"ஒரு குழந்தைக்குப் பயிற்று மொழியாகத் தாய்மொழிதான் இருக்க முடியும் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

உளவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், புரிந்து கொள்வதற்கும், வெளிப் படுத்துவதற்கும், அறிவியல் இயல்பாகச் செயல்படுவதற்குரிய பொருள் மிக்க சமிக்ஞைகளைக் கொண்ட கட்டமைப்பாகத் தாய் மொழி உள்ளது.

சமூகவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், தாம் சார்ந்துள்ள சமூகத்தில் உறுப்பினர்கள் இடையேயான அடையாளத்தை அறியும் வழியாகத் தாய்மொழி உள்ளது.

கல்வியியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், அறிமுகம் இல்லாத மொழி வழியாகக் கற்பதைக்காட்டிலும், தாய்மொழி வழியாக மிகவும் விரைவாகக் கற்றுக் கொள்ள முடியும்" (UNESCO 1953) என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் குறிப்பிடுகிறது.

இத்தகைய கருத்தையே 1968 / 2004 / 2008 எனப் பல்வேறு ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது ஆய்வு அறிக்கைகள் மூலமாகத் தொடர்ந்து அது வலியுறுத்துகிறது. தாய்மொழிக் கல்வியை எந்த அளவிற்கு நீட்டிக்க முடியுமோ, அந்த அளவிற்கு நீட்டித்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அது பரிந்துரைக்கிறது.

மேலும் தாய் மொழியை முதல் மொழியாகக் கொண்டு தொடக்கக் கல்வி முழுவதையும் கற்று, இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைக் கற்ற மாணவர்கள், ஆங்கில வழியில் மட்டுமே கல்வி பயின்ற மாணவர்களைக் காட்டிலும் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றதாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அறிக்கை (United Nations Development Programme) குறிப்பிடுகிறது. தாய் மொழியில் வலிமையான அடித்தளத்தைக் கட்டி அமைப்பதே கூடுதல் மொழிகளைக் கற்க ஏதுவாக இருக்கும் என்பதே அதன் பொருள்.

தவறுகள் நேர்ந்துவிடும் என்ற அச்சம் இல்லாத காரணத்தால், தனது சொந்த மொழியில் தன்னை எளிதாக மாணவர்களால் வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறது. வகுப்பறையில் என்ன விவாதிக்கப்படுகிறது, அவர்களிடம் என்ன கேட்கப்படுகிறது என்பதை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். மேலும் தங்களது எண்ணங்களை எளிதாக வெளிப்படுத்தி அவர்களுக்கு முன்பே தெரிந்திருப்பவைகளோடு புதிய கருத்துக்களைச் சேர்க்கின்றனர். உள்ளூர் மொழியில் மிக எளிதாகவும் திறமையோடும் மாணவர்களால் பேச முடியும் என்பதால், மாணவர்கள் எதைக் கற்றுக் கொண்டார்கள் என்பதையும், எந்தெந்தப் பகுதியில் அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது என்பதையும் மிகத் துல்லியமாக ஆசிரியர்களால் மதிப்பிட முடிகிறது. தவிரவும், தங்களின் சொந்த மொழியில் குழந்தைகளின் கல்வி இருப்பதால், பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் கல்வி குறித்துத் தீவிர அக்கறையும் கவனமும் கொள்கின்றனர் எனப் பல்வேறு களஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மூன்று மாயைகள்

"அந்நிய மொழி ஒன்றைக் கற்பதற்குச் சிறந்த வழி அதே அந்நிய மொழியைப் பயிற்சி மொழியாகப் பயன்படுத்துவதுதான் என்பது முதல் மாயை. அந்நிய மொழியைப் பயில அதை முன்னதாகவே கற்கத் தொடங்கி விட வேண்டும் என்பது இரண்டாவது மாயை. மூன்றாவது மாயை என்னவென்றால், அந்நிய மொழியைக் கற்பதற்குத் தாய்மொழி ஒரு தடையாக இருக்கும் என்பதாகும். தெளிவாகக் கூறினால் இத்தகைய மாயைகள் உண்மை என்பதைவிடப் பொய் என்றே குறிப்பிடலாம். " (UNESCO 2008) இது ஏதோ போகிற போக்கில் கூறும் கூற்று அல்ல. இது பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு கண்டறிந்த பேருண்மையாகும். உலகிலுள்ள எல்லாக் கண்டங்களிலும் பரவலாக விரவிக் கிடக்கும் 12 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்தான் இந்த அறிவிப்புக்கு அடிப்படையாகும்.

