இல்லாத இந்துமதம்!

அந்தரத்தில் உத்திரம் வைத்து, சட்டங்கள் வைத்து ஆணியடித்து,  ஆகாயக் கோட்டை கட்டியதுபோல், இல்லாத  ஒரு மதமே இந்துமதம் என்று கற்பிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு வருகிறது.

gurumoorthy 238இந்து மதம் என்று ஒரு மதமே இல்லை; இந்து மதத்திற்கென்று ஒரு கடவுளும் இல்லை; இந்து மதத்திற்கென்று ஒரு கொள்கையும் இல்லை; இந்து மதத்திற்கென்று ஒரு நூலும் இல்லை; இந்து மதத்திற்கென்று ஒரு தலைவரும் இல்லை; தோற்றுவிப்பாளரும் இல்லை.

எதுவும் இல்லாமல் எப்படியொரு மதம் உருவாக முடியும்? ஆனால், உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் அது மோசடியாகத்தானே இருக்க முடியும்?

இந்தியப் பகுதியில் பல்வேறு காலக்கட்டங்களில் பல நூறாண்டுகாலமாய் வெவ்வேறு பகுதிகளில், அப்பகுதி மக்களிடம் காணப்பட்ட பல்வேறு முரண்பட்ட நம்பிக்கைகளை, கொள்கைகளை கடவுள்களை எல்லாம் ஒன்றாகக் கட்டி இதுதான் இந்துமதம் என்று சொல்வதைவிட ஓர் உலகமகா மோசடியிருக்க முடியுமா?

இதை காலஞ்சென்ற சங்கராச்சாரியே சொல்கிறார் படியுங்கள்.

“இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்கிறோம். இதற்கு உண்மையில் இப்பெயர் கிடையாது. நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான்.(தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-126)

வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.” (தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-267)

ஆக, இல்லாத மதத்தை இருப்பதாக வளர்க்க முனைவது மோசடிதானே?

முரண்பட்ட நம்பிக்கைகள் ஒரு மதத்தில் இருக்குமா?

ஒரு மதம் என்றால் அதற்கென்று ஒரு கடவுள் கொள்கைகள், நம்பிக்கைகள் இருக்கும். ஆனால், இந்து மதத்தில் உள்ள எல்லாமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவை, மோதிக்கொண்டவை.

சைவமும் வைணவமும்:

சிவனை வழிபடுகின்றவன் திருமாலை ஏற்க மாட்டான்; திருமாலை வழிபடுபவன் சிவனை ஏற்க மாட்டான்.

சிவ சத்தமே காதில் விழக்கூடாது என்று காதில் மணிக்கட்டிக் கொண்டு திரிந்த வைணவபக்தன் உண்டு.

கோயிலில் இருந்த திருமால் சிலையை சைவர்கள் கடலில் கொண்டுபோய்ப் போட்டார்கள்.

பரஞ்சோதி என்ற பல்லவப் படைத்தலைவன் வாதாபி மீது படையெடுத்து வெற்றி பெற்றபோது அங்கு யானைத்தலை மனித உடலோடு வியப்பான ஓர் உருவத்தைக் கண்டான். அதை அதிசயப் பொருளாய் தமிழகத்திற்குக் கொண்டு வந்தான். அதன் பின்னர்தான் வினாயகர் வழிபாடு தமிழகத்திற்கு வந்தது. அதற்கு  முன் வினாயகர் வழிபாடு தமிழகத்தில் இல்லை. அதன்பின் வினாயகர் முருகனுக்கு அண்ணனாக, பார்வதி பரமசிவன் பிள்ளையாக உறவு கற்பிக்கப்பட்டது. இப்படித்தான் உறவுச் சங்கிலியால் எல்லாவற்றையும் சூழ்ச்சியாகத் தொடர்புபடுத்தினர்.

முரண்பட்டக் கொள்கைகள்

சங்கரர் அத்வைதக் கொள்கை ஜீவாத்மாவும் பரமாத்வாவும் ஒன்று என்கிறது.

இராமானுசரின் விசிஷ்டாத்வைதம் ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்கிறது. மத்துவரின் துவைதக் கொள்கை ஜீவன் எல்லாவற்றிற்கும் முக்தி கிடையாது என்கிறது. மற்ற இரண்டு கொள்கைகளும் ஜீவன்களுக்கு முக்தி உண்டு என்கிறது.

