ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டும் பிறக்கிறபோது அதைக் கொண்டாடி மகிழும் முறைகளைப் பார்க்கும் போது நாம் இன்னும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறோமா அல்லது நாம் அவர்கள் கலாச்சாரம், வாழ்க்கை முறைகளை நமதாக்கிக் கொண்டோமா என்கிற ஐயம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் தமிழ்ப் புத்தாண்டின்போது இது போன்ற கொண்டாட்டங்களும் குதூகலங்களும் குறைந்து காணப்படுதலேயாகும். உண்மையிலேயே தமிழர்கள் கொண்டாடி மகிழ வேண்டியது தமிழ்ப் புத்தாண்டைத்தான். ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல்களில் அரங்கேற்றப்படும் நடனங்களும், பாடல்களும் தமிழர்களின் பாரம்பரிய ஆடல், பாடல், கலைகளை பின்னுக்குத் தள்ளிவிடுமோ என்ற பயமும் அவ்வாறு பின்னுக்குத் தள்ளி விடக்கூடாது என்கிற ஆதங்கமும் தமிழ் உணர்வாளர்களுக்கு இயல்பாகவே எழும். ஆகவே நமது கலை நடனங்களைப் பற்றி நாம், நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதன் வாயிலாக இந்த பயம் மற்றும் ஆதங்கத்தில் இருந்து சற்று விடுபடலாம் என்பதால் கரகாட்டம் பற்றி சொல்ல இந்த கட்டுரை விரிகிறது.

கரகாட்டம் தமிழகத்தில் சோழர்கள் ஆண்ட தஞ்சையில் தோன்றினாலும், அது விரிவடைந்து புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை என தமிழகம் முழுவதும் பரவிய தமிழர்களின் பாரம்பரியக் கலையாட்டமாகும். பின்பு கர்நாடக, ஆந்திரா என பரவி இன்று நாட்டின் எல்லைகளைக் கடந்து தமிழர்கள் குடிபெயர்ந்துள்ள சிங்கப்பூர், மலேசியா,இலங்கை,லண்டன் என தனது எல்லைகளை விரித்துக்கொண்டாலும், கரகாட்டத்தைத் தமிழகத்தின் மூலைமுடுக்குகளுக்கும் பட்டி தொட்டிகளுக்கும் எடுத்துச் சென்ற பெருமை 1989 ஆம் ஆண்டில் வெளியான கரகாட்டக்காரன் என்னும் திரைப்படத்தையே சாரும். இன்று நுனி நாக்கில் ஆங்கிலத்தை தடவி விட்டு இதயத்தில் இருந்து தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் வேரோடு பிடுங்கிக்கொண்டிருக்கும் ஆங்கில வழிக்கல்வி பயிலும் நம் தமிழ்க் குழந்தைகள் மனதில், நம் மொழியையும் கலாச்சாரத்தையும் வேரூன்ற வைப்பது நமது கடமையல்லவா?

சங்க காலம் தொட்டே இயல், இசை, நாடகம் என பல கலைகளின் பிறப்பிடமாகவும் அவற்றின் பாதுகாப்பான வளர்ப்பிடமாகவும் தமிழகம் விளங்கியுள்ளது. அதற்கு தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் அதற்கு உறுதுணையாக இருந்ததும் ஒரு முக்கிய காரணமாகும். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் நாயகன்கூட கலைக்கு அடிமையாக நடன மங்கையையே சுற்றி வந்துள்ளான். அதில் கூறப்பட்ட குடக்கூத்து என்ற ஆடல் கலையைத்தான் இன்று கரகாட்டம் எனக் கூறுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிபிடுகிறார்கள். மண், செம்பு, பித்தளை போன்றவற்றால் செயப்பட்ட வாய்ப்புறம் குறுகியும் அடிப்பாகம் அகன்றும் காணப்படும் குடம் கரகம் எனப்படும். நீர், அரிசி, தானியம் போன்றவற்றால் நிரப்பி அதன் வாய்ப்புறததைதேங்காயால் மூடி அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்து அது கீழே விழாமல் ஆடும் தமிழரின் பாரம்பரிய நாட்டுப்புற நடனக்கலையாகும். கரகாட்டம் என்பதை நீர்ப் பானை நடனம் என்றும் அழைக்கிறார்கள், காரணம், கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். மாரியம்மன் (மாரி என்றால் மழை என்று பொருள்) கோவில் திருவிழாக்களில், அம்மனின் வடிவமாகக் கருதப்படும் நதிகளில் இருந்து நீரெடுத்து வந்து பூஜைகள் செய்வது வழக்கம். அவ்வாறு குடங்களில் நீரெடுத்து ஊர்வலமாக வரும்போது, பக்தர்கள் அருள் வந்து ஆடுவதுண்டு. அதுதான் கரகாட்டக் கலையின் ஆதி வடிவம். பொதுவாக பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட மண் குடத்தில் வேப்பிலை, பூ போன்றவற்றைக் கொண்டு உருவாக்கிய கரகத்தை தலையில் வைத்தபடி,

