கால்டுவெல்லின் திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கண ஒளியில் (மக்கள் புழக்கத்தில் மொழி) பழந்தமிழ் பாடல்களையும் துணையாகக் கொண்டு தமிழ்க் குமுகம் வரலாறற்ற குமுகம் எனும் கடந்த காலத்திய பரப்புரை முறியடிக்கப்பட்டது. ஐரோப்பியர் சிலர், சி.வை.தா. கனக சபை, நல்லுசாமி, மனோன்மணியம் சுந்தரனார் போன்றோர் தமிழ் இலக்கியப் பதிப்பு பணியின் வழித் தமிழரின் பொது வரலாறு எழுதியதற்கு (Histrography) உருப்படிகளை நல்கத் தொடங்கி வைத்தனர். 1903-இல் இருந்து தனித்ததோர் துறையாகத் தமிழரின் வரலாற்றை எழுதத் தொடங்கினர்.
ஐரோப்பியர், பார்ப்பனர், வெள்ளாளர் என்று அடுத்தடுத்தக் குமுகக் குழுக்கள் தமிழ், தமிழர் வரலாற்றைச் செவ்வியல் பனுவல்களைப் பற்றுக்கோடாகக் கொண்டு எழுத வந்தனர். இப்படி வரலாறெழுதும் அறிஞர்களுக்கும், அவர்கள் குழு நலன் சார்ந்த சிந்தனையும் உண்டு; பொது நலனும் உண்டு.
மொழி இன நோக்கிலும் பின்னர், வர்க்க அணுகுமுறையிலும் பல்வேறு அலுவல் பணிக்கான திறனறிவு என்ற வகையிலும் தமிழர் வரலாறு விரிவாக எழுதப்பட்டு வந்தன. 1900-களிலிருந்து அதன் நடுப்பகுதி வரை தமிழரின் இலக்கிய வரலாறு ஆகப் பெரும்பான்மையாக ஆரிய, சமசுகிருதப் பண்பாட்டுக்கு எதிரான இலக்கிய வரலாற்று குவிப்பே ஆகும். 1900 நடுப்பகுதி தொடங்கி அதற்குப் பின்னரும் பலவகையாகத் தமிழர் பொது வரலாறும், இலக்கிய வரலாறும் பல்வேறு பார்வைகளோடு ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டன.
இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டும் (90-கள்) 21 ஆம் நூற்றாண்டின் கடந்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திராவிட, தலித்திய, பெண்ணிய, இயக்க நோக்கோடும் தமிழர் வரலாற்றை விரிவு செய்து வருகின்றனர். செம்மொழி நடுவண் தமிழாய்வு நிறுவனம், சாகித்திய அகாடமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழகம் மானியக் குழு உள்ளிட்ட நிறுவனத்தார் வழியே செயல்பட்ட தமிழ் இலக்கியப் பண்பாட்டு உரையாடல்களும் சில புதிய இலக்கிய வரலாற்று எழுதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நீண்ட நெடிய முன்னெடுப்புகளின் தொடர்ச்சியில் 10 ஆண்டுகளாகத் தென்மொழியிலும், கீற்று இணைய இதழிலும் 'பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்,' பழம்பெரும் தமிழ்ச் சமூகம்' என்ற பெயர்களில் தனி நூல்களாகவும் 2000-ஆவது ஆண்டின் பிறகான காலங்களில் தொடர்ந்து எழுதி வருபவர் கணியன் பாலன். 2016-இல் 'பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்' என்ற நூலை வெளியிட்ட கணியன் பாலன் அந்த நூலின் சாரத்தைச் சுருக்கமாக இப்போது 'பழம்பெரும் தமிழ்ச் சமூகம்' என்ற தலைப்பிட்டு 2023-இல் வெளியிடுகிறார்.
