“பொய்மையை அறிய உண்மையாக இரு” - மகாகவி ஈரோடு தமிழன்பன்

மறுமலர்ச்சி என்பது மத்திய காலத்தின் முடிவிற்கும், நவீன காலத்தின் தொடக்கத்திற்கும் இடையில் ஐரோப்பாவில் கலை, அறிவியல், இலக்கியம், அரசியல் துறைகள் என அனைத்திலும் ஏற்பட்ட ஒரு கலாச்சார மாற்றம். ஆனால் இறையாண்மை நாடான நம் இந்தியாவைப் பொருத்தவரை இந்த மறுமலர்ச்சிக்கான காலம் மேலும் சில நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டன. பெண்களுக்கு எதிரான சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைத் தடைசெய்யும் சட்டத்தை, 1829-ல் வங்காள ஆளுநராக இருந்த ஆங்கிலேயர் பென்ட்டிங் பிரபு கொண்டுவந்தார். இந்தச் சட்டத்துக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டாலும், இலண்டனில் இயங்கிய உயர் ஆலோசனைக் குழுவான ப்ரிவி கவுன்சில், 1832-ல் இந்தத் தடைச்சட்டத்தை உறுதிசெய்தது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் இந்தத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. எனினும், ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, சுதேச அரசுகள் நடைபெற்ற பகுதிகளிலும், சுதந்திரத்துக்குப் பின்னரும் இந்தப் பழக்கம் சில இடங்களில் கடைபிடிக்கப்பட்டது. பாரதி தொடங்கி பின்னர் வந்த பாரதிதாசன், தமிழன்பன் போன்று பல புரட்சிக் கவிஞர்கள் மகளிரின் மறுமலர்ச்சிக்காக குரல் எழுப்பினர்.

erode tamilanbanபாரதிதாசனுடைய வாரிசாக, மகாகவி என்று போற்றப்படும் கவிஞர் ஈரோடு தமிழன்பன். அவரிடமிருந்து கற்றுக்கொண்டவை என்றால் சுயமரியாதை, பகுத்தறிவு, சமய மறுப்பு போன்றவை. அவர்தம் கவிதைகள் மரபையும், புதுமையையும் ஏற்றுக்கொண்டு கம்பீரமும், படைப்பாக்க ஆளுமையுடன், சமரசமற்ற கொள்கையும், மனத்திண்மையும், தமிழ்மீது அளப்பரிய காதலும் கொண்டு அதற்கான எதிர்வினைகளுடன் உயர்ந்து நிற்கின்றன. மகளிருக்கு எதிரான அநீதிகளுக்கும், அக்கிரமங்களுக்கும் எதிராக இவருடைய உணர்வுகள் சிலிர்த்தெழுந்து போர்க்கொடியை உயர்த்துகின்றன.

“பாரதி வழியிலும், பாரதிதாச நெறியிலும் வளர்ந்து, அகவை பல கடந்து வந்த நிலையில் நான் உள்ளம் கொதித்தும், உணர்வு நெகிழ்ந்தும் உச்சரித்த கவிதைகள்” என்று முழக்கமிடும் தமிழன்பனின் சிந்தனைகள் மகளிரின் மறுமலர்ச்சிக்கு வித்திடுவதிலும் ஆச்சரியமில்லையே !

கையில்

மரப்பாச்சி வைத்து

விளையாடும் பழைய

மரபை மாற்றுங்கள்

என்று பாசத்தோடு மகளிரிடம் வாஞ்சையுடன் உரைப்பவர்தான் அவர்தம் பொட்டில் அறைந்தாற்போன்று,

பூக்களை மட்டும் சூடும்

பூவையர் அல்லர் - நீங்கள்

ஆட்சி மகுடத்திற்கும்

உங்கள்

தலையால் தகுதி தருபவர்கள்

என்று புதுமைப் பெண்ணாக புத்தாக்கம் பெறும் பூவையராக மலர வேண்டும் என்று பரிதவிக்கிறார் ! 1960க௧ளில் தொடங்கிய பெண்கள் விடுதலை இயக்கம் போன்ற பெண்ணிய இயக்கங்கள், உலகெங்கிலும் பெண்களின் அரசியல், அறிவுசார் மற்றும் கலாச்சார நிலையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டன. இதன் பாதிப்பு, பெரியாரின் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட தமிழன்பனிடம் பெருமளவில் உள்ளதை அவர்தம் படைப்புகளின் வழி காணமுடிகின்றது.

