கோவை நீலாம்பூர் நெடுஞ்சாலையில் இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்வதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து கடந்த மே 2 ஆம் தேதி வாகனங்களை மறித்த தோழர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனர். பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பெரம்பலூர் இலட்சுமணன், சூலூர் வீரமணி ஆகிய தோழர்கள் மீதும் ம.தி.மு.க.வைச் சார்ந்த தோழர் சந்திரசேகர், வேலுச்சாமி ஆகியோர் மீதும், தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது. 57 தோழர்கள் வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். கோவை இராம கிருட்டிணன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஏனைய தோழர்கள் மீதான பாதுகாப்பு சட்டங்கள் மத்திய உள்துறை அமைச்சகமே ரத்து செய்துவிட்டது. சுமார் 3 மாத சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு பொதுக் கூட்டம் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 18.8.2009 அன்று மாலை 6 மணியளவில் எழுச்சியுடன் நடைபெற்றது. காஞ்சி மக்கள் மன்றத்தின் பறை இசை முழக்கங்களோடு போராளிகள் ஊர்வலமாக பொதுக் கூட்ட மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
எ. கேசவன் தலைமை தாங்கினார். மு. வேலவன் வரவேற்புரையாற்றினார். சு. வெங்கடேசன், சி. பாஸ்கர், நா. டார்வின் தாசன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் அமர்நாத், வை. இளங்கோவன், அன்பு தனசேகரன், பெரம்பலூர் இலட்சுமணன், வழக்கறிஞர் செ. துரைசாமி, பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் உரையாற்றினர்.
சிறை மீண்ட போராளிகளுக்கும், வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் செ. துரைசாமி, வை. இளங்கோ, சு. குமாரதேவன், அமர்நாத் ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நாராயணி பீடத்தைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதாக கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையான வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபன், கழகத் தோழர் குமார் மற்றும் ராணுவ வாகன மறியலில் கைதாகி சிறையிலிருந்த கழகத் தோழர் பொள்ளாச்சி பிரகாஷ் ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கழகத்தோழர் ஓவியர் தஞ்சைத் தமிழன், தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் படத்தை வரைந்து வை.கோவுக்கு அன்பளிப்பாக வழங்கினார். சிறைச் சென்ற போராளிகளுக்கு வைகோ ம.தி.மு.க. சார்பில் ஆடைகளைப் போர்த்தினார். முன்னதாக தேனிசை செல்லப்பா குழுவினரின் எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர் ந. தினகரன் நன்றி கூறினார்.