21 தலைப்புகள் 264 பக்கங்களைக் கொண்ட இந்த வழி நூலானது தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசரின் மதிப்புரை கணியன் பாலனின் ஆசிரியர் உரையோடு தொடங்குகிறது. அரசியல் முக்கியத்துவம் கொண்ட நூலாக இந்நூலின் மதிப்புரையே சொல்லுகிறது. பெ. மணியரசனின் அரசியலை ஏற்று வழிமொழிந்ததை பாலனின் ஆசிரிய உரையும் எதிரொலிக்கிறது. பிற்காலச் சோழர் பாண்டியர் ஆட்சிகளின் வீழ்ச்சி என்பதே தமிழரின் வீழ்ச்சி. கி.பி 14-ஆம் நூற்றாண்டில் இருந்து ஆப்கானிய, விஜய நகர, ஆங்கிலேய டில்லி ஆட்சிகளுக்கு உட்பட்ட குடிகளாகத் தமிழர் வாழ்ந்தது தமிழர் அல்லாதவரின் ஆட்சி. இந்தத் தமிழர் அல்லாதவரின் ஆட்சிகளே தமிழரின் தற்சார்பை, தன்னம்பிக்கையைச் சிதைத்தது என்ற மணியரசன் விட்ட இனவாதக் கரடியை இந் நூலின் ஆசிரியர் எந்த முறையியல் சார்ந்த ஆய்வுக்கும் உட்படுத்தவில்லை. பெ. மணியரசனின் அரசியல் பரப்புரை பேச்சையே கணியன் நூல் வரைவு செய்திருக்கிறார் எனக் கொள்ளலாம்.
பழந்தமிழ்ச் சமூகம் என்கிற இந் நூலின் அறிமுகப் பகுதியில் குறுந்தொகை 156- ஆம் பாடலைப் பற்றி உரையாடிய நிலையில் அன்றையக் காலத்தில் வேதமும் பார்ப்பனர்களும் மதிப்புக்குரியவர்களாக இருக்கவில்லை என்று பாதி உண்மை என்ற அளவில் வாதுரைக்கிறார் பாலன். ஆனால் அது சமூகத்தின் எந்த அடுக்கில் என்பதை அவர் பொருத்திக் காட்டவில்லை. அரசர், வணிகர் என்கிற அடுக்கில் பார்ப்பனியம் தன் தாக்குறவைக் கணக்கு தொடங்கி விட்டது. திணைக்குடியாகிய பெருந்திரளான மக்கள் (இன்றைய சுட்டில் சூத்திர, பஞ்சமர்) பார்ப்பனிய தாக்குரவுக்கும் ஆளாகவும் இல்லை. மேலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை எள்ளி நகையாடி வந்தனர். குடிகளின் சிறப்பை அரசருக்கு மாற்றீடு செய்வதும் அரசரின் போர் வெற்றிகளையும் ஆட்சி நிர்வாகத்தையும் பொதுமக்களின் மேம்பாடாகக் காட்டுவதும் தான் இந்நூலின் முதன்மையான மோசடியாகும்.
பழந்தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளாக நகர அரசுகள் இருந்ததாகவும் இந்த நகர அரசில்தான் பழந்தமிழகத்தில் சுதந்திரமான பொருள் முதல் வாத சிந்தனைகள் உருப்பெற்றன என்கிறார்.
பழந்தமிழகத்தின் வளர்ச்சிக்கும் செல்வச் செழிப்பிற்கும் காரணம் இந்த நகர அரசுகள் தாம் என்று சுட்டுகிறார். துறவை மேற்கொண்ட சுதந்திரமான பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனைக்கும் மலைபடு பொருள்கள் காடுபடு பொருள்களான திணை குடிகளின் உழைப்பில் திரட்டியும் கடல் கடந்த நாடுகளுக்கு உள்ளூர் அரசர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்கான முனையங்களே துறைமுகப் பட்டினங்கள் ஆகும். அதுவே நகரங்களாக வளர்ச்சியுறுகின்றன. அரசர்கள் இங்கு சேவைக்கு வரியை விதித்து தாங்கள் கொலுவிருக்கும் கோட்டை கொத்தள (படையணி) நகரங்களை விரிவு செய்கின்றனர் அல்லது போர்க் கொள்ளை மூலம் திரட்டிய பொருளை கருவூலத்தில் சேமித்து வைத்தனர். இதில் பொருள் முதல்வாதச் சிந்தனைக்கு ஊக்கமளித்தவர் துறவை வலியுறுத்திய சுதந்திரமான மெய்யியலாளர்களே யொழிய அரசர்களோ அவைக்களப் புலவர்களோ அல்லர். எனவே, பொருள் முதல்வாதச் சிந்தனைக்கும் நகர அரசுகளுக்கும் என்ன தொடர்பு என்பது வேடிக்கையாக இருக்கிறது.
