பன்னாடுகளின் குப்பைத் தொட்டி இந்தியா என்றால், இந்தியாவின் குப்பைத் தொட்டி தமிழ்நாடு! காரணம் தமிழ்நாட்டின் கங்காணி ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் மக்களை, மண்ணை, சுற்றுச்சூழலைப் பற்றி எவ்வித அக்கறையுமின்றி தங்களது பணப்பையை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டே செயல்படுகின்றனர். இவர்களுக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளும் அவர்களது கூட்டணி துண்டு துக்காணி கட்சிகளும் உடந்தையாகும்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு சுத்தரிப்பு நச்சு ஆலையை பயோடெக் இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸ் நிறுவ திட்டமிட்டிருந்தது. அதற்கான பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் 09.10.2025 அன்று நடைபெறும் என்ற தகவல் தோழர் சி.அ. மணிகண்டன் (தமிழர் கழகம்) மூலமாக செப்டம்பர் நடுவாக்கில் அறிந்தேன். அதற்கான பணியில் 19.09.2025லிருந்து, இப்போராட்டம் வெற்றி அடைந்த 2025 டிசம்பர் 13ஆம் தேதி வரை விடாமுயற்சியுடன் ஈடுபட்டேன், ஈடுபட்டோம்.
இந்த நச்சு ஆலைக்கு எதிரான போராட்டம் பல்வேறு தடைகளுக்கிடையே மூன்று கட்டங்களின் ஊடாக முன்னேறியது. முதல் கட்டத்தில் ஆலை நிர்வாகமும், அரசியல் கட்சியினரும் போராட்டக் குழுவினரின் நம்பிக்கை மீதான அவதூறுகளைப் பரப்பி, பொதுமக்களை கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு வரவிடாமல் செய்வதற்கு செய்த முயற்சியையும், இரண்டாவது கூட்டத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டக் களத்தில் இருந்த பொதுமக்களில் ஒரு பிரிவினரை (குறிப்பாக ஆண்களை) நாடாளுமன்ற உறுப்பினரின் உறுதி மொழியை ஏற்று போராட்டக் களத்தில் இருந்து விலக்கியதையும், மூன்றாவது கட்டத்தில், போராட்டக் குழுவினரிடையே இரு பிரிவுகள் தோன்றி, ஒரு பிரிவு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிராகவும், மற்றொரு பிரிவு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு வழிகாட்டி, போராட்டத்தை வெற்றிக்கு கொண்டு வந்த நிகழ்வுகளும் நடந்தன.
இம்மூன்று கட்டத்திலும் போராட்டத்தின் ஒற்றுமையைக் குலைக்க, அதன் வெற்றிப் பயணத்தைத் தடுக்க, போராட்டத்திற்கு வெளியிலிருந்தும், போராட்டக் குழுவிலிருந்து எழுந்த முரண்பாடுகளை சரியாக கையாண்டு, போராட்டமானது வெற்றியை நோக்கி முன்னேறியுள்ளது. போராட்ட களத்திற்கு வெளியில் இருந்தும் உள்ளிருந்தும் எழுந்த கடுமையான முரண்பாடுகளை கையாண்டதில் எனது அணுகுமுறை என்பது போராட்ட நலன்களைப் பாதுகாப்பது, உயர்த்துவது என்பதாக மட்டுமே இருந்தது. தனிப்பட்டவர்களின் நலன்களை, உணர்வுகளை புறக்கணித்தேன். ஆகையினால் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை சிலரால் விமர்சிக்கப்பட்டேன். அந்த சிலரின் விமர்சனங்களுக்கு அஞ்சி பின்வாங்கி இருந்தேன் என்றால் 13.12.2025-ல் வட்டாட்சியரின் எழுத்துப்பூர்வ ஆணை ஆலைக்கு எதிராக போராட்ட களத்தில் மக்களின் முன்னிலையில் வாங்க இயலாது போயிருக்கும்.