தாய்மொழியும் ஆங்கிலமும்

தாய்மொழி வழிக்கல்வி - தமிழ்வழிக் கல்வி  குறித்த மற்றுமோர் தவறான புரிதல், தமிழ் வழிக் கல்வி ஆங்கிலத்தை நிராகரிக்கிறது என்பதுதான். இது திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்யுரையாகும். ஆங்கிலவழிக் கல்வி வேறு, ஆங்கில மொழிக் கல்வி வேறு என்பது மக்களிடம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ளக் கூடாது எனக் கூறுபவர்கள் யாரும் இல்லை. குறிப்பாகக் கூற வேண்டுமானால், இன்றைய சூழலில் ஆங்கிலத்தின் தேவையைத் தமிழ்வழிக் கல்வி நிறுவனங்கள் அழுத்தமாக வலியுறுத்துகின்றன.

மேலும் ஆங்கில வழியில் படிப்பதால் மட்டுமே, ஒரு மாணவன் அம்மொழியில் ஆளுமை பெறுகிறான் என்பதை மொழியியல் வல்லுநர்கள் ஏற்பதில்லை. உலகில் வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தாய் மொழிதான் கல்வி மொழியாக இருக்கிறது. பொதுவாக ஐரோப்பாவிலுள்ள 20 தனித்தனி நாடுகளில் அவரவர் தாய் மொழி வழியேதான் எல்லாத்துறைக் கல்வியையும் பெறுகின்றனர்.

தென்னிந்தியாவைப் பொருத்தவரை கர்நாடகத்தில் 1994-95 ஆம் ஆண்டு முதலே ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் தாய் மொழி அல்லது மாநில மொழியான கன்னடம் மட்டுமே பயிற்சி மொழியாக இருக்கிறது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டும் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி வழங்கப்பட்டது. ஐந்தாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தத்தம் விருப்பம் போல ஆங்கிலம் அல்லது எந்தப் பயிற்று மொழிக்கும் மாற்றம் பெற்றுக் கொள்ளலாம். அரசின் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றாத அனைத்து அங்கீகரிக்கப் படாத பள்ளிகள் மூடப்படும் என அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. கர்நாடகத்தைப் பொருத்தவரைக்கும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தாய்மொழிக் கல்வி எனும் நிலைப்பாடு மாறுவதே இல்லை. இது தமிழகத்துக்கு ஒரு படிப்பினையாகும்.

காந்தியடிகள், இரவீந்தரநாத் தாகூர், பாரதியார் போன்ற அறிஞர்கள் தாய் மொழிக் கல்வியைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். "நான் சர்வாதிகாரியாக இருந்தால், தாய் மொழிக் கல்வியைத்தான் முதலில் நடைமுறைப் படுத்துவேன்" எனக் காந்தியடிகள் கூறியது குறிப்பிடத் தக்கது.

தமிழ்வழிக் கல்வி கடந்து வந்த வரலாறு.

19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஆட்சியினரும், கல்வியாளர்களும், கிருத்துவ சமய அமைப்பினரும் நம் நாட்டின் கல்வி நிலையை அறிந்து தாய்மொழி மூலம் கல்வி புகட்டப் பெற்றால் மக்களின் அறிவு விரிவாக வளரும் என எண்ணினர். 1830 ஆம் ஆண்டில்தான் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தமிழ் பயிற்சி மொழி ஆக்கப்பட்டது. ஆனால் தமிழ் வழிக் கல்வி அப்பொழுது கட்டாயமாக்கப்படவில்லை.

1835 ஆம் ஆண்டில் மெக்காலே கல்வித் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு, ஆங்கிலவழிக் கல்வி மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. ஆனால், தாய்மொழி வழிக் கல்வி தடை செய்யப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. பிறகு 1938 - ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன் அவர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் தவிர, பிற பாடங்கள் அனைத்தும் தாய் மொழியிலேயே நடத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார்.

