முரண்பாடுகள்தான் வளர்ச்சியின் தாய். கண் முன் நிகழும் அதிகாரங்களே சமூகத்தின் முரண்பாடு ஆகும். அதிகார எதிர்ப்புகள் அனைத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தும் தகைமையாளரே, தாம் வாழும் சமூக அமைப்பின் முதன்மை முரண்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியும்; சகோதர முரண்பாடுகளை, நட்பு முரண்பாடுகளைக் கையாள முடியும். மக்களுக்காக ஈகம் செய்யும் மனப்பாங்கினை அடைய முடியும். சமூக மாற்றத்திற்கான உண்மைகளை, தன் பரிணாம வளர்ச்சியை, சக மனிதர்களின் கண் முன்னே நிறுத்த முடியும். வெகு மக்களை மூளை, கை, கால்களில் விலங்குகளற்று இயங்குவதற்கும்; எஜமானத்துவங்களின் கட்டளைகள் அற்று உழைப்பதற்கும் தலைமை தாங்க முடியும்.
புத்தர், மானுட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் ஒரு மாற்று படைப்பாளியாக இருந்து பரிசீலித்தவர். தாம் எதிர் கொண்ட பிறவி முதலாளித்துவ அமைப்பை உணர்கிறபோதெல்லாம், அதன் முதன்மை முரண்பாடுகளைப் புரிந்து கொள்ள மேலதிக கவனம் செலுத்தியவர். பிறவி முதலாளித்துவத்தின் உயிர்ச் சக்தியான பார்ப்பனியம் விதைத்த மூடநம்பிக்கைகள், வர்ணம் சாதியம், வர்க்கம், ஆணாதிக்கம் முதலான கேடுகள் மனித மதிப்பீடுகள் மீது, வாழ்வியல் உரிமைகள் மீது செலுத்திய குறுக்கீடுகள் மீது தத்துவ விசாரணையை மேற்கொண்டவர். பார்ப்பனிய யுகத்தில் மானுட அழகியல் அடைந்து வரும் சிதைவு கண்டு, பிறவி முதலாளித்துவத்திற்கு அதிர்ச்சி வைத்தியமானவர்.
அக்காலத்திற்கும் இக்காலத்திற்கும்கூட, பார்ப்பனியத்தின் மீதான புத்தரின் விமர்சனம் என்பது மிகப் பெரிய சமூக செயல்பாடாகும். பார்ப்பனியக் கருத்தியல் மீதும் காரியங்களின் மீதும் எதிர்மறையான கலை பண்பாட்டின் மீதும் தனி அக்கறையுடன் புத்தர் மேற்கொண்ட சமநீதிக்கான சமரே, அவரை மிகப் பெரிய, முழுமையான நேர்மையாளராக மனிதத் திரளில் அடையாளத்தை ஏற்படுத்தியது. இம்மண்ணின் மைந்தர்களுக்கு ஒரு மூல ஆசிரியர் எந்த அளவிற்கு நேர்மையாக இருக்க முடியுமோ, அந்த அளவிற்கு மக்களை நேசித்து பிறவி முதலாளித்துவத்திற்கு மாற்று ஆளுமை ஆனவரே புத்தர். இத்துணைக் கண்டம் முழுவதும் மட்டுமல்ல, மானுட விரிப்பெங்கும் ஒரே மனிதகுலத் தேசிய விருப்பத்துடன் ஒட்டுமொத்த மானுடமும் வீறு பெற வழி வகுப்பதே புத்தரின் தலையாய நோக்கமாகும். பிரபஞ்சம் தழுவிய ஓர்மைப் பண்பாட்டை மனிதத் திரள் அனைத்தும் கட்டித் தழுவி வரவேற்பதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதே புத்தரின் ஒரே விருப்பமாகும்.
புத்தருடைய இருப்பிலும் நிப்பாணத்திலும் பரிநிப்பாணத்திலும் மானுடமே ஆதாரமாகிக் கொண்டது. தங்கள் சுயத்தை மீட்டெடுக்கப் புறப்பட்ட மக்கள் புத்தரிடமே வந்தடைந்தார்கள். புத்தரிடம் வந்தடைந்த மக்கள், மானுட ஒருமைப் பாட்டாளர் ஆகவும் மலர்ந்தார்கள். தமது மனித ஆளுமையை சமூக வாழ்வில் கரைத்துக் கொள்பவர்களே புத்தரின் வழித்தோன்றல் ஆக முடியும் என்பது பெருமைக்குரியதாக ஆனது. புத்தரின் வாழ்க்கைக் கொடை, மானுட வாழ்வியலின் செழுமையை உண்டு பண்ணக் கூடியது. அவருடைய அபூர்வமான தற்கொடையானது, மானுட வரலாற்றில் சங்கமிக்கக் கூடியது. புத்தரின் வரலாறு, மனிதத்தையே முன்னிறுத்தும் வரலாற்றின் வளர்ச்சியோடும், தொடர்ச்சியோடும் நீடிக்கக் கூடியது. இயற்கையைப் போல் தொடர்ச்சியானது. பாரபட்சம் இல்லாதது.
