கோயமுத்தூர் தொழிலாளர் வேலை நிறுத்தம்
கோயமுத்தூரில் நூலாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஏற்பட்டதைப் பற்றி நாம் மிகவும் மன வருத்தமடைகிறோம். தொழிலாளர்கள் பால் நமக்குண்டான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். நிற்க, இம்மாதிரியான ஒரு சம்பவம் ஏற்பட்டதானது பார்ப்பனரல்லாத ஏழை மக்களினது துரதிஷ்டவசமென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. தொழிலாள சகோதரர்கள் தங்களை ஒழுங்காய் நடத்தித் தரத்தக்க ஒரு தலைவரை தங்களுக்குள் அடைய யோக்கியதையற்ற காரணத்தினாலேயே இம்மாதிரியான துரதிர்ஷ்ட்டவசமான சம்பவம் ஏற்பட நேரிட்டதென்பதே நமதபிப்பிராயம். அல்லாமலும் கோவை தொழிலாளர்களின் தலைவரான ஸ்ரீமான் என்.எஸ். ராமசாமி அய்யங்காரவர்கள் தொழிலாளர்களுக்குத் தலைவராயிருந்து நடத்த எந்த விதத்தில் உரிமையுடையவர் அல்லது யோக்கியதை உடையவர் என்பது நமக்கு விளங்கவில்லை.
தொழிலாளரைத் தவிர மற்ற யாரும் தொழிலாளருக்குத் தலைவராயிருக்கக் கூடாதென்று அநேகத் தடவைகளில் நாம் எழுதியும் தொழிலாளர் கூட்டங்களில் பேசியும் வந்திருப்பது நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அல்லாமலும் இம்மாதிரி வேலை நிறுத்தம் செய்வதைப் பற்றியும் நாம் பலமாகக் கண்டித்து எழுதியும் பேசியும் வந்திருப்பது நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஸ்ரீமான் ராமசாமி அய்யங்கார் எந்த விதத்தில் என்ன மாதிரியான தொழிலாளராவார். அல்லாமலும் அவருக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த விதத்தில் சம்மந்தம் உண்டு. அவர் தேசத்தை பாழ் பண்ணியும், பாமர மக்களை வஞ்சித்தும், நாணயக் குறைவினாலேயே காலத்தை கழிக்க வேண்டியதான வக்கீல் உத்தியோகம் செய்பவர். அன்றியும் மக்களை சமமான கண்ணில் பார்க்காமல் 100 - க்கு 99 பேர்களான தொழிலாளிகளையே அதாவது தங்கள் சரீரத்தால் உழைத்துச் சாப்பிடும் கண்ணியமானத் தொழில் மக்களைத் தாழ்ந்த பிறவி என்றும், மக்களை ஏமாற்றி ஊரார் உழைப்பால் பிழைக்கும் தன்னைப் போன்றார்களை உயர்ந்த பிறவி யென்றும் எண்ணி அந்தப்படிக்கே நடந்து வருகிற சாதியை சேர்ந்தவர்.
அதுமாத்திரமல்லாமல் இப்போது அவர் செல்ல ஏற்பட்ட ஜெயிலிலேயும் அங்குள்ள ஆயிரக்கணக்கான சகோதரர்களைவிட தனக்கு அதிகமான வேறு சௌகரியமும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் வேறு ஒருவன் அதாவது உயர்ந்த ஜாதியானென்று சொல்லிக் கொள்ளுகிற தன் ஜாதிக்காரன் ஒருவனே சமையல் செய்து போட வேண்டுமென்றதுமான தனி உரிமை கொண்டாடுபவர். மற்றும் அவரது தைரியம், சுயமரியாதை, நாணயம் இவைகளைப் பற்றி நாம் எழுதித் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லாமலே தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாய்த் தெரியக்கூடும். அன்றியும், தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்து கஷ்டப்படுவதில் அவருக்குள்ள கவலை என்ன என்பதை அவர் தன்னை ஜாமீனில் விடும்படிக் கேட்டுக் கொண்ட விண்ணப்பத்தைப் பார்த்தால் சுலபமாய் அறியலாம். அதாவது தன்னை சிறையில் வைத்திருப்பதால்தான் பீஸ் வாங்கிக் கொண்ட கேஸ்களுக்கு கெடுதி வந்து விடுமென்றும் அதற்காக வேண்டி வெளியில் விட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தவிர அவரைக் கைது செய்ததைப் பாராட்டுவதற்காக பாராட்டுக் கூட்டமும் இவர் போன்ற பார்ப்பனர்களாலே முக்கியஸ்தர்களாக இருந்து நடத்தப்பட்டிருக்கிறது. இவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த விதம் சம்மந்தமிருக்க முடியும்.
