அயோத்தியின் ஆரம்பம்

உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் சரயூ நதிக்கரையில் உள்ளது அயோத்தி நகரம் இங்குள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் தான் ஆரம்பிக்கிறது அயோத்தி அரசியலின் ஆரம்பப் புள்ளி 1528ஆம் ஆண்டு பாபர் கட்டிய மசூதியில் 1853 வரை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்தனர். பின்னர் 1863இல் எழுந்த லேசான சர்ச்சையில் பிரித்தானிய அரசு தலையிட்டு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்தே வழிபடலாம் என தீர்ப்பை வழங்கியது. சுமார் 200 ஆண்டுகள் அமைதியாக சென்று கொண்டிருந்த சூழலை மாற்றவும் இந்த பிரச்சனையை மையப்படுத்தி தங்களின் அரசியல் அதிகாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் தீட்டப்பட்ட திட்டம்தான் பாபர் மசூதிக்குள் ராமர் சிலையை நிறுவ வேண்டும் என்பது 1947இல் பல்ராம்பூர் அரசர் ஏற்பாடு செய்திருந்த யாக நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில இந்து மகா சபையின் தலைவர் திக்விஜய் நாத், பைசாபாத் மாவட்ட நீதிபதி நய்யார் ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள பாபர் மசூதியின் உள்ளே ராமர் சிலையை நிறுவ அவரவர் தங்களுடைய அதிகார துணை கொண்டு உதவ வேண்டுமென தீர்மானம் நிறைவேறியது. அதனடிப்படையில் மதவாதப் பணிகளை அதிகாரத் துணையோடு செய்ய ஆரம்பித்து 1949ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் ராமர் சீதா திருமண நிகழ்ச்சியை ஒன்பது நாட்கள் நடத்துவதும் கடைசி நாளான ஒன்பதாவது நாளில் ராம பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து பாபர் மசூதியின் உள்ளே ராமர் பிறந்ததாக நம்புகிற இடத்தில் குழந்தை ராமர் அதாவது ராம் லல்லா சிலையாக தோன்ற ராமனை வேண்டிக் கொள்வது என நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்டது.

babri masjid 600 ஒன்பதாம் நாள் முடிவில் வேண்டுதல் பலிக்கவில்லை. வேண்டுதல்கள் எப்போதும் சூழ்ச்சியின் துணைகொண்டு தானே பலிக்கப்படுகிறது அதேபோல நிகழ்ச்சி முடிந்து நான்கு நாட்கள் கழித்து டிசம்பர் 22 1949 இரவில் மசூதி வளாகத்திற்குள் காவல்துறை பாதுகாப்பை மீறி நுழைந்த மதவாதிகள் 26 அங்குலம் கொண்ட குழந்தை ராமர் சிலையை வைத்து சர்ச்சைக்கு சுழி போட்டனர். அடுத்தநாள் இந்த பிரச்சனையை விசாரணை செய்த பண்டிட் ராம் திபேத் துபே என்கிற நேர்மையான அதிகாரி 50க்கும் மேற்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147, 148 ,295 ன் கீழ் வழக்கு பதிவு செய்தார் ஆனால் அதன் பிறகு மதவெறிக்குத் துணைபோன காவல் அதிகாரி மத்தா பிரசாத் என்பவர் அபிராம் தாஸ், ராம் சகல் தாஸ், சுதர்சன் தாஸ் ஆகிய மூன்று பேர் மட்டும் சம்பவத்தில் ஈடுபட்டதாக இவ்வழக்கைச் சுருக்கி வழக்கின் போக்கை மாற்றி அமைத்தார்.

இந்தச் செயல்களை எல்லாம் கண்டிக்க வேண்டிய மாவட்ட நீதிபதி நய்யாரோ முழுமையான மதவாதி. அவர் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், அயோத்தியில் எந்த பிரச்சனையும் இல்லை அமைதி நிலவுவதாக பச்சை பொய்யை எழுதி அனுப்பினார். உத்தரப்பிரதேச முதல்வரராக இருந்த வல்லப பந்த் என்பவரோ கடவுள் இல்லை என்பவருக்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்தவர், இந்து மகாசபையின் அபிமானி. இவ்விதமாக எல்லா அதிகார மையங்களும் மதவெறிக்கு ஆட்பட்டு கைகோர்த்து நின்று சர்ச்சைக்குரிய வகையில் வைக்கப்பட்டச் சிலையை அகற்றாமல் அந்த மசூதியை அரசு வசம் கொண்டு வந்து மதவெறியுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து பிரச்சினைக்குக் காரணமான குற்றத்தைச் செய்தவர்களைத் தண்டிக்காமல் குற்ற வழக்கை உரிமையியல் வழக்காக மாற்றி அமைத்து குழந்தை ராமரின் சார்பாக உரிமையியல் வழக்கும் தொடுக்கப்பட்டது.

நமது நாட்டின் உரிமையியல் சட்டத்தின் படி இந்து கோவில் கடவுள்கள் நேரடியாக வழக்கு தொடுக்க சட்ட உரிமை உள்ளது இது நமது நாட்டின் வினோதமான சட்டம்.

