குப்பைக்கா(ரி)ரன் உண்மையில் இந்தப் பெயர் யாருக்குப் பொருந்தும்? துப்புரவுப் பணியாளருக்கா? இல்லை, வீட்டை, தெருவை, ஊரை, நாட்டை குப்பைக் காடாக்கும் நபர்களுக்கா? நாட்டைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை, நமது மக்கள், அதாவது குப்பை போடும் குப்பைக்காரர்கள் நடத்தும், நடந்து கொள்ளும் விதமும், எவ்வாறு உள்ளது?

cleaning workerநான் வாங்கும் தினசரி நாளிதழ்களைச் சேமித்து வைத்து நான் வசிக்கும் பகுதியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளருக்கு கொடுக்கும் பழக்கமுண்டு. அதேபோல் காலையில் காலை உணவு உண்ணும் வேளையில் அவர்கள், எங்கள் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டால் (இந்தப்பகுதியில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வேலை செய்வார்கள்) அவர்களைச் சாப்பிட வாருங்கள் என்று முதன்முறை அழைத்தபோது வந்து வாசலுக்கு வெளியே நின்றார்கள். உள்ளே அழைத்தும் தயங்கினார்கள். அழுக்குப் படிந்த சீருடை அணிந்துள்ளதால் தயங்கினார்கள். எந்தத் தயக்கமும் வேண்டாம் உள்ளே வாருங்கள் என மீண்டும் அழைத்தபோது உள்ளே வந்தார்கள். வீட்டினுள் அமரவைத்து சுடச்சுட தோசை, முட்டைதோசை செய்து பரிமாறினோம். இதுபோன்ற விசயங்களில் எனது துணைவியாரும் ஒத்தக்கருத்துடைய நபர்தான் ஆகவே அவரும் உதவி செய்வார். அவர்களுடன் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டு அவர்களைப்பற்றியும், குடும்பத்தைப் பற்றியும், அவர்களின் குழந்தைகளைப்பற்றியும், அவர்கள் என்ன படிக்கிறார்கள், எங்கு இருக்கிறார்கள் என நலம் விசாரித்துக்கொண்டே பரிமாறுவார். நான் தோசை ஊற்றித்தருவேன். சில நேரங்களில் அவர்களிடம் எனது துணைவியார் பேசிக்கொண்டே இருப்பார், அப்போது நான் கூறுவதுண்டு “முதலில் அவர்களைச் சாப்பிடவிடு அவர்கள் சாப்பிட்டப் பிறகு பேசுவோம் என்றவுடன்” அவரும், “ஆமாம் இல்ல, “நானும் பேசிக்கிட்டே இருக்கேன்” நீங்கள் நன்றாக சாப்பிடுங்கள் என்பார். அவர்களும் சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் பேசிவிட்டு உடனே கிளம்பிவிடுவார்கள். காரணம் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு அடுத்தடுத்த வேலை உள்ளது, என்று கிளம்பி விடுவார்கள்.

அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பல விசயம் நமக்கு வருத்தம் அளிக்கக் கூடியதாக இருந்தது. உதாரணமாக, அவர்கள் சொன்னது:- நாங்கள் தெருவில் வண்டியை தள்ளிக்கொண்டு வரும்போது விசிலை ஊதிக்கொண்டே வருவோம். சத்தம் கேட்டு பலர் தங்களின் குப்பைகளை எடுத்துக்கொண்டு வருவார்கள். நாங்கள் வாங்கிக்கொள்வோம். சிலர் வண்டியிலே போடுவார்கள். ஒரு சிலர் அவர்கள் வீட்டுக் குப்பையை விட்டுக்கு வெளியில் வைத்துவிட்டுச் சென்றிருப்பார்கள் அதை எடுத்துக்கொள்வோம். ஒரு சில வீட்டிலிருந்து யாரும் வரவில்லையென்றால் கேட்டைத் திறந்து உள்ளே சென்று வைத்துள்ள குப்பைகளை நாங்கள் உடன் எடுத்துச்சென்ற கூடையில் கொட்டி எடுத்துக்கொண்டு வருவோம். அதுபோல் எங்களின் கூடையில் மாற்றும்போது தவறி சிலதுகள் சிந்திவிட்டால் எங்களைத் திட்டுவார்கள். என்னவோ நாங்கள் வெளியிலிருந்து கொண்டுபோன குப்பையை அவர்களின் விட்டினுள் கொட்டியதுபோல். அதே போல் தினமும் பார்க்கின்ற முகங்கள்தானே, என “வணக்கம் வைத்தால்கூட” பதிலுக்கு வணக்கம் சொல்ல மாட்டார்கள். முகத்தை உம்மென்று வைத்திருப்பார்கள். எதுவும் பேச மாட்டார்கள். ஆனால் காய்கறி, பழங்கள், கீரை வியாபாரம் செய்பவர்களிடம் நன்றாகப் பேசுவதையும் நலம் விசாரிப்பதையும் பார்த்திருக்கின்றோம். எங்களிடம் மட்டும் ஏன் இந்த உரையாடல், உறவாடல் இல்லையென வருத்தப்படுவதுண்டு” என சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார்கள். அதேபோல் சாலையில் இவர்களின் இந்த வண்டி வரும்போது அருகில் இருப்பவர்கள், வண்டியை கடந்து செல்பவர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு, முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொள்வார்கள். தாகத்துக்குகூட எல்லோரிடமும் தண்ணீர் கேட்டுவிட முடியாது என சொன்னது. “மக்களின் மனநிலை என்னவாக உள்ளது” என உணர முடிந்தது.

நமது மக்கள் ஒரு துப்புரவுத் தொழிலாளியைத் தெரிந்தவர் என்று மற்றவரிடம் சொல்லக்கூட மனமில்லை. அவர்களிடம் சிறிய அளவுக்குக்கூட உறவாட விரும்புவதில்லை. மக்கள் தங்களைப் பொறுத்தவரை நமது வீட்டில் கண்டதை வாங்கித் தின்றது போக மீதமான பொருட்களைக்கூட மற்றவருக்கு கொடுக்க மனமில்லாமல் வைத்திருந்து கெட்டுபோய் நாறிய பிறகு, இன்னும் சொல்லமுடியாத பல பொருட்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து வைத்துள்ளதை குப்பைத்தொட்டியில் போட எடுத்துச் செல்லும்போது முகத்தை ஒரு திருப்பு திருப்பிக்கொண்டு செல்லும் மக்கள். “அந்த மக்களை” “துப்புரவுத் தொழிலாளிகளை” குறைந்த பட்சம் அவர்களும் மனிதர்கள்தானே என்ற எண்ணமாவது இருக்க வேண்டாமா? ஒரு சில வேளையில் நானே பார்த்திருக்கின்றேன். ஏதோ காரணங்களால் தனிப்பட்ட பிரச்சனையோ, குடும்பப் பிரச்சனையோ, வேலையில் பிரச்சனையோ, உடல் நலத்தில் பிரச்சனையோ அந்தப் பகுதியில் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்கள் 2 அல்லது 3 நாட்கள் கழித்து வந்தால், ஒழுங்காக வரமாட்டிங்களா? குப்பை எடுக்காம எப்படி நாறிக்கிட்டு இருக்கு பாருங்க, என்று திட்டுவார்கள். ஏன் 2,3 நாட்கள் வரவில்லை என்னாச்சு என்று சாதாரணமாகக் கேட்பதுகூட இல்லை.

2,3 நாட்களுக்கே நமக்கு இப்படியென்றால் தினமும் அந்த வேலையைச் செய்கிறார்களே அவர்களின் நிலைமையை நாம் என்றாவது யோசித்துப் பார்த்திருப்போமா? நாங்கள் எப்போதுமே வீட்டிலுள்ள குப்பைகளைத் துப்புரவுப் பணியாளர்கள் வரும்வரை காத்திருந்து அவர்களின் வண்டியில் போடுவதோ, இல்லை, அவர்கள் வந்தால் எடுத்துக் கொள்ளட்டும் என விட்டுக்கு வெளியே சாலையோரம் வைப்பதோ, இல்லை. எங்கள் வீட்டில் நாங்களே எடுத்துச்சென்று அந்தப்பகுதியில் எங்கு குப்பைத்தொட்டி உள்ளதோ அங்குதான் போடுவோம். நாங்கள் எப்போதும் இதைத்தான் செய்கிறோம் இது எங்களோட பழக்கம்.

