கற்றது கைம்மண்ணளவு

கல்லாதது உலகு அளவு

What we have learnt is like a handful of Earth

What we have yet to learn is like the whole world - Avvaiyar

மேற்கண்டவை அமெரிக்கன் மிக்சிகன் பகுதியில் உள்ள வானியல் துறையின் ஒளவையின் குறிக்கோள் வாசகம் ஆகும். பொருள் ஆழம் பொதிந்த இந்த வாசகத்தை அமெரிக்காவில் உள்ள அறிவியல் மையம் அனைவர் கண்ணிலும் படும்படியாக மாடி ஏறும் இடத்தில் ஆங்கிலப்படுத்தி எழுதி வைத்திருக்கிறது. இன்றும் பார்க்க வியப்பாக இருக்கிறதே! நம் ஒளவையார் கடல்கடந்து கண்டங்கள் கடந்து அமெரிக்காவில் உயர்வாகப் போற்றப் பெறுகிறாரே! பெண்ணினத்திற்குப் பெருமை அல்லவா! அப்படி அவர் செய்த சாதனைகள்தான் என்ன?

அவ்வை என்ற சொல் வயதில் மூத்தவள், தாய், தமக்கை, பெண் துறவி என இவர்களைக் குறிக்க வழங்கும்.

ஓளவையார் ஒருவர் அல்லர் பலர். எட்டுக்கும் மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். ஒளவையார் பலர் ஆனது ஏன்? அவர் வரலாற்றில் பல்வேறு காலப் பெயர் வைப்பு ஏன் நிகழ்ந்தது? சங்க காலத்தில் வள்ளல் அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றும் தொண்டைமானிடம் தூது சென்றும் பெரும் புகழ் பெற்ற ஒளவையை அறிவோம். 15ஆம் நூற்றாண்டில் “அறம் செய விரும்பு”; “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று அறம் உணர ஒளவையை அறிவோம். இவ்வாறு காலந்தோறும் எட்டுக்கும் மேல் ஒளவையார்கள் வாழ்ந்து பதினெட்டுக்கும் மேல் நூல்கள் படைத்திருக்கிறார்கள் என்று அறியும்போது வியப்பு மேலிடுகிறது? தமக்கு முன் வாழ்ந்த பெருமைக்கு உரியோர் பெயரைப் பின் வந்தோர் சூட்டிக்கொள்ள விழைந்தமையால் ஒளவையார் பெயர் பெருகி இருத்தல் வேண்டும். தம் பெயரில் பாப்புனையாமல் முந்தைய புகழ் பெற்றோர் பெயரில் பரப்புனைந்திருக்கலாம். அவ்வாறு ஓஒளவைமார்கள் புனைந்த பாக்கள் 1211, ஒளவை பெயரில் வெளிவந்த நூல்கள் 18.

அவ்வையார் பலர்

அவ்வையார்

காலம்

நூல்கள் / குறிப்புகள்

அவ்வையார் - I

ஏறக்குறைய கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

சங்கப்பாடல்கள் அகம், புறம், அதிகமான், பொகுட்டெழினி, நாஞ்சில் வள்ளுவன் முதலானோர்

அவ்வையார் - II

ஏறக்குறைய கி.பி. 10 முதல் 13ஆம் நூற்றாண்டு வரை

மூவேந்தர், பாரி மகளிர், கம்பர், சேரமான் பெருமாள் முதலியோர் பற்றிய தனிப்பாடல்கள்.

அவ்வையார் - III

ஏறக்குறைய கி.பி. 12 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை

ஆத்திசூடி, கொன்றை, வேந்தன், மூதுரை, நல்வழி

அவ்வையார் - IV

ஏறக்குறைய கி.பி. 15 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை

விநாயகர் அகவல், ஒளவை குறள்.

அவ்வையார் - V

ஏறக்குறைய கி.பி. 16ஆம் நூற்றாண்டு

அவ்வை நிகண்டு, பிடக நிகண்டு (கிடைக்கப் பெறவில்லை.)

