உயர்திரு. ஜவஹர்லால் நேரு உடல் சுகத்திற்கென்று தென்னிந்தியாவிற்கு வந்து ஒரு சரியான நாடகமாடி விட்டு ஊருக்குத் திரும்பினார். எப்படித் திரும்பினார்? சமதர்மக் கொள்கைகளையும் பொதுவுடைமைக் கொள்கைகளையும் பல்லவியாக வைத்துக் கொண்டார்.
“யோக்கியர்களுக்கு அரசியல் உலகம் வெறுப்பைக் கொடுக்கின்றது. சீக்கிரம் அதை விட்டு விலகிக் கொள்ளுவேன்” என்றார். ஆனால் தான் கடைசிவரை அரசியல் பிரசாரமே அதுவும் அரசியல்காரர்கள் முறையைப் பின்பற்றியே செய்தார். சமூக இயல் விஷயத்தில் தீண்டாமையைப் பற்றி உண்மையைத் தைரியமாய் பேசுவதற்கு ஒவ்வொரு நிமிஷமும் நடுங்கினார். ஏதாவது ஒரு சமயத்தில் தீண்டாமை யொழிய வேண்டுமென்று பேச நேர்ந்தாலும் உடனே அதற்கு பந்தோபஸ்தாக எந்த ஜாதியாரின் உரிமைகளையும் பாதிக்க விடமாட்டேன் என்றும் ஒரு கரணம் அடித்துக் கொண்டே பார்ப்பனர்களின் கோபத்திலிருந்தும் தப்பித்துக் கொண்டார்.
காங்கிரசிலும் தீண்டாமையைப் பற்றி ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார். ஆனால் இப்போது செய்ய வேண்டிய வேலை அதுவல்ல. கள்ளுக்கடை, ஜவுளிக்கடை மறியல் தான் என்று ஒரு பல்டி அடித்துத் தப்பித்துக் கொண்டார்.
ஆகவே அவர் கூடியவரையில் திரு. இராசகோபாலாச்சாரியாரை விட சாமர்த்தியமாகவே நடந்து கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு ஜாதி மதக்காரருடையவும் உரிமைகள் பாதிக்கப்படாமலும் ஒரு ஜாதியாரால் மற்றொரு ஜாதியாருடைய உரிமை பாதிக்கப்படாமலும் இருக்க வேண்டுமென்று கருதி வேலை செய்பவர்களால் தீண்டாமையை ஒழிக்கவோ பொதுவுடைமையும், சமதர்மமும் கொண்ட கொள்கையை ஏற்படுத்தவோ முடியுமா? என்பதை அறிவுள்ள வாசகர்கள் தான் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஜாதியின் உரிமையென்று எப்பொழுது பாகுபடுத்திக் கொண்டாரோ அப்பொழுதே திரு. ஜவஹர்லால் ஒவ்வொரு ஜாதியையும், கீழ் ஜாதி மேல் ஜாதி என்ற பாகுபாடுகளையும் படிகளையும் ஒப்புக் கொண்டு அவர்களுடைய உரிமைகளைக் காப்பாற்ற ஒப்புக் கொண்டார் என்பதில் யாரும் சந்தேகப்பட முடியாது.
ஆகவே இன்றைய தினம் நாட்டிலுள்ள பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், தீண்டாதார், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், ஜரோப்பியர்கள் ஆகிய தகராறுகள் ஜாதி மதத்தை ஆதாரமாய்க் கொண்டு சில சௌகரியங்களை தங்கள் தங்கள் ஜாதிமத உரிமை என்று கருதி அதுவும் குர்ஆன், பைபிள், வேதம், தர்மசாஸ்திரம் ஆகியவைகளின்படி கடவுள் கட்டளையாக அனுபவித்து வருவதாகவே கருதி வருகிறார்கள். இவற்றிற்குப் பாதகமில்லாமல் பார்த்துக் கொள்ள வீரர் ஜவர்ஹர்லாலுடைய தயவு எதற்கு என்றுதான் கேட்கின்றோம். இப்பொழுதே அப்படித்தானே நடைபெற்று வருகின்றது? இது போதாதா? இதைக் காப்பாற்ற காங்கிரசும், காந்தியும், நேருவும் எதற்கு? இதற்கு ஒரு இரும்புப்பூண் போட்டு இனி யாராலும் எந்தக் காலத்திலும் அசைக்காமல் இருக்கவா? என்று கேட்கின்றோம்.
ஒவ்வொரு ஜாதி உரிமையையும், ஒவ்வொரு மத உரிமையையும், ஒவ்வொரு வகுப்பு உரிமையையும் காப்பாற்றுவது, காங்கிரஸ் கொள்கை யானால், காந்தி கொள்கையானால், நேரு கொள்கையானால், இவைகளை விட வெள்ளைக்கார கொள்கை ஆயிரம் மடங்கு மேலானதென்று கல்லின்மேல் செதுக்கி வைப்போம்.
மற்றும் தீண்டாமையை ஒழிப்பதைப் பற்றி திரு. ஜவஹர்லால் நேரு கூறினது எவ்வளவு ஏமாற்றுகரமானது என்பதை தீண்டாமை யொழிப்பதில் கவலையுள்ளவர்கள் உணர வேண்டும்.
“தீண்டாமை யொழிப்பதும் காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றுதான். ஆனால் கள்ளுக்கடையும் ஜவுளிக்கடையும் மறியல் செய்யும் வேலைதான் இப்போது காரியத்தில் செய்ய வேண்டியது” என்று கூறினால் இதன் யோக்கியத் தன்மை என்ன என்று கேட்கின்றோம்.
