கடவுள் என்னும் விஷயம் அற்பமானதாகவும் கருதப்படலாம்; பிரமாதமானதாகவும் கருதப்படலாம். எப்படி எனில், சாதாரண மக்களுக்கு கடவுள், மதம் அரசியல் விஷயங்களின் தத்துவம் மிகவும் அலட்சியமானதாகும். பெரிய அறிஞர்களுக்கு இந்த விஷயங்கள் அபாரமானதும் மிக நுணுக்கமாக அறிந்து பேசத்தக்கதுமாகும். நான் எனது தத்துவத்தை எடுத்துச் சொல்லப் பயப்பட்டால் அல்லது பித்தலாட்டம் செய்தால் என்னையே வெறுத்துக் கொள்ள வேண்டியவனாவேன். ஆகவே, என்னை நாஸ்திகன், மதத் துவேஷி என்று ஆஸ்திகன் சொல்லுவது மகா மகா அறியாமையும் அலட்சிய புத்தியும் ஆகும்.

இருக்கிற கடவுளை – இல்லை என்று சொல்வதில், சொல்பவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும் செய்விக்கிற – சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒருவனைச் சொல்லவும், நினைக்கவும் செய்வதில் கடவுளுக்குத்தானாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே, ஒரு மனிதன் இப்படி முட்டாள்தனமான காரியத்தைச் செய்வானா? அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியத்தைச் செய்விப்பாரா என்பதையாவது ஒருவன் கடுகளவு நினைத்தாலும், சிந்திக்கும் சக்தியைப் பயன்படுத்தினாலும் மற்றவனை – நாஸ்திகன், கடவுளை மறுக்கிறவன் என்று குறையோ குற்றமோ சொல்ல மாட்டான்.

கடவுள் பற்றிய தத்துவ விளக்கம் என்றால் – கடவுள் நிர்வாணமாய், பட்டாங்கமாய்க் காணப்படும் வரையில் ஆராய்ச்சி செய்வது என்பதாகும். ஒரு விஷயத்தைத் தத்துவ விசாரணை செய்ய முதலில் என்ன, ஏன், எதற்காக, எப்படி, எங்கே, எப்போது என்பன போன்ற கேள்விகளைப் போட்டு திருப்தியான பதில் பெற வேண்டும். தயவு தாட்சண்யமற்ற கேள்வி போட வேண்டும். தத்துவ விசாரணை என்பதும், தர்க்கவாதம் என்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவையாகும். ஆகையால் சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வத்தையும் நடத்துதல் ஆகிய அபார குணங்களைக் கொண்ட ஒரு "பரம் பொருளை'ப் பற்றித் தத்துவ விசாரணை செய்கிறவர்கள் இந்த 6, 7 கேள்விகள் மாத்திரமல்லாமல் இன்னும் 60, 70 சோதனைகள் செய்து பார்க்க வேண்டும். பக்தனுக்கு இது தேவை இருக்காது; தத்துவ விசாரணைக்காரனுக்கு இது அவசியமாகும்.

எதற்காக கடவுள்? ஏன் கடவுள்? எது கடவுள்? என்கின்ற விளக்கம் அவசியம். ஒவ்வொரு தத்துவ விசாரணைக்காரனுக்கும் விளங்கியாக வேண்டும். மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதே தவிர, கண்மூடித்தனமான மிருகத்தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன்படுத்தி, அதிகமான தொல்லையில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இந்தத் தொல்லைக்குப் பரிகாரமாக கடவுளைச் சிருஷ்டித்துக் கொண்டான். அரசன் ஏன்? குடிகள் ஏன்? ஏழை, பணக்காரன் ஏன்? மேல்சாதி, கீழ்சாதி ஏன்? உழைப்பாளி அடிமையும், சோம்பேறி எஜமானும் ஏன்? பிச்சைக்காரன், பிரபு ஏன்?

இந்தத் தன்மைகளை ஏற்படுத்தவும், நிலை நிறுத்தவும் பாதுகாக்கவும் அல்லாமல் கடவுளால் கண்ட வேறு பயன் என்ன? அவர் செய்த நல்ல காரியம் என்ன? இந்த வேலைகளுக்குக் கடவுள் வேண்டுமா? பகுத்தறிவு கொண்ட மனிதன் சாந்தி, அன்பு, திருப்தி இல்லாமல், கவலை இல்லாமல், அதிருப்தியில் குறையோடு சாவதற்குக் காரணம், கடவுளல்லாமல் வேறு என்னவாய் இருக்கக் கூடும்?

அவனவன் முட்டாள்தனம் காரணம் என்றால், பகுத்தறிவு இருப்பது எதற்காக? முட்டாள்தனத்தை உண்டாக்கவா? பகுத்தறிவு இல்லாத ஜீவன்களுக்கு இல்லாத கெட்ட குணங்கள், கவலைகள், குறைபாடுகள், இனவெறுப்புகள், துரோகங்கள், பகுத்தறிவுள்ள ஜீவனான மனிதனுக்கு ஏற்படுவானேன்? பகுத்தறிவற்ற துஷ்ட ஜந்துக்களிடம் இல்லாத கெட்ட குணங்கள் பகுத்தறிவு உடைய மனிதனிடத்தில் இருப்பானேன்? கடவுளைக் கண்டதாலா? கடவுளைக் கற்பித்துக் கொண்டதாலா? கடவுள் தன்மையை, கடவுள் சக்தியைத் தவறாகக் கொண்டதாலா? எதனால் என்பது, பகுத்தறிவுக்குக்கூட எப்படிப் பரிகாரம் செய்து கொள்வது என்பது முடியவில்லையானால், பகுத்தறிவின் பயன்தான் என்ன? கடவுளின் தன்மைதான் என்ன?

கடவுளால் சர்வமும் நடைபெறுகின்றன. கடவுள் சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளவர் என்பதாக இருந்தும் கடவுளால் என்ன காரியம் நடக்கிறது? எதையும் கடவுள் பெயரைச் சொல்லி மனிதன்தான் செய்கிறான்; கடவுளை அலட்சியப்படுத்திவிட்டு, கடவுளுக்கு இஷ்டமில்லாத காரியம் என்பதைக்கூட மனிதன் செய்கிறான். மனிதனுக்கு வேண்டாததும், மனிதனுக்கு கேடான காரியமும் நடந்த வண்ணமாய் இருக்கின்றன. ஒரு காரியமாவது கடவுள் உணர்ச்சி உள்ள உலகில் பூரணத்துவம் – அதாவது, திருப்தி உள்ளதும் குறை இல்லாததுமான காரியம் என்பதாகக் காணக் கூடியதாகவே இல்லை. மனித எத்தனப் பாதுகாப்பு இல்லாவிட்டால், வாழ்க்கையில் ஒரு காரியமும் பத்திரப்படாது என்பதோடு – கடவுளுக்குக்கூடப் பத்திரமில்லை என்றே சொல்லலாம்.

(சேலம் கல்லூரியில் ஆற்றிய உரை - 'குடி அரசு' – 23.11.1946)

 

Pin It