பார்ப்பனரல்லாதார்களுக்கு ஏதாவது ஒரு இடத்தில் கொஞ்சம் செல்வாக்கிருக்குமானால் அந்த செல்வாக்கையொழித்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த தொழிலாளர் கிளர்ச்சியென்றும், வரி செலுத்துவோர் கிளர்ச்சியென்றும், ரயில்வே பிரயாணிகள் கிளர்ச்சி என்றும், குழாய் தண்ணீர் குடிக்கிறவர்கள் கிளர்ச்சியென்றும், தெருவில் நடக்கிறவர்கள் கிளர்ச்சியென்றும் மற்றும் ஏதாவதொரு கிளர்ச்சியின் பெயரையோ, சங்கத்தின் பெயரையோ, சொல்லிக் கொண்டு அதில் தங்களைத் தலைவர்களாகவும், காரியதரிசிகளாகவும் தங்களைத் தாங்களே தெரிந்தெடுத்துக் கொண்டு அதன் மூலம் பார்ப்பனரல்லாத பாமர மக்களையும், வாயில்லாப் பூச்சிகளையும் வசப்படுத்திக் கொண்டு ஆங்காங்கு பார்ப்பனரல்லாதார் நன்மைக்காகப் பாடுபடுபவர்கள் யாராவதிருந்தால் அவர்களை வையவும் அவர்களுக்கிருக்கும் செல்வாக்கை ஒழிக்கவும் இவர்களை ஏவிவிட்டு அந்த ஸ்தானத்தில் தாங்கள் அமர்வதையே முக்கியக் கருத்தாகக் கொண்டு இம்மாதிரி காரியங்கள் நடத்தி வரப்படுகிறது. இதற்கு உதாரணமாக பார்ப்பனரல்லாதார்களில் 100-க்கு 99 பேர்களால் போற்றப்பட்டும் மரியாதை செய்யப்பட்டும் வந்த, வருகிற பெரியாரான சர். தியாகராயப் பெருமானவர்களின் வீட்டுக்கு இது போன்ற தொழிலாளர் கூட்டங்களை ஒருகாலத்தில் ஏவிவிட்டு, அவரை அடிக்கச் செய்ததும், அவர் வீட்டு ஜன்னல், கதவு, கண்ணாடிகளை உடைக்கச் செய்ததும், அவரது அருமை மனைவியார் இந்த தொழிலாளர்களிடம் தனக்கு மாங்கல்யப் பிச்சை கொடுக்க வேண்டுமென்று தனது முந்தானையைப் போட்டுக் கும்பிட்டுக் கெஞ்சினதும் யாரும் அதற்குள் மறந்திருக்க முடியாது.
சென்ற மாதத்தில் அதே தொழிலாளர் கூட்ட நண்பரில் ஒருவர் முனிசிபல் ஸ்தானத்துக்கு நின்றபோது அவருக்கு எதிரிடையாய் அவர்களை ஏவிவிட்ட கூட்டத்தாரே வேலை செய்து அவரைத் தோற்கடிக்கப் பார்த்ததும் ஜன்னலும் கதவும் உடைக்கக் கொடுத்து, மாங்கல்யப் பிச்சை கேட்ட கூட்டத்தாரே அத்தொழிலாளர்களுக்கு உதவி செய்ததும் யாவரும் அறிந்திருக்கக்கூடும்.