அவ்வையார் - VI

ஏறக்குறைய கி.பி. 17ஆம் நூற்றாண்டு

அசதிக்கோவை, பந்தன் அந்தாதி, பெட்டகம்.

அவ்வையார் - VII

ஏறக்குறைய கி.பி. 18ஆம் நூற்றாண்டு

கல்வி, ஒழுக்கம், கணபதி ஆசிரிய விருத்தம், வேழமுகம்.

அவ்வையார் - VIII

கி.பி. 18ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு

நீதி ஒழுக்கம், தரிசனப் பத்து

அவ்வையார் - VIV

கி.பி.18ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு

ஔடதம்

ஒளவையின் கிடைக்கப் பெறாத ஏட்டுச் சுவடிகள் (1.) பிடக நிகண்டு, (2.) நவமணிமாலை, (3.) அருந்தமிழ் மாலை (4.) நன்னூற் கோவை,

அச்சாகியும் கிடைக்கப் பெறாத நூல்கள் (1.) உயர்ஞானசர நூல், (2.) ஈச்சுரன் மாலை.

சங்கப் பாடல்கள்

மொத்தம் சங்கப் பாக்களைப் பாடிய புலவர்கள் 473. அவர்களுள் பெண் புலவர்கள் 45. ஆக 10%க்கும் குறைவான பெண் புலவர்கள் உள்ளனர். ஒளவையார் ஒருவரே புறப்பொருள் பாடல்களையும் (மொத்தம் 33) அகப்பொருள் பாடல்களையும் (மொத்தம் 26) பாடிய பெருமைக்கு (59 பாடல்கள்) உடையவர். கொங்கு நாட்டுத் தகடூர் என்ற தருமபுரி “அதியமானுக்காக வாழ்ந்தவர் ஒளவை. அதியன், சேர அரசன் பெருஞ்சேரல் இரும்பொறையுடன் நடந்த போரில் அம்பு பட்டு இறந்து படுகிறான். அப்போது ஒளவை பாடிய இரங்கற்பா அனைவர் மனத்தையும் அழவைத்தது, நெஞ்சை உருக வைத்தது.

சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறு சோற் றானு நனிபல கலத்தல் மன்னே
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கு ஈயும் மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
நரந்தம் நாறும் தன் கையாற் புலவுநாறும் என்தலை தைவரு மன்னே
... ... ...
... ... ...
ஆசு ஆகுஎந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப் பாடுநரும் இல்லைப் பாடுநர்க்கு ஒன்று
ஈகுநரும் இல்லை (புறம் 235)

மேற்கண்டவாறு கையறுநிலைப் பாடல்கள் பல பாடி நெஞ்சை நெகிழச் செய்தவர் ஒளவையார். அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடுவதிலே தம் வாழ்க்கையைச் செலவு செய்தவர். சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தரும் சண்டையின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று எண்ணி புறம் 367இல் வாழ்த்திய ஒரே புலவர் இவரே. (1) போரை விரும்பாதவர். 2. சமாதானமே நல்வழி என உணர்ந்தவர் (3) தன் அரசனின் பெருமையைப் பகைவனிடம் கூறுதல் (4) தன் நாட்டு வீரர்களின் வீரத்தைப் புகழ்தலால் பகை அரசரை அஞ்ச வைத்துப் பணியச் செய்யும் உத்தி உடையவர். (5) அரசியல் ஞானம் வீர உணர்வு செறிந்த தன்மையர் எனப் பல ஆற்றல்கள் கைவரப் பெற்றவர். மூவேந்தர்களை வானத்துத் தோன்றும் “விண்மீன்களினும், மழைத்துளியினும் மிக்கு மேம்பட்டு நும்முடைய வாழ்நாள் விளங்கட்டும்” என்று வாழ்த்தி ஒற்றுமையை நிலைநாட்டிய ஒப்பற்ற புலவர் ஒளவை ஒருவரே. இம் மூவேந்தர் இணைப்பு முப்பந்தல், மும்முடி, முப்புளி என்ற அடைமொழிகளில் எதிரொலிக்கிறது.