பாரதிதாசனின் கனிவு மிக்க சொற்களை எண்ணத்தில் ஏற்றி அதன் வண்ணத்தையே பண்ணிசையாய் மாற்றிய இந்தக் கவியரசரின் சொற்கள் இவை ..

“காதல் பெண்கள் கண்ணாடிக்

கன்னங்களை முத்தமிடுவதைவிடக்

காயங்களின் ஆழத்தில் விழுந்தவர்கள்

கண்ணீர் துடைப்பதையே

அவர் கவிதைகள் அதிகமாய் விரும்பின”

என்று புதுநெறி காட்டிய புரட்சிக் கவிஞர் பற்றி பரிந்துரைப்பவர்தான்,

“கண்ணகிச் சிலம்பு

உடைக்கப்பட்ட மறுநொடியில்

பரல்கள்

புரட்சிக் கவியில் அமுதவல்லியின்

உதடுகளில் வார்த்தைகளாயின...

மன்னன் மகுட மணிகள்

தெருவெங்கும் தெறித்து விழுந்தன”

என்று அநீதி கண்டு பொங்கும் கண்ணகியின் கோபாவேசத்தால் மன்னனின் மணி மகுட மணிகள் தெறித்து விழுந்ததையும் சிந்திக்கச் செய்கிறார். சிலப்பதிகாரக் கண்ணகியையும் துணைக்கழைத்து, வேலியே பயிரை மேயும் அவலத்தை அணுஅணுவாய்ப் பிளந்து நம்மையும் இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்கிறார். அந்த வகையில் ஆழமானதொரு கருத்தியலுக்கு அவருடைய கவிதை எப்போதும் ஒரு கேடயமாகவே இருந்திருக்கிறது என்பதற்கு மற்றுமொரு ஆதாரமாக,

கத்தியோடு விளையாடும்

புதிய மரபு

உதயமாகட்டும் !

விழிகளில் விரல்களில்

தீட்ட மை தேடாமல்

விடுதலைப் பிரகடனம்

தீட்டுவதற்காகத்

தேடுங்கள்.

ஒவ்வொரு நாளும்

கூந்தலில் சிக்கெடுத்து

முடிந்ததும்

கால்விரல் இடுக்கிலிருந்து

எடுத்து எறிவது

பொய்மைப் புராண ஏடுகளின்

பக்கங்களாகட்டும்

என்று பழைமையில் மூழ்கித் திணறும், பாச அடிமைகளாய் பரிதவிக்கும் பாவையரின் எண்ணத்தில் புரட்சித்தீ மூட்ட முயல்கிறார்.

தங்கசம் மனோரமா தேவி

தொலைநோக்கு பார்வையுடன் தன்னை அன்றாடம் புதுப்பித்துக்கொண்டே இருப்பவர்களே சிறந்த கவிஞர்கள். தமிழன்பன் கலாச்சாரம் என்பது, மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு, எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரிய வைத்திருப்பவர்.

மணிப்பூரைச் சேர்ந்த தங்கசம் மனோரமா 10 சூலை 2004 அன்று இந்திய துணைப்படைப் பிரிவான 17வது அசாம் ரைபிள் வீரர்களால் கைது செய்யப்பட்ட மறுநாளே, அவரது வீட்டினருகில், பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு பலமுறை தோட்டாக்களால் துளைக்கப்பட்ட இவரது உடல் கிடந்தது. குற்றவாளிகள் தண்டிக்கப்படாததால் பரவலாக நடந்த போராட்டங்களில் நடுத்தர வயதுப் பெண்கள் சிலர் "எங்களையும் பாலியல் வல்லுறவு செய் இந்திய இராணுவமே... நாங்கள் அனைவரும் மனோரமாவின் தாய்மார்கள்." என்ற பதாகையுடன் நிர்வாணமாக நடந்து சென்றனர். பல ஆண்டுகள் தொடர்ந்த இப்போராட்டத்தில், அநீதி கண்டு பொங்கும் தமிழன்பனின் கொதித்த உள்ளம்,

தங்கசம் மனோரமா தேவியை

அங்குலம் அங்குலமாய் அவமானப்படுத்தி

ஆயுதப்படையினர்

மேய்ந்து தீர்த்தனர்.