தீண்டாமையானது பறையர், சக்கிலியர், பள்ளர் என்று சொல்லப் படுபவர்கள் முதலிய சிலருடைய கஷ்டம் என்று மாத்திரமே சிலர் கருதி யிருக்கிறார்கள். இந்தக் கருத்தேதான் நமது மக்களின் சுயமரியாதையற்ற தன்மைக்கு ஒரு உதாரணமாகும்.
திரு. ஜவஹர்லால் நேருவை நேற்று கன்யாகுமரி கோவிலுக்குள் சென்று “கடவுளை” தரிசிக்க அனுமதிக்காமல் போலீஸ் பந்தோபஸ்துடன் விரட்டி அடித்து விட்டார்கள். திருவனந்தபுர பட்டணத்தின் சில தெருக்களில் திரு. ஜவஹர்லால் ஊர்வலம் போவது கூடாது என்று காவல் மூலம் தடுத்து விட்டார்கள். இந்தக்கதி திரு. லஜபதிக்கும் திரு. காந்திக்கும் கூட ஏற்பட்டது தான் என்பது யாவரும் அறிந்ததேயாகும்.
ஆகவே “சக்கிலியர், பறையர், பள்ளர்” ஆகியவர்களுக்கு கோவிலிலும், குளத்திலும், தெருவிலும் தீண்டாமை தத்துவப்படி என்ன உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறதோ அதே உரிமைகள்தான் “சமதர்ம” ஜவஹர்லால் நேருவுக்கும் அவர் “பாட்டனார்” “மகாத்மா” காந்திக்கும், அவர் பூட்டனான “பாஞ்சால தெய்வம்” லாலா லஜபதிக்கும் மறுக்கப்பட்டிருக்கின்றது. மற்றும் தங்களை “நல்ல ஜாதி” என்று கருதிக் கொண்டிருக்கும் “நாயக்கர், செட்டியார், பிள்ளை, முதலியார்” முதலிய “பெரிய ஜாதி” என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கும் தங்களை விஸ்வ, தேவாங்க, சௌராஷ்டிர பிராமணர்கள், க்ஷத்திரியார், வைசியர், சற்சூத்திரர் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கும் நடந்து கொண்டுதான் வருகின்றது.
இதில் செய்யப்பட வேண்டும் என்று கருதும் எவ்வித சிறு மாறுதலும் ஜவஹர்லால் நேருவின் திட்டப்படி ஏதாவது ஒரு ஜாதியாரின் உரிமைக்கு விரோதம் செய்ததாகவேதான் ஏற்பட்டுத் தீரும். அதனால் தான் திரு. காந்தி முதல் எல்லோருமே “அந்தக் கோவிலில் சாமி யில்லை”என்று சொல்லிவிட்டு ஓடிப்போய் விடுவதுடன் அல்லாமல் மற்றபடி அங்கு ஒரு நிமிஷ நேரமாவது தங்கியிருந்து எவ்விதமான காரியமும் செய்ய முடியாதவர்களாகப் போய் விட்டார்கள். இது போலவேதான் முதலாளி - தொழிலாளி நிலைமையைப் பற்றியும், ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், குடிஜனங்கள் நிலைமையைப் பற்றியும் இந்த “சமதர்மக்” கூட்டம் நினைத்துக் கொண்டு முதலாளிகளும் ராஜாக்களும் கலந்த - அவர்களுடைய உரிமைகள் பாதிக்கப்படாத சுயராஜ்யம் (சமஷ்டி ஆட்சி) சம்பாதிக்க ராஜி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இதை திரு. காந்தியவர்கள் இர்வின் பிரபுவிடம் ஒப்புக் கொண்டதோடு திரு. காந்தியவர்கள் இப்போதே முதலாளிகளின் (வர்த்தக) சங்கத்தின் (கௌரவ) அங்கத்தினராகவும் தன்னைத் தெரிந்தெடுத்துக் கொண்டார்.
இனி ராஜாக்கள் சங்க கௌரவ அங்கத்தினர் பதவி மாத்திரம் அவருக்குக் கிடைக்க வேண்டியது பாக்கியிருக்கின்றது. இது இதுவரையில் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதற்கு சில ராஜாக்களுக்கு திரு. காந்தியிடம் இன்னும் பூரண நம்பிக்கை ஏற்படாததுவேதான் காரணமாகும். அதுவும் ஏற்படும்படி சிறிது சிறிதாய் ராஜாக்களைப் பற்றி பேசி உறுதிமொழி கொடுத்துக் கொண்டுதான் வருகிறார். அதுவும் சீக்கிரம் முடிந்துவிடும் என்றே கருதி விடலாம். இந்த நிலையில் இந்த தேசத்தின் தேசீய இயக்கம் நடைபெறுவதும் இதன் தலைவர்களாகிய திரு. ஜவஹர்லால் பொதுவுடைமைக்காரராய் இருப்பதாகவும் திரு. காந்தி சமதர்மக்காரரா யிருப்பதாகவும் பரமரமக்களுக்கு விளம்பரப் படுத்தப்படுகின்றது.
ஆகவே திரு. ஜவஹர்லால் பொதுவுடைமைத் தத்துவம் ஒவ்வொரு ஜாதி உரிமையையும் காப்பாற்றுவதும் திரு. காந்தியின் சமதர்ம தத்துவம் ராமராஜியத்தை ஏற்படுத்தி முதலாளிகளையும் ராஜாக்களையும் காப்பாற்றுவதும் என்கின்ற பார்ப்பனீய முதலாளி தத்துவ ஆட்சி என்பதை இப்போதாவது மக்கள் உணர்வார்களாக.
(குடி அரசு - கட்டுரை - 07.06.1931)