நிற்க, ஸ்ரீமான் சி. வி. வெங்கட்டரமணய்யங்கார் என்கிற மற்றொரு பார்ப்பனர் கோவைத் தொழிலாளர் விஷயத்தில் மிக்க அநுதாபமுள்ளவர் போல சந்தடி சாக்கில் தலையை நீட்டிக் கொள்ளுகிறார். இவருக்குத் தொழிலாளர் விஷயத்தில் எப்படி அனுதாபமிருக்க முடியும். எந்தெந்த மில் தொழிலாளர்கள் இப்பொழுது வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்களோ அந்தந்த மில்களிலெல்லாம் ஸ்ரீமான் வெங்கட்டரமணய்யங்காருக்கு பங்கு இருப்பதோடு தானும் சிலவற்றிற்கு நிர்வாகஸ்தராகவும் இருக்கிறார். ஆகவே இவர் தொழிலாளரை விட உயர்ந்த ஜாதியாரென்று சொல்லிக் கொள்வதோடு முதலாளி கூட்டத்திலும் சேர்ந்து கொண்டு 100 -க்கு வருஷம் 1 -க்கு 30, 40, 50 வீதம் லாபமும் பெற்றுக் கொண்டு நிர்வாகத்தையும் நடத்திக் கொண்டு இருக்கிற இவர் உண்மையில் எப்படித் தொழிலாளர்களிடம் அனுதாபம் காட்ட முடியும். இவருக்குத் தொழிலாளர்களிடம் உண்மையாகவே அனுதாபமிருக்குமானால், தான் நடந்து கொள்ள வேண்டிய மாதிரி என்ன? தன்னோடு சேர்ந்த முதலாளிகளிடம் போய், ஒன்று இத்தொழிலாளர்களுக்கு இன்னின்ன சௌகரியம் செய்து கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் என்னுடைய டைரக்டர் ஸ்தானத்தை ராஜினாமா செய்து விடுகிறேன் என்று சொல்ல வேண்டும். அல்லது இம்மாதிரி ஏழைகளைக் கஷ்டப்படுத்தி சம்பாதித்த லாபம் எனக்கு வேண்டாம். என்னுடைய பணத்தைக் கொடுத்து விடுங்கள் என்று சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் முதலாளி கூட்டத்தில் சேர்ந்து கொண்டு தன்னுடைய பணத்துக்கு வருஷம் 1 - க்கு 30, 40, 50 வீதம் லாபம் சம்பாதித்து மூட்டைக் கட்டிக் கொண்டு தொழிலாளர்களிடம் வந்து “நான் உங்களுக்காக பாடுபடுகிறேன். முதலாளிகள் செய்வது அக்கிரமம். சர்க்கார் செய்வது அக்கிரம்” என்று பேசி பாமர மக்களின் ஓட்டைப் பெற பார்ப்பதினால் தொழிலாளர்களுக்கு என்ன லாபம் வந்து விடும். இவர்களுடைய முயற்சிகள் எந்த விதத்தில் யோக்கியமான பலனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை நேயர்கள் யோசிக்க வேண்டும்.
