“இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! பாக்கிஸ்தான்” என்று வாட்சாப் குழுவில் பதிவிட்டேன். பதிவிட்ட சில நிமிடங்களில் பத்து உறுப்பினர்கள் வெளியேறினர்.

நானும் அதையே செய்திருப்பேன் என்றால், இந்தப் பதிவு ௨ங்களுக்கே.

அந்தப் பதிவில் என்ன தவறு? ஆகஸ்ட் 13, 1947 வரை பாக்கிஸ்தான், வங்காளம், இந்தியா எல்லாம் ஒன்றே. வெள்ளைக்காரன் போட்ட கோடு மட்டுமே நம்மைப் பிரித்தது.

காந்திஜி, நேதாஜி என அனைத்து சுதந்திரப் போரளிகளும் பாக்கிஸ்தானுக்கும் வங்காளத்திற்கும் சேர்த்தே போராடினார்கள். நாம் (இந்தியர்கள்) பெற்ற சுதந்திரத்தில் ஜின்னா அவர்களுக்கும் பங்கு உண்டு.

பின் ஏன் இந்த பகுபாடு?

என் பெயர் “அருண்”. என் பாக்கிஸ்தானி நண்பன் பெயர் “செசாத் அஹமத்”.

நான் அரபு எமிரேட்சில் வேலை பார்த்தேன். பக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்தார் அவர். எப்படியோ நண்பர்கள் ஆனோம். ஆரம்பத்தில் 'கிரிக்கெட்', 'உலக சினிமா' பற்றி மட்டுமே பேசினோம்.

சில சமயங்களிள் இந்தியா , பாகிஸ்தான் உறவு மற்றும் உலக அரசியல் பேசுவோம்.

ஒரு நாள் அவர் என்னிடம் எனக்கு இந்தியாவை சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசை என்றார். "அதற்கு என்ன, நான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறேன். வாருங்கள்" என்றேன்.

"எனக்கு பயமாக உள்ளது" என்றார்.

"ஏன்?" என்று வினவினேன்.

அவர் அதற்கு "என்னை இந்தியாவில் தீவிரவாதியாக நினைக்கக்கூடும். நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் உங்களுக்கும் கூட அது நல்லது அல்ல" என்றார்.

இவ்வார்த்தைகள் என்னிடம் பல கேள்விகளை எழுப்பிச் சென்றன. சில நிமிட உரையாடலுக்குப் பின்னர் "தென்இந்தியா சற்றே பாதுகாப்பானதே" என்று ஒப்புக் கொண்டார்.

"எனக்கும் பாக்கிஸ்தான் வர ஆசை" என்றேன் (சிறிய பயத்துடன்).

நாங்கள் பேசிக் கொண்டிற்கும்போது நடுவில் ஒரு இந்திய நண்பர் வந்தார். நாங்கள் அப்போது போர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவர் குறுக்கிட்டு “பாக்கிஸ்தான் எங்கள் கால் தூசிக்கு சமம். நாங்கள் நினைத்தால் ஒரு நாளில் பாகிஸ்தானை தரை மட்டம் ஆக்குவோம்" என்று கூறி என்னைப் பார்த்து சிரித்தார். நான் ஒன்றும் பேசாது தலை குனிந்து விட்டேன்.

சில நிமிடங்களில் அவர் விடைபெற்றார். அதன் பின் பாகிஸ்தானி நண்பர் என்னிடம் "பாகிஸ்தானிலும் இது போன்று பல முட்டாள்கள் உண்டு" என்றார்.

சிரித்து விட்டேன்.

அன்றைக்கு ஒன்று விளங்கியது, நண்பர்களாகுவதற்கு நாடு/மொழி/மதம்/சாதி என எது வித்திடாலும், நண்பர்களாக நீடிப்பது அவரவர் குணங்களைப் பொருத்தது.

இரண்டு எழுத்துகளில் அவர் இந்தியாவிற்கு எவ்வளவு நெருக்கமானவர் என்று அறிந்து கொள்ளலாம். அவர் சொந்த ஊர் பெயர் 'குஜராத்'. அவரின் தாய் மொழி 'பஞ்சாபி'. இப்போதாவது நம்புங்கள் வெள்ளைக்காரன் போட்டது வெறும் கோடு மட்டுமே.

அப்பொழுது உலக கோப்பை கிரிக்கெட் நடந்த நேரம். பாக்கிஸ்தான் அணி இந்தியா செல்லுமா என்ற கேள்விகள் எழுந்த நாட்கள் அது . அவர் 'மொகலி' பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு மிக்க நகரம் என்றார். பின் அவரே சொன்னார் "இறுதியாக மொகலியில் நடந்த கிரிக்கெட் போட்டியை காணச் சென்ற பாக்கிஸ்தானியர்கள் இருவர்(மாணவர்கள்) நாடு திரும்பவில்லை" என்றார். "பின் அதை ஏன் பாதுகாப்பான இடம் என்கிறீர்கள்?" என்றேன். அதற்கு "இருவர் மட்டுமே நாடு திரும்பவில்லை. ஆகையால் 'மொகலி'யே சிறந்த இடம்" என்றார்.

