பெண்களின் சம்மத வயதை நிர்ணயிக்க நியமிக்கப்பட்ட கமிட்டியாரின் விசாரணை முடிவடைந்து விட்டதாகத் தெரிகிறது. இந்தக் கமிட்டி பெண்களுக்கு 14 - வயதுக்கு முன் கலியாணம் செய்யக் கூடாதென்றும் கலியாணமான பெண்கள் விஷயத்தில் சம்மத வயது 15 - ஆகவும், கல்யாணமாகாத பெண்களின் சம்மத வயது 18 - ஆகவும் இருக்க வேண்டுமென்றும் சிபார்சு செய்திருக்கிறது.
இந்தக் கமிட்டியை நியமனம் செய்தபோதும் இது ஆங்காங்கு விசாரணை நடத்தியபோதும் பார்ப்பனர்கள் எல்லோரும் சனாதன தருமத்துக்கு ஆபத்து ஸ்மிருதிகளுக்கு ஆபத்து என்று வெறுங் கூச்சல் கிளப்பி தங்களால் என்ன என்ன இடையூறுகள் செய்ய முடியுமோ அவ்வளவையும் தங்கள் முழுச் செல்வாக்கையும் உபயோகித்துச் செய்து பார்த்தனர். பெண்களின் விடுதலைக்கும் முற்போக்குக்கும் முக்கிய தடையாக இருந்த இந்த விஷயத்தில் வைதீகப் பார்ப்பனர்களின் எதிர்ப்புக்களையும் கூச்சல்களையும் லட்சியம் செய்யாமல் இந்த மட்டில் ஒரு வித நல்ல முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை சிறப்பாக திரு. ஏ.ராமசாமி முதலியாருக்கே உரியதாகும். இனிமேல் சனாதன தருமங்களும் பராசர மனுஸ்மிருதிகளும் என்ன தான் செய்யப் போகின்றனவோ தெரியவில்லை.
(குடி அரசு - செய்தி விமர்சனம் - 23.06.1929)