வடலூர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர் - திராவிடர் கழகம் நேர்காணல்

பெரியாரை தமிழகத்தைத் தாண்டி இமயம் வரை, ஏன்? உலகத்தின் பல்வேறு நாடுகளில் கொண்டு போய் சேர்த்த பெருமை தமிழர் தலைவர் ஆசிரியருக்கே உண்டு. ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்றார் புரட்சிக் கவிஞர். அதை செயலாக்கியிருப்பவர் ஆசிரியரே. அதனால் தான் தந்தை பெரியார் தமிழர் தலைவர் என்ற நிலையைத் தாண்டி உலகத் தலைவராகப் போற்றப்படுகிறார்.

தந்தை பெரியாரைக் கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் இன்றைக்கு பெரியார் விழா கொண்டாடக் கூடிய நிலை ஏற்பட்டது தமிழர் தலைவரின் அருஞ்செயலால் தான். எல்லோரும் பெரியாரை இன்று கொண்டாடும் நிலை உருவானதற்கு பெரியார் மறைவுக்குப் பின் அய்யாவை நிலைப்படுத்த ஆசிரியர் பட்டபாடுகள் ஏராளம் எனலாம். தந்தை பெரியாரின் எழுத்துக்களை பேச்சுக்களை நூலாக்கித் தலைப்பு வாரியாக எளிமைப்படுத்தி ஆயிரமாயிரமாய் படைக் கருவிகளாக நாட்டின் வாசிப்போர் வசம் கொண்டுபோய் சேர்த்தவரும் அவரே. பெரியார் நகர்வு புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சியில் பெரியார் புத்தக அரங்கு, வாசகர் வட்டம், படிப்பகங்கள், நூலகங்கள் என அய்யாவின் அரிய கருத்துக் கருவூலம் கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு பரப்பப்பட்டுள்ளது - காரணம் ஆசிரியரின் திட்டமிட்ட ஏற்பாடே.

பெரியார் பன்னாட்டு மய்யம் மூலம் பல நாடுகளில் பெரியார் கொள்கை பரப்பு மய்யங்கள், சுயமரியாதை மாநாடுகள் செர்மன் போன்ற நாடுகளில், பல்கலைக்கழகங்களில் பெரியார் இருக்கை, பகுத்தறிவுப் பரப்பும் சுற்றுப் பயணங்கள் என பலவேறு வகைகளில் பெரியாரியலை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்ப்பதில் அசாத்தியமான பணி ஆசிரியருடையதே.

IHEU என்று சொல்லக்கூடிய உலக மனிதநேயர்கள், நாத்திகர்கள் அமைப்பில் திராவிடர் கழகத்துக்கு முக்கிய பங்கு கிடைக்கச் செய்தமை... உலக நாத்திக, மனித நேய அறிஞர்களை அழைத்து தம்ழகத்தில் பெரியாரின் அரிய தொண்டை, சிறப்பை உற்று நோக்கச் செய்த செயல் சாதாரணமானதல்ல.

தமிழகத்திலே கூட கொள்கையையும் தாண்டி மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காக, ஜாதி இழிவை ஒழிப்பதற்காக, வழிபாட்டுரிமையை நிலைப்படுத்துவதற்காக அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற அய்யாவின் எண்ணத்தை ஈடேற்றிட ஆசிரியர் உழைத்திட்ட உழைப்பு வியப்புக்குரியதே. ஆம். தொடர்ந்த போராட்டம், அரசுக்குக் கொடுத்த அழுத்தம், நாடு தழுவிய பரப்புரை இப்படியாய் கழகம் எடுத்திட்ட முயற்சிகள்.

இந்துத்துவ வெறியர்களும், மத்திய மதவாத அரசும் தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்திடும் நோக்கில் கொண்டு வரும் நாசகார திட்டங்களுக்கு எதிராக, சட்டங்களுக்கு எதிராக, மக்களை அணிதிரட்டும் பங்குபணி ஒருபக்கம், தமிழகத்தின் உரிமைகள் பரிபோகா வண்ணம் தடுத்திடும் முயற்சி இன்னொரு பக்கம், ஆண்டாள் பிரச்சனை தொடங்கி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தும் பிரச்சனை வரை சளைக்காது போராடும் போர்க்குணம் என ஆசிரியர் அய்யாவின் அரிய பணிகள் மகத்தானவை.

