periyar 360பண்டித ஜவஹர்லால் நேரு தலைவராய் இருப்பதால் தாங்கள் காங்கிரசில் சேருவதில்லை என்று பம்பாய் வர்த்தகர்கள் சொல்லி அறிக்கை வெளியிட்டதற்கு பதிலாக நேரு பம்பாய்க்கு ஓடிவந்து வர்த்தகர்களைக் கண்டு தனது சமதர்மம் இன்னது என்று சொல்லி வர்த்தகர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

அதாவது தனது சமதர்மமானது ஒரு தேசத்தாரையோ, ஒரு சமூகத்தாரையோ, ஒரு கோஷ்டியாரையோ எவ்வித நிர்ப்பந்தமும் செய்வதல்ல வென்றும், ஆனால் நாளாவட்டத்தில் தமது அபிப்பிராயம் பொது ஜனங்களிடை பரவுமாறு செய்யலாம் என்று நம்பி இருப்பதுதான் என்றும் சொல்லி இருக்கிறார்.

மற்றும் ரகசியமாய் அவர்களுடன் பேசி ஏதேதோ வாக்குக் கொடுத்து இருக்கிறார். (21-5-36 தமிழ்நாடு முதல் பக்கம் 2, 3 கலம்) இதுதான் ஜவஹர்லால் சமதர்மமாகும்.

இதை அறியாமல் அனுபவமற்ற வாலிபர்கள் ஜவஹர்லாலை சமதர்ம வீரர் என்று கூப்பாடு போடுவதன் மர்மம் முட்டாள்தனமே யாகும்.

(குடி அரசு துணைத் தலையங்கம் 31.05.1936)

பரிதாபம்

தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களின் இரண்டாவது மகன் 14 வயதுள்ள ராஜசேகரன் கொடைக்கானல் ஏரியில் விளையாடுகையில் தவறி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான் என்று கேட்டு விசனிக்கிறோம்.

ராஜசேகரன் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களின் 4 புதல்வர்களிலும் இரண்டாவதவன். ஆனாலும் மிகவும் கெட்டிக்காரனும், புத்திசாலியும், நல்ல குணமும், ஜனங்களிடம் குஷாலாய் பழகும் குணமும் உடைய அபுரூபன். அப்படிப்பட்ட அவனைப் பறிகொடுத்த தாயார், தந்தையர், சுற்றத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் துக்கமும், விசனமும், பரிதாபமும் இல்லாமல் இருக்க முடியாது தான். ஆனால் துக்கமும் விசனமும் இருந்து என்ன பயன்? யாரால் இனி என்ன செய்யமுடியும்? துக்கப்படுவதில் பயனில்லை என்று சொல்லி தேற்ற முயற்சிக்கத்தான் மற்றவர்களால் முடியும். இயற்கையை நன்றாய் உணர்ந்த தோழர் பாண்டியன் குடும்பத்தாருக்கு எவருடைய தேறுதலும் அவசியமிருக்காது என்றே கருதுகிறோம்.

(குடி அரசு இரங்கற் செய்தி 31.05.1936)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.