தமிழகம் மீதான மௌரியப் பேரரசின் படையெடுப்பு குறித்தும் அதனைத் தமிழரசுகளின் அன்றைய ஐக்கியக் கூட்டணி முறியடித்தது என்றும் மிகையாய் எழுதுகிறார். தமிழ் அரசுகளின் ஐக்கியக் கூட்டணிக்கான கருத்தியல் அடித்தளம் என்ன என்று பாலன் தெளிவுபடுத்தவில்லை. வைதீகத்தையும் பார்ப்பனியத்தையும் எதிர்த்துப் போராடும் மரபு மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இவை போன்ற பல விடயங்களுக்கான காரணம் என்ன என்பதை நூலில் படித்துப் புரிந்து கொள்ள இயலும் எனச் சுட்டுகிறார். பார்ப்பனியத்தை எதிர்த்து கொள்கை- திட்டம்- தலைமை- அதைச் செயல்படுத்தும் இயக்கத் தொண்டர்கள் என்று களமாடிய “பெரியாரியப் போராட்ட மரபை எதிர்கொள்ளவே” மிக நீண்ட காலமாகப் பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடுகிறோம் என்று பெ. மணியரசனின் பரப்புரைப் பேச்சையே பாலன் எழுத்துருவத்திற்கு இடம் பெயர்க்கிறார்.
தமிழ்த் தேசிய இனம் தனது புகழ்பெற்ற வரலாற்றுப் பெருமிதங்களை (அரசர், இராணுவ பெருமிதம்) கொண்டுதான் தமிழக மக்களிடம் உள்ள சாதி, மத வேற்றுமைகளை இன்ன பிற பிளவுகளை நீக்கி அவர்களிடையே ஒற்றுமை உணர்வைக் கொண்டு வர முடியும் என்று உத்தி வகுக்கும் நூலாசிரியரின் இந்தக் கருத்து உலகின் எந்தத் தேசிய இனத்தின் போராட்ட வரலாற்றுப் பட்டறிவிலிருந்து பெறப்பட்டது என்பதை விளக்க வேண்டும். சுரண்டல், ஏற்றத்தாழ்வு எனும் முதலாளித்துவக் கொடூரத்தைச் சுட்டிக் காண்பித்து தொழிலாளர்களே ஒன்று திரளுங்கள் என்று அறைகூவி அணியப்படுத்தும் இடதுசாரிகள். பார்ப்பனிய, வைதீக மேலாதிக்கச் சுரண்டலுக்கு எதிராக நாத்திகம், கடவுள் மறுப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, வட முதலாளிகள் எதிர்ப்பு, பகுத்தறிவு, அறிவியல் என்ற வகையில் பார்ப்பன அல்லாதோரே அமைப்பாகுங்கள்; அதிகாரம் பெறுங்கள் என அணி திரட்டுவது பெரியாரிய இயக்க அணுகுமுறை. இது தமிழர்களிடம் படிந்துவிட்ட சாதி, மத வேற்றுமைகளை அகற்றப் போதுமானது இல்லை என்று கருதுகிறாரா? இதற்கு முன்னுதாரணம் கேட்பாராயின் சோவியத்து சோசலிசம், ஐரோப்பிய அறிவொளி வாதம், மொழி, இன மானிட ஓர்மை சிறப்பாகப் பங்களித்துள்ளதைக் காட்ட விரும்புகிறோம். ஆனால் உங்களுடைய வாதத்திற்கான முன்னுதாரணம் செருமன், இத்தாலியில் உருவான பாசிச நாசிச அரசர் மையம் கொண்ட இனமேட்டிமை வாதமே என்பதை மறுக்க முடியுமா? உங்கள் ஆய்வுச் சட்டகமே (Research Paradigm) அதிலிருந்து பெறப்பட்டதுதான் என்பதை ஏற்கிறீர்களா?