முதலாவது கட்டம் (19.9.2025 முதல் - 09.10.2025 வரை)
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இதே போன்ற ஆலை நிறுவப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் கால்ஸ் சாராய ஆலை நிறுவப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரண்டு ஆலைகளுக்கு எதிரான போராட்டத்தை அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரண்டு நடத்தியுள்ளனர். இப்போராட்டத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் போலி சமூக ஆர்வலர்கள் பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இவ்விரண்டு போராட்டங்களில் அனுபவங்களை தொகுத்து கொண்டு பிசானத்தூர் போராட்டத்தை வெற்றியை நோக்கி பொதுமக்களை இறுதிவரை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை கணக்கில் கொண்டு ஆலையின் தீமைகளை விளக்கி துண்டறிக்கை போட்டோம். துண்டறிக்கையை சுற்றுப்புற கிராமங்களில் பரப்பவும், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் போராட்டக் குழுவை அமைத்தோம். போராட்டக் குழுவில் எழக்கூடிய முரண்பாடுகளை ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவ கொள்கைகளின் அடிப்படையில் தீர்த்துக் கொள்வது என முடிவு செய்து போராட்டத்தை திட்டமிட்டபடி தொடங்கினோம்.
2025 செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 8 வரை பிசானத்தூரிலும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களிலும் பிசானத்தூர் உயிரி மருத்துவக் கழிவு ஆலையை எதிர்த்து கூட்டமைப்பு சார்பில் பெருமளவில் பரப்புரை செய்தோம். இதன் பயனாய் 08.10.2025 அன்று கந்தர்வகோட்டையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதன் விளைவாக 09.10.2025 அன்று கந்தகோட்டையில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கருத்துக்கீ கேட்புக் கூட்டத்தில் 100 விழுக்காடு மக்கள் ஆலை வேண்டாம் என்று கருத்து கூறினர். கருத்து கேட்புக் கூட்டம் ஆலைக்கு எதிராக வெற்றிகரமாக முடிந்தது. இக்கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வணிக சங்கங்கள், ஆளும், எதிர்க் கட்சியினர், சிறு, குறு அமைப்பினர் கலந்து கொண்டனர். ஆலைக்கு ஆதரவாக கருத்துக்க கூற அழைத்து வரப்பட்டவர்கள் கூட வாய் மூடினார்கள். சிலர் ஆலைக்கு எதிராக கருத்துக்க கூறினார்.
இரண்டாவது கட்டம் (10.10.2025 முதல் 04.12.2025 வரை)
பொதுமக்கள் கருத்து கேட்குக் கூட்டத்தில் 100 விழுக்காடு மக்கள் ஆலை வேண்டாம் என கருத்து தெரிவித்தாலே ஆலை வராது என்பதல்ல. கருத்து கேட்குக் கூட்டம் என்பது மக்களை அழிக்கும் ஒரு சடங்காக அரசு நடத்துகிறது என்பதை அறிந்து ஆலை வராது என அரசு எழுத்து வடிவில் அறிவிக்கும் வரை தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, 2025 அக்டோபர் 25ஆம் நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினோம். இப்போராட்டத்தைத் தடுப்பதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என கூட்டாக சேர்ந்து போராட்டக் குழுவில் இடம் பெற்றோர் பணத்தைப் பெற்றுக்கொண்டு போராட்டத்தைக் கைவிட்டு விடுவர். குறிப்பாக சீ.அ. மணிகண்டனும், பாரி (ஏ) குபேந்திரனும் பணத்தைப் பெற்றுக் கொண்டு போராட்டத்தைக் கைவிட்டு விடுவர் எனவும், அவ்விருவரையும் நம்ப வேண்டாம் எனவும் பிரச்சாரம் செய்தனர். இதனையும் மீறி மக்கள் தயக்கத்துடன் முதல் நாள் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தை தோழர் கி.வெ. வெங்கட்ராமன், (தமிழ் தேசிய பேரியக்கம்), தோழர் அரங்க. குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சி கழகம்) ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். இப்போராட்டம் மெதுவாக அடுத்தடுத்து எழுச்சி பெற்றது.