நாட்டைச் சுத்தம் செய்யும் வேலை செய்யும் நபர்களுக்கு நாம் அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு வைத்துள்ள பெயர் குப்பைக்காரன், குப்பைக்காரி. ஆனால் இந்த நாட்டை அசுத்தம் செய்யும், பேராபத்தை ஏற்படுத்தும் கழிவுகளைக் கொண்ட தொழிற்சாலைகளை இந்த நாட்டில், மண்ணில் நிறுவியவர்களுக்கு நாம் வைத்துள்ள பெயர் தலைவர்கள்.

நாட்டில் உள்ள கடவுள், சாதி, மதம் போன்ற பல பழைமைவாத கருத்துக்களால் மக்கள் ஒற்றுமையிழந்து! பிரிவினை, வெறுப்பு சிந்தனைகளால் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும், வெட்டி மாய்த்துக்கொள்ளும் நிலையைப் போக்க வேண்டியவர்கள், மேலும் அந்த விஷ விதையை விதைக்கிறார்கள். இங்கே பல்வேறு சாதிகளாக மக்கள் பிரிவுபட்டு ஒற்றுமையின்றி இருப்பதை போக்க முயற்சிப்பது இல்லை. ஆனால் எந்தவிதமான சமத்துவமும், சமத்துவச் சிந்தனைகளும் மக்களிடையே ஏற்பட்டுவிடக்கூடாது என எண்ணுகின்றன

ஏற்கனவே ஒரு சில மாநில அரசுகள் அந்த மக்களின் நலனில் அக்கறை கொண்டு செய்துள்ள சமத்துவத்திற்கான செயல், சமூக நீதிக்கான செயல்களை எல்லாம் ஒழித்துக்கட்டும் எண்ணமுள்ள ஒரு அரசாக மத்தியில் ஒரு அரசு அமைந்துள்ளதால், இந்த அரசு இதையெல்லாம் ஒழித்துக்கட்டும் வேலைதான் தன் முதல் வேலை என முழு மூச்சாக வேலை செய்து கொண்டிருக்கின்றது.

இந்த இலட்சணத்தில் நாட்டைச் சுத்தப்படுத்துகிறோம் என்று ஆளும் அரசுகளுடைய எடுப்புகள் அனைத்தும் ஆளுக்கொரு துடைப்பக் கட்டையை கையில் எடுத்துள்ளது. சில கிழிந்த காகிதங்களையும், மரத்தின் காய்ந்த இலைகளையும் மட்டும் பொறுக்கிக் கொண்டுவந்து சுத்தமான இடத்தில், அதாவது குப்பைகள் இல்லாத இடத்தில் அதை ஒருவர் முன்னால் போட்டுக்கொண்டு போவது, பின்னால் ஒருவர் அதை கூட்டிக்கொண்டு வருவது இந்த நாடகத்திற்குப் பெயர் சுத்தமான இந்தியா. நாட்டு மக்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை. அவசர, அவசியமான வேலை அந்த துடைப்பக்கட்டைகளை பிடுங்கிக்கொண்டு, இந்த வேலையை பிறகு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆனால், முதலில் உங்களை இந்த நாட்டைவிட்டு அதிகாரத்தைவிட்டு, அரசியலைவிட்டு துரத்தி அடித்தால் நாடு சுத்தமாகும். நீங்கள்தான் இந்த நாட்டில் பேராபத்தை விளைவிக்கும் விசக்கழிவுகள் என இந்த வேலையை மக்கள் செய்ய முன்வரவேண்டும். 2019-ம் ஆண்டு வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் அந்தக் கடமையைத் தவறாமல் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டும் அதுதான் இந்த நாட்டுக்கும் அடுத்த தலைமுறைக்கும் இன்றைய வாக்காளர் செய்கின்ற பெரிய நன்மையும், கடமையும் ஆகும் அதை செவ்வனே செய்ய தயாராவோம்! செய்து முடிப்போம்!

Pin It