படைத் தலைமையக வாசலில்

போராடும் நிருவாணப் பெண்களை

மறைத்து

முன் வரிசையில்

இந்திய மொழிகளிலெல்லாம் எழுதப்படாத

கவிதைகள்.

அச்சம் நாணம் மடம் பயிர்ப்புகளை

அவிழ்த்தெறிந்துவிட்ட

சீதை

சந்தேக இராமர்கள் சங்கக் கட்டடத்திற்குத்

தீவைத்த கையோடு

மணிப்புரி வாசலில் வந்துநின்றாள்

காலத்தின் கண் இமைகள் கருகி

உதிர்ந்தன

மணிப்புரிப் பெண்களை மற்றவர் தொடாமல் பார்த்துக் கொள்ளப் படை. அந்தப்படை தொடாமல் பார்த்துக் கொள்ள யார்? மணிப்புரியின் பாரக் நதியின் பால்சுரக்கும் மார்புகளைக் கடித்துக் குதறலாம் என்றும்

இந்தக் கொடுமைகளை எதிர்த்துக்

கொமடி பிடித்த

இரோன் சர்மிளா

பட்டினிகிடக்கிறாள் பதினான்ச. ஆண்டுகளாக

ஒருநாள் சாவின் செய்தி

மறுநாள் வாழ்வின் செய்தி

சர்மிளா

மணிப்புரியின் ஒட்டுமொத்த உடலாகிவிட்டாள்

ஆனால்

தேசத்தின் கண்களுக்குத் தெரியவில்லையே !

சட்டத்தின் பார்வையில் படவில்லையே!

தொண்டையில்

புற்றுநோய் கண்ட நீதிநியாயங்களால்

முனகக்கூட முடியவில்லையே!

இந்தக் கவிஞனின் கோபாவேசக் கனல்கள் எப்படியோ எங்கேயோ சென்று இப்படிப்பட்ட அநீதியை சுட்டெரித்துச் சாம்பலாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை !

மரணமே நீ அழு, மரணத்தின் துலாக்கோல் சட்டமே நீ அழு! என்றும் சீற்றத்தோடு பொங்கிப் பேசுகிறார் கவிஞர்.

2012-ம் ஆண்டின் முற்பகுதியில், பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆ.ப.சி.அ.சட்டம் குறித்து ஆராய நீதியரசர் வர்மாவின் குழு அமைக்கப்பட்டது. மனோரமா சம்பந்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களே அரசின் இந்த நடவடிக்கைக்கு குறிப்பிடத்தக்க காரணமாக அமைந்தது. Prevention of Atroc- ities Act, 1989 - "வன்கொடுமைகளுக்கு எதிரான பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டம் 1989". சமூகத்தில் சமத்துவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான சட்டமான இது இந்திய அரசியலமைப்பின் 17வது பிரிவு தீண்டாமையை ஒழித்துள்ள நிலையில், இந்தச் சட்டம் அதனை மேலும் வலுப்படுத்துகிறது.

கைகூப்பாதே ! கண்ணீர் விடாதே!

உனக்கானதை

நீயே

நிறைவேற்று ! பிரகடனம் செய்!

நடைமுறைப்படுத்து !

என்று மகளிர் நிலை கண்டு பரிதவித்துப் போகிறவர் அதனைப் புரிய வைக்கவும் மகளிர்தம் எண்ணத்தில் விடுதலை எனும் புரட்சிக்கனலை வித்திடவும் இறுதிவரை முனைந்து போராடிக்கொண்டே இருந்தார்.

வாழ்க்கைத் துணைவி

என்று

வள்ளுவன் சொன்னதை மாற்றி

வாழ்க்கை முதல்விகள்

ஆகுங்கள் !

என்று ஆதங்கப்படுகிறார் ! பெண்கள் தங்கள் பிரச்சனைகளை பிரச்சனைகளாகவே பார்க்காமல் அவற்றை ஒரு வாழ்க்கை முறையாகவே பார்க்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்தே இருக்கிறார் இக்கவிஞர் பெருமகனார்.

இசைப்பிரியாவும் தேவயானியும்

மறைந்து கிடக்கும் அநீதிகளையும், வன்மங்களையும், கிழிசல்களையும், இசைப்பிரியாவும், தேவயானியும் என்ற தலைப்பில் வாதம் வைக்கிறார். ஒரு தமிழனாய்க் கொந்தளிக்கும் இக்கவிஞனின் உள்ளக்கிடக்கைகள் இனப்படுகொலை வரலாற்றையும் குருதிக்கோலால் வரைந்துவிட்டுச் சென்றிருக்கின்றன.