அரசர், போர் பெருமிதங்களைச் சொல்வதும், தமிழர் வீழ்ச்சிக்குத் தமிழர் அல்லாதார் அரசுகள் மீது பழியைப் போடுவதும் அண்டை, அயல் இனங்கள் சண்டை இனங்களாக வெறுப்பு வயப்பட்ட அணுகுமுறையாகும். தமிழகத்தின் ஐவகைத் திணையிலும் ஆட்சியாளர்கள் இருந்தனர். இனக்குழு வாழ்க்கையோ ஆட்சி முறையோ இருக்கவில்லை. கணம், குலம் என்ற குருதி வழி அடிப்படையில் தலைவர்கள் இல்லை. ஊர், நிலவியல் பிரிவின் மூலம் தான் தலைவர்கள் இருந்தனர் என்றெல்லாம் புதுப் பாடம் சொல்லுகிறார் கணியன்பாலன். பாரி என்னும் பறம்புமலையின் குடித் தலைவனை அழித்ததுதான் மூவேந்தர்கள் எனும் தமிழரசுகளின் ஐக்கியமா?
இதுவரை தமிழ்நாட்டுப் பொது வரலாற்றுக்கு அடிநிலைத் தரவாகக் கொள்ளப்பட்ட தொல்காப்பிய-பொருளதிகார, புறத்திணையியல் நூற்பாக்களோ சங்க இலக்கியப் புறத்திணைப் பாடல்களோ இந்தக் காலத்தின் அடிக் கருத்தை உள்வாங்கிக் காப்பியமாகச் சற்றுப் பின்னே எழுதப்பட்ட முதலிரு காப்பியங்கள் (சிலம்பு, மணிமேகலை) எதுவும் இந்த அனைவரையும் ஆட்சியாளர் மயமாக்கும் அரசு உருவாக்கம் காணும் வரைவு முறைக்கு ஆதரவாக இல்லை; சாதகமாக இல்லை. பின் கணியன் பாலனிடம் மட்டும் எங்கிருந்து இந்த வரைவு முறை வந்து அமர்கிறது. கிரேக்க எகிப்திய, பாபிலோனிய நகர அரசுகளுக்கு இணையாகவோ அல்லது அதற்கும் முற்பட்ட தென்னிந்திய தீபகற்பத்தில் அரசு உருவாக்கம் ஆட்சியாளர் இருக்கை தென்படுகிறது என்று அவர் நிறுவ விரும்பி இருக்கலாம். பாசிசத்தின் வரலாறு எழுதும் ஊக்கம் தொன்மையையும் வலிமையையும் வலியுறுத்தி எழுதுவதாகும் எனப் பல குமுகவியலாளர்கள் பலமுறை சுட்டிக்காட்டி இருப்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
களப்பிரர் என்ற அரசக் குடியினர் தமிழர்கள் அல்லர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் மூவேந்தர் சிறையில் அடைக்கப்பட்டனர். பாலி (பௌத்த) பிராகிருத (சமண) வைணவ (சமசுகிருத) மொழிகளும் சமயங்களும் தமிழில் அறிமுகமாகி அரச உதவியோடு வளர்ச்சியுற்றன. பார்ப்பனர்களுக்குச் சங்க காலப் பாண்டியர் வழங்கிய வேள்விக்குடி செப்பேட்டின் அடிப்படையில் நில தானம் நடக்கவே இல்லை. ஆகவே, அந்தப் பார்ப்பனனின் வழி வந்தவன் பிற்காலப் பாண்டியரிடம் முறையிட்டு அந்த நிலத்தைத் திரும்பப்பெற்றான் என்பது வரலாற்றுப் புனைவு என்கிற தி.சு. நடராசரின் ஆய்வினை ஏற்று கணியன்பாலாவுனும் அந்தச் செய்திகளைப் புனைவு என்று முன்மொழிகிறார். தொகுத்துரைத்தால் களப்பிரர் ஆட்சிக் காலம் வரலாற்றுத் தரவுகள் போதுமான அளவு கிடைக்காததால் இருண்ட காலம் அல்ல. அந்த ஆட்சியின் தன்மையால், போக்கால், பண்பால் அது இருண்ட காலம் என்கிற முடிவுக்கு வருவதாக உய்த்துணர முடிகிறது. பேராசிரியர் துளசி. இராமசாமியின் ஒளிர்வது களப்பிரர் காலமே என்ற ஆய்வுக்கோ ’புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு ’ என்கிற ஆய்வாளர் ஆ பத்மாவதி அவர்களின் அண்மைக் கால ஆய்வுகளுக்கோ கணியன் பாலன் சார்பு நிலை எடுக்கும் தி.