எம்மண்ணில் சிவப்பாய் பூக்கும் மலரும் புத்தரே. புத்தரது தார்மீகக் கோபமும், வேகமும், சத்திய ஆவேசமும் இன்றும் பிறவி முதலாளித்துவத்தின் அறிவின் ஆட்சி மீது, சாதி ஆதிக்கத்தின் மீது, வர்க்க ஆட்சியின் மீது, ஆண் ஆட்சியின் மீது நெருப்பாக விழுகின்றது. அவர் ஏற்றிவைத்த சமத்துவ நெருப்பு, அவர் தன் உயிரினால் ஒளி கொடுத்த சுதந்திரத் தீபம், நம்மனங்களில் சகோதரத்துவத்தை நிலை நாட்டுகிறது. நம்மை நாமே உணர்ந்து கொள்ளச் செய்து மனித ஒருங்கிணைப்புச் சங்கிலியாக்குகிறது. புத்தரைப் போல் உலகம் உயிரினம் மனிதம் உய்ய ஒருமித்தவர் எவருமில்லை. புத்தர் இயற்கையைப் போல செயற்கை இல்லாதவர்.
இப்போதும் நமது வரலாறு பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் நடக்கும் தொடர் யுத்தமாகவே உள்ளது. சமூகம், பொருளாதாரம், அரசியல் எனப் பல துறைகளிலும் பவுத்தத்தை மய்யப்படுத்தி பெரும் மாற்றங்களை விளைவிக்கின்ற புத்தரின் புரட்சிகரக் காலத்தையே புதுப்பிக்க வேண்டியிருக்கிறது. பிறவி முதலாளித்துவமான பார்ப்பனியமும் உடைமை முதலாளித்துவமான பணக்காரத்துவமும் இணை சேர்ந்து ‘இந்(து)தியமயம்', ‘உலகமயம்' என்று கொக்கரிக்கும் கொடும்பொழுதில் நாம் மீண்டும் மீண்டும் பவுத்தர்களாக அணிவகுக்க வேண்டியிருக்கிறது.
அண்டிப் பிழைக்க வந்த ஆரியப் பார்ப்பனர்கள் இம்மண்ணில் கால் பரவாததற்கு முன், இம்மண்ணின் மைந்தர்கள் புராதன பொதுவுரிமை பொதுவுடைமையைக் கட்டியாளும் சாக்கிய இனக்குழுவினராக இருந்தனர். அப்போது இத்துணைக் கண்டம் நாவலந் தீவு என்றும், ஜம்புவ தீபகற்பம் என்றும் பெயர் பெற்றிருந்தது. ஆதிக்கவாதிகளான வந்தேறி ஆரியர்கள், சாக்கிய இனக்குழுக்களின் பொதுவுரிமை பொதுவுடைமை வாழ்வியல் அமைப்பைப் பொசுக்கிய பின் நாவலந் தீவு ‘பார்ப்பன இந்தியா' ஆனது. நீரு பூத்த நெருப்பாய் இருந்த இம்மண்ணின் முதற்குடிகளான சாக்கியர்கள் பவுத்தர்களாய் மீண்டும் மானுடப் பொலிவு பெற்று ‘பார்ப்பன இந்தியாவை' வென்றெடுத்ததில் ‘பவுத்த இந்தியா' நிலைநிறுத்தப்பட்டது. பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் நிகழ்ந்த தொடர் யுத்தத்தில் பவுத்த இந்தியாவை பார்ப்பன இந்தியா கைப்பற்றியது. நாளடைவில் அதுவே ‘இந்து இந்தியா' ஆனது. இதுதான் நடந்த, நடக்கின்ற இத்துணைக் கண்டத்தின் உண்மையான வரலாறு ஆகும்.