தத்துவரீதியாக அறிவார்ந்த சிறப்பு சொற்பொழிவுகள் இடைஇடையே - பல்லாயிரம் பேர்கள் பயன்பெறும் வண்ணம் - உரிமை உணர்வு பெறும் வண்ணம்.

‘நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது: வேறு எவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” என்ற தன்னம்பிக்கை முழக்கம் தொண்டர்களுக்கு மட்டுமல்ல.... தலைவரும் தனது முயற்சியில் முன்நிற்கிறார். வேறு எவரிடமும் காணமுடியா அருங்குணம்- நாட்டுக்குழைத்திட்ட, இயக்கத்திற்கு பாடுபட்டுள்ள மூத்த தோழர்களை நலம் விசாரிப்பும், உரிய மருத்துவ உதவிகளும் - இவரால் மட்டுமே சாத்தியம்.

தன்னலம் கருதா தகைமையாளராக செல்லுமிடமெல்லாம் தோழர்களின் நலத்தில் அக்கறை, மரித்துப் போன தோழர்களின் இல்லத்தார்க்கு ஆறுதல், அறக்கட்டளை சிறுவனங்களின் வளர்ச்சிக்கான நடைமுறைகள், நாள்தோறும் பெரியார் கொள்கை பரப்பும் தொண்டறம்.... அடடா... தமிழர் தலைவரின் தொடர் பணிகள் பெரும் ஓட்டமாய்....

தந்தை பெரியாரை சுவாசிப்போம்... தமிழினத்தின் - ஒடுக்கப்பட்ட மக்களின் மூச்சுக்காற்றை மேலும் மேலும் சுவாசிப்போம்... அப்பொழுதுதான் மனித குலத்தை நேசிக்க முடியும். தமிழர் தலைவருக்கு பின்னால் அணிவகுப்பது தமிழ்நாடு முன்னேற - முன்செல்ல உதவும்.

திராவிடர் கழகத்தை இளைஞர்களின் பாசறையாக, மகளிரின் பாடிவீடாக ஆக்கிடவும், உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலையை லட்சக்கணக்கில் பரவிடும் வகை செய்யவும் அயராதுழைக்கிறார் அவர். பெரியார் உலகு பிறக்கட்டும்: பெருமைகள் எங்கும் நிலைக்கட்டும்.

சாதாரண மாணவர் தோழராக இருந்து கழகத்தின் பொதுச் செயலாளராக உயர்ந்துள்ள உங்களைப் பற்றி...?

பழைய தென்னார்க்காடு மாவட்டம் – இன்றைய கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி நான் பிறந்த ஊர் பள்ளிக்கல்வி குறிஞ்சிப்பாடிலேயே கல்லூரிக் கல்வி கடலூர் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சட்டப்படிப்பு சென்னை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம், முனைவர் பட்டம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்

எளிய வேளாண்குடியில் பிறந்தேன். எனது தந்தையார் பிரபல மந்திரவாதி ஆவார். எங்கள் பகுதியில் குத்துச் சண்டை பயில்வானும் கூட பக்தியில் திளைத்த குடும்பம். எங்கள் குடும்பத்தினர் இளைப்பாறுகின்ற இடங்கள் பழனி, திருப்பதி, இப்படியாய் பிரசித்தி பெற்ற பக்தி பரப்பிடும் பதிகள் தாம்.

எனது அப்பா இல்லாத போது நானே பேய் பிடித்துள்ளதாகக் கூறி வருவோருக்கு வேப்பிலை சாத்து செய்துள்ளேன் – மந்திர உச்சாடனங்கள் உச்சரிப்பும் உண்டு ஏகாதசி விரதம் இரவு முழுவதும் கண் விழிப்பு, சனிக்கிழமை விரதம் – ஒரு வேளை மட்டுமே உணவு..... இருந்திருக்கிறேன். பழமையின் மீது பற்றுதல் கொண்ட மனநோயாளியைப் போல என் தொடக்க காலம்.

