ஆகஸ்ட் 6-ந் தேதி முத்தய்யா (முதலியார்) தலைமையில் பெரியார் ராயபுரத்தில் பேசினார். இதுபற்றிய செய்தியை, “இன்றைய நிகழ்ச்சிகள்” என்ற தலைப்பின்கீழ் குறிப்பிட்டிருந்த “ஹிந்து” பத்திரிகையானது “கம்யூனிஸ்ட் ஜீ. ஓ. பற்றிப் பேசுவார்கள்” என்று குறிப்பிட்டிருந்தது!
திராவிடர் கழகத் தோழர் ஒருவர் திருச்சியில் ஆகஸ்ட் 14-ந் தேதி கடையடைக்க வேண்டுமென்று துண்டு விளம்பரத்தை ஒவ்வொரு கடைக்கும்! கொடுத்துக் கொண்டு வந்தாராம்! படிக்கத் தெரியாத ஒரு வியாபாரி, “இது என்ன?” என்று கேட்டாராம்!
"கம்யூனல் ஜீ.ஓ. ஆதரிப்பு நோட்டீஸ்” என்றாராம், கழகத் தோழர். “நம் கட்சி ஏன் சார், கம்யூனிஸ்ட்டோடு சேர வேண்டும்? பயமாயிருக்கிறது, சார்!” என்றாராம், வியாபாரி!
‘ஹிந்து’ பத்திரிகையே கம்யூனிஸ்ட் கிலி பிடித்துத் தவறாக அச்சிடும் போது, விஷயந் தெரியாத யாரோ ஒரு சிறு வியாபாரி இப்படிக் கேட்டதில் ஆச்சரியமில்லை!
ஆனால் ஒன்று. கம்யூனல் ஜீ. ஓ. உண்மையில் கம்யூனிஸ்ட் ஜீ. ஓ. தான்! மேடு பள்ளத்தை நிரவுகின்ற உத்தரவு! மிட்டா-மிராசு மேடுகளை வெட்டி, உழவன் பள்ளத்தில் போட்டு சமப்படுத்தினால்தான் பயிர் விளையும். இல்லாவிடில் மேட்டில் தண்ணீரே நிற்காது. பள்ளத்தில் குளமாக நிற்கும். இரண்டு இடங்களிலும் பயிர் விளையாது.
கல்வித் துறையிலும் மிட்டா- மிராசு மேடுகள் இருக்கின்றன. பள்ளங்களும் ஏராளமாக இருக்கின்றன! பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன. மேட்டை வெட்டினால், மேடு, “அய்யய்யோ!” என்று அலறுகிறது! “தகுதியினால் மேடாகியிருக்கிறேன்” என்கிறது!
அறிவுள்ள மனிதன் ஒப்புக் கொள்வானா? இயற்கையில் மேடாக இருக்கும் மலையையே உடைக்கிறான். குடைந்து செல்கிறான். அப்படியிருக்க செயற்கை மேட்டையா மனிதன் விட்டுவிடுவான்?
கம்யூனல் ஜீ. ஓ. பிற்போக்கு ஏற்பாடல்ல. சமநிலையை உண்டாக்குவதற்கு முந்தி வேண்டிய கம்யூனிஸ்ட் ஜீ. ஓ. தான்.
இன்று நியாயக்கூலி கேட்டுக் கிளர்ச்சி செய்கிறவர்கள்தான், நாளைக்கு லாபத்தில் பங்கு கேட்கப் போகிறார்கள்! மறுநாள், எனக்குத்தான் சொந்தம்!” என்று கூறப் போகிறார்கள்! அகவே இப்போது நியாயக் கூலி கேட்பது மடிப்பிச்சையல்ல! உரிமைக் கிளர்ச்சி! படிப்பிலும், பதவியிலும், விகிதாசார உரிமை கேட்பது மடிப்பிச்சையல்ல! உரிமைக் கிளர்ச்சி!
நியாயக் கூலி கேட்பவன் மீது முதலாளி உலகம் துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறது! விகிதாசார உரிமை கேட்பவன் மீது பிறவி முதலாளி உலகம் சட்டக் குண்டை வீசி ஒழிக்கப் பார்க்கிறது!
பச்சையாகச் சொல்கிறேன்! மறைப்பானேன்? இரண்டுமே கம்யூனிஸ்ட் கிளர்ச்சி தான்!
இதை ஒடுக்க யாராலும் முடியாது! கபிலர் காலத்திலிருந்தே இந்த “கம்யூனல்” கிளர்ச்சி நடந்த வருகிறது! கபிலர் அகவலை இருட்டடித்ததால் சித்தர்கள் தோன்றினார்கள்.
அவர்கள் கவிகளையும் இருட்டடித்ததால் நீதிக் கட்சி தோன்றிற்று. அந்தக் கட்சியையும் இருட்டடித்ததால், சுய மரியாதை இயக்கம் பிறந்தது!
- குத்தூசி குருசாமி (26-8-50)
நன்றி: வாலாசா வல்லவன்