vignesh lawyerசென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் புகழாரம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர், யாழ்ப்பாணம் கிளிநொச்சி தொகுதியில் நாடாளுமன்ற வேட்பளராகப் போட்டியிடும் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தமிழ்நாடு சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து அறிக்கையில் கூறியுள்ளார்:

வழக்கறிஞர்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட நேர்வுகள் வரலாற்றில் உள்ளன. ஆனால், ஒரு நீதியரசர் தன்னுடைய பணிக் காலத்திற்குப் பின், துடிப்புமிக்க ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில் தம்மை முன்னரங்கில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பது ஆசியாவில் இதுவே முதல் முறை.

அளப்பரிய ஈகங்களை செய்து மிகப்பெரிய இழப்புகளுக்கு உள்ளாகி அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் நீதிக்காகவும், விடுதலைக்காகவும் பணியாற்றும் கடமையை வரலாற்று அன்னை தங்கள் தோளில் சுமத்தியிருக்கிறாள்.

இறைமையுள்ள தனியரசே தமிழரின் விருப்பம் என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான தேர்தலாக 1977 நாடாளுமன்றத் தேர்தல் அமைந்தது. அதில் மக்களால் வழங்கப்பட்ட ஆணையின் பெயராலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமிழ் இளைஞர்கள் முன்னெடுத்தனர். அதுபோல, இனக்கொலைக்கு நீதி பெற பன்னாட்டுப் புலனாய்வும், அரசியல் தீர்வுகாண தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என வடமாகாண சபையில் தாங்கள் முதலமைச்சராக இருந்த போது இயற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான தேர்தலாக 2020 நாடாளுமன்றத் தேர்தல் அமைந்துள்ளது.

ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான இந்த பதினோராண்டுகளில் தமிழர்களின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டவர்கள் இலங்கை அரசைப் பன்னாட்டுப் புலனாய்விலிருந்து காப்பாற்றுவதற்குத் துணைபோயினர்.

நல்லாட்சி, நல்லரசாங்கம், மீளிணக்கம் என்பவை எல்லாம் கட்டுக்கதைகள் என்று அம்பலமாகி விட்டது. புதிய யாப்பொன்று வருமென்று சிங்களத் தரப்பு சொன்னது சொன்னதாகவே இருக்கிறது. 2015இல் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக இலங்கை அரசு இவ்வாண்டு அறிவித்து விட்டது. “காணாமலாக்கப்பட்டோர் அனைவரும் உயிருடன் இல்லை; இறப்புச் சான்றிதழ் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கோத்தபய சொல்லி விட்டார். பன்னாட்டு மன்றத்தில் காலத்தை இழுத்தடிப்பதற்கு, இரணில்-சிறிசேனா தலைமையிலான அரசு துணை நின்றதன் மூலம் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்திருக்கும் இராசபக்சேக்களைக் காப்பாற்றியவர்களாகத் தமிழ்ப் பிரதிநிதிகள் காட்சி தருகின்றனர்.

எனவே, தமிழ் மக்களின் நீதிக்காகவும் தமிழ்த் தேசத்தின் இறைமைக்காகவும் பாடுபடாதவர்களையும் சிங்கள அரசைப் பாதுகாத்துக் கட்டமைப்பு ரீதியான இன அழிப்புக்குத் துணை போகிறவர்களையும் தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்புவதால் தமிழர்களுக்கு அழிவுதான் ஏற்படும்.

இந்தப் பின்னணியில், தமிழ் மக்களுக்கொரு ஐக்கியப்பட்ட மாற்றுத் தலைமையை அடையாளங்காட்டும் வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது. தங்களுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பதினொரு அம்சக் கோரிக்கைகள் தமிழர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு தேவையான உடனடிக் கடமைகளையும் நீண்டகால இலக்குகளையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

குறிப்பாக, வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டு துணையிழந்து வாடும் 90,000 விதவைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதாரத் திட்டமொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த இருப்பதாக வாக்குறுதி கொடுத்து அதற்குரிய முன்னுரிமையும் கொடுத்திருப்பது ஆறுதல் தருகின்றது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும், ஆதரவற்ற பெண்களின் துயர் துடைப்பது இன்றளவில் தமிழீழ தேசிய இயக்கத்தின் தலையாய கடமைகளுள் ஒன்றாகும்.

சுவரின்றி சித்திரம் வரைய முடியாது. உடம்பைப் பேணி வளர்க்காமல் உயிர் வளர்க்க முடியாது. தாயகம் இன்றி தேசியம் இல்லை. டி.எஸ்.சேனநாயக்காவால் தொடங்கப்பட்ட பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்புகள் அதன் உச்சத்தை எட்டியுள்ளன. தாயகம் பறிபோவதை மக்களின் பங்கேற்புடன் எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழர்களின் அரசியல் முதிர்ச்சியையும் அடிப்படையான கோரிக்கைகளின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பற்றையும் உலகிற்கு எடுத்துச் சொல்லப் போகும் தேர்தல் இந்த நாடாளுமன்றத் தேர்தல். சர்வதேச அளவிலும், பிராந்திய அளவிலும் கூட இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் உடையது. ஈழத்தமிழர் வரலாற்றிலும் இந்தத் தேர்தல் முடிவுகள் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பங்காற்றப் போகின்றன.

நீண்ட போராட்ட அனுபவத்தைக் கொண்ட ஈழத் தமிழர்கள் தமது பட்டறிவில் இருந்து சரியான நபர்களைத் தெரிவு செய்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மக்களைக் கைவிட்டுத் தன்னலனை முன்வைத்து தேச நலனைப் பலியிட்டு எதிரியிடம் விலை போனவர்கள் புறக்கணிக்கப்பட்டு தங்களுடைய தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி பெருவெற்றி ஈட்ட வேண்டும் என உளமார வாழ்த்துகிறேன்.

கொரோனா பெருந்தொற்று நெருக்கடி இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அகவையால் முதியவராகிய தங்களுடைய உடல்நலனைப் பற்றிய கவலை எழுகிறது. தாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்தல் பணிகளை முன்னெடுத்து நல்ல ஆரோக்கியத்துடன் தமிழ் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

நீதிபதி திரு து. அரிபரந்தாமன் (ஓய்வு)

உயர்நீதி மன்றம், சென்னை.

Pin It