பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை விரட்டிட நடந்த விடுதலைப் போராட்ட காலத்திலும், இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும்கூடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1965 மொழிப் போருக்கு ஈடான மகத்தான மக்கள் போராட்டம் வேறெதுவும் நடந்ததில்லை.
மாணவர் போராட்டமாகக் கருக்கொண்டு மாபெரும் மக்கள் போராட்டமாக விரிந்து பரந்த தமிழர் எழுச்சி அது! 1965 சனவரி 26முதல் இந்தி மட்டுமே இந்திய ஆட்சி மொழி என்று இந்திய அரசமைப்புச் சட்டம் விதித்த கட்டளையை விலக்கிட நடந்த போராட்டம் அது! அச்சட்டம் செயல்பட்டால் தமிழ் அழிந்து போகும் என்ற ஆபத்தை உணர்ந்து, தமிழ் காத்திட எழுந்த போராட்டம் அது!
இந்த ஆபத்தைத் தடுப்பதற்கான எச்சரிக்கை உணர்வை ஊட்டி, போராட்டத்திற்கான உந்து ஆற்றலை ஊட்டியது ஓர் அரசியல் இயக்கம் என்றாலும், மொழிப் போராட்டம் பொதுத் தன்மையுடன், அனைத்து மாணவர் போராட்டமாக எழுந்தது.
அம்மொழிப் போரில் தீக்குளித்தும், நஞ்சுண்டும் தற்கொடை ஈகம் செய்தோர் பலர். வரவழைக்கப்பட்ட இராணுவத்தினரும் தமிழ்நாட்டுக் காவல்துறையினரும் முந்நூற்றுக்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றனர். ஐம்பது நாள் இப்போராட்டம் தொடர்ந்தது. அரசு அலுவலகங்கள் பல நாள் இயங்கவில்லை.
இப்போராட்டத்தின் விளைவாக இந்தி மட்டுமே ஒரே ஆட்சிமொழி என்ற நிலை தடுக்கப்பட்டது. ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடரும் நிலை ஏற்பட்டது. ஆனால் தமிழின் நிலை இந்திய அளவிலும் தமிழ்நாட்டளவிலும் என்ன என்ற வினா இருந்து கொண்டே உள்ளது.
அயல்மொழி ஆதிக்கம் தடுத்திடவும், தனது தேசிய மொழி காத்திடவும் இதுபோல் உலகில் வேறெங்கும் இவ்வளவு பெரிய போராட்டம் நடந்ததில்லை; பல நூறு பேர் உயிரீகம் செய்ததில்லை. ஆனால் அதன் பலனைத் தமிழ் மொழியும் தமிழினமும் பெற்றனவா என்பது வினாக் குறியாகவே உள்ளது.
கடந்த ஐம்பதாண்டுகளில் மொழிப்போர் ஈகியர்க்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்கள் எத்தனை? பாடப்புத்தகத்தில் நம் மொழிப் போராட்டங்கள் ஏற்றப்பட்டனவா?
தனிமுயற்சியில் சிதம்பரத்தில் மாணவ ஈகி இராசேந்திரனுக்குச் சிலை வைக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் தனியார் முயற்சியில் நினைவுத் தூண்கள் எழுப்பப்பட்டன. மொழிப் போர் ஈகியர் பெயரை ஒரு சில பாலங்களுக்கும் கட்டடங்களுக்கும் தமிழ்நாடு அரசு சூட்டியது. மொழிப்பேர் ஈகியர் வாரிசுகளுக்கு உதவித் தொகை வழங்கியது. ஆனால் எல்லா மொழிப் போர் ஈகியும் அடையாளம் காணப்படவில்லை.
1965 மொழிப் போருக்கு உந்து ஆற்றலாய் இயங்கிய இயக்கம்கூட மொழிப்போர் 50ஆம் ஆண்டைத் தனித் தன்மையுடன் கடைபிடிக்காமல் ஒதுங்கிக் கொண்டது. 1938, 1965 மொழிப் போராட்டங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவே இல்லை.தமிழ்நாடு அரசு மொழிப்போர் – 50ஆம் ஆண்டைக் கண்டுகொள்ளவே இல்லை.
ஆனால் அண்மையில் தமிழ்மொழி ஆர்வமுள்ள நண்பர்கள் சிலர் சென்னையில் மொழிப்போர் – 50 மாநாடு நடத்தி சிறப்புச் சேர்த்தனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் மொழிப்போர் – 50 மாநாட்டை முழுநாள் நிகழ்வாகத் தமிழ் வளர்த்த மதுரையில் தமுக்கம் கலையரங்கில் 24.1.2016 ஞாயிறு காலை 9.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் மொழிப்போர் மிகவும் முன்பே தொடங்கிவிட்டது. அயல்மொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காத்திட 1916-இல் மறைமலை அடிகளார் தனித்தமிழ் இயக்கம் தொடங்கினார். 1938-இல் பள்ளிக் கல்வியில் காங்கிரசு ஆட்சி இந்தியைத் திணித்த போது, பெரியார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தரபாரதியார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், கரந்தைத் தமிழவேள் உமாமகேசுவரனார் போன்ற பெருமக்கள் முயற்சியில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது.ஆயிரக்கணக்கானோர் சிறைப்பட்டனர். நடராசனும் தாளமுத்துவும் சிறையில் மாண்டனர். காங்கிரசுக் கட்சி பதவி விலகியபின் ஆங்கிலேய ஆளுநர் ஆட்சி இந்தித் திணிப்பை விலக்கிக் கொண்டது.
இந்திய விடுதலைக்குப் பின்னும் 1940களின் இறுதிப் பகுதியில் இந்தி திணிக்கப்பட்டு – அதை எதிர்த்துப் போராட்டங்கள் தொடர்ந்தன.
இவை அனைத்தையும் நினைவு கூர்ந்து இவற்றிற்கான தலைப்புகளுடன் மொழிப்போர் – 50 மாநாட்டில் கருத்தரங்குகள் நடக்கின்றன. ஒளிப்படக் கண்காட்சியும் நடைபெறுகிறது. குறும் படங்கள் தயாரிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி, ஆட்சி, கணிப்பொறி, இசை, நாடகம் – திரைத்துறை, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் தமிழை அலுவல் மொழியாக்குவது, செயல்பாட்டு மொழியாக்குவது, சமகாலத்திற்கு ஏற்ப மேம்படுத்துவது ஆகியவை குறித்த கருத்தரங்குகள் நடக்கின்றன.
மொழிப்போரில் உயிரீகம் செய்தோரின் வாரிசுகள், மூத்த தமிழறிஞர்களின் வழித்தோன்றல்கள் ஆகியோர்க்குச் சிறப்புச் செய்யும் நிகழ்வும் உள்ளது.
ஆழங்கால்பட்ட அறிஞர் பெருமக்கள், அடுத்த தலைமுறை இளைஞர்கள், பாவலர்கள், கலைஞர்கள் எனப் பலரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்.
வருங்கால செயல்திட்டங்கள் – அறப்போராட்டங்கள் ஆகியவற்றிற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
தமிழ்மொழி – தமிழ்நாட்டில் தாய்மொழி மட்டுமன்று, தமிழ்நாட்டின் பொது மொழி – தேசிய மொழி! எனவே, இம்மாநாட்டைப் பொது நிலையில்தான் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்துகிறது.
எனவே, தாங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் மாநாட்டிற்கு வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன்.
- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்