சு. நடராசரோ முனைவர் மா. பவானி அவர்களோ எந்த மறுப்புரையும் கேள்விகளும் இதுவரை எழுப்பவில்லை. ஆய்வுதான் முக்கியம் எனில் இந்த வாதத்தை அவர்கள் சிறப்பாகத் தொடருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
மாறாகச் செய்திப் பரப்புரை மட்டும்தான் முக்கியம் எனில் பாசிச கோயபல்சு அணுகுமுறை தமிழ் வரலாற்றுத் துறையை முற்றுகையிடத் துடிக்கிறது என்றே கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்தில் வைணவ (சமசுகிருதம்) போற்றப்பட்டதெனில் தொடக்கக் கால வரலாற்று எழுத்தியலாளர்களின் வரைவுகளில்- குறிப்பாக ஐயங்கார்கள், ஐயர்கள், சர்மா, பிள்ளைகள் ஏன் இருண்ட காலம் என்று இதற்குப் பெயரிடுகிறார்கள். சமண பௌத்தத்தின் அற முதல் வாதம், துறவு வினைக் கொள்கை போன்றவை சங்க இலக்கியங்களிலேயே ஏராளமாக இடம்பெற்று வந்திருப்பதைப் பேராசிரியர் பூ ஜார்ஜ் (சென்னை கிருத்துவக் கல்லூரி), முனைவர் சு. மாதவன் (பாவலர் ஏழை தாசன்) பேராசிரியர் ராஜ் கவுதமன், முனைவர் கரு. அழ. குணசேகரன் போன்றோர் தனித்தனி நூல்களாக எழுதி நிலைநாட்டி வந்துள்ளனர். அவர்களோடு அவர்களது கருத்துகளோடு கணியன் பாலன் என்ன விவாதித்து என்னவாகக் கருத்துகளை அறுதியிட்டுக் கொள்ள விரும்புகிறார் என்பதும் தெரியவில்லை. திடுக்கென்று களப்பிரர்கள் பற்றி சொல்லப்படும் சில தகவல்கள் வரலாற்றுப் புனைவு என்பதாகவும், அவர்கள் தமிழ் மன்னர்களுக்கும் சற்றே தளர்வாகத் தமிழ் மெய்யியல்களுக்கும் எதிரானவர்கள் என்ற முடிவை வந்தடைகிறார். ஏன் என்று தெரியவில்லை. வேண்டுமானால் இதற்கு ஒரு காரணம் இப்படி இருக்கலாம். திராவிட என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லை. அது சங்க இலக்கியத்தில் இடம் பெறவில்லை என்று இன்றைய திராவிட இயக்கங்களுக்கு மறுப்புக் கூறும் போது மணியரசனின் பதில் இருப்பதைப் பலமுறை எதிர்கொண்டது உண்டு. அந்தப் பரப்புரைப் பேச்சுக்கு ஆய்வு நூல் வடிவம் தருவதான ஒரு நோக்கம் இந்த களப்பிரர் எதிர்ப்பு வாதத்திற்கு இருக்க முடியும்.
குறிப்பு:
பிரிட்டிஷ் காலனிய முறையை நடத்திய ஆங்கிலேயர்கள் சோவியத் ஒன்றியத்தின் எழுச்சியைக் கண்டு அஞ்சுவதற்குக் காரணம் அவர்கள் தங்களைப் போல வளமையானவர்கள் இல்லை எனச் செர்மானிய நாசிசமும் தொன்மையானவர்கள் இல்லை என இத்தாலிய (ரோமப்பேரரசு) பாசிசமும் கருதியதே, சோவியத் மீது தானே படையெடுத்துச் சென்று அடக்கி பிரிட்டிசாருக்குப் புரிய வைக்கிறோம் என்பதே அந்த இனமேட்டிமை அணுகுமுறையாகும்.
- பேராசிரியர் மணிகோ. பன்னீர் செல்வம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113