அண்மையில் (ஆகஸ்ட் 2011) காலமான இந்தியாவின் மூத்த வரலாற்றறிஞர் ஆர்.எஸ்.சர்மா வரலாற்றில் மட்டுமின்றி வடமொழியிலும், மார்க்சியத்திலும் நல்ல புலமை மிக்கவர். அவரது வரலாற்றாய்வில் பல அரிய தரவுகளை முன் வைப்பதற்கும் அவற்றை விமர்சனப் பார்வையுடன் ஆய்வு செய்வதற்கும் அவருக்கு இப்புலமை உறுதுணையாக அமைந்தது. உலகப் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் ஏ.எல்.பா~த்தை நெறியாளராகக் கொண்டு அவர் மேற்கொண்ட முனைவர்பட்ட ஆய்வு ‘பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள்’ என்பதாகும். அதில் கலியுகம் குறித்து அவர் எழுதிய செய்திகளை விரிவுபடுத்தி ‘மத்திய காலத்தின் தொடக்கத்தில் இந்தியச் சமுதாயம்’ என்ற நூலில் எழுதியுள்ளார். இந்நூலில் இடம்பெறும் கலியுகம் என்பது குறித்த அவரது கருத்துக்களை அறிமுகப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

r_s_sharma_350வடமொழிப் புராணங்களும் ஸ்மிருதிகளும் கிருதயுகம், திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களைக் குறிப்பிடுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் தர்மம் எவ்வாறு நிலைபெற்றிருக்கும் என்பதையும் இவை குறிப்பிடுகின்றன.

கிருதயுகத்தில் பூரணமாய் தர்மம் காணப்படும். ஒழுங்கு முறையும் மகிழ்ச்சியும் நிலவும். எந்த வருணத்தினரும் அதர்மச் செயல்களை மேற்கொள்ளமாட்டார்கள். தர்மத்திற்கு நான்கு கால்கள் அளவு இருக்கும்.

திரேதயுகத்தில் தர்மத்திற்கு மூன்று கால்கள் அளவு இருக்கும். திரேதயுகத்தில்தான் இராமன் வாழ்ந்தான் என்பது நம்பிக்கை. துவாரயுகத்தில் தர்மத்திற்கு மூன்று கால்கள் மட்டுமே இருக்கும். இந்த யுகத்தில் தான் பாரதப்போர் நிகழ்ந்ததாம்.

நான்காவது யுகமான கலியுகத்தில் தர்மத்திற்கு ஒரே ஒரு கால் அளவு மட்டுமே இருக்கும் என்றாலும் கலியுகம் முடிந்த பின்னர் கிருதயுகம் மீண்டும் உருவாகும்.

ஆர்.சி.சாரா என்பவர் புராணங்கள் குறிப்பிடும் இந்நான்குயுகங்களின் காலத்தைக் கணித்துள்ளார். அவரது கருத்துப்படி கி.பி.மூன்றாவது நூற்றாண்டின், முதல் கால் பகுதி வரையுள்ள காலத்தை, கிருதயுகம் குறித்த வருணனைகள் வெளிப்படுத்துகின்றன. திரேதயுகம் குறித்த வர்ணனைகள் கி.பி.எட்டாவது நூற்றாண்டைச் சார்ந்தவை. துவாபரயுகம் குறித்த வர்ணனைகள் கி.பி.பத்தாவது நூற்றாண்டையும் அதற்குப் பின்னாலும் உள்ள காலத்தவை.

நந்தர்கள், மௌரியர்கள் காலத்தையும் ஆந்திரப் பேரரசின் முடிவுவரை உள்ள காலத்தையும் சார்ந்ததாகக் கலியுகத்தைக் குறிக்கலாம் என்பது அவரது கருத்து. இக்காலத்தில் சூத்திரர்கள் மன்னர்களாயிருந்தனர்.

