“கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” - இஃது பெரி யாரின் கடவுட் கொள்கை.
பெரியாரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட பாவேந்தரும் அவர்வழி நடந்த நாத்திகக் கவிஞரே.
‘இல்லையென்பான் யாரடா - என் அப்பனை
இல்லையென்பான் யாரடா
தில்லை வந்து பாரடா’
என்ற ஆத்திகக் குரலுக்கு எதிராக,
‘இல்லையென்பேன் நானடா - அத்
தில்லைகண்டு தானடா
பல்லோர் பணம் பறித்துப்
பாடுபடா தார்க்களிக்கும்
கல்லில்செம்பில் தீட்சிதர்கள்
சொல்லில்செயலில் உண்மைப்பொருள்’
(இல்லையென்பேன் நானடா)
என, சீறிச் சினந்த பகுத்தறிவுப் பாவலர் அவர்.
‘காசைப் பிடுங்குதற்கே - பலர் கடவுளென்பார்
இருகாதையும் மூடு
கூசி நடுங்கிடுதம்பி - கெட்ட கோயிலென்றால்
ஒருகாதத்தில் ஓடு’
என்று சிறுவர்க்கும் செப்பிய சீர்திருத்தக் கவிஞர் அவர். ‘இல்லை என்பார்கள் சிலர்; உண்டென்று சிலர் சொல்வார். எனக்கில்லை கடவுள் கவலை’ என்று வெளிப்படையாகச் சொன்னவர் அவர்.
‘கனமான கடவுளே உனைச்செய்த சிற்பிஎவன்?
காட்டுவீர் என்ற வுடனே
கடவுளைக் காண்கிலேன்! அறிவியக்கப் புலமை
கண்ட பாரத தேசமே’
என்பது ‘கடவுள் மறைந்தார்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையாகும்.
‘காணாத கடவுள்ஒரு கருங்குரங்கு என்பதும்
கருங்குரங்கின் வாலிலே
கட்டிவளையல் தொங்க அதிலேயும் மதம் என்ற
கழுதைதான் ஊசலாட’
என்பவைதான் கடவுள், மதம் ஆகியன பற்றிப் பாவேந்தரின் வரையறுப்பு.
அவரைப் பொறுத்தவரை மெய்யான அறிவுதான் கடவுள். வள்ளுவர் அப்படித்தான் விளக்கியுள்ளார். கருமார் செய்து வைத்த கல், செம்பு போன்றவற்றில் கடவுள் இல்லை என்பது அவர் கருத்து.
‘மெய்யறிவே கடவுள் என்று
விளம்ப வில்லையா? - வள்ளுவர்
விளக்கவில்லையா? - கருமார்
செய்துவைத்த உருவங்கட்குச்
செலவுத் தொல்லையா - இதெல்லாம்
கலகம் இல்லையா?’
என்று அவர் வினா எழுப்புகிறார்.
பகுத்தறிவுப் பாவலர் பாரதிதாசன் 1933 திசம்பர் 31ஆம் நாள் சென்னை எழும்பூரில் உள்ள ஒயிட்ஸ் மெமோரியல் அரங்கில் நடைபெற்ற நாத்திகர் மாநாட் டில் பங்கேற்றார். மாநாட்டின் தலைவர் ம. சிங்கார வேலர். இம்மாநாட்டில், நாத்திகர் பதிவேடு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் ‘நானோர் நாத்திகன்’ எனப் பாவேந்தர் அவ்வேட்டில் பதிவு செய்தார்.
‘கடவுளை நம்புவோர் பெருத்துள்ள நாட்டில் கவ லைகள் ஒழிந்ததா? வறுமை தீர்ந்ததா? வாட்டங்கள் தொலைந்தனவா? இல்லையே! நடவுத் தொழில் செய்து பிழைக்கும் ஏழை உழவன் நாலு காசுக்காக ஏங்குவதும், உடல் உழைப்பே இல்லாத பணக்கா ரர்கள் உலகையே ஆளுவதும் கடவுள் செயலாலே என்று சொன்னால் அத்தகைய கடவுளை எப்படி ஏற்பது?’