இதில் எது இந்து மதத்தின் கொள்கை. இந்து மதத்தைப் பரப்பத் துடிக்கும் சுயநல ஆரிய பார்ப்பன சூழ்ச்சிக் கூட்டம் இதற்கு அறிவு நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்!

எது கடவுள்? இந்து மதத்திற்கு எது கடவுள்? சிவனா? விஷ்ணுவா? காளியா? மாரியா? முருகனா? வினாயகனா? இராமனா? அல்லது இந்தியா முழுக்க நூற்றுக்கணக்கான கடவுள்கள் உள்ளனவே அவையா? அல்லது மைல் கல்லையும், பர்லாங் கல்லையும் கடவுளாக்கி வைத்திருக்கிறார்களோ அவையா? எது கடவுள்? நேர்மை, நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்?

கடவுளுக்கு உருவம் உண்டா? கடவுள் சக்தி மயமானது. அது அனைத்தையும் கடந்து நின்று இயக்குகிறது என்று கூறிவிட்டு, அதன்பின் கணக்கின்றி கடவுளைக் கற்பிப்பது சரியா? அவற்றிற்கு பெண்டாட்டி பிள்ளை கற்பிப்பது முறையா?

மோசடி மதம்

ஆக, இந்துமதம் என்பது ஒரு மோசடி மதம்! சிலர், பிறர் கருத்துக்களை, சிந்தனைகளைக் களவாடி தொகுத்து தான் ஆராய்ந்ததாகக் கூறுவர். இது ஆராய்வு அல்ல பிராய்வு! அப்படித்தான் இந்து மதம் பலரிடம் பிராயப்பட்ட (களவாடப்பட்ட) ஒரு மோசடி மதம்! என்பதை உளச்சான்றுள்ள, உண்மை பேசும் எவரும் மறுக்க முடியுமா? குருமூர்த்திகள் உள்ளச் சுத்தியிருந்தால் மறுக்கட்டும்!

மனிதநேய மார்க்கமா இந்துமதம்?

இல்லாத மதத்திற்கு மார்க்கம் இருப்பதாகச் சொல்வதே மோசடி! அதுவும் மனிதநேயம் உடைய மதம் (மார்க்கம்) என்பது மகா மகா மோசடி!

மனித நேயம் என்பது தன்னைப் போலவே பிறரையும் நேசித்து, தன்னைப் போலவே பிறரையும் மதித்து, தன்னைப் போலவே பிறரையும் நடத்துவது மனித நேயம். சமத்துவம் அதன் சாரம்!

இந்து மதத்தில் சமத்துவம் உண்டா? சம உரிமை உண்டா? சம நீதி உண்டா? சம மதிப்பு உண்டா? குள்ளநரி குருமூர்த்திகள் கள்ளத்தனமில்லாமல் பதில் கூற வேண்டும்?

நான்கு வருணம்: மனிதனை பிறப்பாலே ஏற்றத்தாழ்வு, இழிவு, புனிதம் உடையவனாய்க் கூறும் மதம் இந்து மதம்.

‘பிரம்மாவின் முகத்தில் பிராமணன் பிறந்தான், தோளில் ஷத்திரியன் பிறந்தான், இடுப்பில் வைசியன் பிறந்தான், காலில் சூத்திரன் பிறந்தான்’ என்பது மனித நேயமா? தாழ்த்தப்பட்டவன் கடவுளின் காலில் கூடப் பிறக்கத் தகுதியற்றவன் என்று அய்ந்தாம் ஜாதியாக ஒதுக்கிவைத்த இந்துமதம் மனிதநேய மதமா?

ஒரு குலத்துக்கு ஒரு நீதி: 

“மௌண்ட்யம் ப்ராணாந்தி கோதண்ட ப்ராஹ்ணானாம் விதீயதே

இதரேஷாம்து வர்ணானமதண்ட; ப்ராணாந்தி; கோபவேத”

மற்றவர்கள் கொலை செய்தால் அவர்களின் தலையை வெட்ட வேண்டும்; ஆரியப் பார்ப்பான் கொலை செய்தால், அவன் தலைமுடியை மட்டும் நீக்கினால் போதும் என்கின்ற மனுசாஸ்திரத்தை உடைய இந்துமதம்தான் மனிநேயத்தைப் போதிக்கிறதா?