பிசானத்தூர் சுற்றுப்புற கிராம மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் தமிழகம் முழுவதிலிருந்தும் போராட்ட களத்திற்கு வந்து ஆதரவு நல்கினர். புதுக்கோட்டையில் இருந்து அனைத்து அரசியல் கட்சியினரையும் ஒருங்கிணைத்து போராட்டக் களத்திற்கு வாகன பேரணியை போராட்டக் குழு நடத்திக் காட்டியது. இப் போராட்டத்திற்கு ஆதரவாக கந்தர்வகோட்டையில் உள்ள அனைத்து வணிக சங்கங்களும், ஆட்டோ சங்கங்களும், தரைக்கடை சங்கங்களும், கட்சி வேறுபாடின்றி ஒரு நாள் முழுச் கடையடைப்பு நடத்தினர். நூறு விழுக்காடு கடையடைப்பு போராட்டம் முழு நாள் நடைபெற்றது. கந்தர்வகோட்டை வரலாற்றிலேயே இப்படி ஒரு கடையடைப்புப் போராட்டம் நடந்ததில்லை என மக்களே தங்களுக்குள் பேசிக் கொண்டனர். போராட்ட களத்தின் ஒரு கட்டத்தில் நாளடைவில் பெண்களே போராட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தினர். அவர்களுக்குரிய முறையில் ஆலைக்கு எதிராக பொங்கல் வைத்தல், கும்மி அடித்தல், கோலமிடுதல், பாட்டு பாடுதல், கலை நிகழ்ச்சிகள், ஒளிய காட்சிகள், பேச்சுப் போட்டிகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு படம் ஓட்டுதல், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக் கொடி கட்டுதல் போன்ற போராட்டங்களை ஒருங்கிணைத்து அறவழியில் போராடினர். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் வரக்கூடிய கருத்து முரண்களை தங்களுடைய பேசி ஜனநாயக முறையில் தீர்த்தனர். இப்போராட்டத்தில் ஆண்களும் பெண்களும் தங்களுடைய வேலைகளை பிரிவினை செய்து கொண்டனர்.
11.10.2025, 02.11.2025 ஆகிய இரண்டு நாட்களில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஆலை வேண்டாம் என பிசானத்தூரிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ 2025 நவம்பர் 22 அன்று போராட்ட களத்திற்கு வந்து இந்த ஆலை வராமல் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்வதாக உறுதி கூறினார். கூறியதுடன் இல்லாமல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) நிறுவ இசைவு அளிக்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்ததாக 2025 நவம்பர் 30 அன்று துரை வைகோ அறிவித்தார். இவர் அறிவித்த நாளிலிருந்து போராட்டத்தை கைவிட்டு செல்வதற்கான முயற்சிகள் ஆளுங்கட்சி தரப்பிலிருந்தும், அதிமுக ஒன்றிய செயலாளார் செ. வைரமூர்த்தி மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி 2025 டிசம்பர் 4ஆம் தேதி இரவு ஊர்க்காரர்கள் (ஆண்கள்) கூடிப் பேசி போராட்டத்தை கைவிடுவதாகவும், போராட்ட களத்தில் பாரி (எ) குபேந்திரனை பேச விடக்கூடாது என்றும் முடிவெடுத்தனர்.
போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதால் போராட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டக் குழுவில் உள்ள மற்றொரு பிரிவினர் கூறினர். இவ்விரண்டு பிரிவினருக்கும் இடையில் மாவட்ட ஆட்சியரிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஆணை வாங்காமல் போராட்டத்தைக் கைவிடுவதில்லை என்றும், போராட்டதைத் தொடங்கிய நாம் தான் போராட்டத்தை முடிக்க வேண்டும் என்றும் போராட்டக் குழுவில் ஒரு பிரிவு தோழர்கள் பாரி (எ) குபேந்திரன், செ. அருண்குமார் - கம்யூனிஸ்ட் கட்சி (மா-ல) மக்கள் விடுதலை, பார்வேந்தன் - வி.சி.க.) உறுதியாக வாதிட்டது. ஆகவே, போராட்டக் குழு இரண்டாக உடைந்தது. 05.12.2025 அன்று தோழர் சீ.அ. மணிகண்டன் இரு பிரிவுகளுக்கு இடையில் சமாதானப் பேச்சு நடத்தி போராட்டத்தை தொடர்வது என முடிவெடுத்தாலும் கூட, அடுத்தடுத்து நடந்த நிகழ்ச்சிகள் பிரிவு தவிர்க்க இயலாதது என்பதை உறுதிப்படுத்தியது. 5ம் தேதிக்கு பிறகு தோழர் சீ.அ. மணிகண்டன் சொந்த வேலையின் காரணமாக போராட்ட களத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது கட்டம் (05.12.2025 முதல் 13.12.2025 வரை)
முதல் மற்றும் இரண்டு கட்டங்களில் நடந்த போராட்டத்தில் போராட்டக் குழுவும், மக்களும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டனர். இந்த ஒற்றுமையை சிதைப்பதற்கு ஆளும் மற்றும் எதிர் கட்சியினர் இவர்களுடன் (கந்தர்வகோட்டை பகுதி அளவில்) அரசும் கூட்டாச் சேர்ந்து தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். இவர்களது முயற்சி மக்களின் போராட்ட ஒற்றுமையால் தவிடுபொடியாக்கப்பட்டது. தற்போது போராட்டக் குழுவில் ஏற்பட்ட பிளவில் ஒரு பிரிவு இந்த ஒற்றுமையை சிதைப்பவர்களுக்கு மறைமுக ஆதரவாக அமைந்தது. எப்படி என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குறுதியை நம்பி பொதுமக்களின் ஒரு பிரிவு போராட்டத்தை கைவிட்டதென்றால், போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு இல்லை, எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டக் குழுவில் ஒரு பிரிவு வாதிட்டது. இரு பிரிவினரும் கூறிய காரணங்கள் வேறுவேறாக இருந்தாலும் இருவரது முடிவும் போராட்டதைத் தொடரக் கூடாது என்பதே!
5ம் தேதி சமூக ஊடகங்கள் பிசானத்தூர் போராட்டம் முடிந்து விட்டதாக செய்தி வெளியிட்டன. பொதுமக்களில் ஒரு பிரிவினர் குழம்பிப் போயினர். குறிப்பாக பெண்கள் அடுத்தடுத்து என்ன செய்வது என்று தடுமாறி நின்றனர். போராட்டமானது கடலில் தத்தளித்த கப்பல் போல தலைமையின்றித் தடுமாறியது. இந்நிலையை சரியாக புரிந்து கொண்டு உள்ளூர் அளவில் திரு.ரெ. அடைக்கலம் மூலம் மீண்டும் போராட்டம் புத்துஎழுச்சி பெற்றது. எவ்வளவு ஆண்டுகள் போராடினாலும் அரசு தரப்பில் இருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவு வராது என கிண்டல் அடித்தவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் 13.12.2025 அன்று கந்தர்வகோட்டை வட்டாட்சியர் தனது அதிகார வர்க்கம் படைச்சூழ போலீஸ் படையுடன் போராட்டக் களத்திற்கே வந்து எழுத்துப்பூர்வ ஆணையை மக்களிடம் கொடுத்தார். 25.10.2025 இல் தொடங்கிய தொடர் காத்திருப்புப் போராட்டம் 50 வது நாளில் கந்தர்வகோட்டை வட்டாட்சியரின் ந.க.எண். 3538/2025, ஆ4/நாள் 13.11.2025இல் எழுதி கோட்டாட்சியருக்கு அனுப்பியதை போராட்டக் குழுவில் ஒரு பிரிவினரும் பொதுமக்களும் ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தோம். அந்த ஆணையில் "ஆலை அமைவிடத்திற்கு அருகில் 372 மீட்டரில் மனை இடங்கள் உள்ளது எனத் தெரிவித்து பொதுமக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால் சுத்திகரிப்பு ஆலை அமைய அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்து அரசு அறிக்கை அனுப்பலாம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இருந்தது.
