தஞ்சை மவாட்டத்தில் 29,79,754 (கிட்டத்தட்ட முப்பது லட்சம்) மக்கள் இருக்கிறார்களாம்! ஆனால் ஒரே ஒரு கல்லூரி தான் (கும்பகோணத்தில்) இந்த மாவட்டத்தில் இருக்கிறதாம். 57 உயர்நிலைப் பள்ளிகளும், 1,850 ஆரம்ப பள்ளிகளும், 174 நடுநிலைப் பள்ளிகளும் இருந்துங்கூட ஒரே ஒரு கல்லூரிதான் இருக்கிறதாம்.

kuthoosi gurusamyஆனால் படிப்பிலும் வளப்பத்திலும் தஞ்சையளவுக்கு முன்னேறியில்லாத திருநெல்வேலி மாவட்டத்தில் 7 கல்லூரிகளும், திருச்சி மாவட்டத்தில் 5 கல்லூரிகளும் இருக்கின்றனவாம்! இவ்வாறு தஞ்சைவாசி யொருவர் மனக்குறையுடன் எழுதுகிறார்.

சேலம், தென் ஆர்க்காடு போன்ற வேறு சில மாவட்டங்களில் கூட ஒவ்வொரு கல்லூரிதான் இருக்கிறது.

கல்லூரி கிடக்கட்டும்! ஆரம்பப் பள்ளிகளே ஆயிரக் கணக்கில் வேண்டும்! ஆரம்பப் பள்ளி என்பது பழஞ்சோறு மாதிரி! கல்லூரி என்பது பாதாம்பருப்புப் பாயசம் மாதிரி! பழஞ்சோறே கிடைக்காதவர்கள் பல்லாயிரக் கணக்கிலிருக்கும்போது பாதாம் பாயசம் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுவது பொருந்துமா?

அதுபோகட்டும்! தஞ்சைவாசிகள் கல்லூரியைப் பற்றியோ, ஆரம்பப் பள்ளியைப் பற்றியோ கனவிலும் கருதலாமா? மற்ற மாவட்டத்துக்காரர்களைப் போல் “நாஸ்திகர்”களா தஞ்சைவாசிகள்? கெஜத்துக்கு ஒரு கோவிலும், வாரத்துக்கு ஒரு திருவிழாவும் இருக்கும்போது தஞ்சைவாசிகளுக்கு என்ன குறைவு இருக்கப் போகிறது? பெரிய மடாதிபதிகள் மூன்று பேர்! அக்கிரகாரத்துக்காக ஒரு சங்கராச்சாரி! 5,000-10,000- 20,000 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்குச் சொந்தமான பெரும் பெரும் நில முதலாளிகள், நூற்றுக் கணக்கில்! இவ்வளவையும் வைத்துக் கொண்டு கல்லூரி கிடையாது, ஆஸ்பத்திரி போதாது என்று கூறுவது பொருந்துமா?

நாகூரில் கந்தூரி விழா! வேளாங்கண்ணியில் மாதா விழா! திருவாரூரில் தெப்ப உற்சவம்! கும்பகோணத்தில் திருவிழா! தஞ்சையில் திவிழா! கிராமந்தோறும் திருவிழா!

எந்த ஊரில் திருவிழாக் கிடையாது? தடுக்கி விழுந்தால் கல் முதலாளி (கடவுள்) மீதுதான் விழவேண்டும். குடி தண்ணீர் கிடைக்காத ஊர்கள் பல உண்டு! ஆனாலும் கோவில் இல்லாத ஊர் ஒன்றுகூட இருக்காதே! தெருவுக்கு ஒரு பிள்ளையார் கோவில்கூட இருக்குமே! தனிதனிக் கற்களாக எண்ணிப்பார்த்தால் 30 லட்சம் (ஆளுக்கொன்று வீதம்) கடவுள்கள் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இருக்குமே!

இவ்வளவு கோவில்களில் பக்தர்கள் நாள்தோறும் கடவுளை வேரொடு பிடுங்கிக் கொண்டிருக்கும்போது, கல்லூரி எதற்காக? கடவுளை நோக்கி வேண்டினால், மழை பெய்யும் என்கிறார்கள், உலகப் பேரறிவாளர்கள்! அப்படியானால், அதே கடவுள் அற்பமான காலேஜ் படிப்பைத் தானா தரமாட்டார்? எதற்கும் நம்பிக்கைதான் காரணமென்கிறார்கள், வயதில் மட்டும் முதிர்ந்த பெரியவர்கள் “கடவுளை நம்பினோர் கைவிடப்படார்,” என்கிறார்கள். கடவுளோடு கடிதப் போக்குவரத்து வைத்திருக்கின்றனர், ஆஸ்திகர்கள்! அப்படியிருக்கும்போது இன்னும் அதிகமான கல்லூரிகள் எதற்காக? கும்பகோணத்திலிருக்கின்ற கல்லூரிகூடத் தேவையில்லையே!