இருபதாம் நூற்றாண்டில் உயர்நிலைப்பள்ளி வரை பாடமொழி தமிழாக்கப்பட்ட பின்பே அறிவியல் பாட நூல்கள் பலவும் தமிழில் வெளியிடப் பட்டன. இந்தியா விடுதலை பெற்ற பிறகு, 1948-49 ஆம் ஆண்டில் டாக்டர் இராதாகிருஷ்ணன் தலைமையிலான கல்விக் குழு, உயர்கல்வியில் தாய்மொழி அல்லது மாநில மொழியே பயிற்சி மொழியாக அமைய வேண்டியதன் தேவையை வலியுறுத்தியது. 1956 ஆம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த ப. ஜீவானந்தம், பி. இராமமூர்த்தி போன்றோர் சட்டமன்றத்தில் தமிழ் வழிக் கல்வியை முழுமையாகச் செயல்படுத்துமாறு மிகவும் வலியுறுத்தினர்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, 1962-ஆம் ஆண்டில் இடைநிலைக் கல்வியில் ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக்கல்வி தொடங்கச் சில பள்ளிகளுக்கு இசைவு அளிக்கப் பட்டது. 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கோத்தாரி ஆணையம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தாய் மொழியைப் பயிற்று மொழியாக்குமாறு வலியுறுத்தியது.

1975- ஆம் ஆண்டில் நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி சனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக கல்வி, மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப் பட்டது. இக்கால கட்டத்தில் மெட்ரிக் பள்ளிகள் பரவலாக அதிகரித்தன. தமிழகத்தில் 1978 ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப் பெற்று, தமிழ்வழியில் பாடங்கள் நடத்தப் படுகின்றன.

1997 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அமைச்சர் தமிழ்க்குடிமகன். அவர்கள் பொறியியல் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியைச் செயல் படுத்த முயன்றார். ஆனால் அனைத்திந்தியத் தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பாக 100 தமிழறிஞர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்தனர். ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பாடமொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும். மற்றும் பொறி­யியல், மருத்துவம், சட்டம் போன்ற அனைத்து உயர் கல்வித் துறைகளிலும் தமிழ் வழிக் கல்வி நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் தமிழறிஞர்கள் சார்பாக வலியுறுத்தப் பட்டன. இக்கோரிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரசு சார்பாக உறுதிமொழி அளிக்கப் பட்டது. இதற்காக நீதிபதி மோகன் குழுவும் அமைக்கப் பட்டது. அக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு தி. மு. க. அரசு மழலையர் பள்ளிகளில் தமிழைப் பயிற்சி மொழியாக்கும் திட்டத்தை அறிவித்தது. ஆனால் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து மெட்ரிக் பள்ளிகளின் சார்பாக. உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இறுதியில் தமிழக அரசின் ஆணைக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டதுதான் பெரும் சோகம்.

1990 காலகட்டத்தில் மோலோங்கிய தாராளமயம் - தனியார்மயம் = உலகமயம் இந்தியாவில் தீவிரமான மாற்றங்களைக் கல்வியில் உண்டாக்கியது. அதற்கு வாய்ப்பாக "காட்" ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இட்டதன் காரணமாக மக்கள்நலத் திட்டங்களுக்கான அரசின் பங்களிப்புத் தொடர்ந்து குறைக்கப் பட்டது. இது கல்வியில் பாரதூரமான எதிர் விளைவுகளை உண்டாக்கியது. இன்று இந்தியாவில் கல்வியில் தனியார் மூலதனம் குவிந்துள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. விளைவாகக் கல்வியில் வணிகமயம் கொடிகட்டிப் பறக்கிறது. இதற்குப் பெரிதும் பலியானது தமிழ்வழிக் கல்வியே!

