kuthoosi gurusamyஃப்ரெஞ்சு இந்திய சர்க்கார் அசல் கிறுக்கர்கள் என்றே தோன்றுகிறது! 10 லட்ச ரூபாயைப் பாழாக்கப் போகிறார்களாம்! புதுச்சேரியில் கடல் தண்ணீரிலிருந்து மின்சார உற்பத்தி செய்யப் போகிறார்களாம்! சுத்தப் பைத்தியங்கள்! பத்து லட்ச ரூபாயைக் கரியாக்கப் போகிறார்கள்! திருப்பதி வெங்கடாசலபதிக்கு இன்னொரு வைர முடி செய்து வைத்தாலும் வைக்கலாமே! (இப்போதுள்ள வைரமுடியின் விலை 10 லட்சம் ரூபாய்தான்!)

மின்சார சக்தி வேண்டுமென்றால் அதற்காகப் பணத்தையா பாழக்குவது? ‘கடவுளே! கேட்கும் நேரத்தில் கார்முகிலைக் கலைத்து கன மழையை அனுப்பி வைக்கிறாயே! புதுச்சேரிக்குத் தேவையான மின்சார சக்தியை “அர்ஜண்ட்டாக” அனுப்பித் தர மாட்டாயா?’ - என்று ஒரு வார்த்தை கேட்டால் போதுமே! ஃப்ரெஞ்சு இந்திய சர்க்கார் நாஸ்திகர்களாகி விட்டார்களா - என்று அதட்டிக் கேட்கிறேன்!

அது போகட்டும்! கடல் தண்ணீர் எதற்காக இருக்கிறது? கண்டபடி இப்படிப் பாழக்குவதற்காகவா? அல்ல! அல்ல!!

ஒரு மகாளய அமாவாசை! ஒரு கிரகணம்! - இந்த மாதிரி நாட்களில் “சமுத்திர ஸ்நானம்” செய்தால் போகின்ற கதிக்கு நல்ல கதி உண்டு என்று பெரியவா சொல்லியிருக்காளோன்னோ?

இது தெரியாமல் கடல் தண்ணீரிலிருந்து மின்சார சக்தி உண்டாக்குவதென்றால், இதைவிட விபரீதம் வேறென்ன வேண்டும்?

ஓமந்தூர் ரெட்டியார் மந்திரியாயிருந்தபோது யாரோ பக்தவச்சல ரெட்டியார் என்ற ஒருவர் கடல் நீரிலிருந்து பெட்ரோல் செய்யும் விதத்தைக் காட்டினாராம். அந்தப் பெட்ரோலின் விலை காலன் 10-12 அணாதான் ஆகும் என்று கூறினாராம்! அப்போது இதைப் பற்றி எழுதி யிருக்கிறேன்! அந்தச் சங்கதி என்னவாயிற்றென்று தெரியவில்லை.

இது என்ன ரஷ்யாவா? ஆராய்ச்சிக்காரருக்கு மதிப்புக் கொடுத்து நாட்டு வளப்பத்தை அதிகமாக்குவதற்கு?

ஒரு ஜி. டி. நாயுடு எங்கேயிருக்கிறார், பார்த்தீர்களா? இவர் மட்டும் ரஷ்யாவிலிருந்தால் இதற்குள் 50-60 ஸ்டாலின் மெடல் வாங்கியிருப்பாரே! இந்த நாட்டில் இன்கம்டாக்ஸ் ஏட்டையல்லவோ புரட்டிக் கொண்டிருக்கிறார்!

இந்தச் சுடுகாட்டிலே யார் பிறந்தாலென்ன? சோம்பேறிகளுக்கும், முட்டாள்களுக்கும், தகிடுதத்தக்காரர்களுக்கும்தானே இங்கு மதிப்பு அதிகம்?

ரமணாஸ்ரமும் அரவிந்தாஸ்ரமும் போதாதா உதாரணத்துக்கு?

கடல் தண்ணீரிலிருந்து மின்சார சக்தியுண்டாக்குவது ஒன்றும் பிரமாத சங்கதியல்ல. நீர் வீழ்ச்சியின் வேகத்திலிருந்து உண்டாக்குவது போலவே கடல் அலைகளின் சக்தியைக் கொண்டு மின்சார சக்தி உண்டாக்கலாமே!

ஆனால் ஒன்று! இம்மாதிரி சக்திகளை நம்புகிறவர்கள் யார்? கடவுள் சக்தியை நம்பாதவர்கள் தாம்!

எல்லா சக்திகளுக்கும் பிறப்பிடம் கடவுளே! சர்வ வல்லமையுடையவர் கடவுள் - என்ற சங்கதியை மறந்துவிடாதீர்கள்!

அவர் நினைத்தால் ஆகாதது ஒன்றில்லை! அண்டத்தை அணுவாக்குவார்! அணுவை அண்டமாக்குவார்! அணுவைக் குண்டாக்குவார்! அதை அமெரிக்கர் கையில் தந்துவிட்டு வேடிக்கையும் பார்ப்பார்!

ஆனால் ஒன்று! அவருக்கு மறதி அதிகம்! பக்தர்களின் ‘சிபாரிசு’களில் மூழ்கிக் கிடப்பவர் அல்லவா? ஆதனால், என்க. -ஆகையால் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்!

மழை வேண்டும் மகேசுவரனே! அரிசி வேண்டும் அப்பனே! படிப்பு வேண்டும் பராபரனே! வீடு வேண்டும் வேதத்தின் சாரமே! காடு வேண்டும் கருணாகரனே! காசு வேண்டும் கர்த்தனே!

இம்மாதிரி எது எது வேண்டுமோ அது அதை, அப்போதைக்கப்போது கேட்டு நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும்! தட்டினால் திறக்கப்படும்! கேட்டால் கொடுக்கப் படும்! சந்தேகமிருந்தால் சக்ரவர்த்தி ராஜகோபாலரைக் கேட்டுப் பாருங்கள்!!

ஓம்! தத்ஸத்!

- குத்தூசி குருசாமி (28-06-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It