தவிர ஸ்ரீமான் ராமசாமி அய்யங்காருக்காக கோர்ட்டில் பேசும் வக்கீலோ ஸ்ரீமான் சி. விஜயராகவாச்சாரியார் என்னும் பெரியார். அவர் பீஸுக்காக இந்த கேசில் பேச வந்தால் அவரைப் பற்றி இங்கு ஒன்றும் சொல்ல வரமாட்டோம். அப்படிக்கில்லாமல், மாட்டிக் கொண்டவர் அய்யங்கார் பிராமணராதலால் அவரை தப்பிவித்து விட வேண்டுமென்கிற ஆசையல்லாமல் வேறில்லை. ஆகவே இந்தக் கூட்டத்தார் இது விஷயமாய்ச் செய்யும் ஆர்பாட்டத்தின் கருத்து என்ன என்பதை நாம் யோசித்தால் விளங்காமல் போகாது. வரப் போகும் தேர்தல்களில் தாங்கள் ஏழை மக்களின் நண்பர்கள் என்று காட்டி, பாமர மக்களை ஏமாற்றி ஓட்டு பெறுவதற்கும், தங்களுக்கு கிடைக்காது என்று தெரிகிற சந்தர்ப்பங்களில் தங்களது அடிமைகளைக் கொண்டு வந்து அந்த ஸ்தானங்களில் வைக்கவுமேயல்லாமல் வேறு எந்த விதமாகவும் தொழிலாளர்களிடம் காருண்யம் இருக்க நியாயமில்லை என்பது விளங்காமல் போகாது. எனவே இந்த கூட்டாத்தார் இம்மாதிரியான சம்பவங்களின் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும், அந்த விளம்பரத்தின் செல்வாக்கைப் பார்ப்பனரல்லாதார்களுக்கு விரோதமாய் உபயோகித்துப் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவுமே வாயில்லா பூச்சிகளான பதினாயிரக்கணக்கான தொழிலாளர்களை பட்டினிக் கிடக்கும்படி கொடுமை செய்து விட்டார்களென்பதே இக்கிளர்ச்சியைப் பற்றின நமது முடிவான அபிப்பிராயம்.
அடுத்த தேர்தலுக்கு ஆசைப்பட்ட பார்ப்பனரல்லாத இரண்டொருவரும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளை உத்தேசித்து இச் சந்தர்ப்பத்தில் தங்களுடைய பேர்களையும் கொடுத்திருக்கிறார்கள். இவைகளினால் தொழிலாளர் இயக்கம் என்பது எவ்வளவு புரட்டும் மோசடியுமானதென்பதும், இத் ‘தலைவர்’களின் யோக்கியதையும் எண்ணமும் எப்படிப்பட்டதென்பதும் முதலாளிமார்களுக்கோ சர்க்காருக்கோ தெரியாமல் போக இடமுண்டா? இந்தக் காரணங்களால் தான் அநேகமாக முதலாளிமார்களும் கடின சித்தத்தோடிருக்கவும், சர்க்காரும் யோக்கிய பொறுப்பற்ற வழியில் இக்கிளர்ச்சிகளை அடக்க முயற்சிப்பதும் நமக்கு அதிசயமல்லவென்றே தோன்றுகிறது.
நிற்க, பிறவியினாலேயே உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனீயத்தையும், அதன் ஆதிக்கத்தையும் வேரோடு அழிக்க வேண்டுமென்பது எவ்வளவு முக்கியமானதோ அது போலவே பணமுடையவன் உயர்ந்தவன் என்கிற தத்துவத்தையும் பணக்கார ஆதிக்கத்தையும் அடியோடு அழிக்க வேண்டியது என்பதும் அவ்வளவு முக்கியமானதென்பதே நமதபிப்பிராயம். ஆனால் பிறவியின் காரணமாக ஒரு பிச்சைக்காரனும் அயோக்கியனும் கூட தன்னை பெரியவனென்று சொல்லிக் கொள்ளும் உரிமையை நம்மால் அழிக்க முடியாமல் இருக்கும்போது பெரும் பணம் வைத்துக் கொண்டு அப்பணத்தால் பல வழிகளிலும் செல்வாக்குப் பெற்றுக் கொண்டு அப்பணத்தை மக்களுக்குக் கொடுத்து வசப்படுத்திக் கொள்ளும் சக்தி இருப்பவனை எப்படி அழிக்க முடியும். அல்லாமலும், அதைவிட இதற்கென்ன அவசரம் என்றும் பார்க்க வேண்டியிருக்கிறதேயல்லாமல் வேறல்ல. தவிரவும் பிறவியில் உயர்வு என்கிற கொடுமை ஒழிந்தவுடன் பணத்தால் உயர்வு என்கிற கொடுமையை ஒழிக்கும் வேலைதான் பொதுநல சேவையாக ஏற்பட வேண்டும் என்பதுதான் நமது அபிப்பிராயம். அதுதான் இயற்கையுமாகும். ஆகவே இந்த இரண்டு காரியமும் முடிந்த பிறகுதான் சர்க்காரின் கொடுமையும் ஆதிக்கமும் தானாகவே ஒழிந்துவிடும். முன் சொன்ன இரண்டையும் வைத்துக் கொண்டு சர்க்கார் ஆதிக்கத்தை ஒழிப்பது என்பது உயர்ந்த ஜாதியான் என்பவன் இன்னும் கொஞ்சம் உயர்வதற்கும், பணக்காரன் என்பவன் இன்னும் கொஞ்சம் பணக்காரனாவதற்கும் உபயோகப்படுவதோடு உயர்ந்த ஜாதியான் என்பவன் ஜாதித் திமிரோடு பணத்திமிரும் அடையவும், பணக்காரனென்பவன் பணத் திமிரோடு ஜாதித் திமிரடையவும் ஏற்பட்டு விடும். உதாரணமாக உயர்ந்த ஜாதியார் என்பவர் பணக்காரர்களாகி வருவதும் பணக்காரராயிருப்பவர் உயர்ந்த ஜாதிக்காரர்களாகி வருவதும் அநுபவத்தில் பார்க்கலாம்.