நம்மில் பலருக்கு இது ஒரு செய்தியாகக் கூட தெரிந்திருக்காது, ஏனெனில் நாம் காண்பவை, கேட்பவை, படிப்பவை அனைத்தும் இந்திய ஊடகங்களே.

ஆரம்பத்தில் போர் மற்றும் தீவிரவாதம் பற்றி பேசுவதைத் தவிர்த்து வந்தோம். பின்பு அவையும் உரையாடலில் கலந்தன.

திடீர் என்று ஒரு நாள் மும்பை தாக்குதல் பற்றி பேசத் தொடங்கினோம். அவர் சொன்ன வார்த்தைகள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தின.

அவர் குறிப்பிட்டதாவது “மும்பை தாக்குதல் இந்தியா நடத்திய நாடகம் (false flag attack)” என்றார். அந்த தாக்குதல் நடந்த நேரம் பாக்கிஸ்தான் உலக அரங்கில் பெரும் நெருக்கடியில் இருந்ததாகவும், அந்த தாக்குதல் சம்பவமே பெரும் நெருக்கடியை கொடுத்தாகவும், ஆக பாக்கிஸ்தான் இதை நடத்தியிருக்க வாய்ப்பே இல்லை என்றார்.

நான் "ம்ம்" என்றேன்.

நான் அவர் கூறியதை நம்பவில்லை என்றாலும் அது ஒரு தீப்பொறியை விட்டுச் சென்றது.

அமெரிக்கா, இரான், லிபியாவில் நடத்திய சதிகளை நானே தேடிப் படித்திருக்கிறேன். ஆனால் என் இந்தியாவை அப்படி பார்த்தது இல்லை.

இருப்பினும் அதைப் பற்றி ஆராய நான் விரும்பவில்லை. மேலும் இந்தியா, பாக்கிஸ்தானில் பல தீவிரவாத இயக்கத்திற்கு உதவுவதாகவும் சொன்னார்.

அதற்கும் "ம்ம்" என்றேன்.

ஆக ஒன்று விளங்கியது பாக்கிஸ்தான் மக்களுக்கு இந்தியர்கள் தீவிரவாதி, இந்திய மக்களுக்கு பாக்கிஸ்தானி தீவிரவாதி.

இந்த நிலைக்கு யாரை குறை கூறுவது?

எனக்கு வரலாறு அதிகம் தெரியாது. இருப்பினும் ஒன்று தெரியும், “இந்தியா எந்த நிலையிலும் காஷ்மீரை விட்டுக் கொடுக்காது. காரணம் இந்தியா சீட்டுக்கட்டில் செய்த கோட்டை போல் பல இனம், மொழி, மதம் என ஒன்று இணைந்து உலகிற்கு ஒற்றுமையை பறை சாற்றி நிற்கிறது. அதில் ஒன்று விலகினாலும் கோட்டை தகறும் அபாயம் உள்ளது ”.

'வாகா' படம் பார்த்தேன். அதில் ஒரு காட்சியில் ஒரு ஆட்டுக் குட்டியை பாக்கிஸ்தானி ராணுவ வீரன் சுடுவார். அதற்கு இந்திய அதிகாரி ஒருவர் சொல்வார் “இரக்கம் காட்ட அவர்கள் இந்தியர்கள் அல்ல, பாக்கிஸ்தானியர்” என்று. இது போன்ற கீழ்த்தரமான படைப்பாளிகளும், ஊடகங்களும், சுயநல அரசியல்வாதிகளும் இருக்கும் வரை, நாம் எதிரிகளே.

இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும் ஒரு வேளை சோற்றுக்கு அல்லாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இருந்தும் நாம் ராணுவம், எல்லைப் பாதுகாப்பு என பல கோடிகளை செலவிடுகிறோம் என்றால், இதனால் பயனடைவோர் யார்? இந்தியாவும், சீனாவும் ஒன்று சேராமல் இருப்பதில் யார் பயன் பெறுகிறார்கள் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதனுக்கு இயல்பிலே தைரியம் குறைவு. அவன் ஒரு சமூகமாக (நாடு/மொழி/மதம்/சாதி) வாழ்க்கையிலேயே தைரியம் கொள்கிறான். அந்த தைரியம் கொண்டு சிறுபான்மையினர் மீது வன்மம் கொள்தல் தவறு. நாம் சமூகமாக (நாடு/மொழி/மதம்/சாதி) வாழ்வது நம் முன்னேற்றத்துக்காக மட்டுமே.

“இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என்பதற்கும் “ஒரு எதிரி நாட்டவரை வெறுக்கிறேன்” என்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

அவரும் , நானும் உறவுகளைப் பிரிந்து வாழ்க்கையைத் தேடி ஓடினோம். எங்களுக்குள் எந்த பாகுபாடையும் இதுவரையில் கண்டது இல்லை.

வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம்! எல்லோரையும் நேசிப்போம்!! மனிதம் போற்றுவோம்!!

- க.அருண்

Pin It