கொடுமனக் கழுகின் கூரிய அலகிலிருந்து

குஞ்சைக் காப்பாற்றும் கோழியாகப்

பாரதம்

தேவயானியைப் பாதுகாக்கப்

பதற்றப்பட்டதும் பாய்ந்ததும்

சரிதான்

மவுனகுருவான

நம் மன்மோகனின் வெண்தாடி

சினத்தால் பழுத்துச் சிவந்தது

இதுசரிதான்

தனது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தர மறுத்தது, அதிக நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ர கடேவை அமெரிக்கக் காவல்துறை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகளும் பறிக்கப்பட்டன. பணிப்பெண்களுக்கான அமெரிக்கச் சட்டப்பாதுகாப்பு விதிமுறைகளை மீறிவிட்ட அவரைக் கைது செய்தபோது கண்ணியக் குறைவாக நடத்தப்பட்டார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என்று அமெரிக்க அரசுத்தரப்பு வழக்கறிஞர் பிரீத் பராரா கூறினார்.

இசைப்பிரியா

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஊடகப்பிரிவில் பணியாற்றியவரும், செய்தி வாசிப்பாளருமான இசைப்பிரியா பிரபாகரனின் மகள் என்ற தவறான புரிதலுடன், சிங்கள இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்டு, அரை நிர்வாணமாக சகதியில் பிணமாகக் கிடந்தார்.

கவிஞரின் உள்ளமோ இப்படி கூக்குரலிடுகிறது ..

ஆனால்

எங்கள் இசைப் பிரியாவைக்

காமுகச் சிங்களம் கசக்கி எறிந்ததே

அப்போது

கடித்துக் குதறி அவள் உடலை

அணுஅணுவாய்ச் சிதைத்து

வெறியாட்டம் போட்டதே

அப்போது

அவள் மானத்தை மரியாதையை

உரித்தெறிந்து

நிர்வாணப்படுத்தியதே

அப்போது

என்ன செய்தது இந்திய அரசு?

ஒருசெடிக்கு அமுத நதியும்

ஒரு செடிக்கு அமில நதியும்

உற்பத்தி செய்பவளா பூமித்தாய்?

தேவயானிக்குக்

கனியான இந்திய இதயம்

இசைப் பிரியாவுக்குக் கல்லானது எப்படி?

நேர்மையின் முகவரியில்

இந்தியா இருந்திருந்தால் ஈழத்தமிழர்

காப்பாற்றப்பட்டிருப்பர்

இசைப்பிரியாவும் மாண்டிருக்கமாட்டாள்

...

யார் முகவரியில் இருக்கிறது இந்தியா?

என்று அநீதி கண்டு பொங்கும் துணிவின் விளிம்பில் நின்று கொந்தளிக்கும் பாரபட்சமில்லாத தூய உள்ளம் கொண்ட இக்கவிஞர் நச்சென்று தலையில் குட்டுவதுபோன்று கீதை உரைத்திருக்கிறார் கலியுகக் கண்ணனாக.

“அல்கல”ச் செல்வி மலாலா

ஒரு இளம் பெண், உலகே அஞ்சி ஒதுங்கும் தாலிபான் தீவிரவாதிகளை எப்படியாவது சந்தித்துவிட்டால் அவர்களிடமே பெண்கள் கல்வி குறித்துப்பேசி புரிய வைத்துவிட்டால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு வந்துவிடும். தன் சொந்தநாட்டுக்குச் செல்ல இயலாத நிலையிலும், உலகநாடுகள் அனைத்துக்கும் சென்று, கிடைக்கும் அத்தனை மேடைகளையும் பெண்கல்வி குறித்துப் பேசுவதற்கான சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தி வருகிறாள். போராளியாகிவிட்டால் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உதவிட முடியுமே என்ற முடிவுக்கு வந்தவள், தன் நாட்டின் எல்லைக்குள்கூட கால் வைக்க முடியாத நிலையிலும் அந்நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்று சொல்லும் அவள் மலாலா எனும் துணிவாடை போர்த்தியவள்தான். ஒற்றைப் பெண்ணல்ல, அவள் ஓர் இயக்கம். உலகில் பெண்கல்வி எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்திட வந்த ஒரு பேராயுதம் இவள். அமைதிக்கான பரிசை முதன்முதலாகப் பெற்ற பாகிஸ்தான் நாட்டுக்காரர் இவர்தான்.