அகப்பாடல்கள்

ஒளவை பாடிய அகப் பாடல்கள் 26. காதல் செறிந்தவை. தலைவி கூற்றுப் பாடல்கள் பெரும்பாலும் மிகுதி. காமத்தால் தலைவி பாடவதாக ஒரு பாடலில் “முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல், ஆசு ஒல்லென கூவுவேன் கொல்” (குறுந்தொகை 28) என்றும் “மெய் புகுவன்ன கை கவர் முயக்கம் (அகம் 11) என்றும் ஒளவை பாடியமையால் அவர் பெண் துறவி என்று கொள்ளுதற்கு இடமே இல்லை. அதனால் அவர் இளம் குமரி என்று பொருள் ஆகாது. புறநானூற்றுப் பாடல்கள் காட்டும் அறிவு முதிர்ச்சி அரசியல் முதிர்ச்சி ஒளவையாரை அகவை முதிர்ந்தவராகவே அறிவுறுத்துகின்றன. அதியன் மகன் பொகுட்டெழினியைப் பாடும் நிலையில் ஒளவையின் தாய்மை முதிர்ச்சி முழுமையாகப் புலப்படும். அதியமானை மகனாகக் கண்டிக்கும் பாசமிகு தாயின் உரிமைக் குரல் பாடல்தோறும் கேட்கிறது. (௭.டு) “நீ களம் புகினே' “பெரும நீயே”, இவை சான்றுகள்.

ஆத்திசூடி, கொன்றை வேந்தன் பாடல்கள்

ஆத்திசூடி 109 ஓரடிச் செய்யுள்களையும், கொன்றை வேந்தன் 91 ஓரடிச் செய்யுள்களையும் உடையன. இரண்டும் குழந்தை இலக்கியம், கொள்கை இலக்கியம், சமுதாய இலக்கியம், சமயப் பொதுமை இலக்கியம். இவை தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் பொருந்தும் பொதுமை உணர்வுகள் உடையவை.

எண் எழுத்து இகழேல் (சு 7)

ஓதுவது ஒழியேல் (" 11)

இளமையில் கல் (” 29)

கேள்வி முயல் (” 39)

நூல் பல கல் (” 71)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் (கொ.வே. 1)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் (” 7)

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை (” 27)

தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை (” 38)

மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம் (” 75)

ஆக ஆத்திசூடி தொடக்க நிலையிலும் கொன்றை வேந்தன் அடுத்த நிலையிலும் வாக்குண்டாம் சிறுவர் நிலையிலும் கற்பிக்கும் முகமாக எழுதப் பெற்றிருக்கலாம்.

ஆத்திசூடியின் கருத்து, அமைப்பு, அறவுரை அப்படியே கொன்றை வேந்தனில் இருப்பதை எண்ணிப் பார்க்கும்போது இரண்டும் வேறு வேறு அவ்வையார்களால் படைக்கப் பெற்றதோ என்று கருத வேண்டி உள்ளது.

ஒளவையின் தனிப் பாடல்கள்

ஐயமான சில பாடல்கள் நீங்கலாகத் தொண்ணூற்று ஐந்து தனிப் பாடல்கள் ஒளவையார் பெயரில் கிடைத்துள்ளன. சேர, சோழ, பாண்டியனைப் பாடிய பாடல்கள் பாரியின் மக்கள் அங்கவை சங்கவை என்றும் அவருக்கு மணம் முடிக்கப் பெரும் முயற்சி எடுத்தக் கொண்டவர் என்றும், கம்பரைக் கவிதையால் வென்றவர் என்றும் கோரைக்கால் ஆழ்வானின் கொடையைப் போற்றியவர் என்றும், புலி வேளுர்ப் பூதன் வரகுச் சோறு விருந்திட்டதையும், ஒட்டக்கூத்தர் வெட்கும்படியாகப் பாடியதையும் முருகன் கொடியது, இனியது, பெரியது, அரியது எது என்று கேட்பதற்கு அருமையாக விடையிறுத்ததையும் பல பாடல்கள் தனித்தனியாக ஒளவையால் பாடப் பெற்றுள்ளன.

