புவிப்பெரியான் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவுரைத்த
       பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்!
"உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
       உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!
அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!"
       அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!
குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
       குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை!
அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல்
       அவனடையும் தீமையை யார் அறியக்கூடும்?
கவலையுற ஆடவர்கள் நாளும் செய்யும்
       கணக்கற்ற ஊழல்களை யெல்லாம் அந்த
நவையற்ற பெண்களன்றோ விலக்குகின்றார்?
       நானிலத்தில் மார்தட்டும் ஆடவர்கள்
சுவைவாழ்விற் கடைத்தேறத் தக்கதான
       சூட்சுமமும் பெண்களிடம் அமைந்ததன்றோ!
கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
       கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்!
புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்
       புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்!
வல்லவன்பே ரறிஞன்ஷா வார்த்தைகேட்டீர்
       மனோபாவம் இனியேனும் திருந்தவேண்டும்.
இல்லையெனில் எதுசெயலாம்! பெண்ஆண்என்ற
       இரண்டுருளை யால்நடக்கும் இன்பவாழ்க்கை!

Pin It