ஒன்பதாம் வகுப்பு படித்த போது நெய்வேலி நகரத்தில் தந்தைப் பெரியாரை பார்த்ததும் அவரின் பகுத்தறிவு உரையைக் கேட்டதும் சிறு சலனத்தை என்னுள் ஏற்படுத்தியது. கொள்கைத் தொடர்புக்கு ஆளில்லாமல் தூண்டல் இல்லாததால் துவங்கல் இல்லாமல் போனதைப் போல் ஆனது. 1970 - 71 புகுமுக வகுப்பு படித்த போது கடலூர் கல்லூரி எனக்கு பகுத்தறிவு பாய் விரித்தது என்றே சொல்ல வேண்டும். மாவட்ட மைய நூலகத்தில் செய்தித்தாள்களை வாசிக்கச் சென்ற என் கண்ணில் “விடுதலை” பட்டது. தொட்டேன்... வாசிக்கத் தொடங்கினேன். இன்றுவரை விடுதலை என்னை விடவில்லை. அலாதியான காதலன் விடுதலைக்கு நான் ஆகிப்போனேன். பற்றிக்கொண்டது பகுத்தறிவுக்கொள்கை - தொற்றிக்கொண்டேன் பெரியார் இயக்கமெனும் திராவிடர் கழகத்தை. ஆம்... மடமையில் ஊறிப்போன மந்திரவாதியின் மகன் மானத் தலைவராம் பெரியாரின் தொண்டரானேன். படித்த கல்லூரியில் மாணவர் பகுத்தறிவுக் கழகம் கண்டேன். தமிழ் வகுப்பில் எனது பெருமைக்குரிய பேராசிரியர் த.பழமலய் கடவுளர் கதைகளை கிண்டிக் கிளறுவார். அவரின் பகுத்தறிவு நகைச்சுவை பல மாணவர்களை இயக்கத்தின் பால் ஈர்த்தது.

கடலூர் மஞ்சை நகர் திடலில் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் அய்யாவை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தினோம். அக்கூட்டத்தில் தான் என் கன்னிப் பேச்சு. அவரால் மேலும் வேகம் பெற்றேன்- வெகுவாக கழகத்தின்பால் கவரவும்பட்டேன். கடலூரில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டுக்காய் சுற்றுப்பயணம் வந்த தந்தை பெரியாரை தொட்டு பார்க்கும் வாய்ப்பு - அவருடன் வண்டியில் புதுவை செல்லும் வாய்ப்பு - அவரின் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்கும் வாய்ப்பு சீரிய களப்போராளியாக கழகத்தில் நான் உருப்பெற உதவியது. மாவட்டத்துக்குள் தமிழர் தலைவர் வரும் போதெல்லாம் அவருடன் பொதுக்கூட்டங்களில் பஞ்குபெறும் அருமையான சூழல் மறக்க முடியாதவை. எனக்கு பேசுகிற வாய்ப்பை வழங்கி அழகு பார்ப்பார் தலைவர். இப்படித்தான் நான் இயக்கவாதியானேன், முழுநேரத் தொண்டனைப் போல் உழைக்கலானேன்.

திருச்சியில் ஐயா மறைவுக்குப் பின் அன்னை மணியம்மையார் நடத்திய பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை சீரிய கொள்கையாளனாகவும், சொற்பொழிவாளனாகவும் மலர வழிவகுத்தது.

மாவட்ட திராவிட மாணவர் கழக துணை அமைப்பாளர், மண்டல திராவிடர் மாணவர் கழகச் செயலாளர், கழக மாணவரணிச் செயலாளர், மாநில கழக மாணவரணி செயலாளர், மாநிலக் கழக இளைஞரணி செயலாளர், மாநில மாணவர் இளைஞரணிச் செயலாளர், திராவிடர் மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட தலைவர், கழக பிரச்சார அணிச் செயலாளர், கழக துணைப் பொதுச் செயலாளர், கழக பொதுச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஏற்று – ஏற்றுக் கொண்ட பொறுப்புக்குரிய சிறப்பான செயல்பாடுகளையும் செய்து வருகிறேன் பொறுப்பு என்பதை நாம் செய்யும் இயக்கப் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக மட்டுமே கருதுபவன். பொறுப்பு இல்லாமலும் எப்போதும் போல் வழமையாக களப்பணி செய்திட்ட அனுபவமும் உண்டு.