சங்ககாலப் பாரியின் மக்கள் இருவர் பாரி இறந்தபின் பாரியின் தோழர் கபிலர் பாதுகாப்பாக வைத்திருந்துவிட்டு வடக்கிருந்து உயிர் நீத்தார் என்று புறநானூறு பேசும். தந்தை பாரி இல்லாத நிலையையும் பறம்பு இல்லாது வறுமை நிலையையும் சுட்டிய பாடல்

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்”

எந்தையும் உடையேம் எங்குன்றும் பிறர் கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்

வென் Gnd முரசின் வேந்தர் எம்

குன்றுங் கொண்டார் யாம் எந்தையும் இலமே !” (புறம் 112)

என்ற பாடல் படிப்போர் நெஞ்சைப் பிழிவது. பெண்கள் இருவர்க்கும் திருமணம் முடிக்கும் முன்பே தந்தை பாரி கொல்லப்படுகின்றான். தந்தையின் தோழர் கபிலர் அப்பெண்களுக்குப் பாடுபட்டுத் திருமணம் முடித்து வைக்கிறார். இவ்வரலாறு ஓஒளவையாரோடு தொடர்புபடுத்தப் பெற்றுத் தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றுள்ளது.

கம்பரும் ஒளவையும் ஒரே பாட்டைப் பாடி முடித்ததாகக் கதை

தண்ணீரும் காவிரியே தாகவேந்தன் சோழனே

மண்ணாவதுஞ் சோழ மண்டலமே - பெண்ணாவாள்

அம்பொன் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு

முதல் இரண்டடியைக் கம்பர் பாட ஏனைய இரண்டடியை ஒளவை நிறைவு செய்து கூழ் பெற்றார் என்பது வாய்மொழிக் கதை, ஒளவை வாழும் நெறியை மக்களுக்கு உணர்த்தியவர்.

(1) ஒன்று பட்டிருங்கள்

(2) பகை நீக்கு; நட்பு ஆக்கு

(3) சுயநலம் அகற்று, பொதுநலம் பேணு

(4) நல்லவராக வாழ்

(5) இல்லறத்தைப் போற்று

(6) இளமையில்கல்

(7) பேசுவதைக் குறை

(8) திருந்தச் செய்

(9) குற்றம் பார்க்காதே

(10) பேராசையைத் தவிர்க்க

(11) சாதியைத் தவிர்

(12) உன்னை அறி

என்று பல்வேறு சமூக நீதிகளை எடுத்துரைத்தவர் ஒளவை.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம்மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே. அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று (மூதுரை)

இப்பாடலை யாவரும் மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பெண்டிர்க்கு அறிவுரை வழங்கியவர் ஒளவை

ஐரோப்பியர் காலத்திற்கு முன்பு பெண்கள் படிப்பறிவும், எழுத்தறிவும் இல்லாதவராக இருந்தனர். பெற்றோர், கணவன், பின் பிள்ளைகளுக்குக் கட்டுப்பட்டு நடத்தப் பெற்றனர். திண்ணைப் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்றவராகப் பெண்கள் இல்லை. வாய்ப்பு அளிக்கப்படவும் இல்லை. “பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்” என்றும், “தையல் சொல் கேளேல்” என்றும், “பேதையர்க்கு அழகு நாண் துறவாமை” என்றும் சொல்லி வைக்கப்பட்டன. வெள்ளைக்காரக் கிறித்தவ அறிஞர்கள் சிறுவர் கல்விப் புதையல் என்ற நூலைச் சிறுவர்க்காக அச்சாக்கினர் அந்நூலில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் பாடல்களை ஒரு சிலவற்றை மாற்றினார். ஒரு சில சான்றுகள் வருமாறு!