நம் கவிக்கோவின் அல்கலச் செல்வியின் தீச்சுடர்களைத் தரிசியுங்கள்...

மலாலா

பத்துச் சூரியர்கள் கண்ட கனவாகப்

பாகிஸ்தானில் பிறந்தவள்

“அல்கலத்தின்' செல்லமகள்

வயது பதினைந்து.

அவளுக்குள் இருந்தன பதினாறு

பள்ளிக் கூடங்கள் -

இருட்டு மண்டையர்களுக்கு

அஞ்சாமல்

பெண்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள்

தெருவில்

போராட்ட ஞானத்

தீப்பந்தம் ஏந்தினாள்

மலாலா.

  ....

பாகிஸ்தான் அதிபர்

பத்துமில்லியன் டாலர் பணத்தை

ஒதுக்கியுள்ளார் மகளிர் கல்விக்கு.

அவள் படிப்பது அவசியம்.

அவள் படிப்பதைவிட அவளைப்படிப்பது

அவசியம் என்று

திருந்தாத நெஞ்சங்களுக்குத்

தெரியுமா?

என்று நொந்த உள்ளத்துடன் அண்டை நாடு, எதிரி நாடானால் என்ன. அவர்களும் மனிதர்கள்தானே? அந்தப் பெண்களுக்கும் வலியும், வேதனையும் ஒன்றுதானே என்று இக்கவியின் சிந்தனை புனிதமடைகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த உள்ளத்தின் சொந்தக்காரர் இவர் போலும்!

அல்கலச் செல்வி - அல்கலம் என்றால் எழுதும் கருவி என்பது பொருள். இன்று உலகம் பேனாவின் வலிமையை நன்கு உணர்ந்துவிட்டது. துப்பாக்கி முனையைவிட பேனாமுனை சக்தி வாய்ந்தது என்பதை உலகம் அறிந்துகொண்டது.

குழந்தைகளை அதிகமாகவேக் கொண்டாடும் இக்கவிஞரின் கருத்தில், மரணமே கண்ணீர் வடிக்கிறதாம்.

மரணம் கண்ணீர் வடித்துப் பார்த்திருக்கிறீர்களா?

குழந்தைகளின்

பால்உறுப்புகளை வல்லூறுகளின் காமக்

கூடுகளில் நிரப்பச்

சட்டம் செய்தவர் யார்?

வன்புணர்ச்சி

இந்நாட்டின் வீடுகளில், விடுதிகளில்.

பள்ளிகளில், பயண வண்டிகளில்

காம நெருப்பைக்

கொளுத்திப் போடுகிறது.

குழந்தைச் சவங்களைத் தொட்டுக்

கண்ணீர் வடிக்கிறது மரணம்...

நாமும் அன்றாடம் எத்தனையோ விதமான காட்சிகளைக் கடந்து வந்துகொண்டுதான் இருக்கிறோம். அதன் ஊடே மறைந்திருக்கும் வன்மங்கள் பல நேரங்களில் நம் ஊனக்கண்களுக்குத் தெரியாமலே போய்விடுகின்றன. அதற்கெல்லாம் சவுக்கடி கொடுப்பது போன்றே கவிஞர் கண்ட காட்சிகளால் விழிப்புணர்வு ஏற்ற வினாக்கள் எழுப்புகிறார் ! இவர்தம் படைப்புகள் அனைத்தும் அப்போதைய சூழல்களுக்கு உகந்ததாக, உலகின் அனைத்துக் கோடியில் உள்ள மாந்தருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதமாக அமைந்துவிடுவதாலேயே நம்மால் அவற்றை கடந்து போய்விட முடிவதில்லை.

களம் தேடிவந்த

வாள்

உறை கேட்டுக்கெஞ்சாது

பெண்ணே!

நியாபகம் வை

சலுகை வரங்களுக்காகச்

சூறாவளிகள்

தவம் செய்ததாகக் காவியப்

படலங்கள்

எழுதப்பட்டதில்லை.

(தன்னைப் பருகும் தாகம்)

பெண்களுக்குத் தேவை ஆளும் உரிமையா? வாழும் உரிமையா? என்றெல்லாம் புலம்பித் திரியாமல் வாழும் உரிமையை முழுமையாகப் பெற வேண்டுமானால், பெண்களுக்கும் ஆளும்

உரிமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவருடைய கவிச்சொற்கள் அனைத்தும் வரிசைகட்டி நின்று வடம் பிடிக்கின்றன.