பவுத்தத்தைப் பார்ப்பனியம் வீழ்த்திய பிறகு, பவுத்தம் என்ற பெயரில் பவுத்தத்திற்கு நேர் எதிரான கருத்துகளும் வரலாற்று முரண்களும் இடைச்செருகல்களாகத் திணிக்கப்பட்டன. இனக்குழு ரீதியிலான சாக்கிய அடிப்படை இயல்புகளான பவுத்த சாய்மானங்களும், மொழியியல் ரீதியிலான தமிழ் பவுத்த உள்ளடக்க ஒற்றுமைகளும் மறைக்கப்பட்டு, பவுத்தம் சமஸ்கிருத பிரதியாக்கப்பட்டது. தமிழின் ‘பாலி'யின் மொழியாடல்கள், மூல பவுத்தக் கருத்தாடல்களிலிருந்து துண்டிக்கப்பட்டு, பார்ப்பனிய திசைவழிகளுக்கேற்ப சமஸ்கிருதமயமாக்கப்பட்டது.
பவுத்தத்தின் உண்மையான பாத்திரவாளிகள் மறைக்கப்பட்டு, திரிபுவாத பார்ப்பனர்களே பவுத்தக் கருத்தியல் கர்த்தாக்களாக முகம் காட்டப்பட்டனர். பவுத்தம் என்ற பெயரில் பவுத்த முன்னெடுப்பு, பார்ப்பனர்களின் பார்ப்பனியர்களின் வசமானது. கடவுளை மறுத்து மனிதரை நினைக்க கற்றுத் தந்த புத்தர், பார்ப்பனியத்தின் அதிகாரப்பூர்வ கடவுளர்களின் வரலாற்றுப் பட்டியலில் அடக்கப்பட்டார். பார்ப்பனிய அய்தீகங்களால் விலங்கிடப்பட்டு, பார்ப்பனியக் கூடாரங்களுக்குள் சிறை வைக்கப்பட்டார்.
பவுத்தம் என்ற வெறும் பெயரிலான நிறுவனமயமாக்கப்பட்ட போலியான பவுத்த அமைப்புகளின் போக்குகள், பார்ப்பனியத்தையே பவுத்தமாக நிர்மாணித்தது. அசலான பவுத்தத்தின் பரிமாணங்களையும், பரிணமிப்புகளையும் விளைவு களையும் திசை திருப்பி முடக்கியது. மானுடத்திற்கு மிக நேர்த்தியான, காலத்திற்கு ஏற்ற முன்னேற்பாடாகப் புறப்பட்டு நடைபோட்ட பவுத்தத்தை தலைகீழாக்கி பிறழ்வுகளையும் மூடத்தனங்களையும் அதனுள் ஏற்படுத்தி, பார்ப்பனியத்தின் சிக்குகள் சிடுக்குகளிலேயே அடக்கம் ஆக்கியது. கி.பி. 18 ஆம் நூற்றாண்டிலும் 19 ஆம் நூற்றாண்டிலும் இந்து மதத்தைச் சீர்திருத்தி, அதனைப் பாதுகாக்கும் வேதங்களைத் தூக்கிப் பிடிக்கும் ஆரிய சமாஜத்துடன் பவுத்தமும் இணைந்த ஒன்றுதான் என்ற பிரச்சாரம் மும்முரமாக நடந்தது. புத்தர் மகாவிஷ்ணுவின் 9 ஆவது அவதாரம் என்பது நிலைநிறுத்தப்பட்டது. பவுத்தம் இந்து மதத்தின் ஒரு பிரிவாகப் புனைவாக்கப்பட்டது. இக்கால சூழ்நிலைமைகளில்தான் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தார்.
கல்வியின் மீது அம்பேத்கர் கொண்ட ஈடுபாடு, அடுத்தடுத்து மேல்வகுப்புகளுக்கு முன்னேறிச் செல்லச் செல்ல கல்வியின் உச்சத்திற்குச் செல்லும் ஆர்வம் மேலிட்டது. தம் பிள்ளைகள் முன்னேறிச் செல்வதற்குச் சில உற்சாகமூட்டும் தூண்டுதல் என அம்பேத்கரின் தந்தை ராம்ஜி நினைத்தார். அக்காலத்தில் சக்கரதாரர், ரமணானந்தர், கபீர், சைதன்யர், ஏகநாதர், துக்காராம், உரோகிதாசு, சொக்கமேளர் ஆகியோர் இறைநெறி வழிகாட்டிகளாகத் திகழ்ந்தபோதும், தாழ்த்தப்பட்டோரில் படித்த அரசு வேலைவாய்ப்பைப் பெற்றவர்களுக்கு இறை நெறியில் இந்துத்துவ நம்பிக்கையும் குடிகொண்டிருந்தது.