திருமாலுக் கடிமை செய் - (ஆத்திசூடி)

(மாற்றம்) திருவருட் கடிமை செய் - (நீதிச்சொல்)

பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் (கொன்றை வேந்தன்)

(மாற்றம்:) பேதைமை யன்று மாதர்க்கு அணிகலம் - (நீதிச்சொல்.)

மதம் மாறிய தமிழ்க் கிறித்தவர்க்காக ஆத்திசூடி, கொன்றை வேந்தன் பாடல்கள் சில மாற்றம் செய்து அச்சாக்கப் பெற்றன. இம்மாற்றம் சில இடங்களில் மட்டுமே. அதுவும் சமூக இணக்கத்திறக்காகச் செய்யப்பட்டது. ஆத்திசூடி கொன்றை வேந்தனைப் படித்தபாரதி, பாரதிதாசன் புதிய ஆத்திசூடிகளை உருவாக்கினர். “தையல் சொல் கேளேல் என்று ஒளவை கூறியதை மாற்றி இக்காலச் சமுதாயத்திற்காகப் புதிய ஆத்தி சூடிகளை உருவாக்கினார். தையலை உயர்வு செய் என்று பாரதி பாடினார். முனை முகத்து நில்லேல் என்று ஒளவை வாக்கை மாற்றிப் “போர்த் தொழில் பழகு?“ என்று பாரதி மகக்ளை எழுச்சி பெறச் செய்ததாக இருபத்தேழுக்கும் மேற்பட்ட ஆத்திசூடி நூல்கள் தற்போது நம் தமிழ் மக்களால் எழுதப் பெற்றுள்ளன என்பது ஒளவையின் ஆத்திசூடிக்குக் கிடைத்த பெருமை ஆகும்.

உரைத்தவை

ஒளவை, பெண்களக்குத் தனியாக அறிவுரை கூறியவர். கணவனோடு சண்டை இடாமல் வாழ்தலும் அவ்வாறு சண்டையிட்டுச் சொல்எதிர் ஆடி, பதிலுக்குப் பதில் வார்த்தை பேசி வாயாடியாக வாழும் பெண் இருக்கும் வீடு, புலிகிடந்த காடாக மாறி விடும் என்கிறார். பழிக்கு அஞ்சாத கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்வைவிடச் சன்னியாசம் மேல் என்பது ஒளவை கருத்து

இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்

வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல்

புலிகிடந்த தூறாய் விடும் - மூதுரை

ஆக ஒளவை பெண்டிர்க்கு அறிவுறுத்தும் பாடல்களால் சில கருத்துகள் இக்காலத்தில் வாழும் பெண்டிர் மனத்தில் தோன்றுவது இயல்பு.

(1) மனைவி கணவனுக்கு எதிர் பேசாது இருத்தல் வேண்டும். அவன் என்ன பேசினாலும் பரவாயில்லை: பெண் மட்டும் வாயைத் திறந்து பேசக்கூடாது” என்று சுட்டப்படுதல்.

(2) பெண்கள் ஆண்களுக்கு அடங்கியவராகவே சுட்டப்படுதல்.

(3) பெண் கற்பு வற்புறுத்தப்பட்ட அளவுக்கு ஆண் கற்பு வற்புறுத்தப்படாமை.

(4) ஆண் இப்படி இருக்க வேண்டும் என்று எதையும் வற்புறுத்தாமை.

(5) பெண் அடங்கி ஒதுக்கி இருக்க வேண்டும் எனல்.

(6) திருமணத்தால்தான் ஒரு பெண்ணின் வாழ்வு முழுமை அடையும் எனல்.