இயக்கம் அறிவித்த போராட்டங்கள் பெரும்பாலானவற்றிலும் பங்கு பெற்றுள்ளேன். கடலூர், சென்னை, வேலூர் மத்திய சிறைகளில் பலமுறை போராட்டவீரனாக விசாரணைக் கைதியாக இருந்திட்ட நல்வாய்ப்பும் உண்டு.

“புத்தம் சரணம் கச்சாமி,

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி” – என்பதைப் போல் கொள்கை, இயக்கம், தலைமை மூன்றுக்கும் எப்போதும் கட்டுப்பட்டவனாக பணியாற்றி வருகிறேன். 47, 48 ஆண்டு கால பொது வாழ்க்கை அனுபவம் – பலநூறு இளைஞர்களை இயக்க லட்சியப் பாதையில் பயணிக்கச் செய்ய உதவி இருக்கிறது. 1600 க்கும் மேற்பட்ட சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறேன் என்பதும் சாதனை தான். இன்று வரை சமரசமற்ற களப்பணியாளனாக கழகத்தில் களமாடி வருவதைப் பெருமையாகவும் கருதுபவன் நான். பெரியார் கொள்கையை வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டு வாழுவதால் 100 க்கு 100 வெற்றிபெற முடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன். மெய்ப்பித்திருக்கிறேன். மொழி உணர்வும், இன உணர்வும், பிறந்த சமுதாயத்துக்கு தொண்டாற்றிடும் சேவை மனப்பான்மையும் மிக்க இளம் தோழர்களை நூற்றுக்கணக்கில் உருவாக்கியதில், அவர்கட்கு நல்ல தோழனாய்-வழிகாட்டியாய் இருந்து வருவதில் மன திருப்தி அடைகிறேன். பெரியார் கொள்கையை உலகமயப்படுத்திவரும் தமிழர் தலைவரின் தலைமையில் பெரியாரியலை வெல்லச் செய்யும் பெரும்பாணியில் பங்காற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

தாங்கள் வாழ்நாள் சாதனையாகக் கருதுபவைப் பற்றி...

‘காலம் தந்த தலைவர்” - தமிழர் தலைவரை பற்றிய தொகுப்பு நூலினையும் ‘அறிவின் திறவுக்கோல்” எனும் நூலினையும் ஆக்கியுள்ளேன். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ‘மனித உரிமைக்கு திராவிடர் கழக பங்களிப்பு” எனும் ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றதும் மனதிற்குள் பெருமிதத்தை தந்தது. காரணம் அய்யா பெரியாரைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார், ஆசிரியர் காலத்தில் கழகம் நடத்திய போராட்டங்கள், பெற்றுக்கொடுத்த உரிமைகள், செய்திட்ட பரப்புரைகள், ஆற்றிவரும் அருந்தொண்டுகள் அனைத்தும் மனித உரிமைகள் பற்றியவைதாம் என்பதை எனது ஆய்வில் நிறுவியுள்ளேன். இயக்கத்திற்கு நான் ஆற்றிய நன்றிக்கடனாகவே பார்க்கிறேன். சிறந்த தலைமையும், சீரிய தத்துவமும் பின்னிப் பிணைந்த திராவிடர் கழகம் எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்கள் தொண்டாற்றி வருகிறது என்பதும் - அப்படிப்பட்ட அமைப்பில் தொண்டனாக என்னால் ஆன பணிகளைச் செய்துவருகிறேன் என்பதுமே எனது வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன். கூடுதலாக நான் ஆய்வு மேற்கொண்ட ‘மனித உரிமைக்கு திராவிடர் கழக பங்களிப்பு” என்ற ஆய்வை “மனித உரிமைகளின் மறுபெயர் பெரியார்” என்ற தலைப்பில் எழுதிமுடித்துள்ளேன் அதனை மதி பப்ளிகேசன் வெளியீடு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It