முடிவாக, முதலாளிகளுக்கும் நாம் சொல்லுவதென்னவென்றால் தொழிலாளர் கிளர்ச்சி என்கிற இம்மாதிரி கிளர்ச்சிகளெல்லாம் பார்ப்பனர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக ஆரம்பித்தார்களென்பது பெரும்பாலும் மறுக்க முடியாத உண்மையென்று வைத்துக் கொண்டாலும் அந்தக் காரணத்தை வைத்துக் கொண்டு வாயில்லா பூச்சிகளான தொழிலாளர்களின் நன்மையைப் புறக்கணிப்பது கொடுமையும் மனித தன்மையற்ற செய்கையுமாகும். தொழிலாளர்கள் தங்களுடைய வயிற்று பசிக்காக எவ்வளவு கொடுமைக்கும் உட்படுவதாயிருந்தாலும் அந்தக் காரணத்தை வைத்துக் கொண்டே அவர்களை கொடுமைப்படுத்துவது மிகவும் இழிவானதென்பதே மறுபடியும் சொல்லுகிறோம். தொழிலாளர் என்கிற ஒரு கூட்டமும், அவர்களுடைய உழைப்பும் இல்லாவிட்டால் முதலாளிகள் எப்படி பணம் சம்பாதிக்கக்கூடும்? இந்த சமயம் தொழிலாளிகளை முதலாளிகளாயிருப்பவர்கள் தோற்கடித்து விட்டாலும், அதன் பலனை எந்த விதத்திலும் முதலாளிகள் அடைந்துதான் தீரவேண்டும்.
வெறும் கோவில் கட்டுவதிலும், குளங்கள் வெட்டுவதிலும், பார்ப்பனர் காலில் பணம் கொட்டுவதிலும், மோட்சமடைந்து விடலாமென்பது வடிகட்டின முட்டாள்தனமேயாகும். மோட்சமென்பதாக ஒன்று இருக்கிறதென்று யாராவது நம்புவார்களேயானால் அவர்கள் ஏழைகளை கொடுமைப்படுத்தாமலும் கூலிக்காரர்கள் வாயில் மண்ணைப் போடாமலும் இருப்பது தான் அம்மோட்சத்திற்கு வழி என்பதை உணர வேண்டும். அன்றியும் நமது நாட்டில் வெகு சீக்கிரத்தில் உண்மையான தொழிலாளர் கிளர்ச்சி ஏற்படப் போகிறதென்பதை முதலாளிமார்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கிளர்ச்சியை பார்ப்பனர்களாவது சர்க்காரைக் கொண்டு முதலாளிமார்களாவது ஒருக்காலும் ஏமாற்ற முடியாது என்பதையும் முதலாளிமார்களுக்கு அவர்களிடத்தில் நமக்குள்ள பற்றுதலினால் எச்சரிக்கை செய்கிறோம்.
(குடி அரசு - தலையங்கம் - 04.09.1927)