ஆத்திசூடி, கொன்றை வேந்தன் நூல்களைப் போல் மூதுரை நல்வழி நூல்களிலும் ஒளவையின் அறவுரைகள் சுட்டப் பெறுகின்றன. சான்றுக்கு ஒரு பாடல்

பாடுபட்டுத்தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; கூடுவிட்டு

இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரோ அனுபவிப்பார்

பாவிகள்! அந்தப் பணம் - நல்வழி 22

ஆக ஒளவை பணத்தைப் பலருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற பொது உடைமைச் சித்தாந்தத்தை எடுத்து உணர்த்தும் சமூகச் சிந்தனையாளர் எனக் கொள்ளல் நேரிது.

ஒளவை எழுதிய பெட்டகம்

1887 இல் பதிப்பிக்கப் பெற்ற பெட்டகம் 79 பாடல்களைக் கொண்டது. பெட்டகம் என்ற பெட்டியினுள் மூடப்பட்டிருக்கும் ஓர் ஆணைப் பார்த்துப் பாடல் பாடியதாக அமைந்திருக்கிறது. இல்லறத்தில் ஒழுகும் ஒரு பெண் தன் கணவன் வேலைக்குச் சென்றபின் (மனைவி) வேறு ஓர் ஆடவனோடு சோரம் போகிறாள். முதலை அடைந்திருக்கும் குழி மண்ணும், வேங்கை அடைந்திருக்கும் புதர் மண்ணும் கொண்டு வந்து நெற்றியில் பத்துப் போட்டால் அவளின் தலைவலி தீரும் என்று கூறி அவனைச் சாகடிக்கத் தீய வழி கூறுகிறாள். மனைவியின் தந்திரத்தை அறிந்து கணவனைப் பெட்டகத்துள் மூடிவிட்டு மனைவியின் வாசலில் வைத்து, சோர நாயகன் வரும்போது பெட்டகத்தை ஒளவை திறந்து விட மனைவியின் தந்திரத்தை உண்மைக் கணவனுக்கு உணர்த்தி விடுகிறார். இது பெட்டகச் செய்தி. உத்தமி பற்றியும் நல்ல பெண்கள் அல்லாதவர் பற்றியும் 79 செய்யுள்களில் ஒளவை பாடியுள்ளார்.

அவ்வை நிகண்டு, உரைத்தவரும் ஒளவையே, விநாயகர் அகவல், அவ்வை குறள், தரிசனப் பந்து, வேழ முகம், கணபதி ஆசிரிய விருத்தம் முதலாய ஆன்மிக நூல்களைக் கடவுள் பக்தி மக்களுக்காக எழுதியவரும் ஒளவைமார்களே. அவ்வை குறள் 310 பாக்களை உடையது. திருவள்ளுவரின் குறள் போன்ற யாப்பமைதி கொண்டது. வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்ற அமைப்பினது. திருமூலரின் திருமந்திரத்தின் கருத்துகளையும் உள் வாங்கிய நூல்சரியை, கிரியை யோகம் ஞானம் என்னும் நான்க௧னுன் யோகம் என்ற சமார்க்கத்தை உணர்த்துகிறது.

விநாயகர் 8ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே வட இந்தியப்போர் முடிவில் தமிழ்நாட்டுக்கு வந்த கடவுள். அவர் பெயரால் விநாயகர் அகவலும் வேழமுகமும் ஒளவை எழுதியதாகச் சுட்டப் பெறுகிறது.

முருகனைச் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா? என்று ஒளவையிடம் கேட்டதாக நாட்டுப்புறக் கதை வழக்கத்தில் உள்ளது.அந்த முருகன் மீது பக்தி கொண்டு தரிசனப் பத்து என்ற பாடல்கள் நிறைந்த நூலை ஒளவை பாடியதாகச் சுட்டுவர். அம்முருகப் பாடல்களாம் தரிசனப்பத்து நூலும் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. இந்நூலுள் சிவன், திருமால், உமையாள், இலக்குமி, விநாயகன் போற்றி ஏற்றப் பெறுகிறார்கள். முருகன் பல வினாக்கள் கேட்க விடை யிறுக்கும் ஒளவையாக வாய்மொழிக் கதைகள் வழங்குவதையும் இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும். பெரியது எது என்பதற்கு அழகான விடையை வை பகர்கிறார்.