‘நடவுசெய்த தோழர்கூலி
நாலணாவை ஏற்பதும்
உடல்உழைப்பிலாத செல்வர்
உலகை ஆண்டுலாவலும்
கடவுளாணை என்றுகூறும்
கயவர்கூட்ட மீதிலே
கடவுள் என்ற கட்டறுத்துத்
தொழிலாளரை ஏவுவோம்’
என்று மானுட விடுதலைக்கு, மத ஒழிப்பும், கடவுள் என்கிற கட்டறுப்பும் முதன்மை என்று பாடியவர் பாரதி தாசன்.
இந்துமதப் பொய்மைகளை சாதி, சாத்திர, புராணங் களைக் கடுமையாக எதிர்த்தவர் அவர். தம் இல்லத் தில் இத்தகைய அழுக்குகள் எவையும் படியாவண் ணம் 1928 முதலே பார்த்துக் கொண்டார்.
“1928ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் தீபாவளி விழாவுக்கு வேண்டியவை, இனி ஏதும் வாங்க வேண்டாம். தீபாவளியும் இல்லை. வேறு எதுவும் நம்ப வீட்ல இனிமே இல்லை. நீ ஓய்வா இருந்துகொள் என்று அன்னையிடம் உறக்கச் சொன்னார். தொல் லைப்பட்டுக் கொண்டிருந்த அன்னையாரின் மீது ஏற்பட்ட பரிவா? இல்லை. மூடப்பழக்கவழக்கங்களுக்கு முடிவுகட்டி ஆயிற்று. தாம் ஏற்றுக்கொண்டிருந்த கொள் கையை வலிமையாகப் பற்றி நிற்கும் துணிவான முடிவு! பகுத்தறிவு நெறியில் அடியெடுத்து வைத்தா யிற்று. தீபாவளி இல்லை எங்கள் வீட்டில்.” (மன்னர் மன்னன், கருப்புக் குயிலின் நெருப்புக் குரல், பக்.198).
தீபாவளி தொடர்பான கதையும், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசப் புனைவுகளும் ஆரியர் கள் திராவிடர்களை இழிவுபடுத்தப் புனைந்த கற்ப னைக் கதைகளே என்பதை ஆய்வாளர்கள் பலரும் அறுதியிட்டு உரைக்கின்றனர். இக்கருத்தை வெளிப் படுத்தியவர்களில் முதன்மையானவர் இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் நேரு ஆவார். மேலும் சில அறிஞர்களின் கூற்றுகள் பின்வருமாறு :
இங்ஙனந் தாஞ்செய்த வெறியாட்டு வேள்வி களை அழித்தமை பற்றியே இவ்வாரியர் பெரிதுஞ் சினங்கொண்டு அவ்வேளாளரையும், அவருள் அரசரான பிறரையும் தாசர், இராக் கதர், அசுரர் என்று இகழ்ந்து கூறி அவரைத் தாழ்த்துதற் பொருட்டுப் பொய்யான பல புராணக் கதைகளையும் எழுதி வைப்பார் ஆயினர் - மறை மலையடிகள் (வேளாளர் நாகரிகம், பக்.36).
இராமன் காலத்தில் தென்இந்தியா, ‘தஸ்யூக் கள்’, ‘ராஷஸர்களு’க்குச் சொந்தமாய் இருந் தது. இவர்கள் ஆரிய முனிவர்கள் செய்துவந்த யாகத்தை எதிர்த்தார்கள். (பி.டி.சி. சீனிவாசய் யங்கார், இந்திய சரித்திரம், பகுதி-1, பக்.19).
நம்மைச் சுற்றி நாலா பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் இருக்கிறார்களே, அவர்கள் யாகம் செய்வ தில்லை. அவர்கள் ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்களுடைய பழக்கவழக்கங்களே வேறாயிருக் கின்றன. அவர்கள் மனிதர்களே அல்லர். ஓ! எதிரி களை அழிப்பவனே! அவர்களைக் கொல்லு; ‘தஸரி’ வம்சத்தை அழித்துவிடுவாயாக! (ரிக் வேதம் அதி காரம்-10 (52-8).