”ஒண்ணாங் கரகமடி எங்க முத்துமாரி

ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி

ரெண்டாங் கரகமடி எங்க முத்துமாரி

ரெத்தினக் கரகமடி எங்க முத்துமாரி”

என்று கோயில் திருவிழாவில் மாரியம்மனைப் புகழ்ந்து பாடி ஆடிய பண்டைய நாட்டுப்புற நடனம். கால மாற்றத்தால் மண் குடத்திற்கு பதில் செம்பு, பித்தளை போன்றவற்றாலான குடத்தை அலங்கரித்து அதில் அரிசி அல்லது தானிய விதைகளை நிரப்பி அதன் மேல் பகுதியை மூடி கிளி, அன்னம், புறா போன்ற அலங்கார பொம்மையை பொருத்திய கரகத்தை தலையில் எடுத்து வைத்து நையாண்டி மேளம் மற்றும் நாதஸ்வரத்தில் இருந்து பிறக்கும் இசைக்கு தகுந்தவாறு ஆடினால் ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்க்கும் கரகாட்டத்தை. கோயில் திருவிழாவில் இருந்த கரகாட்டம் மக்களை மகிழ்விக்கும் ஒரு கலையாக பயணிக்க ஆரம்பித்தது. கோயில்களில் ஆடிய கரகத்தை சக்தி கரகம் என்றும் பொது மக்களை மகிழ்விக்கும் கரகத்தை ஆட்டகரகம் என்றும் அழைத்தனர். மேலும் கரகம் எந்த பாத்திரத்தில் செய்யப்படுகிறது என்பதைப் பொருத்து தோண்டிக்கரகம் என்றும் செம்புக்கரகம் என்றும் அழைத்தனர். தோண்டிக்கரகம் என்பது மண்ணால் செய்யப்படுவது, செம்புக்கரகம் என்பது பித்தளையால் செய்யப்படுவது. தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே ஆடிய இந்த ஆட்டத்தை இன்று பெண்களும் ஆடுகின்றனர். இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம் மட்டுமன்றி தவில், பம்பை, உடுக்கை, சத்துக்குழல், செண்டை மேளம், பறை என பல இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன. மேளம் முழங்க, நாதஸ்வரத்தில் பாடல் வாசிக்க அந்த இசைக்கேற்ப கரகாட்டக் கலைஞர்கள் தன் உடலைமட்டும் அசைத்து தலையில் உள்ள கரகம் கீழே விழாதபடி ஆடி மகிழ்விப்பார்கள்.

இன்று திரைப்படக் கலை, கணினி தொழில்நுட்பத்தை தனக்குள் இணைத்துக்கொண்டு பல கிராபிக்ஸ் சாகசங்களை செய்வது போல கரகாட்டக் கலையும் காலப்போக்கில் ரசிகர்களை ஈர்க்க, தலையில் கரகம் வைத்தபடி ஏணிகளில் ஏறுவது, கரகம் விழாமல், கண் இமைகளால் கீழிருக்கும் ஊசியை எடுப்பது, கைக்குட்டையை எடுப்பது என சில சாகசங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டன. அதுமட்டுமன்றி கராகட்டம் ஆடிக் கொண்டிருக்கும் போது ஒருவரைப் படுக்க வைத்து அவரது நெஞ்சில் வாழைக்காயை வைத்து, கராகட்டம் ஆடுபவர்கள் கண்ணைக் கட்டிக் கொண்டு, கரக ஆட்டம் ஆடிக்கொண்டே, கரகம் கீழே விழாமல், கத்தியால் வாழைக்காய் வெட்டுவதைப் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களிக்கின்றனர். அதேபோல் கரகாட்டக்காரர்கள் வட்டமான தீப்பந்தத்திற்குள் நுழைந்து வெளியே வருவது, சிறு ஏணியின் மீது ஏறி தீப்பந்த விளையாட்டு செய்வது போன்ற ஆபத்தான சர்க்கஸ் சாகசத்தையும் செய்கின்றனர். கரகாட்டக்காரர்கள் அகன்ற பித்தளைத் தட்டு மீது இருகால்களையும் வைத்து தட்டை நகர்த்திக் கொண்டே கரகாட்டம் ஆடுகின்றார்கள். இன்று நகரங்களில் பொதுமக்கள் மத்தியில் கரகம் ஆடுபவர்கள் ஒருகரகத்தின் மேல் மற்றொன்று என ஏழு கரகத்தை தலையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அது கீழே விழாமல் மக்களை ஆடி மகிழ்விக்கின்றனர்.மேலும், சில கரகாட்டக் கலைஞர்கள் சைக்கிள் பெடல் மீது நின்று சைக்கிள் ஓட்டிக் கொண்டே கரகாட்டம் ஆடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கரகாட்டக் கலைஞர்கள் கரகாட்டத்தில் பல சாகசச்செயல்களை நிகழ்த்திக் காட்டி கரகம் ஆடி வருவது அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவும் மற்றும் தனக்கு சோறுபோட்ட கரகாட்டக் கலையை அழிவின் விளிம்பிலிருந்தும் காப்பதற்கும்தான்.