“சூதரந்து காரயேத் தாஸ்யம் க்ரீமதக்ரீ தமேவவா; தஸ்யாயைவ

ஹீஸ்ருஷ்டோ ஸெளப்ராஹ மணஸ்ய ஸ்வம்புவா”

அதாவது, கூலி கொடுத்தாகிலும், அல்லது கூலி கொடுக்காமலும், சூத்திரனைப் பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென்றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.

“ஸுர்மித்ரிய ந ஆப ஒஷதய ஸந்து துர்மித்ரியா ஸ்தஸ்மை

ஸந்து யோஸ் மான்த்வேஷ்டியம் சவயம் த்விஷ்ம” (யஜுர் வேதம்)

பார்ப்பனர்கள் நாள்தோறும் பாடுகிற யஜுர் வேதப் பாடல் பகுதியே இது. இதன் பொருள் என்ன தெரியுமா?

தண்ணீர், தானிய வகைகள், பிராணவாயு முதலிய உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்கள் யாவும் எங்களுக்கு (பிராமணர்களுக்கு) நன்மை பயப்பனவாகவும் எங்களால் வெறுக்கப்படுகின்ற மனிதர்களுக்குத் தீமையைச் செய்வனவாகவும் ஆகவேண்டும். வேத ஸ்மிருதிக்கு இணங்கி நடக்காத பகுத்தறிவுவாதிகளுக்கு இவ்வுலகம் விஷமாகப் போகட்டும் என்பதே!

ஆரியர்களின் நலன் கருதி எழுதப்பட்டவையே வேதங்கள் என்பது இதிலிருந்து புரியவில்லையா? வேதங்கள் மட்டுமல்ல வேதங்களுக்கு விளக்கம் தரவந்த ஸ்மிருதிகளின் போதனைகளை ஆராய்ந்தாலும் ஒரே அபத்தம்தான்.

“பிராஹ்மணோ ஜாயமானோ ஹிப்ருதிஸ்யாம் அபியாஜதே

ஈஸ்வர; ஸர்வ பூதானாம் ப்ரஹ்ம கோசஸ்யகுப்தயே”

“ஸர்வஸ்வம் ப்ராஹ்மணஸ்யேதம், யத்கிஞ் சீஜ்ஜகதீகதம்

ஸ்ரைஷ்டைனா பிஜனெனெதம் ஸர்வம் வைப்பிராஹ் மணோர் ஹதி”

“ஸ்வமேவ ப்ராஹ்மணோ புங்க்தேஸ்வம் ததால்ச: ஆன்ருமிம்ஸ்யாத்

பிராஹ்மண ஸ்யயுஞ்ஸதே ஹிதரே ஜனா”   (மனு ஸ்மிருதி)

அதாவது, சகல பிராணிகளுக்கும் தலைவனாயும் வேதமாகிய களஞ்சியத்தின் காவலனாயும், பிராமணன் படைக்கப்பட்டிருப்பதால், இப்பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் பிராமணன் உரிமையுள்ளவனாவான். பிராமணான் பிச்சையெடுத்து உண்பானாயினும், பிறர் உண்பதும் கொடுப்பதும் அவன் பொருளே ஆகும் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.

“தாதவ்வம் ப்ரத்யஹம் பாத்ரே நிமித்தேஷுவிசேஷத்

யாசிதேனா பிதாதவ்யம், ஸ்ரத்தா பூதத்து சக்தித்”      (யக்ஞ வல்கியர்)

அதாவது, பிராமணனுக்குத் தினமும் நாணயமும் கொடுக்க வேண்டும். கையில் ஒன்றுமில்லாவிடில் பிச்சையேற்றோ வேறு எந்த கையிலோ கொடுத்தே தீரவேண்டும் என்பதே யக்ஞ வல்கியர் கூறுவதற்கு அர்த்தம்.

பெண்களை மதிக்கிறதா இந்து மதம்?

“பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள்”

பெண்கள் தாழ்ந்த பிறவிகள்

பிராமணர்கள் உயர்பிறவி

பகவத் கீதை ஒன்பதாவது அத்தியாயம் சுலோகம் 32, 33இல் கிருஷ்ணன் கூறியவை இவை? பகவத் கீதை இந்து மதத்தின் புனிநூல் என்கிறீர்கள். புனித நூலின் மனிதநேய இலட்சணம், பெண்களை மதிக்கும் லட்சணத்தைப் பாரும்!