காடுகளிலிருந்த மக்கள் யாரென்பது இராமருக்கும் அவரைச் சேர்ந்த ஆரியர்களுக்கும் தெரியாது. அழகில் லாதவர்களைக் ‘குரங்குகள்’ என்று அழைத்தார்கள். அவர்களிலேயே மிகுந்த பலமும் தைரியமும் செல் வாக்கும் உடையவர்களை ‘அரக்கர்கள்’ என்று அழைத் தார்கள். தென்னிந்தியாவில் வசித்த மக்களே இப்பெய ரால் அழைக்கப்பட்டார்கள். (விவேகானந்தர் சொற் பொழிவுகளும் கட்டுரைகளும், இராமாயணம்-பக். 587-589).
அந்த வகையில் ஆரியக் கற்பனைக் கதையான தீபாவளியைத் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதைத் தன்மான இயக்கம் தொடக்கம் முதலே எதிர்த்து வந்தது. ‘தீவாளியா?’ என்ற தலைப்பில் பாவேந்தர் எழுதியவை :
‘நரகனைக் கொன்ற நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லவனா? தீயவனா?
அசுரன் என் றவனை அழைக்கின்றாரே
இப்பெயரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைகளை நாம் எண்ண வேண்டும்’
(பாரதிதாசன் கவிதைகள் - இரண்டாம் தொகுதி)
பாவேந்தர் எழுதித் தமிழ்நாட்டில் பெரும் வரவேற் பைப் பெற்ற நாடகம் ‘இரணியன் அல்லது இணை யற்ற வீரன்’ என்கிற படைப்பாகும். பெரியார் தலை மையில் இந்நாடகம் பல்வேறு மாநாடுகளில் அரங் கேறியுள்ளது. இந்நாடகத்தில் தன் மகன் பிரகலாத னைப் பார்த்து இராணவன் பேசுவான் :
“உனது தமிழ்த்தன்மை எங்கே? என் பெயரைக் கெடுக்கவந்த கோடரிக் காம்பே! தமிழ்ப்பெருமக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட களங்கமே! உன் நெஞ்சைப் பிளப்பேன். உன்னை என் மகன் என்ற காரணத்தி னால் நான் மன்னிக்கவில்லை. பொதுமக்களின் இள வரசன் என்ற காரணத்தினால் உன்னை ஒருமுறை எச்சரிக்கிறேன். ஆரியர் அயோக்கியத்தனத்துக்குக் கட்டுப்பட்டாயா? தமிழ் இரத்தத்தை உகுத்தாயா? என் எதிரில் நீ சொல்லிய வார்த்தையின் பொருளென்ன? உனது சொந்த நாட்டு மக்களுக்கு விரோதமாக ஆரியப் பேடிகளின் சார்பில் நான் இருப்பேன் என்று சொன்ன தாக அல்லவா முடிகிறது உன் கருத்து.” (இரணியன் அல்லது இணையற்ற வீரன்-நாகடம், பக்.39).
இந்நாடகமும், புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவிய’மும், அண்ணாவின் ‘ஆரிய மாயை’ என்ற நூலும் முந்தைய காங்கிரசார் ஆட்சிக்காலத்தில் பல் லாண்டுகள் தடைசெய்யப்பட்டன. ஆரியப் பண்பாட் டிற்கு எதிரான, அடித்தட்டு மக்களின் கலகச் சொல்லாட லாக இராவணன், இரணியன், கும்பகர்ணன், மண் டோதரி என்றெல்லாம் தன்மான இயக்கத் தோழர்கள் தம் பிள்ளைகளுக்குப் பெயர்கள் சூட்டி மகிழ்ந்தனர்.
தென்திசையைப் பார்க்கின்றேன் என்சொல்வேன் என்தன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் நெடுந்தோளான் கொடைகொடுக்கும் கையாளன்
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்
என்தமிழர் மூதாதை என்தமிழர்பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்
(பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி - வீரத்தமிழன்)
என்று வஞ்சக இராமனை மறுத்து, வெஞ்சமர் வீரன் இராவணனை உயர்த்திப் பாடினார் பாவேந்தர்.
இன்று நஞ்சினும் கொடிய மதவெறிக் கேடர்கள் மோடியின் தலைமையில் நடுவண் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். ஆரிய இராமனின் சூதுகளை அம்பலப்படுத்துவோம்! உழைக்கும் மக்களின் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்போம்! மதவெறியை வேரறுப்போம்!