கவனிக்கப்படாத தாய்த்தமிழ்ப் பள்ளிகள்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகள் இறை. பொற்கொடி அவர்களால் தமிழ்நாட்டில் 1991ஆம் ஆண்டில் முதன் முதலாகத் திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி, தனிப்பட்ட முறையில் சென்னை மேடவாக்கத்தில் தொடங்கப் பட்டது. அதன் பிறகு அம்பத்தூரில் தோழர் தியாகு அவர்களால் 1993- ஆம் ஆண்டில் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தொடங்கப் பட்டது. பிறகு ஆங்காங்கு தமிழ் ஆர்வலர்களால் தமிழகம் எங்கும் பரவலாக ஏறக்குறைய 100 பள்ளிகள் பல்வேறு நிலைகளில் தொடங்கப் பட்டன. ஆனால், பொருளாதாரத் தட்டுப்பாடு , அரசின் ஆதரவின்மை போன்ற பல்வேறு சிக்கல்களால் பல பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டன. இப்பொழுது 18 தாய்த் தமிழ்ப் பள்ளிகள் மட்டுமே தட்டுத்தடுமாறி நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் மழலையர் பள்ளி மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கற்பிக்கக் கூடிய பள்ளிகளாக அவை உள்ளன. திண்டிவனத்தில் பேராசிரியர் பிரபா கல்விமணி அவர்களின் முன்னெடுப்பில் உருவாக்கபட்ட தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளி (எட்டாம் வகுப்பு வரை) மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம் சிங்கனூர் எனும் பகுதியில் பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கக் கூடிய ஒரே ஒரு தாய்த்தமிழ் உயர்நிலைப் பள்ளி அனைத்துக் கட்டமைப்புகளுடனும் சிறப்பாக நடத்தி வருகிறார் அதன் தாளாளர் எழில் சுப்ரமணியம் அவர்கள். திருப்பூரில மட்டும் மூன்று தாய்த் தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வருவது பெரும் சிறப்பாகும். திருப்பூர் வள்ளலார் நகரில் தாளாளர் தங்கராசு அவர்கள் தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியை 1995 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். திருப்பூரிலுள்ள மூன்றாவது தாய்த்தமிழ்த் தொடக்கப் பள்ளியை மருத்துவர் முத்துசாமி அவர்கள் சிறப்பாக நடத்தி வருகிறார்.

தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் சவால்கள்

தாய்த்தமிழ்ப் பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நெஞ்சை உலுக்கக் கூடியவை. குறிப்பாகத் தாய்த்தமிழ்ப் பள்ளிகள், நகர ஊரமைப்புத் துறையின் அனுமதியைப் பெறுவதுதான் பெரும் சவாலாக உள்ளது. நகர ஊரமைப்புத் துறையின் அனுமதி பெற்ற பிறகுதான் கல்வித்துறையின் ஏற்பிசைவு பள்ளிகளுக்குக் கிடைக்கும். பெரிய விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர், விரிவான வகுப்பறைகள் போன்ற நிபந்தனைகளை நிறைவேற்றப் பெரும்தொகை தேவைப்படுகிறது. ஆங்கில வழிப் பள்ளிகள் என்றால், நம்ப முடியாத அளவுக்கு மிகப்பெரும் தொகையைக் கட்டணம் / நன்கொடை எனும் பெயர்களில் மாணவர்களிடமிருந்து வசூலித்து விடுகிறார்கள். எதை வேண்டுமானாலும் அடமானம் வைத்துப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்விக்காகப் பணத்தை ஆங்கிலவழிப் பள்ளிகளுக்குத் தர ஆயத்தமாக உள்ளனர். அதை வைத்து ஆங்கில வழிப் பள்ளிகள் எத்தகைய தேவையை வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

ஆனால், தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் கட்டண நிலையோ மிகவும் பரிதாபகரமானது. சில தாய்த் தமிழ்ப் பள்ளிகளில் மிகமிகச் சொற்பான கட்டணம் மட்டுமே மாணவர்களிடமிருந்து பெறப்படுகிறது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் - அதிலும் முதல் தலைமுறையாகப் பள்ளிக்கு வரும் மாணவர்கள்தான் - தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் பயில்கின்றனர். அவர்களிடம் நன்கொடை பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. எனவே பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதிலும் மற்றுமோர் அநியாயம் நடக்கிறது. ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்களில் ஒரு மாணவனிடமிருந்து பெறப்படும் கட்டணத்தை விட ஏறக்குறைய 20% முதல் 30% வரை குறைவான கட்டணத்தைத்தான் தாய்த் தமிழ்ப் பள்ளிகளில் வசூலிக்க வேண்டும் என அரசே நிர்ணயித்திருப்பது கொடுமையிலும் கொடுமை. எனவே இதை ஈடுகட்டத் தாய்த்தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழக அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது. கல்வித் துறை மூலம் இப்படிப்பட்ட உதவித் தொகை தர முடியாது என்பதால், தமிழ் வளர்ச்சித் துறை மூலம் இதை நிறைவேற்றித் தர வேண்டும் எனும் பரிந்துரை முன்வைக்கப் படுகிறது. தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு தமிழைக் காக்க உதவிட வேண்டும்.

