சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் சாஸ்திரங்களையும் சடங்குகளையும் ஒருவாறு கண்டித்ததோடு கூட அரசியலில் பார்ப்பனர்களைப் பலமாக எதிர்த்தும் போராடியது என்பது யாவரும் அறிந்ததாகும். இக்காரணத்தால் பார்ப்பனர்களிடம் உள்ள உத்தியோகங்களைத் தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்னும் நோக்கமுடைய பார்ப்பனரல்லாதார்கள் அனைவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பலமாக ஆதரித்து வந்தனர். பிறகு சுயமரியாதை இயக்கம் உண்மையான உருவத்தைக் காட்ட ஆரம்பித்தது. அதாவது மதத்தையும், சடங்குகளையும், கடவுளையும் கூட அடியோடு அழிக்க வேண்டுமென்னும் பிரசாரத்தில் இறங்கியது. இதனால் முதலில் ஆதரித்த சிலர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகிக் கொள்ளாமலும், அதில் கலந்து கொள்ளாமலும் நடுத் தெருவில் நின்றனர். இதன் பின் மாதங்களாக, ஈரோடு வேலைத்திட்டத் தீர்மானங்களை மேற்கொண்டு, சமதர்மப் பிரசாரம் செய்து வந்தது. இதைக் கண்டும் அநேகர் பயந்து எங்கே சமதர்மப் பிரசாரத்தினால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றனர்.

சிலர் சுயமரியாதை இயக்கம் முன்பிருந்தது போலவே அரசியலில் ஈடுபடாமல் பகுத்தறிவுப் பிரசாரம் மாத்திரம் செய்து கொண்டிருக்க வேண்டுமென அபிப்பிராயப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சிலர், ஈரோட்டுத் தீர்மானங்களை ஒப்புக் கொண்டு, அரசியலிலும் தலையிட்டு சமதர்மப் பிரசாரத்திலும் ஈடுபட வேண்டும் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் பார்ப்பனர்களை மாத்திரம் வைதுகொண்டு, பார்ப்பனரல்லாதார்க்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத்தால் போதுமென நினைக்கின்றனர். இந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் எந்த விதமாக வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய நமது முடிவை வெளியிடுகிறோம்.

முதலில் சுயமரியாதைச் சமதர்ம இயக்கமானது, ஒரு வகுப்பை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு மாகாணத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு தேசத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஆனால் ஓர் அகில உலக இயக்கமாகும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இககொள்கையை மனத்தில் வைத்துக்கொண்டே அதன் கொள்கைகளும், சட்ட திட்டங்களும், வேலை முறையும் அமைக்கப்பட வேண்டும்.

வகுப்பு பேதங்கள் ஒழிந்து, எல்லாம் ஒன்றாக வேண்டும் என்னும் எண்ணம் எல்லா மக்கள் மனதிலும் வேரூன்றி வருகிற இக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மாத்திரம் ஆபாச முறையில் கண்டிப்பது விரும்பத்தக்கதல்ல என்பதே நமது தாழ்மையான அபிப்பிராயமாகும். பார்ப்பனருக்கும் நமக்கும் எக்காலத்திலும் பகையில்லை. பார்ப்பனீயத்திற்கும், நமக்குமே போராட்டம், பார்ப்பனியத்தை விடாப் பிடியாகப்பிடித்திருக்கும் பார்ப்பனரல்லாதாரே அதிகம். பார்ப்பனீயம் எங்கெங்கே இருக்கின்றதோ அங்கெல்லாம் நமது போராட்டம் சென்றுதான் தீர வேண்டும். வகுப்புத் துவேஷம் என்பது ஒரு வகுப்பினர் அடிக்கும் கொள்ளைத் தொழிலை இன்னொரு வகுப்பினர் கைப்பற்றிச் செய்யும் முயற்சியேயாகும். ஆதலால் நமக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லை.