அம்பேத்கரின் தந்தையார் காலங்காலமாய் போற்றப்பட்டு வரும் புராண இதிகாசங்களைப் பெரிதாய் பாவித்தார். அவற்றின் மூலம் தம் பிள்ளைகளின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கிட முடியும் என்கின்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. கபீரின் இறையியல் மரபை அவர் பின்பற்றினாலும் தம் பிள்ளைகளை தினமும் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் படிக்க வைத்தார். சந்தேகிப்பதே அறிவின் தொடக்கமாதலால், அம்பேத்கருக்கு ராமாயணமும் மகாபாரதமும் சந்தேகத்திற்குரியது ஆனது. அவை சிந்தனைக்கும் சீரிய செயலுக்கும் உந்து சக்தியாக ஆக முடியவில்லை.
படிப்பில் கவனம் செலுத்திய அம்பேத்கர், பள்ளி முடிந்தததும் சர்னீ சாலைப் பூங்காவில் அமர்ந்து பாடப்புத்தகங்களை வாசிப்பதுடன் பொது அறிவிற்கான நூல்களையும் படித்து வந்தார். அதே பூங்காவில் ஆசிரியரும் எழுத்தாளரும் சீர்திருத்தவாதியுமான கிருஷ்ணாஜி அர்ஜுன் கேலூஸ்கர் அவர்களும் வாசிப்பில் ஈடுபட்டு வந்தார். கேலூஸ்கரும் அம்பேத்கரும் அறிமுகமானதில் கேலூஸ்கர், அம்பேத்கரின் எல்லா திறமைகளையும், அவரின் அனைத்து அம்சங்களையும் உணர்ந்தவராக ஆனார். அம்பேத்கர் தனிமனித ஆளுமை பெறவும், சமூகத்திற்கான ஆளுமையாக வளர கவனத்தை மேற்கொண்டார். கேலூஸ்கருக்கும் அம்பேத்கருக்கும் ஏற்பட்ட உறவு, கேலூஸ்கர் தாம் ஏற்றுக்கொண்ட அடிப்படைக் கொள்கைகள் மீதான ஒப்பந்தமாகவே அமைந்தது.
அக்காலத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வு மிகவும் கடினமானதெனக் கருதப்பட்டது. குப்பி விளக்கின் துணையோடு பயின்ற அம்பேத்கர்தான் முதன் முதலில் மெட்ரிக் தேறிய முதல் மாணவர். ஆதலால் அவரைப் பாராட்டுவதற்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவின்போது கேலூஸ்கர், மராட்டி மொழியில் தாம் எழுதிய ‘புத்தரின் வாழ்க்கை வரலாறு' என்ற நூலினை பீம்ராவ் அம்பேத்கருக்குப் பரிசாக அளித்தார். மானுடத்திற்கு அர்த்தமும் ஆக்கமும் நல்கிய புத்தரை, அம்பேத்கர் அவர்கள் 1908 இல் தன் பதினேழாவது வயதில், தாம் பாராட்டப்பட்ட விழாவினூடாகவே அறிய நேர்ந்தது. புத்தரின் வாழ்க்கை வரலாற்றினுள் வசமான அம்பேத்கருக்கு, தேடிப்போன மூலிகை கிடைத்தாற் போன்ற ஆனந்த லயிப்பு ஏற்பட்டது. புத்தரின் வாழ்க்கை, மனித வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதர்களும் பெறுமதி மிக்கவர்கள் என்பதை அவருக்கு உணர்த்தியது.
அம்பேத்கர், தம் வாழ்வினூடே ஓடும் தர்க்கத்தின் இழையை உணரும் திறனைப் பெற்றார். அதன் விளைவால் தார்மீக உணர்வாகி, மானுட வீரியத்தின் உலையில் உருகிப் பிழம்பாகி, சமூக வாழ்க்கைக்காக தனிமனிதராய் உயர வேண்டும் என்ற வைராக்கியத்தைக் கொண்டார். அவலங்களைக் கேட்டும், பார்த்தும் அனுபவித்ததுமான உணர்வுகள் அங்கிங்கெனாதபடிக்கு இழுபட்டுப் போய் அடங்க மறுத்த நிலையில், தினம் தினம் அம்பேத்கரினுள்ளே புத்தர் உறங்கியபடியும் விழித்த படியும் இருந்தார். இருப்பினும் அம்பேத்கரின் விடலை இருப்பு, அவர் இன்னும் புத்தரைத் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கு அடிப்படை போடும் சிந்தனை வெடித்தலாக அமைந்தது. விடலைகள் மனித சமுதாயத்தின் சிற்றுருக்கள் அல்லர் என்பதை நிரூபிப்பதாய் அம்பேத்கர் வளர்ச்சியை நோக்கி நீண்டார்.