மேலும், ஏறக்குறைய 17 வகையான இலவசப் பொருள்கள் அரசுப் பள்ளிகளுக்குத் தமிழக அரசால் வழங்கப் படுகிறது. ஆனால் தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒரு சில பொருள்கள் மட்டுமே அரசால் வழங்கப் படுகிறது. அதிலும் குறிப்பாகப் பெரும்பாலும் கிராமப் புறங்களில் அமைந்துள்ள தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் சத்துணவு வழங்கப் படாதது பெரும் பின்னடைவாக உள்ளது. எனவே ஏழ்மை நிலையில் வாடும் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்குத் தமிழக அரசு சிறப்புச் சலுகை வழங்கி அப்பள்ளி மாணாக்கர்களின் பசிப்பிணியைப் போக்கிட முன்வர வேண்டும்.

இவை மட்டுமல்ல. தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் கற்ற மாணவர்களுக்கு 7. 5% இடஒதுக்கீடு வழங்கும் சிறப்பான திட்டம் தமிழக அரசால் வழங்கப் படுகிறது. ஆனால் முற்றிலும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் கற்கும் மாணாக்கர்களுக்கு மட்டும் அந்த ஒதுக்கீடு வழங்கப் படுவதால், தாய்த்தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு அச்சலுகை இல்லை என்பது வருத்தத்திற்குரியது. அதே போல் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் மூலம் தரப்படும் ரூ. 1000 தமிழிலேயே கல்வி கற்கும் தாய்த் தமிழ்ப்பள்ளி மாணவிகளுக்கு வழங்கப் படுவதில்லை என்பதும் வருத்தத்திற்குரியது. தமிழின் தலைமைப் பண்பை உயர்த்திப் பிடிக்கும் தமிழக அரசு, இத்தகைய சிக்கல்களிலிருந்து தாய்த் தமிழ்ப் பள்ளிகளை மீட்கச் சிறப்புச் சலுகைகளை அறிவிக்க வேண்டும்.

பொருளாதாரம் அதிகம் தேவைப் படாத உதவிகளைத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்குத் தமிழக அரசு உடனடியாகச் செய்யலாமே? எடுத்துக் காட்டாக, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி அவ்வப்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தாய்த்தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை அத்தகைய பயிற்சியில் பங்கேற்க அழைப்பதில்லை. மேலும், கல்வி தொடர்பான இதழ்கள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கப் படுகிறது. அவற்றைத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கும் வழங்கலாம்.

தாய்த்தமிழ்ப் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. அரசு அது பற்றிய கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.

அதற்கிடையில் வருமானம் மிக்க தனியார் பள்ளிகளைப் போலத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளைக் கருதாமல், தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கென சிறப்புத் திட்டங்களைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அடிப்படைக் கட்டுமானங்களை நிறுவ அரசு மானியம் வழங்குவது உதவிகரமாக இருக்கும். ஏற்பிசைவு வழங்குவதில் சலுகை தரலாம். குறிப்பாகத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளை ஏதிலியாகக் கருதாமல், உரிய முக்கியத்துவம் அளித்துத் தமிழக அரசு பேண வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது.

சிக்கல்களுக்கான தீர்வுகள்

எல்லாப் பெற்றோர்களும் தங்களது பிள்ளையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இது மிகவும் இயல்பானது, இதைத் தவறு என யாரும் குறை சொல்ல முடியாது. இதன் காரணமாகத்தான் எதை விற்றாவது தங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தரப் பெற்றோர்கள் ஆயத்தமாக உள்ளனர். எனவே வேலை உத்தரவாதம்தான் வாழ்க்கையில் அவர்களின் முதல் தேர்வாக இருக்கும். இந்த நம்பிக்கையை அரசு வழங்கினால், மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைவார்கள்.

எனவே தமிழ் வழியில் கற்றவர்களுக்கு அரசுப்பணியில் தற்பொழுது வழங்கப்படும் 20% இடஒதுக்கீட்டைக் குறைந்தபட்சம் 80% என உயர்த்த வேண்டும். படிப்படியாக இதைத் தனியார் நிறுவனங்களிலும் செயல்படுத்தும் பற்றுறுதி அரசுக்குத் தேவை. இதற்கு உதவிடத் தமிழ் மட்டுமே ஆட்சி மொழி எனும் நிலைபாட்டை அரசு உருவாக்க வேண்டும். இந்த முயற்சியை முதலில் தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்க வேண்டும்.