சுயமரியாதை இயக்கம் இதுவரையிலும் செய்து வந்த மத ஒழிப்பு வேலையைச் சிறிதும் தளரவிட முடியாது. நமது கொள்கைகளுக்கெல்லாம் அடிப்படை இதுவேயாகும். இப்பொழுது மதத்திற்கு நெருக்கடி நேர்ந்திருக்கும் விசயத்தை மதவாதிகளும், முதலாளி வர்க்கத்தினரும் உணர்ந்து விழித்திருக்கின்றனர். இருவரும் கூடி மீண்டும் பாமர மக்களின் மனதில் மதவுணர்ச்சியை (அடிமை மூடத்தனத்தை)ப் புகுத்த பலமான முயற்சிகளைச் செய்து வருகின்றனர். தேசிய இயக்கங்களும் (முதலாளி இயக்கங்கள்) தேசியவாதிகளும் பலமான மதப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்கு காந்தி அவர்களின் "ஹரிஜன" இயக்கமும், இந்து மகாசபைப் பிரசாரமும் போதிய சான்றாகும். ஆகையால், நாம் முன்னிலும் அதிதீவிரமாக மதமறுப்புப் பிரசாரத்தை விடாமல் செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.

சமதர்ம திட்டத்தை மேற்கொண்டு அரசியலில் தலையிட வேண்டுவது அவசியம் என்பது ஆலோசிக்கத்தக்கதாகும். அரசாங்கத்தின் துணையில்லாமல், சட்டங்களின் ஆதரவில்லாமல், தேச மக்களிடம் உள்ள ஊழல்களை அடியோடு போக்கி விடவோ புதிய காரியங்களைச் செய்வதில் தேச மக்களை ஈடுபடுத்தி விடவோ எக்காலத்திலும் இயலாது. ஆதலால் சீர்திருத்தவாதிகளுக்குத் தங்கள் சீர்திருத்தக் கொள்கைகள் செயலில் வேண்டுமானால் அரசாங்கத்தின் துணையும், சட்டத்தின் துணையும் அவசியமாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில் நமது நாட்டில் இனி அமையப்போகும் அரசாங்கம் கட்சிகளால் ஆளப்படும் அரசாங்கமாகவே இருக்கும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சுயமரியாதை இயக்கமானது நேர்முகமாகவோ, அல்லது மறைமுகமாகவோ சமதர்ம திட்டமுடைய அரசியல் கொள்கையையும் ஒப்புக் கொண்டு தீரவேண்டிய அவசியத்தை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம். நமது சமதர்ம அரசியல் திட்டத்தைக் கண்டு யாரும் அஞ்சவேண்டிய அவசியமில்லை. அரசாங்க சட்டத்திற்குள் அடங்கியே நமது அரசியல் இயக்கம் வேலை செய்து வரும். பலாத்கார முறையையும் நாம் ஒப்புக்கொள்ளுவதில்லை. இத்தகைய சமதர்ம அரசியல் திட்டத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

(5) சமூகச் சீர்திருத்த வேலையையும் அதை நிறைவேற்ற அரசியலைக் கைப்பற்றும் வேலையையும் சுயமரியாதை இயக்கத்தின் திட்டமாக வைத்துக் கொண்டு இரண்டையும் செய்து வரலாமென அபிப்பிராயப் படுகிறவர்களும் பலருளர். ஆனால் இரண்டு வேலைகளையும் ஒரே இயக்கம் அதாவது ஒரே ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் செய்ய முடியுமா? என்பது ஆழ்ந்து ஆலோசிக்கத் தக்க விஷயமாகும். தற்பொழுது சமூக சீர்திருத்த வேலையென்பது, அரசாங்க விஷயங்களில் தலையிடாமல் ஜன சமூகத்துக்கு இடையேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களைப் போக்குவதும் அப்பழக்க வழக்கங்களில் வைத்துள்ள நம்பிக்கையை ஒழிப்பதும், புதிய வழக்கங்களில் வைத்துள்ள நம்பிக்கையை ஒழிக்கதும் புதிய வாழ்க்கை முறையில் பற்றுக் கொள்ளச் செய்வதும் ஆகும். இதைப் பிரசாரத்தின் மூலம் ஜனங்களுக்கு எடுத்துக்காட்டி வருவதே சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய வேலையாகும்.