இச் செய்திகளைக் குறிப்பிடும் சர்மா பர்கிட்டர் என்பவரின் கலியுக மன்னர் பரம்பரை குறித்த நூலில், பாரதப் போர் காலத்திலிருந்து (கி.பி.பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதி) குப்தர் ஆட்சி தொடங்கும் காலம் வரை கலி காலமாகும் என்ற கருத்துடன் சாராவின் கருத்து ஒத்துப் போவதாகக் குறிப்பிடுகிறார்.

இச் செய்திகளின் பின்புலத்தில் கலியுகம் என்பது குறித்துப் பின்வரும் கருத்தை சர்மா (2001:47) முன் வைக்கிறார்.

கலி என்பது குறித்த கருத்தோட்டம் மிகத் தெளிவானது. நிலைநிறுத்தப்பட்ட சமூக ஒழுங்கு முறையிலிருந்து எப்போதெல்லாம் விலகல் ஏற்படுகிறதோ அப்போது அது கலியாகவோ அதன் எச்சமாகவோ பார்க்கப்படுகிறது. சடங்குகளைப் புறக்கணித்தலும், ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தோர் செல்வாக்கு பெறுதலும் அந்நியர் அல்லது பிராமணர் அல்லாதோர் ஆட்சியாளர்கள் ஆவதும் கலி என்பதன் பொருளாகிறது. வேறுபாடான சமூகப் படிநிலைகளில் இருப்போர் அல்லது பல்வேறு வருணங்களைச் சேர்ந்தோர் தமக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாதிருப்பதும் மிக முக்கியமான கலிகால நிகழ்வாகும்.

புராணங்களும் மரபுகளும் சமூகவரலாற்றை மறு கட்டமைப்பு செய்ய உதவும் என்பதன் அடிப்படையில் கலி குறித்த வருணனைகளைப் புறக்கணிக்க முடியாதென்று சர்மா கருதுகிறார். பிராமணிய சமூக அமைப்பானது வைசியர்களின் காணிக்கையாலும், சூத்திரர்களின் உழைப்பினாலும் நிலைபெறுவது. ஆனால் பிராமணியம் குறைவாகப் பரவிய இடங்களில் இது சரியாக நிலைபெறவில்லை என்று அவர் கருதுகிறார். மேலும் மூன்று அல்லது நான்காவது நூற்றாண்டுகளில் சமூக ஒழுங்கின்மை உச்ச கட்டத்தையடைந்ததன் காரணமாகவே இக்காலத்தைய வடமொழி நூல்கள் கலியுகம் குறித்து அதிகம் கவனம் செலுத்தியுள்ளன. இக் காலத்தில் பின்வரும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்:

1.     அந்நியர் ஆட்சி

2.     வரிக் கொடுமை

3.     பிராமணர் சூத்திரர் முரண்பாடு

4.     சடங்குகளினால் உருவாகும் தகுதியை விட செல்வத்தினால் உருவாகும் தகுதி முக்கியத்துவம் பெறத் தொடங்குதல்.

5.     மிலேச்ச இளவரசர்களின் ஆதிக்கம்

6.     வருணக் கலப்பு (வருண சம்ஹாரா)

இச் செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு சமூக ஒழுங்கு மீறலின் பரவலானது சலுகைபெற்ற வகுப்பினரின் பாது காப்பையும் பாதித்தது என்கிறார்.

சமூக மரபு மீறலின் முக்கிய காரணிகளாக, அந்நியர் ஆட்சி, பிராமணர் சூத்திரர் முரண் ஆகியனவற்றைக் குறிப்பிட்டு விட்டு வருணக் கலப்பு பரவலானதைக் கூறுகிறார். புராணங்களின் கருத்துப்படி கலியுகத்தின் இறுதியில் பிராமணர், சத்திரியர், வைசியர் என்ற மூன்று வருணங்களும் ஒரே வர்ணமாகி சூத்திரர் நிலைக்கு வரும். தீண்டத்தகாதோர் சத்திரியர், வைசியர்களின் பணிகளை மேற்கொள்வர்.

