இன்று புலவர் கலியபெருமாள் அவர்களின் 100-வது ஆண்டு நினைவு நாளையொட்டி புகழஞ்சலி செய்கிறோம்.

இருபதாம் நூற்றாண்டு கண்ட இணையற்ற தமிழ்த்தேச விடுதலை போராளி புலவர் கு. கலியபெருமாள், பகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, தமிழ்நாடு விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட்டம் என வாழ்ந்த தமிழ்த் தேச போராளியின் நினைவுநாள் இன்று! (மே 16).

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் அறிமுகம் கிடைத்து, பகுத்தறிவாளராக, மண் விடுதலை கோருபவராக மாறினார்.

திருவையாறு கல்லூரியில் புலவர் படிப்புப் படிக்க இணைந்த நிலையில், அக்கல்லூரியில் சாதி வேற்றுமை, பார்ப்பன மாணவர்கள் உள்ள விடுதியில் பிற மாணவர்கள் நுழையக்கூடாது என்பது போன்ற கொடுமைகளை எதிர்த்துப் புலவர் கலியபெருமாள் புத்துலக சிற்பகம் என்னும் மாணவர் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களை திரட்டிப் போராடி சாதி வேற்றுமையை ஒழித்தார்.

இந்திய அளவில் நக்சலைட் இயக்கத்தைத் தொடங்கிய சாரு மஜூம்தார் தமிழகத்திற்கு வந்தபொழுது. அவரைப் பெண்ணாடம் அருகில் உள்ள முந்திரிக் காட்டுக்கு வரவழைத்து, தோழர்களுடன் இரகசியமாகக் கூட்டம் அமைத்துத் தமிழ்நாட்டில் நக்சலிய இயக்கத்திற்குத் தொடக்கம் அளித்தார் புலவர் கலியபெருமாள். சாருமஜூம்தார் தோற்றுவித்த இ.பொ.க.(மா.லெ) இயக்கம் தமிழகத்தில் வேரூன்றக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் கலியபெருமாள்.

பெரும் நிலப்பிரபுக்களின் நிலங்களுக்குத் தனது தோழர்களுடனும், பொது மக்களுடனும் திரண்டு சென்று, அதிரடியாக அறுவடை நடத்தி நெல் மூட்டைகளைக் கடத்தி வந்து கிராமத்தினருக்குப் பகிர்ந்து கொடுத்தார். பெண்ணாடம் பகுதி கரும்பு விவசாயிகளுக்கு உரிய பணத்தைக் கிடைக்கச் செய்யும் வகையில், சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தலைமையேற்று நடத்தினார்.

1970-ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான சௌந்திரசோழபுரத்தில் உள்ள தனது தோப்பில் கணேசன், காணியப்பன், சர்ச்சில் ஆகிய மூன்று தோழர்களுடன் தற்பாதுகாப்புக்காக வெடிகுண்டு தயாரித்தபொழுது, எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து மூன்று இளைஞர்களும் அதே இடத்தில் சிதறிப்போனார்கள்.

அருகில் இருந்த புலவர் கலியபெருமாளுக்கும் பலத்த காயம். இறந்துபோன மூன்று இளைஞர்களின் உடல்களையும் அருகிலேயே புதைத்துவிட்டு, தலைமறைவானார் புலவர் கலியபெருமாள். 1971இல் கலியபெருமாளும், அவரது மகன்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவல்துறை உளவாளி ஐயம்பெருமாள் கொலை வழக்கில் 1972 ஆம் ஆண்டு கலியபெருமாளுக்கும் அவரது மூத்த மகன் வள்ளுவனுக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டது. இளையமகன் சோழ நம்பியார், கலிய பெருமாளின் ஒன்றுவிட்ட தம்பிகள் மாசிலாமணி, இராஜமாணிக்கம், ஆறுமுகம், கலியபெருமாளின் மனைவியின் அக்காள் அனந்தநாயகி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை கடலூர் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது. அவரது குடும்பமே தண்டிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வள்ளுவனுக்கு ஆயுள் தண்டனை என்றும், மற்றவர்களுக்கு அதே தண்டனை என்றும் உறுதி செய்யப்பட்டது.

புலவர் கலியபெருமாளை மரணதண்டனையிலிருந்து காக்க பலரும் போராடி, கையெழுத்து இயக்கம் நடத்தி இந்தியக் குடியரசு தலைவருக்கு அனுப்பினர், பத்திரிகையாளர் பர்தேஷ் என்பவர் முயற்சிகளை முன்னெடுத்தார். 1973 இல் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

புலவரையும், வள்ளுவனையும் திருச்சி நடுவண் சிறையில் அடைத்தது காவல்துறை. 24 மணி நேரமும் தனிமைப்படுத்தப்பட்ட சிறைக்கொட்டடியில் இருவரையும் அடைத்து வைத்தனர். அந்நிலையிலும் சிறையில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள், உரிமை மீறல்கள் போன்றவற்றிற்கு எதிராக அங்கேயும் குரல் கொடுத்தனர் புலவரும், வள்ளுவனும். அதன் விளைவாக காவல்துறையின் கட்டற்ற அடக்குமுறைகளுக்கு ஆளாகினர்.