இவைகளைச் சட்டத்தின் மூலம் ஜன சமூகத்தில் புகுத்த அரசாங்கத்தைக் கைப்பற்ற வேலை செய்வது அரசியல் இயக்கமாகிவிடும். இவ்வளவேதான் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கும், அரசியல் இயக்கத்திற்கும் வித்தியாசம் என்று கூறலாமே தவிர, வேறு காரணம் கூறுவதற்கு நமக்குத் தோன்றவில்லை. மற்றபடி சமூகச் சீர்திருத்தம் என்பதும், அரசியல் என்பதும் ஒன்றே தவிர வேறில்லை. சமூகம்தான் அரசியல், அரசியல் தான் சமூகம் இரண்டையும் வேறுபடுத்தி பிரிக்க முடியாது. ஆயினும் இருகாரியங்களையும் ஒரே ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் தற்சமயம் செய்ய முடியாதென்பது நமது கருத்து. இத்தகைய இரு நோக்கத்தையும் கொண்டு துவங்கப்பட் ஜஸ்டிஸ் கட்சியின் அக்கால நிலையை நோக்குவார் இதன் உண்மையை நன்கு தெரிந்து கொள்ளலாம். பிரசாரம் பண்ணும் வேலையையும் காரிய நிர்வாகம் செய்யும் வேலையையும் எப்படிச் செய்யமுடியும். சமூகச் சீர்திருத்தத்திற்கும் நாட்டில் பலமான எதிர்ப்பு இருக்கின்றது. சமதர்ம அரசியலுக்கும் நாட்டில் எதிர்ப்பு இருக்கிறது. இரண்டிற்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு இரண்டையும் இயக்கம் செய்து முடிப்பது என்பது சாமானியமான காரியமல்ல. இவ்விரண்டு கொள்கைகளுக்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொள்கின்ற திறமை ஓர் இயக்கத்திற்குத் தற்கால நிலையில் ஏற்பட முடியாது. சமதர்ம அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரத்தை வகிக்க வரும் காலத்தில்தான் இரண்டையும் செய்ய முடியும். அது வரையிலும் சீர்திருத்த இயக்கம் தனித்து நின்று வேலை செய்யவேண்டுவது அவசியமல்லவா? என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வருமாறு வேண்டுகிறோம்.

பொருளாதாரத் திட்டத்தையும், சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப்பதையும் வேலை முறையாகக் கொண்ட சமதர்ம அரசியல் கட்சி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இத்தகைய அரசியல் கட்சி தற்போது நமது நாட்டில் ஒன்றுகூட இல்லை. ஜனநாயகக் கட்சியென்றும், வகுப்புவாதக் கட்சியென்றும் சொல்லிக் கொண்டிருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் முதலாளிக் கட்சிகளே என்பது வெட்ட வெளிச்சம். இக்கட்சியின் நோக்கத்தை ஒப்புக் கொள்ளுகின்றவர்கள் யாராயிருப்பினும் நிற, வகுப்பு, மத வேற்றுமை பாராமல் அவர்களையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த அரசியல் கட்சி, சுயமரியாதை இயக்கத்தினால் பிரசாரம் பண்ணப்படும் சீர்திருத்தங்களுக்கெல்லாம் ஆதரவளித்து வர வேண்டுமென்பதையும் கட்சிக் கொள்கையில் முக்கியமான ஒன்றாகக் கொள்ள வேண்டும். இதற்கென்று ஒரு தனி ஸ்தாபனம் இருக்கவேண்டியது அவசியமாகும்.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைக் கொண்ட, அரசியல் கலப்பற்ற, தனி ஸ்தாபனம் ஒன்று வேண்டுவது அவசியமாகும். இந்த ஸ்பானத்தில் அரசியல், நிறம், வகுப்பு முதலிய வேற்றுமை பாராட்டமால் மதமற்றவர்கள் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் சமதர்ம அரசியல் கட்சியாரை எப்பொழுதும் ஆதரித்து நிற்க வேண்டும். தற்பொழுது சுயமரியாதை இயக்கம் செய்து வரும் சமூக வேலையைச் செய்துவர வேண்டும்.

