kuthoosi gurusamy 300“டேய்! மண்டூ! நான் என்ன கேள்வி கேட்டேன்? நீ என்ன பதில் எழுதியிருக்கிறாய்?”

“தென்னாட்டில் எவ்வெப்போது மழை பெய்கிறது? எதனால் பெய்கிறது?” - என்று கேட்டிருக்கிறீர்கள், சார்!”

“ஆமாம்! அதற்கு நீ என்ன பதில் எழுதியிருக்கிறாய்?”

“ஆவணி, புரட்டாசி, அய்ப்பசி மாதங்களில் மழை பெய்கிறது. தென் மேற்கு பருவக் காற்றும் வடகிழக்குப் பருவக் காற்றும் வீசும்போது மழை பெய்கிறது”- என்று எழுதியிருக்கிறேன், சார்!”

“இதெல்லாம் ஏப்ரல் மாதத்துக்கு முந்தி எழுத வேண்டிய பதிலடா, மண்டூ! பருவக்காற்றாவது, பரங்கிக்காயாவது? கடவுளை வேண்டுவதனால் தான் மழை பெய்கிறது! நன்றாக வேண்டிக் கொண்டால், பங்குனி - சித்திரை மாதத்தில்கூட பெருமழை கொட்டும்” - என்றுதான் இனிமேல் பதில் எழுத வேண்டும். தெரிஞ்சுதாடா, மண்டூ?”

“அப்படியானால் எவ்வளவு வேண்டிப் பார்த்தும் குடகுப் பகுதியில் மழை பெய்யவில்லையாமே! தென்னாட்டிலும் மழையைக் காணோமே! பஞ்சத்தால் மக்கள் துடிக்கிறார்களே! முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - வேதப் பிராமணர்கள் - சில்லறை ஆஸ்திகர்கள் - ஆகிய இத்தனை பேரும் கடவுளைக் கிடுக்கித்தாக்கிப் பார்த்து விட்டார்களே! அவர் ஏன் அசையாதிருக்கிறார், சார்?”

“டேய்! அதிகப் பிரசங்கி! கருப்புச் சட்டை! ஏறு பெஞ்ச் மேலே! இதென்ன பூகோள வகுப்பென்று நினைச்சீண்டியா? அல்லது பொது மேடைன்னு நினைச்சீண்டியா? இரு! இருதயசாமிப் பிள்ளையிடம் (இது ஹெட்மாஸ்டர் பெயர்) சொல்லி உன்னை என்ன செய்கிறேன், பார்! மழை பெய்வதற்குக் கடவுள்தான் காரணம் என்று நம்ப ராஜாஜீயே சொல்றபோது, நீ அவரைவிட மகா புத்திசாலியோ?”

கோபிக்காதீர்கள், சார்! தென்மேற்கு பருவக்காற்று நின்று விட்டபடியால் இனி மேற்குக் கடலோரத்தில் மழை பெய்யாதென்றும், வடகிழக்குப் பருவக் காற்று மூலம் மழை பெய்தால்தான் இனி தென்னாட்டில் மழை பெய்யலாம் என்றும் நேற்று பத்திரிகைச் செய்திகூட வந்திருக்கிறதே, ஸார்! அதில் கடவுளைப் பற்றி ஒன்றும் இல்லையே, சார்!”

“போடா! முட்டாள்! பத்திரிகைச் செய்தி தந்த அவனும் உன்னைப் போல ஒரு சர்வ முட்டாள்! அவன் மட்டும் நம் ராஜாஜியைவிட மகா புத்திசாலியோ?”

பூகோளப் புஸ்தகம் ஒன்றில்கூட (மழையைப் பற்றிக் கூறும்போது) கடவுளைப் பற்றிக் கூறவில்லையே, சார்! கடல், நீர், மேகம், பருவக்காற்று - ஆகிய வார்த்தைகள் தானே சார் இருக்கின்றன? வருண ஜெபத்தைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ ஒரு வார்த்iகூட இல்லையோ, சார்?”

“பூகோளப் புஸ்தகமா? டேய்! என்ன சொன்னாய் அவ்வளவையும் கிழிச்சு நெருப்பிலே போடுடா! பூகோளம் எழுதின பயல்கள் அத்தனை பேரும் முட்டாள்கள்! அவன்களெல்லாம் உபநிஷத் படித்திருக்கிறான்களா? வியாசர் - வால்மீகி - கீதை படித்திருக்கிறான்களா? சொல்லுடா பார்ப்போம்”

“அப்படியானால் பெரிய பரீட்சையிலும் இதே மாதிரி எழுதச் சொல்கிறீர்களா, சார்?”

“ஆமாண்டா, ஆமாம்! இன்னும் 55 மாதம் வரையில் நீ இப்படித்தான் எழுதணும்! தெரிஞ்சுதா? அதற்குப் பிறகு நான் எப்படிச் சொல்றேனோ அப்படி எழுது!”

குத்தூசி குருசாமி (06-09-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It