பொதுவாகத் தமிழை மொழிப் பாடமாக, பயிற்சி மொழியாக ஆக்க அரசு முன்முயற்சி எடுத்தாலும், தமிழ்வழிப் பயின்றோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினாலும் கல்வி வணிகர்கள் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை செல்வது வழக்கமாக உள்ளது. எனவே இப்படிப்பட்ட சனநாயக விரோதமான, தமிழின் இறையாண்மைக்கு எதிரான சட்ட முயற்சிகளை முறியடிக்கத் தமிழகத்திலும், இந்தியாவிலும் மிகச் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு குழுவைத் தமிழ்நாடு அரசு அமைத்துச் சட்டப் போராட்டத்தை அர்ப்பணிப்புடன் தொடர வேண்டும். தடைகளைத் தகர்க்க வேண்டும்.

சட்டப் போராட்டத்தின் மூலம் சமத்துவக் கல்வியை வென்றது தமிழ்நாடு என்பதை இத்தருணத்தில் நினைவுகூர வேண்டும்.

பெற்றோர்களின் அடுத்த எதிர்பார்ப்பு, தங்களது பிள்ளைகள் படிக்கக் கூடிய கல்வி நிறுவனத்தில் போதிய ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது. பெரும்பாலும் தமிழ்வழிக் கல்வி உள்ள அரசுப் பள்ளிகளில் ஆயிரக் கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாகக் காலியாக உள்ளன. அரசு இதற்கு முன்னுரிமை தந்து ஆசிரியர் பற்றாக் குறையைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்.

கழிப்பறை கூட இல்லாத, அதற்கான தூய்மைப் பணியாளர்கள் இல்லாத அரசுப்பள்ளியில் தனது பெண் குழந்தையை எந்தப் பெற்றோர்தான் படிக்க வைப்பார்கள்? தவிரவும், இடிந்து விழும் நிலையில் உள்ள தமிழ்வழிப் பள்ளிக்கூடத்தைப் பெற்றோர்கள் விரும்புவார்களா? இவையெல்லாம் அரசுப் பள்ளியும், தமிழ் வழிக் கல்வியும் வரவேற்புப் பெறாததற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. இவற்றை அரசுதான் மேம்படுத்த வேண்டும்.

 அடுத்து, ஆங்கிலத்தின் மீது மக்களுக்குள்ள அளவற்ற மோகம் என்பது நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நிலவிய காலனிய ஆட்சியின் மிகப்பெரும் சாபக்கேடாகும். இதை மாற்றி அமைப்பது அவ்வளவு எளிதானதல்ல! ஆங்கிலத்தில் படித்தால்தான் தனது பிள்ளைக்கு வேலை கிடைக்கும் என்றும், ஆங்கில அறிவு மட்டுந்தான் தனது பிள்ளைக்குச் சமுதாயத்தில் பெரும் கௌரவத்தைக் கொடுக்கும் எனவும் பெற்றோர்கள் நம்புகின்றனர். இதைப் படிப்படியாகத்தான் மாற்ற வேண்டும்.

அதன் முதற்படியாக, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதற்குப் பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பின் உதவியை அரசு நாடலாம்.

தவிரவும் ஆங்கில வகுப்புகளை நடத்த ஆங்கிலப் பட்டதாரிகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அத்துடன் ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே ஆங்கிலத்தில் பேச, எழுத உதவியாக இருக்கும் எனப் பெற்றோரிடம் நிலவும் தவறான கருத்தைப் போக்க வேண்டும். ஆங்கிலத்தைக் கற்பதற்கும், ஆங்கில வழியில் கற்பதற்கும் வேறுபாடு உள்ளதைத் தெளிவு படுத்த வேண்டும். ஏனெனில் தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்திப் பேசுபவர்கள், ஆங்கிலத்திற்கு எதிரிகள் எனவும், ஆங்கிலமே வேண்டாம் எனப் பிதற்றித் திரிபவர்கள் எனவும் திட்டமிட்டுச் சிலசுயநலமிகள் பொய்ப் பரப்புரை செய்து வருவதை அம்பலப் படுத்த வேண்டும்.