பல்வேறு சிறைச்சாலை மாற்றங்களுக்குப் பிறகு சென்னை நடுவண் சிறையில் இருவரையும் அடைத்தனர். அங்குதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனோடு வள்ளுவனுக்கும், புலவருக்கும் ஆழ்ந்த நட்பு உருவானது. பின்னாளில் தோழர் வள்ளுவன்-அகிலா திருமண அறிவிப்பு நிகழ்வில் பிரபாகரன் நேரிடையாக வந்து கலந்துகொண்டு மணமக்களுக்குத் தனது வாழ்த்தினைத் தெரிவித்தார். பிரபாகரன் தமிழீழம் சென்ற பிறகு புலவர் கலியபெருமாளைப் பற்றி நினைவுகூர்கையில் ‘தான் சந்தித்த தமிழக தலைவர்களிலேயே நேர்மையான தலைவர் புலவர் கலியபெருமாள்’ என்று புகழாரம் சூட்டினார்.

புலவர் கலியபெருமாளை மரணதண்டனையிலிருந்து காக்க பலரும் போராடி, கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

1981-இல் கலியபெருமாளும், அவர் குடும்பத்தினர் ஆக ஏழு பேர் சிறையில் வாடுவதை அறிந்த தில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் "கன்ஷியாம் பர்தேசி" என்பவர் நேரில் வந்து சந்தித்து பின் மனித உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, குழு அமைத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அவர்கள் அனைவரையும் 1983 ஆம் ஆண்டு நிபந்தனையற்ற நீண்டகால பரோலில் வெளியே மீட்டு வந்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து அதே நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தண்டனையில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஆர்.என். பகவதி மற்றும் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இவ்வழக்கின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சிறைக்கைதிகள் அனைவரையும் மனிதாபிமானத்துடன் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதன்பின்னர், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, புலவர் கலியபெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நிபந்தனையற்ற பிணையலில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

வேலூர் சிறையில் இருந்தபோது தமிழ்நாடு விடுதலை குறித்து சக தோழர்களிடம் விவாதித்தார் புலவர் கலியபெருமாள். சிறையிலிருந்து வெளிவந்தவுடன், 1984-ஆம் ஆண்டு மே 15 மற்றும் 16 ம் நாள்களில் பெண்ணாடத்தில் தேசிய இனங்களின் விடுதலை குறித்த மாநாட்டை நடத்தினார். அம்மாநாட்டின் முதல் நாளன்று அவர் தலைமை தாங்கினார். ஈழத் தமிழர்களுக்குத் தனிநாடு என்ற கோரிக்கையை வலியுறுத்திப் பேசியதன் விளைவாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (மார்க்சிய-லெனினிய) நீக்கப்பட்டார்.

தம் விடுதலைக்குப் பிறகு, தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியை (மார்க்சிய-லெனினிய) சக தோழர்களோடு உருவாக்கி முன்னெடுத்துச் சென்றார். தமிழ்நாடு விடுதலைப் படை உருவாக்கம் பெற்றது. 1-9-1987அன்று பொன்பரப்பியில் தோழர் தமிழரசன் கொல்லப்பட்டார்.

தென்னார்க்காடு மாவட்டம், மீன் சுருட்டியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சாதியொழிப்பு மாநாட்டிற்குப் புலவர் கலியபெருமாள் தலைமை தாங்கி நடத்தினார். அம்மாநாட்டில் தான் தோழர் தமிழரசன் சாதி ஒழிப்பு பற்றியும், தமிழக விடுதலைப் பற்றியும் விரிவான அறிக்கையை அளித்தார்.

தமிழகத்தில் நக்சல் இயக்கத்தைத் தொடங்கிய புலவர், பிறகு தமிழ்த் தேசியராக மாறினார்.

இவர் தனது வாழ்க்கை வரலாறை "மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன்" என்ற பெயரில் சுயசரிதையாக எழுதியுள்ளார்.

16 05 2007 அன்று மறைந்த அவரின் உடல் பெண்ணாடம் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான சௌந்தரசோழபுரத்தில், (22 2 1970) அவரது தோழர்கள் சர்ச்சில், கணேசன், காணியப்பன் மரணம் எய்திய அதே இடத்தில், தென்னஞ்சோலை செங்களத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

புலவர் கலியபெருமாள் தோழர் தமிழரசன் ஆகியோர் தமிழ்த் தேசியத்தின் பொருளுணர்ந்து தங்கள் இலக்குகளை நிர்ணயித்தனர்.

இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம்; சேரிகள் என்பவை தாழ்த்தப்பட்ட மக்களின் சிறைக்கூடம் என்ற தோழர் தமிழரசனின் சொற்கள் மிகுந்த ஆய்வின் அடிப்படையில்தான் கூறப்பட்டிருக்க முடியும். தீண்டத்தகாதவர்களாக ஐந்திலொரு பங்கு மக்களைத் தூரத்து சேரிகளில் அடைத்து வைத்திருப்பதைச் சனநாயகமாக ஏற்காதவர்கள் தோழர் தமிழரசன் -புலவர் கலியபெருமாள் ஆகியோர். இந்த இரு மாபெரும் போராளிகளின் பார்வையும் ஒன்றே.