பாகிஸ்தானிய இனப்படுகொலையின் ஆரம்பக்கட்டத்தில் வங்காளப் பெண்கள் குழுமப் பாலுறவு வன்கொடுமைக்கும், கொலைக்கும் உட்படுத்தப்பட்டனர். இந்த இனப்படுகொலையில் ஈடுபட்டவர் எவரும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை. எல்லோரும் பாகிஸ்தானிலும் மற்ற நாடுகளிலும் சுதந்திரமாகவே இருக்கிறார்கள். இவர்களை நீதிக்கு முன் நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அரசியல் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகள் வங்கதேசத்தின் சுதந்திரத்துக்குப் பின்னர் நின்று போகவில்லை. எல்லாத்தரப்பாலும் கொட்டப்பட்ட இரத்தம், பலப்பல ஆண்டுகளுக்கு வங்கதேசத்தின் அரசியலைப் பாதித்து வந்தது.

தமிழன்பன் எனும் மனிதாபிமானம் மிக்க இக்கவிஞரின் மனம் படும்பாடு நம்மையும் கலங்கத்தான் செய்கின்றன.

அந்தச்

சோனார் பங்களாவில்

சுதந்திர வானம்பாடியின்

கதை

யாகியாகானின்

காமக்கழுகுகளால்

கண்ணீரில் முடிந்துவிட்டது

(நூல்: தோணி வருகிறது)

பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் வெறியாட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னமான வங்கதேசத்தின் ஒரு நயனதாராவை மட்டும் எண்ணியா இப்படி மனமுருகிப் போகிறார் இக்கவிஞர்?

யுகஅடிமை

சரிகிறது உன் நொடி அசைவில் !

இழிவைக் கவிழ்க்கும்

போரழகே உன் பேரழகு !

வளையல் தேழியும்

கடை கடையாய் ஏறி

இறங்கியவளே !

போதும்! போதும்! நிறுத்து!

ஆயுதக்கிடங்கின்

கதவை மோதித் தகர்த்து

உனக்கானதைத் தெரிவு செய்!

பெண்களின் மறுமலர்ச்சிக்கு கல்வி, சமூக விழிப்புணர்வு, சட்டச்சீர்திருத்தங்கள், தன்னார்வ அமைப்புகளின் பணி, பெண்ணிய இயக்கங்களின் எழுச்சி ஆகியவை முக்கியக் காரணங்கள் என்பதை தெளிவாகவே வெளிப்படுத்துகின்றன இவர்தம் படைப்புகள். கல்வி அறிவு இல்லாததால் பெண்கள் ஓடுக்கப்பட்டிருந்த நிலை மாறி, கல்வியின் அவசியம் உணரப்பட்டதும், பெண்களுக்கு வாக்குரிமை போன்ற அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டதும், சமூகத்தில் அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற சிந்தனைகள் வலுப்பெற்றதும் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தன என்பதையும் விளங்கச் செய்கிறார். பெண்களுக்கு கல்வி அவசியம் என்று உணர்ந்த இக்கவிஞர் தமிழன்பன் போன்ற சான்றோர்களின் பங்களிப்பால், பெண் கல்விக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது அவர்களின் சிந்தனைத் திறனை வளர்த்து, சமூகம் மற்றும் அரசியல் விவகாரங்களில் பங்கெடுக்க உதவியது. பெண்கள் மீதான ஓடுக்குமுறைகளும் உரிமைகள் மறுக்கப்படுவதும் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திச் சமூக மாற்றத்திற்கான தேவையை உருவாக்கியுள்ளது.

மரணச் சான்றிதழைக் கைவசம்

வைத்துக் கொண்டு

மலர்கள் பிறப்பதில்லை !

அனுபவங்களின் அமுத சாரமே ஈரோடு தமிழன்பனின் கவிதைகள். மனிதர்களின் எல்லையற்ற கவலைகள், நோய்கள், தேடல்கள், தவிப்புகள் போன்ற அனைத்தையுமே சமநோக்கோடு பார்ப்பதன் விளைவாக உருவாகும் ஞானசூரியனாம் இக்கவிஞரின் அற்புதமான சொற்களே இவர்தம் படைப்புகள்.

- பவளசங்கரி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.