kuthoosi gurusamy 268புராணம் - இதிகாசம் அத்தனையும் புளுகு மூட்டைகள் என்று சு. ம. காரன் சொன்னால், புராணக் காதலர்கள் சண்டைக்கு வருகிறார்கள். அவர்களும் எல்லாவற்றையும் 100க்கு 100 நம்புவதில்லை. ஒரு சிலருக்கு ஒரு சில சங்கதிகள் மட்டுந்தான் புளுகாகத் தோன்றுவதில்லை.

“அப்படியானால், உமா தேவியர் சம்பந்தமூர்த்திக்குத் திருமுலைப்பால் கொடுத்தது கூடவா புளுகு?” - என்பார் இன்னொருவர்!

“துரௌபதையின் துகில் ஆயிரக்கணக்கான கெஜங்கள் நீண்டு கொண்டே போனது கூடவா புளுகு?” - என்பார் இன்னொருவர்!

“பரமசிவனும் பார்வதியும் ரிஷப வாகனரூடராய் வந்தது கூடவா புளுகு? எத்தனையோ தடவை வந்திருப்பதாகக் கூறியிருக்கும்போது, ஒரு தடவையாவது உண்மையாக வந்திருக்கக் கூடாதா?”- என்று பரிதாபமாகக் கேட்பார், மற்றொருவர்.

“ராமனுடைய அஸ்திரம் பல அரக்கர்களின் தலைகளைக் கொய்து விட்டு, கடலில் போய் முழுகிவிட்டு மீண்டும் ராமனின் அம்புப் பைக்குள் வந்து புகுந்து கொண்டது கூடவா புளுகு?” என்பார் ஒருவர்.

“மற்றதெல்லாம் புளுகாயிருந்தாலும் பாற்கடலில் பாம்புப் படுக்கையில் மகாவிஷ்ணு படுத்திருப்பது கூடவாபுளுகு?” - என்று கேட்பார் ஒருவர்.

புராணப் புளுகுகளை உண்மையென்றே நம்பியிருந்தவர்களில் நானும் ஒருவன். பீ. ஏ. வகுப்பு வரையில் பழுத்த சைவனாக இருந்தேன். தேவார கோஷ்டியில் பலமுறை பாடியிருக்கிறேன்.

என்னைப்போலவே உங்களிலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் பரம பக்தர்களாயிருந்து, புராண- இதிகாசங்களை ஒரு காலத்தில் நம்பியிருந்தவர்கள் தானே?

புராணங்கள் புளுகு மூட்டைகள்தான் என்பதை உணர்ந்துகொள்ள எனக்கு முக்கிய உதவியாயிருந்தது செய்தித் தாள்கள்!

கண்ணெதிரிலேயே நாம் பார்க்கின்ற செய்திகள் ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒவ்வொரு மாதிரி வரும்! நேற்று வந்தச் செய்திக்கு நேர்மாறான மறுப்பு, அல்லது திருத்தம், நாளை வரும்!

இன்ன மாகாணத்தில் இன்ன ஊரில் ‘நான்கு கால் சேவல் வயிற்றிலிருந்து இரண்டுதலை எருமைக் கன்று வெளிப்பட்டது!’ என்று ஒரு செய்தி வரும்! விசாரித்துப் பார்த்தால் அந்தமாதிரி ஊரே அந்த மகாணத்தில் இருக்காது!

இன்ன மந்திரி பேசுகையில் பத்தாயிரம் மக்கள் கூடியிருந்தனர், என்று வரும். ஆனால் உண்மையில் மந்திரி நூறு பேர் கொள்ளக்கூடிய ஒரு சிறு அறைக்குள் பேசியிருப்பார்!

இன்ன ரிஷி இவ்வளவு மகத்தான அதிசயங்களைச் செய்கிறார் என்று பத்திகைகள் பிரசாரஞ் செய்யும்! உண்மையில் அந்த ஆள் ஒரு சுத்த மடையனாக இருந்து, ஊர்க்கொள்ளையடித்து உல்லாச வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பான்!

இன்ன ஊர் சாமிக்கு இன்ன சக்தியிருக்கிறது என்று பத்திரிகைகள் எழுதும். ஆனால் அந்தச் சாமியின் நகைகள் தினம் ஒன்றாகத் திருட்டுப் போய்க்கொண்டேயிருக்கும்!

இவைமட்டுமா? செய்தி ஒன்றாயிருக்கும், அதன் தலைப்பு வேறொன்றாயிருக்கும்! (பத்திரிகைக்காரர்களின் மூதாதையர்கள்தான் புராணங்களையும் எழுதியிருக்க வேண்டும் என்பதை நான் இமிடேஷன் அய்யப்பன் சாட்சி யாகக் கூறமுடியும்!)

செத்துப்போனவர்களைப் பிழைக்க வைப்பதும் பிழைத்திருப்பவனைச் சாகடிப்பதும் கூட பத்திரிகைகளால் முடியும்!

ஸ்டாலின் செத்துப் போய் விட்டதாக இதுவரையில் 3-4 தடவை 2-3 ஆண்டுகளாகச் செய்தி வரவில்லையா? சுபாஷ் போஸ் உயிருடனிருப்பதாக! நேற்றுக்கூடப் பேசியிருக்கிறார்களே!

ஒரே இடத்தில் பல நிருபர்களை நிறுத்தி வைத்து, ஒரே நிகழ்ச்சியைப் பற்றி எழுதச் சொல்லிப் பாருங்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிப் புராணமாகவேயிருக்கும். அவர்கள் கண்களில் கோளாறு என்பதல்ல! அதுதான் உண்மையான பத்திரிகைத் தொழில்!

“என்னாய்ய, ரிப்போர்ட்டர்! யாரைப் பார்த்துக் காப்பியடித்தீர்? 4-5 பத்திரிகைகளிலும் ஒரே மாதிரியாகவா செய்தி வருவது?” என்று ஆசிரியர் கேட்பாரல்வா?

அதற்காக ஏதாவதொன்றைக் கூட்டியும் குறைத்தும் எழுதியே தீர வேண்டும்! பத்திரிகைக்காரருக்கு வேண்டாதவர்களாயிருந்தால் செய்தியை ஒருமாதிரி எழுத வேண்டும். அப்பேர்ப்பட்டவர் மீது ஏதாவது ஒரு ரோஜாப் பூ எறியப்பட்டால் ரிப்போட்hட்டர் எப்படி எழுதவேண்டும் தெரியுமா?

“ரோஜப்பூ நிறத்தைப்போன்ற கற்கள் பூமாரி பெய்வதுபோல் வீசியெறியப்பட்டதால் ஸ்ரீமான் ராமசாமி நாய்க்கருக்குப் பலமான காயமேற்பட்டது.” என்று எழுதவேண்டும்!

- பத்திரிகைச் செய்திகளைப் பற்றி இப்படிச் சொன்னால் பத்திரிகை படிக்கிறவர்கள் எதைத்தான் உண்மையென்று நம்புவது? என்று கேட்கலாம்.

என்ன செய்வது? சகித்துக்கொள்ள வேண்டிய பல தொத்து நோய்களில் இதுவுமொன்று!

- குத்தூசி குருசாமி (29-1-51)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It