இது மட்டுமல்ல, தமிழகத்தில் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூடப் பயிலாமல், உயர் கல்வி வரை செல்லக் கூடிய கொடுமை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு இங்கு வளர்ந்துள்ளது. இதைத் தவிர்க்கப் பள்ளிக் கல்வியை முடிக்கும்வரை தமிழை ஒரு மொழிப் பாடமாக அனைத்துப் பள்ளி மாணாக்கரும் கட்டாயமாகப் பயிலவேண்டும் எனும் சட்டம் இயற்றப்பட வேண்டும். அண்மையில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அனைத்து வகையான பள்ளிகளிலும் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கட்டாயம் கற்பிக்க வேண்டும் எனும் அரசாணையைப் பிறப்பித்தது பெரிதும் போற்றத் தக்கதாகும். ஆனால், இது சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கத் தமிழறிஞர்களைக் கொண்ட குழு ஒன்றை அரசு உடனடியாக அமைப்பது நல்லது.

மிக முக்கியமாக ஆங்கில வழி மழலையர் பள்ளிகளைத் தனியார் நடத்த எக்காரணம் கொண்டும் அரசு அனுமதிக்கக் கூடாது. அதே போல் குறைந்த அளவு ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியை அரசு தடை செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்குவதை அரசு தவிர்க்க வேண்டும். ஆங்கிலத்தை மொழிப்பாடமாகக் கற்பிப்பதை எதிர்ப்போர் யாருமில்லை என்பதை இத்தருணத்தில் மனதிற் கொள்ள வேண்டும்.

அதே போல் உயர் கல்வியிலும் தமிழ் வழிக் கல்வி புறக்கணிக்கப் படுகிறது. சான்றாக, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் வகுப்புகள் நடத்தப் படுகின்றன. அங்கு ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு அனுபவம் மிக்க திறமையான பேராசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். அவர்களுக்குத் தாமான பாடநூல்கள் வழங்கப் படுகின்றன. ஆனால் அதே வளாகத்திலுள்ள தமிழ் வழிப் பொறியியல் வகுப்புகளை நடத்த அனுபவம் மிக்க பேராசிரியர்கள் வருவதில்லை. மேலும் தமிழில் போதிய அளவு பாடநூல்களும் இல்லை. அதிக மதிப்பெண் பெற்ற திறமை மிக்க மாணாக்கர்கள், தமிழ் மீதுள்ள ஆர்வத்தினால் தமிழ்வழிப் பொறியியலைத் தேர்வு செய்து படிக்க வருகின்றனர். ஆனால் அதற்காகவே அவர்களைத் தண்டிப்பது ஏற்கத் தக்கதல்ல! கல்லூரிகளில் தமிழ் வழிப் பொறியியல் 2010 -ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டு, 13 ஆண்டுகள் கழிந்த பிறகும், குறைகள் களையப்படாதது வருத்தத்திற்கு உரியது. இந்த அணுகுமுறை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

இறுதியாக, இன்றைய நிலையில் கல்வியின் அடிப்படைச் சிக்கல்களாகவுள்ள வணிகமயம் / ஒற்றைமயம் ஆகியவை தமிழ்வழிக் கல்வியை முற்றிலும் நாசப்படுத்தி வருகின்றன. இவற்றைத் தவிர்க்கக் கல்வி, ஒத்திசைவுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்றப்பட வேண்டும். கல்வியின் இறையாண்மையைக் காத்திட இது மிகமிக முக்கியமானது. மேலும் ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்கள் மேட்டிமை மிக்கதாகக் கருதப்படும் நிலையில், தமிழ்வழிக் கல்வி நிறுவனங்கள் ஏழ்மை மிக்கதாக மாறி வருவது கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். இது மேல்/ கீழ் எனும் சாதியச் சமூகத்தின் பிரதிபலிப்பாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. இது சனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானதாகும். எனவே இதற்கு மாற்றாக அனைவரும் சேர்ந்து பயிலும் பொதுப்பள்ளி முறையும், அண்மைப் பள்ளி முறையும் (Neighbourhood Schools) நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். கல்வியே, விடுதலைக்கான சாவி என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் இன்னல்கள் தீரும்.

- கண.குறிஞ்சி