“மதத்தின் மேலாண்மையும் படிநிலைச்சமூகத்தின் நிலைத்த தன்மையும் பெருந்தாக்குதலுக்குள்ளாகும் காலத்தில்தான் தேசம் என்ற ஓர்அமைப்பு, அக்காலத்தின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் உருவாகத் தொடங்குகிறது” என்று வரலாற்று அறிஞர் ஆண்டர்சன் கூறியுள்ளார். அய்ரோப்பாவில் 15ஆம் நூற்றாண்டில் தொடங்கிய அறிவொளிக் காலம், எதையும் கேள்விக்குட்படுத்தி ஆராய்வது என்ற அறிவுத் தேடலை ஊக்குவித்தது. அச்சுக்கலையின் கண்டுபிடிப்பு பரந்துபட்ட அளவில் மக்கள் நூல்களைப் படிக்கும் வாய்ப்பை உருவாக்கியது. இதன் விளைவாக வளர்ந்த அறிவியல் மனப்பான்மை மதநம்பிக்கைக்கு அச்சுறுத்தலாக எழுந்தது; பிறப்பு, இறப்பு, சாவுக்குப் பிந்தைய வாழ்வு முதலியவை பற்றி மதம் முன்வைத்த வாதங்களைக் கேள்விக்குட்படுத்தியது. அதேகாலக் கட்டத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகளின் உந்துவிசையால் வளர்ந்த முதலாளியம், பழைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பும், கிறித்துவ மத ஆதிக்கமும் தன்வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதால் அவற்றை வீழ்த்தமுனைந்தது. இதன் விளைவாக அய்ரோப்பாவில் தேசியம், தேச-அரசு, சனநாயகம், சுதந்திரம், தனி மனித உரிமைகள், சமத்துவம் முதலான கருத்துகள் எழுந்தன.

நிலப் பிரபுத்துவ உற்பத்தி முறையையும், பிரபுக்களின் அதிகாரத்தையும், அரசின் மீதும், மக்கள் மீதும் கிறித்துவ திருச்சபை செலத்தி வந்த ஆதிக்கத்தையும் தகர்த்து, அய்ரோப்பாவில் முதலாளித்துவ தேச அரசுகள் உருவாயின. இவ்வாறாகப் பதினெட்டாம் நூற்றாண்டில் அய்ரோப்பாவில் தேசியத்தின் எழுச்சியும், மதச்சிந்தனைகளின் வீழ்ச்சியும் ஒரே சமயத்தில் நடந்தன. ஆனால், இந்தியாவிலோ இதற்கு எதிர்மறையான நிலை ஏற்பட்டது. காலனிய ஆட்சிக்கு எதிராக எழுந்த இந்தியதேசிய எழுச்சி மதச் சிந்தனையை மட்டுப்படுத்துவதற்கு மாறாக, இந்து மதத்துக்குத் தேசிய முலாம் பூசி, தனக்குத் துணையாகப் பயன்படுத்திக் கொண்டது.

இந்தியத் துணைக் கண்டத்தில் கி.பி.1526இல் பாபர்முகலாயப் பேரரசை நிறுவினார். 1707இல் அவுரங்கசீப்மறையும் வரை இந்தியாவின் பெரும் நிலப்பகுதி முகலாயப்பேரரசின் கீழ் இருந்தது. ஜகாங்கீர் காலத்தில் 1602இல்வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயக் கிழக்கு இந்தியக்கம்பெனி, படிப்படியாகப் பல பகுதிகளில் தன் அதிகாரத்தை நிலைநாட்டியது. 1757இல் மூன்றாம்பானிப்பட்டுப் போருக்குப் பின் இந்தியாவில் தன்னுடையவலிமையான ஆட்சியை நிறுவியது. ஆங்கிலேயரின் ஆட்சியில்தான் இந்திய துணைக்கண்டம் முழுமைக்கும் ஒரே அரசு, ஒரே நிர்வாகம், ஒரே ஆட்சி முறை, சட்ட முறை, நீதி முறை என்கிற நிலைஉருவானது. கி.பி. 1802இல் குழந்தைகளைக் கடலில் எறியும்வழக்கம் தடை செய்யப்பட்டது.1811இல் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1817இல் ‘கொலை செய்த பார்ப்பானுக்கு மரண தண்டனை இல்லை’ என்ற மனுநீதி நீக்கப்பட்டு, எல்லோருக்கும் மரண தண்டனை உண்டு என்று விதிக்கப்பட்டது. அதாவது, குற்றம் செய்தவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிப்பதில், வருண அடிப்படையில் நோக்குவது நீக்கப்பட்டது. 1829இல் கைம்பெண்களை உயிரோடு எரிக்கின்ற ‘சதி’ அல்லது ‘உடன்கட்டை ஏறுதல்’ என்ற பழக்கம் தடை செய்யப்பட்டது. 1835இல் மெக்காலே கல்வித் திட்டம் மூலம் அனைவருக்கும் கல்விஉரிமை வழங்கப்பட்டது.

ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளவாறு இந்தியாவில் மதத்தின் மேலாண்மையும் வருணாசிரம - சாதிப்படி நிலை அமைப்பைக் கட்டிக் காக்கின்ற முற்றதிகாரமும் பெற்றிருந்த பார்ப்பனர்களுக்கு ஆங்கிலேய ஆட்சியின் மேற்சொன்ன சீர்திருத்த நடவடிக்கைகள் பேரிடியாய் அமைந்தன. எனவே 1857இல் ‘சிப்பாய்க் கலகம்’ என்ற பெயரில் ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராடினர். அரசாட்சியைப் பறிகொடுத்திருந்த முகமதியர்களும் இப்போராட்டத்தில் பெரும் பங்காற்றினர். அந்நிலையில் பிரித்தானிய அரசு, கிழக்கிந்தியக் கம்பெனியிடம் இருந்த ஆட்சி அதிகாரத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. விக்டோரியா பேரரசியிடம் ‘மதவிவாரங்களில் அரசு இனி தலையிடாது’ என்ற உறுதிமொழியைப் பார்ப்பனர்கள் பெற்றனர். இது இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகிய எல்லா மதங்களும் பழமைவாதத்தைக் காத்திட உதவியது.

‘இந்து’, ‘இந்தியா’ ஆகிய இரண்டு சொற்களுமே அயல்நாட்டவர்களால் உருவாக்கப்பட்டனவாகும். வேதங்களிலோ, புராண - இதிகாசங்களிலோ சாத்திரங்களிலோ இந்த இரண்டு சொற்களும் இடம்பெறவில்லை.அலெக்சாண்டரின் படையெடுப்புக்குப் பின், கிரேக்கக் கல்வெட்டுகளில், சிந்து நதிக்கரையோரமாக இருந்த எல்லைப் பகுதிகளைக் குறிப்பிடும் வகையில் ‘ஹிந்துஷ்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப்பின் வந்த அரேபியர்களும் சிந்து நதிக்கு அப்பால் இந்தியத் துணைக் கண்டப் பகுதியில் வாழ்ந்தவர்களைக் குறிக்க ‘அல்-ஹிந்த்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.

Sindus என்ற சொல்லில் உள்ள சமற்கிருத ‘S’ எழுத்து பாரசீக மொழியில் ‘H’ என்று ஒலிக்கப்படுகிறது. வேத காலத்தில் ஆரியவர்த்தனப் பகுதியாக இருந்த சப்த சிந்து, ‘Sapta Sindu’ என்பது பாரசீக மொழியில் ‘Hapta Hindu’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே ‘இந்து’ என்ற சொல் மதத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படவில்லை. சிந்து நதிக்கரைக்கு அப்பால் வாழும் மக்களைக் குறிக்கவே நீண்டகாலம் பயன்படுத்தப்பட்டது. மக்களைக் குறிக்கும் இந்து என்பதே இந்தியா என்ற நாட்டைக் குறிப்பதாயிற்று.

ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. உள்ளிட்ட சங் பரிவாரங்களுக்கு இந்தியா என்ற சொல்லைவிட பாரதம் என்பதே இனிக்கிறது. ஏனெனில் விஷ்ணு புராணத்தில், இமயமலையிலிருந்து தெற்கே கடல்வரையில் பரந்து விரிந்த பரதகண்டத்தை பரத மன்னன் வழித் தோன்றல்கள் ஆண்டனர் என்று குறிக்கப்பட்டுள்ளதால், பாரதம் என்றே அழைக்க விரும்புகின்றனர். காங்கிரசில் இருந்த இந்துத்துவச் சக்திகளும் அரசமைப்புச் சட்டத்தில் பாரதம் என்றே குறிப்பிட வேண்டுமென்று வாதிட்டனர். எனவே ‘பாரதம் எனப்படும் இந்தியா’ என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டது. 1951இல் பாரதிய சனசங்கம், 1980இல் பாரதிய சனதா கட்சி என்றுதான் பெயரிடப்பட்டது.

‘இந்தியா’ என்பதே பெருவழக்காகிவிட்டதால் ‘இந்தியா’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று இந்துத்துவத்தின் மூலவர் வி.தா. சாவர்க்கர் 1923ஆம் ஆண்டிலேயே எழுதிவிட்டார். அதனால் சங்பரிவாரங்கள் மற்றவர்களுக்காக இந்தியா என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். வெள்ளைக்காரன் வந்துதான், இந்து மதம் என்றுபெயரிட்டு நம்மை ஒன்றிணைத்தான் என்று, மறைந்த காஞ்சி சங்கராச்சாரி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்:

“அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்கதர், முருகு பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக்கொண்டு இருப்போம். சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறதா? இல்லை! வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறதா? இல்லை! வைணவர்களுக்குச் சிவன் சாமி அல்ல; சைவர்களுக்குச் சிவன் தான் சாமி! விட்டுணு சிவனுக்குப் பக்தன் என்று சொல்லு கிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம்என்று சொல்வது? வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்ததாலே நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது” (தெய்வத்தின் குரல், பாகம் ஒன்று).

(தொடரும்)

Pin It