுகளைவிட வேறு சில விஷயங்களும் மிக முக்கியமானவை. சூழ்நிலையை தெளிவாகவும், நேர்மையாகவும் கணிப்பதற்குத் தடை விதிக்கும் வகையில் அறிவுச் சோம்பலையோ, தயக்கத்தையோ இந்தத் தருணத்தில் வெளிப்படுத்தக் கூடாது. 1947ம் ஆண்டு மகாராஜா ஹரி சிங் செய்த பித்தலாட்டம் காஷ்மீரின் நவீனகால சோகம் என்றும், அதன் காரணமாகத்தான் இப்படி நினைத்துப் பார்க்க இயலாத படுகொலைகள் நிகழ்ந்தன. கிட்டத்தட்ட சுதந்திரமாக இருந்த மக்கள் நீண்டகால அடிமையாக இருக்க நேரிட்டது என்றும் யாராவது வாதிடலாம்.

இதற்கிடையில் பிரிவினைவாத பிசாசு ஏற்கெனவே தலைதூக்கிவிட்டது. பள்ளத்தாக்கில் வாழும் இந்துக்கள் தாக்கப்படுவார்கள். வெளியேற்ற தூண்டப்படுவார்கள் என்று இந்துத்துவ அலைவரிசைகளில் புரளி பரவி வருகிறது. அதற்கு பதிலடியாக, ஜம்முவில் ஆயுதமேந்திய இந்து தீவிரவாதிகள் படுகொலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்துக்கள் அதிகமாக வாழும் இரண்டு மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட கொடூர நினைவுகள் மீண்டும் நினைவில் ஆடுகின்றன. அந்த கொடும் கனவு எப்பொழுதும் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒன்றுதான்.

மீண்டும் அதே வரலாறு இங்கும் நிகழும் என்று எதிர்பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படி நிகழாதவரை, அதை நம்பத் தேவையில்லை. மேலும் அப்படிப்பட்ட கொந்தளிப்பை உருவாக்க மக்கள் வேறு வகையில் தீவிரமாக செயலாற்றிருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், இந்த பயங்களை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொண்டு அந்த மக்களையும், காஷ்மீரையும் தொடர் ராணுவ ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதை யாரும் நியாயப்படுத்த முடியாது. ‘சுதந்திரத்தை அனுபவிக்க இந்தியர்கள் தயாராக இல்லை, அதனால்தான் சுதந்திரம் வழங்கவில்லை’ என்று காலனி ஆதிக்கம் செலுத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திய பழைய வாதத்தையே இது நினைவுபடுத்துகிறது.

இந்திய அரசு காஷ்மீரின் மீது வைத்துள்ள பிடியை தக்கவைத்துக் கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாளலாம். தன்னால் என்ன முடியுமோ அதையெல்லாம் இந்தியா செய்து பார்க்கும். உறுதியான திட்டம் வகுக்கப்படாத நிலையில் தற்போது எழுந்துள்ள மக்கள் எழுச்சி மங்கிவிட வாய்ப்புள்ளது. தற்போது உருப்பெற்று வரும் எளிதில் உடைந்துவிடக்கூடிய கூட்டணியை உடைப்பதற்கு அது வழிகோலும். தற்போது எழுந்துள்ள சாத்வீக எழுச்சி மறைந்து, ஆயுதமேந்திய தீவிரவாதிகள் மீண்டும் போராடுவதற்கு அழைக்கப்படலாம். தற்போது 5 லட்சமாக உள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அது 10 லட்சமாக மாற்றக்கூடும். சில தந்திரமான படுகொலைகள், இரண்டொரு திட்டமிட்ட படுகொலைகள், சில காணாமல் போகச்செய்தல்கள், ஒட்டுமொத்த கைது போன்றவை மேலும் சில ஆண்டுகளுக்கு இந்த மந்திர ஜாலத்தை நீட்டிக்கக்கூடும்.

காஷ்மீரில் ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கு செலவிடப்படும் அளவு கொள்ளாத மக்கள் வரிப்பணம், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுடன் வறுமையில் உழலும் மக்களுக்கு பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டவும், உணவுக்காகவும் செலவிட வேண்டியவை. அதிக ஆயுதங்கள், அதிக தடையேற்படுத்தும் வேலி கம்பிகள், காஷ்மீரில் சிறைகளுக்குச் செலவிடுவது சரியான ஒரு நடவடிக்கை என்று இந்திய அரசு எப்படி நம்புகிறது என்று புரியவில்லை.

காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு நாம் அனைவரையும் அரக்கர்கள் ஆக்கிவிடுகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை இந்து ஆதிக்கவாதிகள் தாக்குவதற்கு உள்ள ஆபத்தான வாய்ப்பு, காஷ்மீர் முஸ்லிம்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தடை ஏற்படுத்துகிறது. இந்த விஷம் மிகுந்த சதித்திட்டம் நேரடியாக நமது ரத்தநாளங்களில் செலுத்தப்பட்டு அவ்வப்போது இடையீடுகளுடன் நிர்வகிக்கப்படுகிறது.

இத்தனைக்குப் பிறகும் நம் அனைவரது மனசிலும் ஓர் நியாயமான கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. மக்களின் விடுதலையை பறிக்க எந்த அரசாவது ராணுவ படையை பயன்படுத்த உரிமை உண்டா?

காஷ்மீரை இந்தியா விட்டொழிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் விடுதலை பெறுவதும் மிகமிக முக்கியம்.

தமிழில் : ஆதி வள்ளியப்பன் (நன்றி ‘அவுட்லுக்’ இதழ்)

Pin It