சர்மாவின் கருத்துப்படி வருணசம்காரா (வருண அழிவு) பல்வேறு நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. உணவு, திருமணம் தொடர்பான வருணத்தடைகளை மீறல், முறையற்ற வாரிசுகளை உருவாக்கல் ஆகியன வருண அழிவாகும்.

இதற்கும் மேலாக வருணசம்காரா என்பது உழவர்கள் மற்றும் வணிகர்கள், வரி, காணிக்கை, கொடை ஆகியன வற்றை சத்திரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் தர மறுப்பதாகும் என்று கூறும் சர்மா, கலியுகத்தில் உருவாகும் வருண முரண்பாடு என்பது சத்திரியர், பிராமணர் என்ற இரு வருணங்களுக்கு எதிராக வைசியர்களும், பிராமணர்களுக்கு எதிராக சூத்திரர்களும் நிகழ்த்துவது என்கிறார். இது தொடர்பாக பல சான்றுகளை அவர் முன் வைக்கிறார்.

உண்மையில் கலிகாலம் என்பது வருணப்படி நிலையில் உயரே இருக்கும் சிறுபான்மையினரான பிராமணர், சத்திரியர்களிடமிருந்து பெரும்பான்மையினரான வைசியர்களும் சூத்திரர்களும் விடுபட்டு நிற்பது என்பதை மேற்கூறிய செய்திகள் உணர்த்துகின்றன. இந்நிலையை விரும்பாத நிலையில் பிராமணியம் உருவாக்கிய புராணங்களும் ஸ்மிருதிகளும் தர்மத்தின் அளவில் நான்கில் மூன்று பங்கு குறைந்து கால்பாகம் மட்டுமே எஞ்சி நிற்கும் காலமாக கலியுகத்தைப் படைத்துள்ளனர். வைசியர், சூத்திரர், தீண்டத்தகாதோர் ஆகியோர் சமூக வாழ்வில் ஏற்றம் பெற்ற சமூகச் சூழலில் அதற்கு எதிராக உருவான புராணப் படைப்பே கலியுகமாகும். உண்மையில் கலியுகம் என்பது உழைப்பவர் நோக்கில் நல்லயுகமாகும்.

சர்மாவின் இந்த ஆய்வு தமிழகத்திற்கும் பொருந்துகிறது. பிராமணியத்தை ஏற்றுக்கொள்ளாத களப்பிரர் ஆட்சியில் தம் முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட பிரமதேய நிலம் பறிக்கப்பட்டதாகக் கூறி பிராமணனொருவன் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனிடம் (கி.பி. 765-790) முறையிட்டதைக் கூறும் வேள்விக்குடிச் செப்பேடு ‘களப்ரானென்னுங் கலி அரைசன் கைக் கொண்டதனை’ என்கிறது.

பிரமதேயம் என்ற பெயரில் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையைப் பறிமுதல் செய்த களப்பிர மன்னன் கலியரசனாக இங்குக் குறிப்பிடப்படுகின்றான். இதனால்தான் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்றழைத்துள்ளனர்.

வருணக்கலப்பு என்பது கொடிய தீமையாகப் பார்க்கப் பட்டதை,

       மறையவர் வேள்வி குன்றி

              மனுநெறி அனைத்தும் மாறி,

       துறைகள் ஆறும் மாறி,

              சுருதியும் முழக்கம் ஓய்ந்தே

       சாதிகள் ஒன்றோ டொன்று

              தலைதடு மாறி, யாரும்

       ஓதிய நெறியில் நில்லாது

              ஒழுக்கமும் மறந்து போயே

என்ற கலிங்கத்துப் பரணி வரிகள் உணர்த்துகின்றன.

கலியுகம் குறித்த பிராமணியச் சிந்தனையின் தாக்கம் தமிழ்நாட்டிலும் இருந்துள்ளதை இச்செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.

Sharma R.S, (2001)

The Kali Age: A Period Of Social Crisis,

Early Medieval Indian Society

Pin It