“ஏழாவது வயதிலே பெண்களுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும். அந்த வயதில் அவளுக்குக் கணவனாக வருகின்றவனிடம் அவள் தன்னை ஒப்படைத்து விடவேண்டும். அவனையே குருவாகவும், தெய்வமாகவும் ஏற்று அவனுக்குத் தன்னை அர்ப்பணித்துவிட வேண்டும். அவள் கணவன்தான் அவளுக்கு எல்லாம்” என்கிறார் காலஞ்சென்ற சங்கராச்சாரி. 

(தெய்வத்தின் குரல் - பாகம்-2, பக்கம் 870)

“பெண்ணுக்குக் கணவனே தெய்வம். பெண்ணுக்கு என்ற தனி அறிவு இல்லை. கணவன் பெற்ற அறிவையே அவள் பெற்று வாழ வேண்டும்.”

(தெய். குரல் பாகம்-2, பக்கம்-890)

இதுதான் பெண்களை மதிக்கும் யோக்கியதையா?

விலங்குகள் பாதுகாப்பு இந்துமதக் கொள்கையா?

யாகம் என்ற பெயரில் விலங்குகளை நெருப்பில் தள்ளிப் பொசுக்கி அதன் கொழுப்பையும், சதையையும் சுவைத்து சுவைத்துச் சாப்பிடச் செய்த மதம்தானே இந்துமதம். இதுவா விலங்குகளைக் காக்கும் மதம்? விலங்குகள் மீது ஏறி அமர்ந்து, ஹிம்சை செய்யும் கடவுளைக் கொண்ட இந்துமதமா விலங்குகளை நேசிப்பது?

தெய்வமொழியும் தீட்டுமொழியும்

சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் நீசபாஷை என்பதுதானே இந்து மதக் கோட்பாடு. தமிழ்க் கடவுள் அருகில் செல்லக்கூடாது என்பதுதானே இந்துமதம்? தமிழ் க் கடவுளிடம் ஓதப்பட்டால் கடவுள் தீட்டாகிவிடும் என்பதுதானே இந்துமதம்?

அனைத்து சாதியும் அர்ச்சகராக முடியாதது ஏன்?

மனிதனை சமமாகக் கருதும் மாண்பு இந்து மதத்திற்கு இல்லை என்பதைத் தானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாததற்குக் காரணம். கோயில் கலசத்திற்கு தாழ்த்தப்பட்டவர் தண்ணீர் ஊற்ற முடியாதே!

ஆக, மனிதநேயத்திற்கு முரணான, பிறவி ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்ற, ஆரிய பார்ப்பனர்களுக்கு மட்டுமே உயர்வும் நன்மையும் அளிக்கக்கூடிய, பெண்களை இழிவு செய்து அடிமையாக்குகின்ற, பார்ப்பனர் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாது என்கின்ற மதம்தான் ஆன்மீகத்தின் பெருமையை பறைசாற்றுகிறதா?

விவேகாநன்தரை சொல்ல ஆரிய பார்ப்பனர்களுக்க அருகதையில்லை!

“ஆரிய பார்ப்பனர்களே இந்தியாவை விட்டு ஓடிவிடுங்கள், ஒழிந்து போங்கள். இந்த நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்களிடம், ஒடுக்கப்பட்ட மக்களிடம் இந்த நாடு வந்தால்தான் உயர்வுபெறும் ஒளிபெறும்” என்று விவேகாநந்தர் கூறியுள்ளாரே! அதன்படி நடப்பீர்களா? நாட்டை விட்டு ஓடப்போகிறீர்களா? விவேகாநந்தரைச் சொல்ல ஆரிய பார்ப்பனர்களுக்கு அருகதை ஏது?

எச்சரிக்கை! எச்சரிக்கை!

விவேகாநந்தரைக் காட்டி வெகுமக்களை சூழ்ச்சியாகக் கவர மோசடிப் போர்வழிகள் முனைகிறார்கள்! மக்களும், மாணவர்களும் எச்சரிக்கையாக இருங்கள்! ஆரிய பார்ப்பன சூழ்ச்சியை முறியடியுங்கள்!

- மஞ்சை வசந்தன்

Pin It