கரகாட்டக் கலையை நம் குழந்தைகளும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு முக்கியக்காரணம் நமது பாரம்பரியக் கலை அடுத்த தலைமுறையிலும் பயணிக்க வேண்டும் என்பதற்குத்தான். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் கலை விழாக்களில் மாணவர்கள் கரகாட்டம் ஆடுவதன் மூலமும், தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் மற்றும் கிராமியத் திருவிழாக்களில் கரகாட்டம் ஆடுபவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலமும் கரகாட்டக் கலையை வாழவைக்கலாம். மேலும் அரசு விழாக்கள், கட்சி விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் செண்டைமேளம் போன்ற கேரளாவின் கலைநிகழ்ச்சியைத் தவிர்த்து கரகாட்டக் குழுவிற்கு வாய்ப்பு வழங்கலாம்.

திரைப்படத்தின் தாக்கத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட கிராமீயக் கலைகளில் கரகாட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கரகாட்டக் கலையில், பரத நாட்டியத்தின் நளினத்தையும், உடல் மற்றும் மன நலத்திற்காக, யோகாசனத்தில் கைகளால் செய்யப்படும் முத்திரைகளான, ஹஸ்த முத்திரைகளையும் கரகாட்டத்தில் காணலாம் என ஆட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆகவே கரகாட்டத்தை கற்றுக்கொள்வதன் மூலம் நளினத்தையும் முத்திரைகளையும் அதன் பயன்களையும் நம் குழந்தைகள் பெறுவார்கள். தற்போது இந்த கரகாட்டம் என்னும் நடனக்கலை பல்வேறு உடற்பயிற்சி நிலையங்களில் உடலினைச் சீராக வைத்துக்கொள்ள கற்றுக்கொடுக்கப் படுகிறது. கரகாட்டத்தில் கரகத்தை தலையில் வைத்து அது கீழே விழாமல் உடலை வளைத்து ஊசியை எடுத்தல், கைக்குட்டையை எடுத்தல், உருளும் பலகையில் நடத்தல் போன்ற சாகசங்கள் நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் வாயிலாக நல்ல உடற்பயிற்சியும் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும் அவர்கள் கற்றுக்கொள்ள முடியும். இன்றும் கலையம்சம் நிறைந்த கரகாட்டத்தைக் கிராமப்புறங்களில் ஒருசில பகுதிகளில் காண முடிகிறது என்றால் அதற்குக் காரணம் படித்த பெண்கள் சிலர் கரகாட்டம் கற்றுக்கொண்டு ஆட வந்ததுதான். இது தொடரவேண்டுமெனில் இளைய தலைமுறைக்குள் கரகாட்டம் செல்லவேண்டும்.

எனவே பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை வெறும் மேற்கத்திய நடனத்தைக் கற்கவும், பரத நாட்டியத்தைக் கற்கவும் ஊக்குவித்து அவர்களை பயிற்சி வகுப்பிற்கு அனுப்புவது போல கரகாட்டக் கலையையும் கற்றுக்கொள்ள ஊக்கமளியுங்கள். அது வெறும் நடனம் அல்ல நம் கலாச்சாரம் பண்பாடு. நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற நல்ல உடற்பயிற்சி, மனப்பயிற்சி என்னும் மிகப்பெரிய சொத்து. அதைப் பேணிக்காக்கவேண்டியதும் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுப்பதும் நமது கடமை. நமது கடமையை நிறைவேற்றுவோம்.

- இன்னும் விளையாடலாம்

Pin It