1985 இல் மீன்சுருட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய கருத்தரங்கில் ”சாதி ஒழிப்பின் தேவையும், தமிழக விடுதலையும்” என்று தலைப்பிட்ட தோழர் தமிழரசனின் அறிக்கை சமூக விடுதலையையும், தேசிய இன விடுதலையையும் இணைத்துப் பேசுகிறது.

இடைக்காலத்தில் ஐரோப்பாவில் நிலவிய நிலப்பிரபுத்துவ அழிவில் தான் தேசங்கள் எழுந்தன.. அழிவுற்ற நிலப்பிரபுத்துவ இடிபாடுகளிலிருந்து முதலாளிய வகுப்பு எழுந்து நின்றது. ஆனாலும் பிரபுத்துவ சொச்சம் மிச்சங்கள் முதலாளிய புரட்சியின் காலம்வரை தொடர்ந்தன. 1789-இல் பிரான்சில் அதுவரை பிறப்பின் அடிப்படையில் பெருமை பேசிக் கொண்டிருந்த பிரபுக்கள், குருமார்கள் அவர்களுக்குக் கீழே அடிமட்டத்தில் உழவர்கள், செர்ஃப்கள் என்ற ஏற்றத்தாழ்வுகள் ஒரே நாளில் ஒழித்துக் கட்டப்பட்டன. பிரெஞ்ச் தேசத்தவர், பிரெஞ்சு குடிமக்கள் என்ற ஒற்றை அடையாளம் நிறுவப்பட்டது. இந்த நிகழ்வுப் போக்கை குறிக்கும் வகையில் தான் நேஷனலிசம் (தேசியம்) என்ற சொல் எழுந்தது. தேசியம் என்ற சொல்லின் சாரம் இதுதான்.

ஐரோப்பாவில் ஜனநாயகப் புரட்சி நடைபெற்றபோது சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் இருந்த ஏற்றத்தாழ்வுக் குப்பைகளை எல்லாம் அள்ளி எறிந்துவிட்டு, ஒற்றை தேசிய இன அடையாளத்தை நிறுவியது. அதுவே ஐரோப்பாவின் பிற தேசங்களிலும் எதிரொலித்தன. ஆனால் இந்தியாவில் நடந்தது என்ன? ஐரோப்பாவின் ஜனநாயகப் புரட்சியின் விளைவுகள் ஆங்கிலேயர்களால் இங்கும் கொண்டு வந்து தரப்பட்டன. இந்திய அரசியலமைப்பு அதை ஏற்று நிலைப்படுத்தியது. ஆனால் முதலாளிய(ஜனநாயக)ப் புரட்சியின் போது மேற்குலகில் நிகழ்ந்ததுபோல ஏற்றத்தாழ்வு சமூகப் பிளவுகள் இங்கே ஒழிக்கப்படவில்லை. ஜனநாயகப் புரட்சி அளித்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவை இந்தியாவில் இன்றளவும் பொருளற்றவையாக இருக்கின்றன. அதேநேரம் ஐரோப்பாவில் சமூகப் பிளவுகள் ஒழிக்கப்பட்டு விட்ட காரணத்தால் அவை பொருள் பொதிந்த கருத்தாக்கங்களாக உள்ளன. இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்த நிலையில்தான், முதலாளிய புரட்சி செய்த வேலையையும், தேசிய இன விடுதலைப் புரட்சி செய்ய வேண்டிய வேலையையும் இணைத்துத் தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோர் பேசினர்.

ஒருபுறம் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு, மற்றொருபுறம் சாதிகளை, சாதி அடையாளங்களை முன்னிறுத்துவது என்பது தமிழ்த் தேசிய ஒழிப்பு வேலை திட்டம் ஆகும். சாதிகளை ஒழிப்பதுதான் தமிழ்த் தேசியம் ஆகும்.

தமிழ்த் தேசிய போராளிகளான புலவர் கலியபெருமாள் - தோழர் தமிழரசன் ஆகியோரை அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தி  அவர்களுக்கு ஒரு சாதி அடையாளம் கொடுத்தாலே போதும்; அதுவே அவர்களை இழிவுபடுத்துவதாகத்தான் பொருள். புலவர் கலியபெருமாள் தோழர் தமிழரசன் ஆகியோர் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள்; சாதி அடையாளத்தை எதிர்த்தவர்கள்; சாதி ஒழிப்புக்கு பங்களித்தவர்கள். தேசிய இன ஓர்மைக் குறியீடாக விளங்கியவர்கள்.

தமிழ்த் தேசியம் கருவி ஏந்தி களமாடிய எழுச்சிமிகு காலத்தின் வரலாற்றுப் பெருமகன் புலவர் கலியபெருமாள். அவருக்கும் புகழஞ்சலி செய்கிறோம்.

(கடந்த 14 5 23 அன்று சீர்காழியில் நடைபெற்ற புலவர் கலியபெருமாள் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேராசிரியர் த. செயராமன் அவர்களின் உரை..)

Pin It