கேலூஸ்கர், அம்பேத்கரின் மேற்படிப்பிற்கு அவரை பரோடா மன்னர் சயாஜிராவ் கெய்க்வாட்டிற்கு அறிமுகம் செய்வித்து, கல்லூரிப் படிப்பிற்கு உதவி கிடைக்க ஆவன செய்தார். கல்லூரி படிப்பிற்குப் பிறகு பரோடா மன்னரின் ‘பெலோஷிப்' நிதி உதவி கிட்டியதால், அமெரிக்காவில் சிறப்புக் கல்வி பெற அம்பேத்கருக்கு வாய்ப்பு கிடைத்தது.
வெளிநாட்டில் வசிக்கும்போது வாசிப்பதற்காக அவர் தாயகத்திலிருந்து எடுத்துச் சென்ற நூல்கள் பவுத்த நூல்கள் மட்டுமே.
அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஓரணி திரட்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார். தம் மக்களுக்கென இயக்கம் ஒன்றினை பொது அமைப்பினை ஏற்படுத்த, செயற்படுத்த முனைந்தார். 1924 ஆம் ஆண்டு சூலை 20 அன்று ‘ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுப் பேரவை' அமைந்தது. 1925 ஏப்ரல் 1011 நாட்களில் பெல்காம் மாவட்டம் நிபாணி நகரில் நடைபெற்ற பேரவை மாநாட்டில், ‘‘தீண்டாமையை உருவாக்கும் இந்து சாஸ்திரங்கள் யாவும் மக்களுக்கு அவமரியாதையை இழைக்கின்றன. இவைகளை அரசு முன்பே தடை செய்து பறிமுதல் செய்திருக்க வேண்டும்'' என்றார்.
26.6.1927 அன்று நடைபெற்ற பேரவையின் மாபெரும் கூட்டத்தில், மனிதருக்காக மதமா? அல்லது மதத்துக்காக மனிதரா? என்ற கேள்வியினை எழுப்பி, நாம் இந்து மதத்தின் ஓர் அங்கமா? இல்லையா? என்பதற்கு இறுதியான முடிவு எடுத்தாக வேண்டும் என்று சூளுரைத்தார். 25.12.1927 அன்று சவுதார் குளத்தில் நீர் எடுக்கும் உரிமையையொட்டி நடந்த சத்தியாகிரக மாநாட்டின் நிகழ்வுகளினூடே, தம் தோழர்களுடன் இந்து மதத்தின் தத்துவமான மநுஸ்மிருதியை எரித்த அம்பேத்கர், ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் அநீதிகள் இனி இந்தியாவில் செல்லாது என உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
சவுதார் குள சத்தியாகிரக மாநாட்டிற்குப் பிறகு அம்பேத்கர் அவர்கள் தம் தளபதிகளுடனும், தோழர்களுடனும் 1927 டிசம்பர் 28 அன்று மகத்துக்கு அருகேயுள்ள பவுத்த பிக்குகளின் குகையைப் பார்வையிடச் சென்றார். அவர் தன்னுடன் வந்தவர்களுக்கு அந்தக் குகைகளின் சிறப்புகளை எடுத்துரைத்தார். இடிபாடுகள் ஏன் ஏற்பட்டது என்பதை விளக்கினார். பவுத்த பிக்குகளின் தூய நடத்தை, எளிமையான வாழ்க்கை முறைமைகளின் மூலம் அவர்கள் மேற்கொண்ட சமூக வாழ்க்கையை விவரிக்கும்போது ஆனந்தக் கண்ணீர் விட்டார். 26.4.1929 அன்று நாசிக் மாவட்டத்தில் நிகாம் என்ற ஊரில் நடைபெற்ற பெரிய கூட்டமொன்றில் பேசுகையில், ‘இந்து மதத்தை விட்டொழிப்பது தீய செயல் அல்ல' என்று அறிவித்தார். 8.12.1929 அன்று வெளிவந்த ‘பாம்பே கிரானிக்கல்' என்ற இதழில் சாதி ஒழிப்பின் தேவையைப் போலவே, இந்து புரோகித ஒழிப்பும் தேவை என்று எழுதினார்.
தொடரும்