எஸ். எஸ். எல். சி. தேர்வு பெற்றவுடன் நாகூரிலே வேளாங்கண்ணி யிலோ, திருவாரூரிலோ உள்ள வணங்குமிடத்திற்குச் சென்று நின்று, அல்லது உட்கார்ந்து, அல்லது மண்டியிட்டுக் கொண்டு-

“ஓ! தயாபரனே! சர்வ வல்லமையுள்ளவனே! ஓடிவா சீக்கிரம்! நான் மாடம் க்யூரி (ஆயனயஅந ஊரசநை) போன்ற விஞ்ஞானியாக வேண்டும்! லட்சுமணசாமி முதலியாரைப் போன்ற டாக்டராக வேண்டும்! போதன் ஜோசஃப் போன்ற பத்திரிகாசிரியராக வேண்டும்! வி. எல். எதிராஜ் போன்ற சட்ட நிபுணராக வேண்டும்! இலக்குவனாரைப் போன்ற தமிழ்ப் பேராசிரியராக வேண்டும்! ஆர். கே. ஷண்முகத்தைப் போலப் பொருளாதார நிபுணராக வேண்டும்! ஜி. டி. நாயுடுவைப் போன்ற விஞ்ஞானியாக வேண்டும்! - என்று கண்ணை மூடிக் கொண்டு கதறினால் போதாதா? புத்தக மில்லாமல் கட்டடமில்லாமல், விஞ்ஞான ஆராய்ச்சிக் கருவிகளில்லாமல், பணச் செலவில்லாமல், பட்டதாரியாகி விடலாமே! தமிழ் மொழியில் கூறினால் மேற்படி கடவுள்களில் யாருக்காவது புரியாது என்று சந்தேகப் பட்டால், வருண ஜபம் செய்யக்கூடிய வேதப் பிராமணாளைக் கூப்பிட்டு கல்வி ஜபம் செய்யச் சொன்னால் போகிறது!

கடவுள் நிச்சயம் கல்லூரிப் படிப்பைத் தருவார்! ஆ.க்ஷ.க்ஷ.ளு. - க்ஷ.நு. ஆ.ஹ. - க்ஷ.டு. - க்ஷகூ - க்ஷ. ஊடிஅ. - ஆ.டீ.டு. - ஆ.ளுஉ.-போன்ற பட்டங்களையும் அவரே தந்துவிடுவார்! அவரால் ஆகாதது என்ன இருக்கிறது?

தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆஸ்திகர்களாவது இந்த முறையைக் கையாள்வார்களென்று எதிர்பார்க்கிறேன்! கல்லூரியும் வேண்டாம்; கத்தரிக்காயும் வேண்டாம்! கடவுளைக் கட்டிப் பிடியுங்கள்! கதறுங்கள்! பூவினால் அர்ச்சனை செய்து பார்த்தாகி விட்டது! இனி, கடுதாசியைக் கிழித்து அர்ச்சனை செய்துபாருங்கள்! குளிர்ந்த தண்ணீரைக் குடத்தில் ஊற்றி அபிஷேகம் செய்து பார்த்தாகி விட்டது! இனி கடவுள் தலைக்குமேல் “ஷவர்பாத்” குழாய் வைத்து வெந்நீரால் அபிஷேகஞ் செய்து பாருங்கள்! பட்டைச் சோறும் வாழைப் பழமும் வைத்துப் படைத்துப் பார்த்தாகி விட்டது! இனி, வெண்ணெய் தடவிய ரொட்டியும், அரைவேக்காடு முட்டையும் வைத்துப் படைத்துப் பாருங்கள்! வாகனத்தில் வைத்துத் தூக்கியும் தேர் மீது வைத்து இழுத்தும் பார்த்தாகி விட்டது! இனி சைக்கிள் மீதும், ரயில்வண்டி மீதும் ஏற்றி வைத்து ஊர் சுற்றிக் காட்டிப் பாருங்கள்! தெப்ப உற்சவம் நடத்திப் பார்த்தாகி விட்டது! இனி ஆகாய விமான உற்சவம் நடத்திப் பாருங்கள்! கோவில் பள்ளியறையில் படுக்க வைத்துப் பார்த்தாகி விட்டது! இனி பக்தர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்துப் பாருங்கள்! கடற்கரைக்கு அழைத்துச் சென்று காட்டியாகி விட்டது! இனி, சினிமாவுக்கு அழைத்துச் சென்று காட்டிப் பாருங்கள்!

அவருக்கும், பாவம்! ஒரு மாறுதல் வேண்டாமா? அதற்காகத்தான் சொல்கிறேன்!

குத்தூசி குருசாமி (30-08-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It