இவ்வாறாக நடைபெற்ற டிசம்பர் 22 1949 ஆம் தேதி இரவு நடந்த வரலாற்றில் மறைக்கப்பட்ட நிகழ்வை "Ayodhya the dark night" the secret history of ramas appearance in babri masjid ("அயோத்தியின் இருண்ட இரவு" ரகசியமாக ராமர் அவதரித்த வரலாறு) என்ற நூலில் ஆதாரங்களோடு கிருஷ்ணன் ஜா திரேந்திர ஜா என்கிற பத்திரிக்கையாளர்கள் அம்பலப்படுத்தினார்கள்.

ரத்தமும் ரதமும்

1949இல் சர்ச்சையைத் தொடங்க ஆயத்தக் கூட்டமாக 1947இல் யாகம் நடத்தியது போன்ற 1992 டிசம்பர் 6 நிகழ்வை நடத்த மதவெறியை திரட்ட 1990இல் ஆயத்தமானார்கள். 1990 ரத யாத்திரை மூலமாக ஆயத்தபணிகளை தொடங்கியவர் அத்வானி. இவர் ரத யாத்திரையை தொடங்கியதற்குப் பரிசாக 1984இல் பாபர் மசூதியை கைப்பற்றுவதே நோக்கமாக ஆரம்பிக்கப்பட்ட பஜ்ரங்தள் ஆட்கள் தங்களுடைய ரத்தத்தை ஒரு கோப்பையில் பரிசாக அளித்தனர் என்றால் அதன் வெறித்தனத்தை அறிய முடியும். ரத்தத்தை ஆறாக ஓட விடுவதற்கு தயாரான ரத யாத்திரைக்கு ரத்தமே பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது. எப்போதெல்லாம் நாட்டில் ரத்தம் ஆறாக ஓட வேண்டும் என இவர்கள் விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் ரதயாத்திரை நடக்கும், அறிவியல் நூல்களும் ஆய்வுகளும் நசுக்கப்படும், சிந்தனையாளர்கள் முற்போக்காளர்கள் படுகொலை செய்யப்படுவார்கள், சிந்தனையை வளர்க்கும் நூல்கள் எரிக்கப்பட்டு மதவெறி உண்டாக்கும் நூல்கள் பரப்பப்படும்.

எங்கெல்லாம் புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் மனிதர்கள் எரிக்கப்படுவது நிச்சயம் என்கிறார் ஹைன்ரிஷ் ஹைனே எனும் ஜெர்மானிய புரட்சிக்கவிஞர். இதற்கு நம் கண்முன்னே நடந்த சாட்சி யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும் இலங்கை மக்களை படுகொலை செய்து நடத்தப்பட்ட யுத்தங்களும்.

அரசியல் லாபம்

ராம் லல்லா என்கிற குழந்தை ராமனை பாபர் மசூதிக்குள் வைக்கவும் ,அதனை அகற்றாமல் நடவடிக்கை மேற்கொள்வதற்கும் துணைநின்ற பைசாபாத் மாவட்ட நீதிபதி நய்யாருக்கு 1967இல் ஜன சங்கம் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வுக்கும் பதவிக்கும் வாய்ப்பு கிடைத்தது இதிலிருந்து தொடங்குகிறது அரசியல் லாபங்கள் .

இப்போது 2018இல் கூட மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர். சென் என்பவர் மதச்சார்பற்ற நாடாக இல்லாமல் இந்து நாடாக இந்தியா இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு அவரது கருத்தை வெளிப்படுத்துகிறார். இவரும் எதிர்காலத்தில் தனக்கான வாய்ப்பு இருக்கும் என்று ஒரு விண்ணப்பம் போடுகிறார் என்றே தோன்றுகிறது.

17 நிமிடங்களில் மசூதியை இடித்துவிட்டோம் ஆனால் ராமர் கோவில் கட்ட எவ்வளவு காலம் ஆகிறது என மதவெறி ஆதங்கம் மதவாதிகளிடையே எழுகிறது அதனால்தான் ராமர் கோவில் கட்ட சட்டம் வேண்டும் என இந்துத்துவவாதிகள் கேட்கிறார்கள்.

  ரவிசங்கர் என்பவர் இந்தியாவில் மாநில கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்கிறார். ஏனெனில் மாநில கட்சிகள் பலவும் அவர்களுடைய மதவெறி நோக்கத்திற்கு தடையாக இருக்கிறது. இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற முயற்சித்த அம்பேத்கரின் உருவபொம்மையை எரித்து, கடைசியில் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய காரணமாக இருந்தவர்கள் ஆயிற்றே. இவர்கள் வளர்ச்சி என்கிற வெற்று முழக்கம் தேர்தலுக்கு ஆதாயம் அளிக்காத சந்தர்ப்பம் ஏற்படும் போது மதவெறி உணர்ச்சியை தங்களின் அரசியல் ஆயுதமாக கையில் எடுக்கிறார்கள் என்பது ஆதாரப்பூர்வ வரலாற்று உண்மையாகும். மதவெறி அரசியலை ஒழித்து மனிதம் காப்போம். 

Pin It