கோவையையும், அந்தாதியையும் ஒளவை பாடியுள்ளார். அசதிக் கோவை, பந்தன் அந்தாதி ஆகிய இரு சிற்றிலக்கியங்களையும் ஒளவை படைத்துள்ளார்.

ஐவேலி என்ற கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஊரில் அசதி என்றவள்ளல் இருந்தான் என்று உரைக்கிறது அசதிக்கோவை அதேபோல பூம்புகார் எனும் ஊரில் 18-19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகார் வணிகன் பந்தன் பாடப் பெறுகிறான். ஒளவைக்கு இளமை மாறாது போர்த்தப்பெற்ற படாம் ஆகிய போர்வையை வழங்கியவன் பந்தன். அவனைப் பற்றி எழுதியுள்ளார் ஒளவை என்ற பெயருடைய ஒரு ஒளவை.

கல்வி ஒழுக்கம்

18ஆம் நூற்றாண்டு வாக்கில் ஒளவை பெயரில் கல்வி ஒழுக்கம் என்ற நூல் வெளி வந்துளது. இந்நூல் வேதக் கல்வியை வற்புறுத்துகிறது. ஆரியம், வேதவித்தை, சாத்திரம், சூத்திரம், சாத்திரதாரி, சூத்திரதாரி, சைவாச்சாரியன் முதலாய வடசொற்கள் இந்நூலுள் பயின்று வந்துள்ளன. இதனால் இது பிற்காலத்தது என்பது தெளிவு. “ஐந்துவயதில் ஆதியை ஓது! என்ற செய்யுள் அடி “ஐந்து வயதில் ஆரியம் ஒது” என்று பாடவேதமாக உள்ளது.

நீதி ஒழுக்கம்

நீதி ஒழுக்கம் என்ற நூல் குடும்பம், சமூகம் நோக்கிய அறவுரைகளை விளக்குகிறது. ஓலைச் சுவடியிலிருந்து அறிஞர் இராசு அவர்களால் இந்நூல் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. கொங்கு வட்டார மொழிகள் இந்நூலுள் பதிவாகி உள்ளன.

ஒளடதம்

ஒளவை பெயரில் ஒளடதம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. தினமணி இதழ் ஏப்ரல் 30, 2021 இல் ஆ.வி. என்பவர் கிருஷ்ணதாஸ் கட்செவி அஞ்சல் தொகுப்பிலிருந்து ஒளடதம் பாடல்களைத் தந்திருப்பது மகிழ்வைத் தருகிறது. எளிய பாடல் வரிகள் அறுபதைக் கொண்ட நூல் ஒளடதம். சான்றுக்குச் சில

பாராத பயிரும் கெடும்

பாசத்தினால் பிள்ளை கெடும்

கேளாத கடனும் கெடும்

கேட்கும் போது உறவு கெடும்

இலக்கில்லா பயணம் கெடும்

இச்சையினால் உள்ளம் கெடும்

என்று அறுபது பாடல் வரிகளைக் கொண்ட நூல் இது. “கெடும்” என்ற சொல்லில் முடியும். ஆக 60 கெடும் என்ற சொல் முடிவில் வருவதை அறியலாம். ஆக நல்வழி உரைக்கும் நல்ல நூல் என உணர்ந்து போற்றலாம்.

முடிவுரை

இக்கட்டுரையால் அறிவன

(1) ஒளவையார் பெயரில் ஒன்பது பேர் வாழ்ந்து நூல்கள் படைத்திருக்கலாம்.