இந்த ஆணையை ஏற்காத போராட்ட குழுவில் உள்ள மற்றொரு பிரிவின் குளறுபடியால் கைதானோம். பிறகு உண்மையை உணர்ந்து ஆலை வரும் என்ற முகாந்திரம் வந்தால் கூட மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என காவல்துறைகக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலை ஆனோம். போராட்டக் குழுவிலிருந்த மற்றொரு பிரிவினர் 30 பேரில் 6 பேர் மட்டும் தாங்கள் போராட்டத்தை தொடர்வதாகக் கூறிவிட்டு வந்தனர். அவர்கள் இன்று வரை போராட்டத்தைத் தொடரவில்லை. பிசானத்தூர் மக்களின் 50 நாளைய தொடர் காத்திருப்பு போராட்டம் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். காரணம், இந்தப்போராட்டத்தை பெரிய கட்சிகள் நடத்தவில்லை என்பதுடன் பெரிய கட்சிகள் ஆதரவு கூடத் தரவில்லை. சமூக ஊடகங்கள் போராட்ட செய்தியை மறைத்தன. பல்வேறு இடையூறுகளுக்கு இடையே மாறுபட்ட கொள்கைகளை கொண்ட சிறிய அமைப்புகள் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனின் வழிகாட்டலில் இந்த போராட்டத்தை வெற்றியை நோக்கி இட்டுச் சென்றுள்ளன. இந்த வெற்றிக்கு பல காரணங்கள் இருந்த போதும், போராட்டக் களத்தில் இருந்தவர்களுக்கும், போராட்டக் களத்திற்கு வெளியூர்களிலிருந்து வந்தவர்களுக்கும் உணவளித்த அகத்தியர் சன்மார்க்க சங்கம் 'ஒங்காரக் குடில்' முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
தமிழர் தாயகம் மீட்போம்
தமிழர்களது தாயகம் அல்லது தாய் நாடு என்பது தமிழ்நாடு தவிர இந்தியா அல்ல. தமிழ்நாட்டின் தாயக உரிமை என்பது ஆட்சிய புல கட்டுக்கோப்பு (அதாவது ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலம், நீர், கனிம, கரிம வளங்கள் உள்ளிட்டவை) எல்லைகளின் மீறாவொண்ணாமை, மக்கள் தொகை இயைபு ஆகியவற்றின் மீதான தமிழர்களது உரிமையை குறிப்பதாகும். இவ்வுரிமை நமது தாயகமாம் தமிழ்நாட்டிற்கு இல்லை. நமது தாயக உரிமையை இந்திய ஏகாதிபத்தியமும், பன்னாட்டு ஏகாதிபத்தியங்களும் பறித்துள்ளன.
பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு ஆலையை நிறுவ ஆலை உரிமையாளர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கையை பொய்யாக தயாரித்துள்ளார் என ஆதாரங்களைக் காட்டி வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் பொதுமக்கள் பலமுறை படையெடுத்துத் தெரிவித்தபோதும் ஆலையை வராமல் தடுப்பதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை எனத் தெரிவித்தனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கே (SEIAA) அதிகாரம் உண்டு என்றனர். சமூக அக்கறையற்ற படிப்பாளிகள் கூட்டத்தைக் கொண்டே SEIAA ஆகும். இவர்கள் தான் பிசானத்தூரில் ஆலையை நிறுவலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய உள்ளனர். ஆலை நிறுவுவதற்கு, இயங்குவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) இசைவு தராது என துரை வைகோ கூறியதை மக்கள் ஏற்று SEIAA தனது முடிவை அறிவிக்கும் வரை மக்கள் அச்சத்துடனே வாழ்ந்தாக வேண்டும்.
பிசானத்தூர், மக்களின் 50 நாளைய தொடர் காத்திருப்பு போராட்டம் நமக்கு கற்றுத் தருவது, தமிழ்நாடு தனது தாயக உரிமையை இழந்துள்ளது. அதனை மீட்க வேண்டும் என்பதேயாகும்.
- பாரி (ஏ) ச.குபேந்திரன், தமிழ்த் தேச இறையாண்மை