kuthoosi guruவிபசாரத்தை ஒழிப்பது தவறு; எப்படியாவது அதைப் பாதுகாக்க வேண்டும்; அந்தத் தொழில் நசித்துப் போனால் நம் நாட்டுக்குப் பேராபத்து ஏற்படும் - என்றார், ஒரு கதர்ச்சட்டைக் காரார்!

நான் தடுக்கிட்டேன்! “சத்யமூர்த்திதான் இந்த மாதிரிப் பேசியிருக்கிறார்! நீரென்ன, அவர் சீடரோ?” - என்று கேட்டேன்.

விபசாரம், உடலுக்கும் உள்ளத்துக்கும் தீமை பயப்பதுதான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதை ஒழிப்பதால் ஏற்படக்கூடிய சிக்கலும் நஷ்டமும் எவ்வளவு தெரியுமா?” என்றார்.

“அப்படியா? அதென்ன அய்யா?” - என்று கேட்டேன்.

“சொல்கிறேன், கேளும்:-

1. விபசாரிகளும் இந்திய யூனியன் மக்களே யாவர்.

2. இந்தியப் பிரஜை யாரும், எங்கேயும், எந்த வியாபாரத்தையும், செய்ய அரசியல் சட்டம் இடமளிக்கிறது.

3. விபசாரிகள் ஏராளமான மூலதனத்தை வைத்து தங்கள் வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.

4. விபசாரிகளிடம் இந்திய யூனியன் மக்கள் ஏராளமாக வேலையிலிருக்கின்றனர். அவர்கள் கதி என்னாவது?

5. விபாசாரிகளை வெறுத்தால் வெறுப்புணர்ச்சி மேலும் மேலும் பரவிக்கொண்டே போகும்; பிறகு சூதாட்டத்தை வெறுக்கச் சொல்லும்; தொத்து நோய்களை வெறுக்கச் சொல்லும். எல்லையில்லாமற் போய்க் கொண்டேயிருக்கும்.

6. விபசாரிகள் வழியாக நம் நாட்டு சர்க்காருக்கு எத்தனையோ மாதிரி வருமானங்கள் கிடைக்கின்றன.

7. விபசாரிகளால் எத்தனையோ மருந்துகள் புதிது புதிதாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

8. விபசாரம் ஒழிந்தால் பல டாக்டர்கள். . .”

“அய்யா! போதும்; போதும்! நீர் மகா புத்திசாலி! விபசார ஒழிப்புக்கு எதிர்ப்பு மறியல் கூடச் செய்தாலும் செய்வீர்! எல்லோரும் உள்ளே வாருங்கள்!” என்று வாயிலில் நின்று அழைத்தாலும் அழைப்பீர்! விபசாரத்தை ஒரு பெரிய சுதேசித் தொழிலாகக் கருதுகிறீரே தவிர, அதனால் பாதிக்கப் படுகிறவர்களைப் பற்றிச் சிந்திக்க மறுக்கிறீரே விபசாரிகளுக்குக் கங்காணி வேலை செய்தாவது ஏன் இந்த இனப் பிழைப்புப் பிழைக்கிறீர்?” என்று கேட்டேன்.

பார்ப்பனச் சுரண்டல் ஒழிப்பு முயற்சியிலும் சிலர் மேற்கண்ட காரணங்களையே கூறி வருகின்றனர்! அவர்களை நினைத்துக் கொண்டு பார்ப்பனச் சுரண்டல் ஒழிப்பு என்று வைத்துக்கொண்டு மேலேயுள்ளவைகளை மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள்! பிறகு தீர்ப்புக் கூறுங்கள்!

- குத்தூசி குருசாமி (21-11-50)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It