மேற்கூறிய இரு இயக்க ஸ்தாபனங்களின் உறுப்பினர்கள் அந்த ஸ்தாபனங்களின் கொள்கைகளுக்கு மாறுபடாதவர்களாகவும், அக் கொள்கைகளை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு நடக்கின்றவர்களாகவும், அவைகளுக்காகத் தியாகஞ் செய்யப் பின் வாங்காதவர்களாகவும் இருக்க வேண்டும். மற்றபடி இயக்கப் பிரசாரத்தில் அதாவது மகா நாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம். நமது பல கொள்கைகளுக்கு எதிரியாக இருந்து ஒரு கொள்கைக்குச் சாதகமாயிருப்பார்களாயின் அதைப் பொறுத்தவரையிலும் அவர்களை நம்மோடு அவரோடு ஒத்துழைப்பதிலே ஒரு தவறும் நேர்ந்துவிடாது. அதனால் இயக்கத்திற்கு லாபமே தவிர நஷ்டம் வந்துவிடாது. பிரசார நிலையில் கட்டுப்பாடு ஏற்படுத்தினால் இயக்கம் வளருவதற்கே வழியில்லாமற் போய்விடும். நமது கொள்கைக்கு முரண்பட்டவர்களை நம்மோடு சேர்க்கக்கூடாது நமது கூட்டத்திற்கு வரக்கூடாது என்றால் அவர்களை எப்படி நமது கொள்கைகளை ஒப்புக்கொள்ளச் செய்ய முடியும்? ஆதலால் பிரசாரத்தின் பொருட்டு நம்மிடம் சிறிது அனுதாபம் உள்ள எவரையும் சேர்த்துக் கொள்ள மறுக்காமலிருப்பதே இயக்க வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.

மேலே கூறிய விஷயங்களைக் கவனித்துச் சுயமரியாதை இயக்கத்தையும், சமதர்ம இயக்கத்தையும் நடத்தி வந்தாலொழிய உருப்படியான வேலை எதையும் செய்து விடமுடியாது என்பதே நமது கருத்து. இன்னும் பார்ப்பனர்களை மாத்திரம் வைது கொண்டிருப்பதனால் ஒரு பயனுமில்லை. நாமறிந்தவரையில், நமது சமதர்ம கொள்கைகளையும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளையும் முழுதும் ஒப்புக்கொண்டு வேலை செய்வதற்குத் தயாராக எல்லா வகுப்பினரில் வாலிபர்களும், அறிவுடையவர்களும், இருக்கிறார்களென்பதை நிச்சயமாகக் கூறுவோம். ஆதலால் இனி பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், என்ற பிரச்சனைகள் நம்மிடம் தலைகாட்டாமல் ஒழிக்க வேண்டும்; முதலாளிக் கொடுமைகளை ஒழிப்பதையும், மதக்கொடுமைகளை ஒழிப்பதையுமே பிரச்சனையாகக் கொண்டு இப்பிரச்சினையை ஒப்புக்கொள்கின்றவர்களை எல்லாம் இயக்கத்திற் சேர்த்துக் கொண்டு இப்பிரச்சனைகளைத் தீர்க்க வழி கோலுவதே சிறந்ததாகும். மேற்கூறியவைகளையெல்லாம், விரும்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவு செய்யும்படி சுயமரியாதைத் தோழர்களை வேண்டிக் கொள்கிறோம்.

- தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை ('விடுதலை', 11.07.1950)

நன்றி: தமிழச்சி, அனுப்பி உதவியவர்: மகிழ்நன்

Pin It