ஆங்கிலத்தில் நுனிநாக்குச் சரளம் வாய்ந்த
அருமைநண்பன் என்னிடத்தில் அடித்துச் சொன்னான்:
“தீங்கெதுவும் இல்லையப்பா, தமிழின் கூடச்
சிலதாக ஆங்கிலச்சொல் கலந்து வந்தால்!..
யாங்கெணுமே ஆங்கிலத்தைக் கலந்தால் தானே
யாவருக்கும் பேச்சில்ஒரு கவர்ச்சி யுண்டு?..
பாங்குடனே இப்படியோர் பாணி தன்னைப்
பழகுவதே நல்லது!”என வாதம் செய்தான்!

தனித்தமிழில் வேட்கைகொண்ட யானோ அந்தத்
‘தமிழ்மகனை’ச் செல்லமுடன் தட்டிக் கேட்டேன்:
“நனிசிறந்த சொல்வளமை இருக்கும் போது
நற்றமிழ் ஏன் அயல்மொழிச் சொல் ‘இரக்க’வேண்டும்?
மணிச்சரத்தின் ஊடேஓர் கூழாங் கல்லை
மாட்டுவதால் மணிக்கென்ன பெருமை தோன்றும்?
இனிக்கின்ற தமிழ்ப் பழத்திற்(கு) ‘இங்கிலீ~;’ மிட்டாய்
எவ்விதத்தும் எவ்விடத்தும் வேண்டாம்!” என்றேன்!...

“உலகெங்கும் பரந்துள்ள ஆங்கிலத்தை
ஒட்டித்தான் பிறமொழிகள் செல்ல வேண்டும்.
விலகாமல் ஆங்கிலத்தின் பக்கத்தில்தான்
விரும்பிவந்து தமிழ்மொழியும் அமர வேண்டும்.
பலகாலம் தமிழுக்கு வாழ்வு வேண்டின்,
பக்குவமாய் இதைப்புரிந்து நடங்கள்!” என்று
தலைகாலே புரியாமல் நண்பன் சொன்னான்.
தர்க்கத்தைப் புரிந்தபடி நானும் சொன்னேன்:

“ஆங்கிலம்’ என்னும் சொல்லின் அர்த்தம் சொன்னால்
அதிசயித்துப் போய்விடுவாய்! அப்பனே, கேள்:
‘ஆங்கு இலம்’ எனப்பிரித்துப் பொருள் நாம் கொண்டால்
‘அங்கே நாம் இருப்பதில்லை!’ என்றே அர்த்தம்!..
ஆங்கிலத்தின் பக்கத்தில் அமரும் தேவை
அழகுதமிழ் மொழிக்கில்லை: தமிழைக் கொண்டே
ஆங்கிலத்தின் ‘உட்பொருளை’ அறிமின்!” என்றேன்..
அத்தோடு நண்பனின்வாய் மூடக் கண்டேன்…

“தமிழ்மொழியும் ஆங்கிலமும் தம்மில் தம்மில்
தனித்துவத்தைக் கொண்டமொழி என்றிருக்க,
தமிழொடு நீ ஆங்கிலத்தைக் கலந்து (இ)ரண்டு
தரப்பினையும் இழிவுசெய்தல் தகுமோ?” என்றேன்..
“தமிழ்மகனின் அறிவினிலோர் தெளிவு இன்றேல்
தனித்தமிழின் நியாயமெலாம் சபை ஏறாது.
தமிழ்மகன்நீ இதை உணரும் தருணம் வாய்க்கும்:
சந்திப்போம் மீண்டும்!”என விடை கொடுத்தேன்.

நீண்டநெடு நாட்பின்னர் அவனை மீண்டும்
நேரில்நான் சந்திக்க நேர்ந்த போது,
நீண்டதொரு வணக்கத்தைப் பரிசு தந்தான்:
“நீ எனது குரு!”என்றான்: “தனித் தமிழ்மேல்
நீண்டதொரு வேட்கையுற்றேன்: ஆங்கிலத்தின்
நிழலேனும் இலையென்றன் தமிழில்!” என்றான்…
நீண்டகரம் பற்றி, அவன் அணைத்தான் என்னை:
நெஞ்சோடு எனையணைத்தாள் தமிழாம் அன்னை!!..

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It