(2) ஒளவையார் பெயரில் பதினெட்டு நூல்கள் உள்ளன.

(3) பதினெட்டு நூல்களிலும் 1215 பாடல்கள் கிடைத்துள்ளன.

(4) ஒளவை கொங்கு நாட்டுப் பெண்மணி. தகடூர் என்ற தருமபுரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எனவே ஒளவை கொங்குப் பெண்மணியே.

(5) ஒளவையார் பெயரில் பத்துஇடங்களில் கோயில்கள்.

(6) ஒளவையே பெண் புலவர்களின் தலை சிறந்தவர் அவரே 59 பாடல்களைச் சங்க காலத்தில் பாடியவர்.

(7) 18க்கும் மேல் நாடுகளையும் ஊர்களையும் சுற்றிப் பார்த்துக் கவி பாடியவர்.

(8) 15க்கும் மேல் அரசர்களையும், தலைவர்களையும் பாடியவர்.

(9) ஒளவைக்கு மட்டுமே கொங்குநாட்டில் கல்வெட்டு உளது.

(10) திருக்குறளுக்கு அடுத்துக் குறள் எழுதிப் புகழ் படைத்தவர்.

(11) ஒளவை பாடிய தகடூர், கொங்கு வட்டார மொழிகள் நிறைந்த நீதி ஒழுக்கம் ஐவேலி, ஒளவை கல்வெட்டு, ஆதிநூல் - கொங்கு மண்டலத் தொடர்பு உடையவை.

ஒளவையார் பாடல்களால் அறியும் சில அரிய செய்திகள்

(1) அரசர்கள், தலைவர்கள்: அதியமான் நெடுமான் அஞ்சி, பொருட்டெழினி, பாரி, கிள்ளி வளவன், திருமுடிக்காரி, நாஞ் சில் வள்ளுவன், பழையனூர்க்காரி, பொறையக்கோசர், சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, மலையமான், பந்தன், முதலானோர்.

(2) அறிந்த புலவர்கள்: வெள்ளி வீதியார், பரணன்

(3) அறிந்த நாடுகளும் ஊர்களும்: கொல்லிமலை, கோவலூர், சேர நாடு, மலை நாடு, சோழ நாடு, பூம்புகார், திருக்குடந்தை, நன்னிலம், பாண்டி நாடு, தென்னாடு, கொற்கை, தொண்டை நாடு, நாஞ்சில்நாடு, பழையனூர், பறம்பு, வஞ்சி, வெண்ணி.

(4) ஒளவையார் கோயில்கள்: தமிழகம் எங்கும் ஒளவைக்குக் கோயில்கள் உள்ளன.thazhakudi Avvaiyar Amman temple

(1) ஆத்தூர் (சேலம் மாவட்டம்)

(2) ஆத்தூர் வட சென்னி மலை

(3) தஞ்சை துளசியாப் பட்டினக் கோயில்

(4) குற்றாலம் செண்பக அருவி அருகில்

(5) குமரி மாவட்ட முப்பந்தல்

(6) குமரி மாவட்ட தாழக்குடி

(7) குமரி மாவட்ட குறத்தியறை

(8) கல்வராயன் மலை மேல் ஒளவை கோயிலும் கல்வெட்டும்

(9) சேலம் உத்தம சோழபுரம்

(10) ஆலஞ்சேரி ஒளவை கோயில்

ஒளவையாருக்குக் கல்வெட்டு

கல்வராயன் மலை மீது கராங்காடு என்ற பகுதி உளது. அங்கே ஒளவையாரைச் சாமியாக வழிபட்டு வருகின்றனர். கோயில் பக்கத்தில் பாறையில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. வேறு எந்தப் புலவருக்கும் கல்வெட்டு இல்ல ஒளவைக்கு மட்டுமே கல்வெட்டு.

(படம் நன்றி: விகடன்)

- முனைவர். தாயம்மாள் அறவாணன், மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.